திவ்ய அருள் வழங்குவான் துவாரகாதீசன்கிருஷ்ண ஜெயந்தி - 14.08.2017

துவாரகை - இந்தத் தலத்தை நினைத்தாலே உள்ளமெல்லாம் இனிக்கிறது. மஹாவிஷ்ணுவின் கடைசி அவதாரம் அங்கே வாழ்ந்திருக்கிறது என்ற பேருண்மை சிலிர்க்க வைக்கிறது. அந்தத் தலத்தில் கால்பதிக்கும்போது உடலே நடுங்குகிறது. என்ன மகோன்னதம் அது! ஒன்பது அவதாரங்களிலேயே மனித மனதிற்கு, பல உணர்வுகளாலும் மிகவும் நெருங்கி வந்த அவதாரம் இதுதானே!

வரப்போகும் கலியுகம் எப்படி இருக்கும் என்று கோடி காட்டிய அவதாரமல்லவா இது! தர்மம்-அதர்மம், நல்வினை-தீவினை, உண்மை-பொய், நட்பு-துரோகம், பாசம்-மோசம் என்ற விகிதாசாரத்தில், அழிவுநோக்கின் பங்கு உயர்நிலையில் இருக்கும் என்று அறிவுறுத்திய அவதாரம் அது. ஆனால், இந்த விகிதாசாரக் கணக்கில் நாம் சிக்கித் தவிக்கக்கூடாதென்று சமநிலை மனதைப் பழகிக்கொள்ளவும் புத்தி சொன்ன தெய்வ அவதாரமாகவும் அது திகழ்ந்ததே! அந்த அவதாரம் தன் இறுதி நாட்களைச் செலவிட்ட திவ்ய தேசம்தான் துவாரகை.

அரபிக் கடலோடு, கோமதி நதி சங்கமிக்கும் இடத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் உருவான கோயில் (நகரம்) இது. கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாப் உருவாக்கிய இந்தக் கோயில், அடுத்தடுத்து பலராலும் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரர் இந்தத் தலத்துக்கு விஜயம் செய்திருக்கிறார். கி.மு. 509ம் ஆண்டு இந்நகருக்கு வந்த அவர், அந்தக் கோயிலில் முறையாக பூஜைகளை மேற்கொள்ள அந்தண வித்வான்களை நியமித்திருக்கிறார். அவர்கள் வழிவந்த அர்ச்சகர்கள்தான் இப்போது துவாரகாபுரிநாதனான கிருஷ்ணனுக்கு பூஜாதி ஆராதனைகள் செய்து வருகிறார்கள்.

இப்படி கிருஷ்ணன் வாழ்ந்த துவாரகை இருந்ததற்கான ஆதாரத்தை விஞ்ஞானப் பூர்வமாகவே பார்க்கலாம்: பகவான் கிருஷ்ணன் கோலோச்சிய துவாரகையை சுனாமிபோல ஒரு பேராழி வந்து கபளீகரம் செய்துவிட்டது. இது உண்மையா? கிருஷ்ணர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் துவாரகை உண்மையிலேயே இருந்ததா? விஞ்ஞானப் பூர்வமான ஆதாரம் ஏதாவது துவாரகைக்கு இருக்கிறதா? இருக்கிறது.

இந்திய தேசிய கடலாராய்ச்சிக் கழகம், 1983 முதல் 1990ம் ஆண்டுவரை பதினெட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ், ‘The Lost City of Dwarka’ என்ற தன்னுடைய புத்தகத்தில் தன் ஆராய்ச்சி முடிவுகளை எழுதியிருக்கிறார். ‘‘புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பு, அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ளது. இது, மகாபாரதக் கதை நடந்ததையும், துவாரகை நகரம் இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.

கி.மு. 1500ம் ஆண்டுவாக்கில், தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகிலுள்ள தீவான பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்திருப்பதற்கு ஆதாரம் இருக்கிறது. கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம், நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது. ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரமாண்டமான கட்டிடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.

அந்நகரின் சுவர்கள் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது. இப்படி விரிவாக்கப்பட்ட பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீவுப்பகுதி, கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா-ஜாம்பவதிக்கான பொழுதுபோக்கு தலமாகவும் அமைந்திருக்கிறது.

