மனைதோறும் எழுந்தருளும் மகாலட்சுமி* மனமெனும் வீட்டை
எண்ணத்தால் சுத்தம் செய்து
மகிழ்ச்சி தீபமேற்றி மங்கலம் செழிக்க
மாவிலை தோரணம் வாழை பந்தலிட்டு
மனம், முகம் மலர்ந்து
வருக! என்றழைப்போம் செல்வமகளை!

* வாடிய பயிருக்கு நீர் விடுவோம்
வறுமைநோய்க்கு மருந்து தருவோம்
உள்ளன்போடு உறவு பேணுவோம்
உண்மை கொடி ஏற்றி வணங்குவோம்
கள்ளம் கபடமிலா வாக்கு தருவோம்
இல்லை என்பார்க்கு இருக்கிறேன் என்போம்
இன்சொல்லால் இல்லறம் காப்போம்
இதயமலர் தந்து இன்பலட்சுமியை வரவேற்போம்!

* தகுதி அறிந்து தனம் தருவோம்
தன்னலமிலா அன்பர்க்கு தானம் தருவோம்!
பெண்கள் மணமுடிக்க பொன் கொடுப்போம்
பொன்னடி இரப்பார்க்கு பொருள் அளிப்போம்!
மண்ணில் புதையும் வரை மனிதம் வளர்ப்போம்
உயிரினம் மீது இரக்கம் கொள்வோம்!
உயர்ந்த செயல்களுக்கு விதை விதைப்போம்
உள்ளக்கோவிலில் கனகவல்லியை குடி வைப்போம்!

* தண்ணீர் தேங்கினால் நோய் பரவும்
பணம் தேங்கினால் பாவம் பெருகும்!
இறைக்கின்ற கிணறு வற்றாது சுரக்கும்
இறைவன் அருளால் வளம் பெருகும்!
தவறுக்கு யார் சாட்சி என்றெண்ணாது
மனசாட்சி கண்ணாடி அணிவோம்!
மகிழ்ச்சி நிரம்பிய பால்குடம் ஏந்தி
மகாலட்சுமி இல்லம் வருவாள்!

* மனதில் இடமளித்த மாதவன் துணையை
மலர்தூவி பாதம் தாங்கி அழைப்போம்
பாற்கடல் திரவியம் பக்தியில் பெறுவோம்!
காணாது கவலை வளர்க்கும் நிதியை
கண்டவுடன் அன்புகைப்பிடி சேர்ப்போம்!
பொன்னும், மணியும், ரத்தினமும் அணிந்து
பொன்நிலவு தோன்றும் என்வீட்டு வானில்
புதுவசந்தம் பிறக்கும் இதய கூட்டில்!

* எப்பிறவி எடுத்தாலும் என்ன தவறிழைத்
தாலும் எல்லையிலா செல்வம் எனைச்
சேரும்!
திருமகள் கடைக்கண் பார்வை வீசிவிட்டால்
நாற்புறம் பொருள்குவிய நல்லோர்
துணைசேர
நற்குலமங்கை கைசேர நறுமண நங்கை
பணியேற்க
நல்லாட்சி தரும் செங்கோல் தேடிவரும்!
தாமரை மலராள், தாய்க்கு நிகராள்
தரணியில் தர்மம் தழைக்க அருள்வாள்!

- விஷ்ணுதாசன்