இஷ்டங்களைப் பூர்த்தி செய்யும் அஷ்ட லட்சுமிகள்



நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டுவித செல்வங்களுக்கு அதிபதியாக, எட்டு தெய்வீக வடிவங்களில், அஷ்டலட்சுமியாக வழிபடுவது நம் மரபாக இருக்கிறது. வரலட்சுமி விரத நாளை (04.08.2017) ஒட்டி, அந்த எட்டு லட்சுமிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்:

1. ஆதிலட்சுமி

பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கிரீடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. ஆதி என்பதற்கு ‘முதல்’ என்று பொருள். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது முதலில் நஞ்சு வந்தது. பின் காமதேனு, சந்திரன் என வந்தார்கள். அப்போது தோன்றிய முதல் லட்சுமியே ஆதி லட்சுமி. ஒவ்வொரு லட்சுமிக்கும், பெயரைப் பொறுத்து ஒவ்வொரு குணம் உண்டு.

ஆனால் ஆதிலட்சுமிக்கு அப்படியில்லை. ஏனென்றால், அவளுக்குப் பெயரிட வேண்டிய அவசியமில்லாமல் அவள் மாத்திரமே இருந்தாள். ஆதிலட்சுமியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் போன்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றிருக்கும். அவள் பொற்பாதங்கள் பற்றியவர்களுக்கு மங்களம் சிறக்கும் என்பதனால் அவளை வழிபட்டுப் பேறுபெற வேண்டியது முக்கியம்.

‘தேவர்களால் வணங்கப்படுபவளே, அழகானவளே, மாதவனின் மனைவியே, சந்திரனின் சகோதரியே, பொன்மயமானவளே, முனிவர்களால் போற்றப்படுபவளே, மோட்சத்தை அளிப்பவளே, இனிமையை அருள்பவளே, வேதங்களால் துதிக்கப்படுபவளே, தாமரை மலரில் வசிப்பவளே, தேவர்களால் பூஜிக்கப்படுபவளே, சாந்தியோடு கூடியவளே, மதுசூதனனின் மனைவியே, மகாலட்சுமியின் முதல் உருக்கொண்ட ஆதிலட்சுமியே, என்னை எப்போதும் காப்பாற்ற வேண்டும். எப்பொழுதும் நலன் அருள்வாய்!’ - எனத் துதிக்க எக்காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழுவெற்றியுடன் நடக்க ஆதிலட்சுமி நமக்கு அருள்புரிவாள்.

2. சந்தானலட்சுமி
 
சந்தானம் என்றால் மழலைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர மழலைச் செல்வம் இன்றியமையாதது. மற்ற செல்வங்களைவிட சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் ஆகும். அத்தகைய மழலைச் செல்வத்தை வழங்குபவள், சந்தானலட்சுமி. ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கும் தோற்றம் கொண்டவள். சடையுடன் கிரீடத்தை சூடியவளாக, வரத-அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களைத் தரித்து காட்சி தருகிறாள்.

இவளது பீடத்தில் சாமரம் வீசியவாறும், விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் இரு கன்னிப் பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். பிள்ளை பாக்கியம் பித்ருக்களைக் கடைத்தேற்றும் என்பது இந்து மத நம்பிக்கை. ‘கருடனை வாகனமாகக் கொண்ட மோகினியே, சக்கரம் தாங்கி அன்பர்களைக் காத்து அன்பை வளர்ப்பவளே, அறிவுமயமானவளே, உயர் நலமுடையவளே, உலகனைத்தும் நலம்பெற அருள்பவளே, ஏழிசைக் கானத்தினால் துதிக்கப்படுபவளே, சூரரும் அசுரரும் தேவரும் முனிவரும் மாந்தரும் பணிந்து துதிக்கும் இணையடி வாய்ந்தவளே, இம்மைக்கு மட்டும் இல்லாமல் மறுமைக்கும் வாழ்வளிக்கும் சந்தானத்தை அருள்பவளே, மதுசூதனன் மனைவியே, சந்தான லட்சுமியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்,’ என வேண்டிட, செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் சந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள்.

3. கஜலட்சுமி
 
இவளே ராஜலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான். ‘கஜம்’ என்றால் யானை. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வதுபோல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்று பெயர். கஜலட்சுமியை ராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி எனவும் அழைப்பர். கஜலட்சுமியின் உருவத்தை வீட்டு நிலை வாசற்படியில் காணலாம்.