மேலும், தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம்வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாரா என்ற இடம்வரையிலும் இந்நகரம் வியாபித்திருக்கிறது. இந்த பிந்தாரா பகுதியில் ‘பிந்த்ரா-தாரகா’ என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது. சௌராஷ்டிர மேற்கு கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு, திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் இது. கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது.

த்வாரமதி, த்வாரவதி, குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்பட்டது. எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள், குடியிருப்பு, வியாபாரத் தலங்கள், அகன்ற சாலைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கியது துவாரகை.’’- இவ்வாறு அந்த நூலில் எஸ்.ஆர்.ராவ் கூறியிருக்கிறார்.

துவாரகை உருவானது எப்படி? கம்ஸனை வதைத்தபிறகு, கிருஷ்ணனும் பலராமனும் மதுராவுக்கு உக்ரசேனனை அரசனாக்கினார்கள். இது கம்ஸனுடைய மாமனாரான ஜராசந்தனுக்குப் பெருங்கோபத்தை உண்டாக்கியது. அவன் அடுத்தடுத்து பலமுறை மதுராமீது போர் தொடுத்தான். யாதவ சேனை ஆரம்பத்தில் ஜராசந்தனது படைகளை எதிர்த்தன. என்றாலும், அடுத்தடுத்த போர்களில் பலம்குன்றி எண்ணிக்கையும் குறைந்து போயின.

இனி ஜராசந்தனை எதிர்க்க இயலாது என்று கருதிய கிருஷ்ணன், மிச்சமிருந்த யாதவர்களை அழைத்துக்கொண்டு மேற்கு கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கே கடலரசனிடம் 12 யோஜனை நிலத்தைப் பெற்றார். இதனால் கடல், நிலப்பரப்பை விட்டு 12 யோஜனை தூரம் உள்வாங்கிச் சென்றது. இப்படி கடல் விட்டுக் கொடுத்த நிலத்தில் தேவதச்சனான விஸ்வகர்மா மூலமாக ஓர் அழகான நகரை கிருஷ்ணன் நிர்மாணித்தார். அதுதான் துவாரகை.

மகாபாரத யுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது. இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப் பிரதேசத்திற்கு (தற்போதைய சோம்நாத்) அழைத்துச் சென்று அவர்களைக் காத்தார். அங்கே யாதவர்கள் தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு மாய்ந்தார்கள். கிருஷ்ணனும் வேடன் எய்த அம்பால் வைகுண்டம் ஏகினார்.

“கரையை வந்து வந்து தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கடல், திடீரென்று வேகம் கொண்டு துவாரகை நகருக்குள் புகுந்து, அந்த அழகிய நகரத்தின் தெருக்களை நிறைவித்தது. எல்லா மூலை, முடுக்குகளிலும் புகுந்தது. அர்ஜுனன் (கிருஷ்ணரின் மகனையும், பேரனையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்கு அப்போது வந்தவன்) பார்த்துக் கொண்டிருக்கும்போதே மாடமாளிகைகள் எல்லாம் கடலுக்குள் மூழ்கின.

கிருஷ்ணனுடைய அரண்மனையும் அப்படியே மூழ்கிற்று. விரைவில் எல்லாம் முடிந்துவிட்டது. கரையைத் தாண்டி வளர்ந்த கடல், அந்தப் பகுதிகளில் ஓர் ஏரிபோல அப்படியே தேங்கிவிட்டது. துவாரகை, வெறும் நினைவில் மட்டுமே தங்கும் பெயராகி விட்டது” என்று வர்ணிக்கிறது மகாபாரதம். மகாபாரத யுத்தத்தில் கௌரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்.

இதனால் பெரிதும் துயருற்ற அவர்களுடைய தாயாரான காந்தாரி, தம் பிள்ளைகள் இவ்வாறு நிர்மூலமானதற்குக் காரணம் கிருஷ்ணன்தான் என்று மனதுக்குள் வெம்மை பாராட்டினாள். அதனாலேயே இன்னும் 36 ஆண்டுகளுக்குள் கிருஷ்ணனும் அவனுடைய யாதவ குலமும் பூண்டோடு அழிந்துபோகட்டும் என்று சாபம் விடுத்தாள்.

தன் பொறுப்பு முடிந்த நிறைவில் கிருஷ்ணன் துவாரகையை உருவாக்கி அங்கே தங்கினார். ஆனால், குருக்ஷேத்திர யுத்தத்தை தர்மத்திற்கே வெற்றி கிடைக்குமாறு அமைத்த கிருஷ்ணன், இந்த துவாரகையில் சில போர்களைச் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. ஆமாம், கம்சன் வீழ்ந்த பிறகு, அவனுடைய மனைவியரில் இருவர் தமது தந்தையான ஜராசந்தனிடம் சென்று முறையிட, அதனால் பெருங்கோபம் கொண்ட ஜராசந்தன் கிருஷ்ணன்மீது இங்குதான் போர் தொடுத்தான். கிருஷ்ணனும், பலராமனும் ஜராசந்தனின் படைகளை அடித்து விரட்டினர். தப்பி ஓடியவர்களுடன் ஜராசந்தனும் ஒருவன்.

அடுத்த போர் காலயவனன் என்பவனுடன் மேற்கொண்டது. இந்த காலயவனன், கார்க்கிய முனிவரின் மகன். தனக்குப் பிள்ளை இல்லாத குறையை எள்ளி நகையாடிய யாதவர் குலத்தையே பூண்டோடு அழிக்க, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இயற்றி, அவரருளால் அவர் பெற்ற பிள்ளை அவன். தன் தந்தையைப் பழித்தவர்களைப் பழிவாங்க துவாரகை நோக்கிப் புறப்பட்டான் காலயவனன்.

அவனுடைய படைகளுடன் போரிட்டவாறே அவர்களிடமிருந்து தப்பித்து செல்வதாகிய தந்திரப் போக்கு காட்டலில், கிருஷ்ணனும் பலராமனும் மலைமீது ஓடினர். தொடர்ந்து துரத்திவந்த காலயவனன் ஒரு மலைகுகைக்குள் சகோதரர்கள் இருப்பார்களா என்று தேட உள்ளே சென்றான். அங்கே களைப்புடன் படுத்திருந்த முசுகுந்தன் என்பவனைக் காலால் உதைத்தான். கிருஷ்ணன் கைக்குக் கிடைக்காத கோபம்! ஆனால், திடுக்கிட்டு விழித்த முசுகுந்தனுக்கு ஒரு வரம் கைவசம் இருந்தது.

தூங்கும் தான் விழித்தெழும்போது யாரை முதன் முதலாகப் பார்க்கிறானோ அவன் எரிந்து போவான் என்பதுதான் அது. தன் விழிகளில் கோபத்தை அக்னியாக வீச, அதில் கருகிச் சாம்பலானான் காலயவனன். பிறகு அங்கே வந்த கிருஷ்ணரின் பாதம் பணிந்த முசுகுந்தன், அவரது அறிவுரைப்படி பத்ரிகாசலம் சென்று அங்கே தவமிருந்து மோட்சம் ஏகினான். தன் பால்ய பருவம் கடந்து இளைஞனாக கிருஷ்ணன் வளர்ந்தபோது, பொதுவாக எந்த அரக்கனையுமே, எந்த அநீதியையுமே தன் கைப்பட மாய்க்கவில்லை என்பதற்கு காலயவனனின் மரணம் இன்னொரு எடுத்துக்காட்டு.

இந்த துவாரகையில்தான் பீஷ்மகன் மகளான ருக்மிணியை மணம் புரிந்தார் கிருஷ்ணன். குடும்பத்தார் எதிர்த்தாலும், அவளுடைய விருப்பத்தை முன்வைத்து அவளை ஒரு தேரில் கவர்ந்து வந்து அவ்வாறு திருமணம் செய்துகொண்ட புராணம் மிகவும் பிரசித்தமானது. துவாரகையிலிருந்து நான்கு கி.மீ. தொலைவில், ஓகா துறைமுகம் போகும் வழியிலுள்ள ருக்மிணி கோயில் இந்த சம்பவத்துக்கு சாட்சியாக இன்றும் விளங்குகிறது. ஸத்ராஜித் மகளான சத்யபாமாவையும் இங்குதான் திருமணம் புரிந்தார் கிருஷ்ணன்.