நிலத்திற்கு செழுமையான நீர் தேவை என்பதால் நீர் கொண்ட மேகங்கள் யானைகளாகி, நிலமகளாகிய இலக்குமியின்மீது அபிஷேகிப்பதை இவ்வுருவம் குறிக்கிறது என்பார்கள். ‘தீவினைகள் அழிக்கும் அழகியே, எல்லாப் பயன்களையும் அருள்பவளே, சாத்திரமயமானவளே, தேர், யானை, புரவி, காலாள் சூழப் பணியாட்களும், மக்களும் துதிக்க விளங்குபவளே, அரியும், அரனும், பிரம்மனும் வணங்க நிற்பவளே, மழைபொழிய அருள்பவளே, தாபங்களைத் தீர்க்கும் திருவடியினையுடையவளே, மதுசூதனன் மனைவியே, கஜலட்சுமியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்,’ - என வேண்டி கஜலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம். வாழ்க்கை என்றும் ஆனந்தமாயிருக்கும்.

4. தனலட்சுமி
 
தனம் என்பது பணம் அல்லது தங்கத்தைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம். இத்தேவியே வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். தனலட்சுமியின் அருளால் செல்வங்கள் குவிகின்றன என்று நிகமாந்த தேசிகன் கூறியுள்ளார். தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பச்சிலை, கெண்டி, வில், அம்பு போன்றவற்றை ஏந்தி பத்மபீடத்தில் பொலிபவள்.

‘திமி திமி திந்திமி திந்திமி திந்திமி என்று துந்துபி முழங்கப் பூரண வடிவானவளே, குமகும குங்கும எனச் சங்கம் இனிமையோடு முழங்க, வேதங்களும், புராணங்களும் துதித்துப் போற்ற, வேத வழியில் நன்னெறி காட்டுபவளே, மதுசூதனின் ஆபரணமே, உன்னைத் தரித்திருப்பதால் நாராயணனும் பெருமை பெற்று விளங்குகிறான். எம்மைக் காத்து வாழ்விப்பவள் நீயே,’ என்று சொல்லி வழிபட்டால், நல்லவழியாகிய தர்ம நெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீதனலட்சுமி அருள்புரிவாள்,
 
5. தான்யலட்சுமி

தானிய வளங்களை அருள்பவள் தான்யலட்சுமி. தானிய வகைகள், உணவுப் பொருட்கள், பழம்-கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்யலட்சுமி. இவளுக்கு அன்னலட்சுமி என்ற பெயரும் உண்டு. திருமாலைப் பச்சைமால் என்பர். அவர் நிறத்திற்குக் காரணம் தான்ய லட்சுமியேயாகும். அவள் உலகப் பசுமைக்குத் தலைவி.
 
ஆறு திருக்கரங்களைக் கொண்டவள். வலப்புறம் தானிய நெற்கதிர், அபய முத்திரை, அம்பு முதலியவற்றைக் கொண்டும், இடப்புறம் வில், கரும்பு, வரத முத்திரை முதலியவற்றைக் கொண்டும் விளங்குபவள். யானையைப்பீடமாகக் கொண்டவள். லட்சுமி தந்திரம் என்னும் நூலில் தான்யலட்சுமி சதாக்க்ஷி, சாகம்பரி எனப்போற்றப்படுகிறாள். உலகம் மழைநீர் இல்லாமல் வாடும் என்பதினால் நூறு கண்களால் நீர்வளத்தைப் பெருக்குகிறாள் என்ற பொருள்பட சதாக்ஷி எனவும், உணவுப் பொருட்களை உருவாக்குகிறாள் என்பதனால் சாகம்பரி எனவும் அழைக்கப்படுகிறாள்.

‘பாவங்களை அழிப்பவளே, அழகியே, வேத உருவானவளே, வேதமயமானவளே, பாற்கடலில் தோன்றிய மங்கல வடிவே, மந்திரங்களில் வாழ்பவளே, மந்திரங்களினால் வழிபடப்பெறுகிறவளே, நலமனைத்தும் அளிப்பவளே, தாமரையில் வாசம் செய்பவளே, தேவர்கள் புகலாகக் கொண்ட திருவடிகள் வாய்த்தவளே, மதுசூதனின் மனைவியே, தான்யங்களில் உறைந்து உலக உயிர்களை நிலைபெறச் செய்பவளே, தான்ய லட்சுமியே, எனக்கு எப்பொழுதும் வளமளித்து காப்பாற்றுவாயாக!’ - எனக்கூறி ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறையும். வாழ்வில் உணவுப் பஞ்சமே இருக்காது.
 