இவர்கள் தவிர, ஜாம்பவதி, மித்ரவிந்தா, காளிந்தீ, பத்ரா, லக்ஷ்மணா, ஸ்ரீஉதகீர்த்தி ஆகியோரையும் மணந்து அந்த எண்மருடன் துவாரகையில் அருளாட்சி புரிந்தார். அங்கேயே தம் குலத்தவரான யாதவர்கள் அனைவரையும் குடியமர்த்தினார். அவர்களுக்கு எல்லாவிதமான உபசாரங்களும் கிடைக்குமாறு செய்தார். தேவை என்று எதற்காகவும் காத்திருக்க வேண்டாதபடி, அவர்கள் அனைவரும் எல்லாவற்றையுமே அபிரிமிதமாக அனுபவிக்க வழிசெய்தார்.

இப்படி எல்லா சலுகைகளும், உரிமைகளும் கிடைத்துவிட்டதால் அவர்கள் அனைவரும் கட்டவிழ்த்துவிடப்பட்ட விலங்குகளாக மாறினார்கள். பிறருக்கு ஊறு விளைவிப்பது தமக்கு விளையாட்டு என்ற மனப்போக்கு உடையவர்களாக ஆனார்கள். அங்கே தவமியற்றிக்கொண்டிருந்த ரிஷிகளையும் அவர்கள் விட்டுவைக்க வில்லை. கிருஷ்ணனுக்கு அவர்களுடைய நடவடிக்கை பெரிய தலைவலியாகப் போய்விட்டது. அவர் எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் தம் போக்கிலிருந்து மாறவில்லை.

எத்தனையோ அரக்கர்களை எளிதாக சமாளித்த அவரால், யாதவர்களின் அரக்க மனதை வெல்ல இயலவில்லை. கலியுகத்தின் ஆரம்ப அடையாளம் அது என்று அவருக்கும் தெரியாதா என்ன? அதோடு காந்தாரி இட்ட சாபமும், ரிஷிகளின் மனவருத்தங்களும் பலித்தாகவேண்டுமே! ஆக, தன் அவதார காலம் நிறைவுக்கு வந்ததை உணர்ந்த கிருஷ்ணன், வைகுந்தம் ஏக ஆயத்தமானார்.

தன்னுடைய தேர்ப்பாகனான தாரகனை அழைத்தார். தன்னுடைய அரண்மனை தவிர துவாரகையின் பிற பகுதிகள் எல்லாம் கடல் கொண்டுபோகும் என்றும், அதனால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக பிரபாஸ க்ஷேத்திரம் என்ற உயர்ந்த மலைப்பகுதியில் குடியமர்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த க்ஷேத்திரம்தான் இப்போது சோம்நாத் என்று வழங்கப்படுகிறது. இந்த சம்பவம், யாருக்கும் தான் கடனாளியாக இருக்க விரும்பாத கிருஷ்ணனின் மனோபாவத்தை விளக்குவதாக நயமாக உரைப்பார்கள். அதாவது, துவாரகை அமைய கடலரசனிடமிருந்துதானே 12 யோஜனை பரப்புள்ள நிலம் கேட்டார், கிருஷ்ணன்? இப்போது அதை மீண்டும் கடலரசனிடமே ஒப்படைத்துவிட்டார்!

எல்லாம் முடிந்துவிட்டது. தன் வைகுந்த பயண காலத்துக்காகக் காத்திருந்தார் கிருஷ்ணர். இறைவனேயானாலும், அவருக்கும் எல்லாம் நேரம், காலத்தோடுதான் செயல்படும் போலிருக்கிறது! ஒருசமயம் ஒரு அரசமரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். சற்றே சாய்ந்த நிலையில், இடது காலை மடக்கி, அதன்மேல் வலதுகாலைப் பதித்துப் படுத்திருந்தார். அப்போது தொலைவில் வந்த ஜரா என்ற வேடன், அவரது வலது திருப்பாதத்தைப் பார்த்து அதை ஒரு மான் என்று கருதி, இரும்புப் பூண் போட்ட தன் அம்பை அவர் மீது எய்தான். அம்பு தன் காலில் பட்டதும், புன்முறுவலுடன் பகவான் ஜோதி ஸ்வரூபமானார்; விண்ணோக்கிச் சென்றார்.

பெரியாழ்வார் (5 பாசுரங்கள்), ஆண்டாள் (4 பாசுரங்கள்), திருமங்கையாழ்வார் (2 பாசுரங்கள்), திருமழிசையாழ்வார் (ஒரு பாசுரம்), நம்மாழ்வார் (ஒரு பாசுரம்) என ஐந்து ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் துவாரகை. ஆனால், இந்த திவ்ய தேசத்தில் இந்த ஆழ்வார்களைப் பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. தமிழ் தெரிந்த, நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களைப் பற்றி தெரிந்திருக்கும் சிலர் மட்டுமே இந்தப் பாசுரங்களை அறிந்திருக்கிறார்கள்.

ஆனால், பொதுவாக இப்பகுதிவாழ் மக்களுக்கு, இன்றும் தங்கள் மன்னன் ஸ்ரீகிருஷ்ணன்தான். நவீன காலத்தில், குடியாட்சி மற்றும் எத்தனையோஅரசியல் மாற்றங்கள் வந்தபிறகும், தங்களைப் பொறுத்தவரை தங்கள் இறைவன், தங்கள் மன்னன், தங்களை வழிநடத்துபவன் ஸ்ரீகிருஷ்ணன்தான் என்பதை அங்கே வாழும் சின்னக் குழந்தையும் உணர்ந்து கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

பிரதான கோயில், த்வாரகாதீச் மந்திர் என்று அழைக்கப்படுகிறது. இது, மிகப் பெரிய அரண்மனைக் கோயிலாகத் திகழ்கிறது. பால்யத்தில் கிருஷ்ணன் வெண்ணெயும், தயிரும் உண்டு களித்திருந்த அந்தக் காலகட்டத்தை இப்போது மக்கள் நினைவு கூர்கிறார்கள். அதனாலேயே இந்தக் கோயிலில் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அடுத்தடுத்து நிவேதனம் படைத்துகொண்டே இருக்கிறார்கள்.

இப்படியாக மொத்தம் 17 முறை விதவிதமான பிரசாதங்கள் அவருக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன. அதாவது, கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை நிவேதனம்! இதனால் அந்தந்த சமயத்தில் செல்லும் பக்தர்களுக்கு அந்தப் பிரசாதம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பிரசாதத்தோடு நின்றுவிடாமல், அடுத்தடுத்து அலங்காரமும் புதிது புதிதாக செய்விக்கிறார்கள்.

அதிகாலையில் உடாபன் என்று சொல்லப்படும் திருப்பள்ளியெழுச்சி நிகழ்ச்சியுடன் தினசரி வழிபாடுகள் ஆரம்பிக்கின்றன. இந்த முதல் நிகழ்ச்சியே வடநாட்டுப் பாணியின் தனி அம்சமாக இருக்கிறது. ஆமாம், கிருஷ்ணனுக்குத் தங்கப் பல்குச்சியால் பல் விளக்குகிறார்கள். பிறகு ஜிலேபி, லட்டு என்று இனிப்புகளை சமர்ப்பிக்கிறார்கள். பிறகு ஒரு மணிநேரத்துக்கெல்லாம் சர்க்கரை, பால், தயிர் என்று நிவேதனம்.