6. விஜயலட்சுமி

விஜயம் என்றால் வெற்றி என்று பொருள். வெற்றியை அருள்பவள் விஜயலட்சுமி. எடுத்த காரியங்களில் வெற்றிபெறச் செய்பவள். விஜயலட்சுமிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. தன் திருக்கரங்களில் வாள், சார்ங்கம், சுதர்சன சக்ரம், சங்கு, கத்தி, கேடயம், அபயம், வரதம் போன்றவற்றைத் தரித்து அன்னத்தின் மீது அமர்ந்தருளும் கோலம் கொண்டவள்.

‘தாமரை மலரில் பொலிபவளே, நற்கதியளிப்பவளே, ஞானம் வளர்ப்பவளே, கான மயமானவளே, வெற்றியைக் குறைவின்றி நல்குபவளே, அனுதினமும் குங்குமத்தினாலும், மலர்களினாலும், அர்ச்சனை பெறுபவளே, வாத்தியங்கள் முழங்க, சங்கர பகவத் பாதாள் கனகதாரா துதி பாட, அவருக்கு அருளியதன் மூலம் பெருமையளித்தவளே, மதுசூதனின் மனைவியே, வெற்றித் திருமகளே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்,’ - என பக்தியுடன் கூறி ஸ்ரீவிஜயலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கும் எதிலும் வெற்றிதான்.

7. வீரலட்சுமி
 
மனத்திற்கு தைரியத்தை தருபவள் வீரலட்சுமி என்ற தைரியலட்சுமி. வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவள். தெளிவான, அத்தியாவசியமான முடிவெடுக்க, அதற்கான முயற்சி மேற்கொள்ள மனதுக்கு உறுதியளித்து அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருள்பவள் இவள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டவள்.

வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குபவள். தாமரைப் பூவின் மீது வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போன்ற நிறத்தினை உடையவள், உயர் கிரீடத்தை உடையவள். தங்கநிற ரவிக்கை அணிந்தவள். எல்லாருக்கும் உறுதியான மனோதிடத்தை அருள்பவள்.

‘பிருகு முனிவரின் மகளே, மந்திர ரூபிணியே, மந்திரமயமானவளே, தேவர் கூட்டம் வழிபடும் அருட்சக்தியே, ஞான மலர்ச்சியுடையவளே, சாத்திரங்கள் போற்றும் புனித மகளே, இவ்வுலகில் ஏற்படும் பயங்களை நீக்குபவளே, பாவத்தைப் போக்குபவளே, மதுசூதனின் மனைவியே, நின்னருளால் எனது எல்லாப் பயமும் போகட்டும். தைரிய லட்சுமியே, எனக்கு எப்பொழுதும் தைரியம் அளித்துக் காப்பாற்ற வேண்டும்,’ என்று பக்தியுடன் கூறி வந்தால் மனஉறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும்,
ஸ்ரீ வீரலட்சுமி அளிப்பாள்.

8. வித்யாலட்சுமி

வித்யை என்பதற்குக் கல்வி என்று பொருள். கல்விச் செல்வத்தை வழங்குவதனால் இவளுக்கு வித்யாலட்சுமி என்று பெயர். கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் இவள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருள்பவள். ஸ்ரீஜெயாகிய சம்ஹிதையில் ‘வாகீஸ்வரி’ (நாமகள்) என்று விளக்கப்பட்டுள்ளது. அதிகமான வெண்மை உருவுடையவள். சங்க, பத்ம, வரத, அபய அஸ்தங்களுடன் கூடியவள், நூல்களை இயற்றிக் கொண்டிருக்கும் நாத சொரூபமானவள் என்று குறிப்பிடப்படுகிறது. ‘லக்ஷ்மி தந்திரம்’ என்னும் நூல் சகல ஞான சம்பத்துக்களையும் ஆற்றலையும் அருள்பவள் எனக்கூறுகிறது.

தேவர்கள் துதிக்கும் தலைவியே, கலைமகளுக்குத் தலைவியே, பிருகு முனிவரின் திருமகளே, துயரம் தீர்ப்பவளே, ரத்தின மயமானவளே, நவமணி பதித்த குண்டலம் அணிந்தவளே, அமைதி நிலவும் புன்னகை முகத்துடையவளே, கலியுக பாவங்களைத் தொலைப்பவளே, வேண்டியோர் விரும்பியவுடன் கலைகளை அருளிப் பயன்களை வழங்கும் திருக்கரங்களை உடையவளே, மதுசூதனின் மனைவியே, வித்யா லட்சுமியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் என வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

- ந.பரணிகுமார்