அடுத்து அப்பம், வெல்லம் கலந்த பாலால் செய்த ஓர் இனிப்பு, அதற்கப்புறம் பலவகை கனிகள்... இப்படி அடுத்தடுத்து உணவுப் பொருட்களை நிவேதனம் செய்துகொண்டே இருந்தால் கிருஷ்ணனுக்கு ஜீரணம் ஆகாவிட்டால் என்ன செய்வது? அதற்காக அவர் நித்திரை கொள்ளுமுன் செரிமானத்துக்காக லேகியமும் அர்ப்பணிக்கிறார்கள்! துவாரகையில் குழுமியிருக்கும் பக்தர்கள் அனைவருமே பரவசத்தில் ஆழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

எங்கும், யாரிடமும், எந்தப் பொருளிடமும் அவர்கள் கிருஷ்ணனை தரிசிக்கும் பக்திப் பரிமாணம் புரிகிறது. அதனாலேயே அவர்கள் இடித்துக்கொண்டு போவதையும், ஆங்காங்கே இடையூறாக அமர்ந்து கொள்வதையும் பொறுத்துக்கொள்ளவும் முடிகிறது. இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிருந்தும் கிருஷ்ண பக்தர்கள் அங்கே யாத்ரீகர்களாக வந்து கூடியிருக்கிறார்கள்.

உள்ளூர் பெண் பக்தர்களின் அலங்காரம், கோயிலுக்கு வருவதற்கான பிரத்யேக அலங்காரமாக இல்லாமல், அது அவர்களது இயல்பான தினசரி அலங்காரமாகவே இருக்கிறது. வர்ணனைகளில் விளக்கப்பட்டிருப்பதுபோல, இவர்களுடைய உடை, தோற்றத்தை வைத்து கிருஷ்ணன் காலத்து கோபியர் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்றும் எண்ணவைக்கிறது. கோபியர் மட்டுமா, ஆவினங்களும் அங்கே தாராளமாகப் புழங்குகின்றன.

நன்கு கொழுத்த, ஆரோக்கியமான பசுக்கள் மிகவும் சாதுவாக நடைபழகுவதும், அவற்றை பக்தர்கள் தொட்டு வணங்கும்போது, தொடப்படும் இடத்தை மட்டும் சிலிர்த்துக்கொண்டு அந்த வணக்கத்தைப் பசுக்கள் ஏற்றுக்கொள்வதும் இங்கே சாதாரணம். இவை பக்தர்களால் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்விக்கப்படுகின்றன.

துவாரகாதீசர் கோயில் கோபுரத்தின் உச்சியில் நீண்டதொரு கொடி பறப்பதை வெகு தொலைவிலிருந்தே தரிசிக்கலாம். நாற்பது மீட்டர் நீளமுள்ள முக்கோண வடிவக் கொடி இது. கோபுரத்தின் மீது துவஜஸ்தம்பம் அமைக்கப்பட்டு, அதில் இந்தக் கொடி ஏற்றப்படுகிறது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை என்று குறிப்பிட்ட காலத்துக்கு ஏற்றார்போல இந்தக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. இதே கோபுர உச்சியில் வட்டவடிவமான ஒரு பகுதியில் கொடியேற்றத்தை ஒட்டி, நெய் விளக்கு ஒன்றும் ஏற்றி வைக்கப்படுகிறது.

கொடியையும் விளக்கையும் ஏற்றி வைக்கும் இந்தப் பணியை ‘ஆபோடி’ என்ற அந்தண வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாக நிறைவேற்றி வருகிறார்கள். கடற்கரைக் கோயிலாக இருந்தாலும், கடலிலிருந்து வீசும் புயலோ, கடுமையான மழையால் உருவாகும் வெள்ளமோ இந்தக் கோயிலை பாதித்ததே இல்லை என்கிறார்கள். கடலரசன், கிருஷ்ணனுக்கு அளித்த நிலப்பகுதி அல்லவா, அதனால் இயற்கையின் சீற்றம் எதுவும் இக்கோயிலைத் தாக்கத் தயங்குகிறது போலிருக்கிறது!

இந்த துவாரகையை அடுத்து, சுமார் 40 கி.மீ. தொலைவில் பேட் துவாரகா என்று ஒரு தலம் உள்ளது. வடமொழியில் பேட் என்றால் தீவு என்று பொருள். எந்தக் கடலிலிருந்து தான் துவாரகை நகரை நிர்மாணிக்க நிலம் பெற்றாரோ, அந்தப் பகுதியை மீண்டும் கடலுக்கே அர்ப்பணித்துவிட விரும்பிய கிருஷ்ணன் தான் குடியிருந்த அரண்மனை மட்டும் தன் அவதாரத்தின் ஒரு சாட்சியாக நிலைத்திருக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

அதன்படியே இந்த அரண்மனைக் கோயில் மட்டும் புராண சாந்நித்தியத்தோடு அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. இந்த பேட் துவாரகையை அடைய முதலில் சாலைவழியாக ஓகா துறைமுகத்துக்குச் செல்ல வேண்டும். பேருந்து வசதிகளும் உண்டு. பிறகு அங்கிருந்து விசைப்படகு மூலமாக தீவு துவாரகையை அடையலாம். ஒரு கிலோ மீட்டர் - 15 நிமிடப் படகுப் பயணம். ஓகா துறைமுகத்துக்கு வரும் வழியிலேயே ருக்மிணி தாயாரின்தனிக் கோயிலை தரிசிக்கலாம்.

இங்கே ருக்மிணியும், கிருஷ்ணனும் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்கள். துர்வாச முனிவரின் கோபத்தால் அரண்மனைக்கு வரமுடியாத நிலை ருக்மிணிக்கு ஏற்பட்டது; அதனாலேயே இப்படி, அரண்மனைக்கு வெளியே தனியே ருக்மிணி கோயில் கொண்டிருக்கிறாள் என்று சொல்கிறார்கள். தீவு துவாரகையில், கிருஷ்ணன், துவாரகநாத்ஜீ என்ற பெயரில் மூலவராக தரிசனம் தருகிறார்.

இவருக்கு எதிரில் கிருஷ்ணரின் தாயார் தேவகிக்கு தனிச் சந்நதி உள்ளது. வேறெந்த வைணவத் தலத்திலும் கிருஷ்ணனின் தாயார் இப்படி சிறப்பு செய்யப்படவில்லை என்கிறார்கள். இதே கோயிலில் கிருஷ்ணனின் எட்டு மனைவியருக்குமான தனித்தனி சந்நதிகளையும் தரிசிக்கலாம். இந்த சந்நதித் தொகுதியை கிருஷ்ணரின் ‘அந்தப்புரம்’ என்று சொல்கிறார்கள். கல்யாணராயர், கிருஷ்ணன், திருவிக்ரமன், லக்ஷ்மி நாராயணர் ஆகியோருக்கும் சந்நதிகள் உள்ளன.

கோமதி நதி, கடலில் கலக்கும் இடத்தில் துவாரகை அமைந்துள்ளது. இந்த சங்கமத்தில், அபூர்வமான, அற்புதமான கற்கள் கிடைக்கின்றன. இமயமலையிலிருந்து ஓடிவரும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்கிராமங்கள்போல இந்த கற்கள் மிகவும் அபூர்வமானவை. இவற்றின் மேல்பாகம் தேன் அடைபோல சிறுசிறு பள்ளங்களைக் கொண்டிருக்கிறது. சில கற்களில் திருமாலின் குறியீடான சக்கரம் பொறித்தாற்போல உள்ளது.

கண்டகி நதியில் நீருக்கடியில் தரையில் சாளக்கிராமங்கள் கிடைக்கின்றன என்றால், இங்கே கோமதி நதியில் மேலாகவே சில கற்கள் மிதந்து வருவதைப் பார்க்கலாம். அனேகமாக எல்லா பக்தர்களுமே இந்தக் கற்களை சேகரித்துக் கொண்டு, தத்தமது இல்லங்களுக்குச் சென்று பூஜையறையில் வைத்து வழிபடுகிறார்கள். இந்தக் கற்கள் பல வடிவங்களில், பல அளவுகளில், பல எடைகளில் கிடைக்கின்றன.

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரிலிருந்து வீரம்காம்-ராஜ்கோட்-ஜாம்நகர் (மும்பையிலிருந்தும் ஜாம்நகர் வரலாம்) வழியாக ஓகா துறைமுகத்துக்குச் செல்லும் ரயில்பாதையில், துவாரகை ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ளலாம். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது துவாரகாதீசர் திருக்கோயில். அகமதாபாத்திலிருந்து துவாரகைக்குப் பேருந்து வசதி உண்டு.

பிரபுசங்கர்