என் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!மன இருள் அகற்றும் ஞானஒளி - 24

ஆடி மாதம் என்றாலே அம்மன் நினைவும், மகாசக்தி பொருந்திய அம்மையின் தாய்மை உணர்வும்தான் மேலிடுகிறது. நமது இந்திய கலாசாரத்தில் பண்பாட்டு பழக்க வழக்கங்களில் சக்தி வழிபாட்டிற்குத்தான் காலம் காலமாக முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்கள். இதனால்தான் என்னவோ மேலைநாட்டை போக பூமியாகவும், நம் பாரத திருநாட்டை யோக பூமியாகவும் பார்க்கின்ற பரந்துபட்ட பார்வை அனைவரிடமும் குடிகொண்டு இருக்கிறது.

அனைத்தையும் துறந்த துறவிகளால்கூட தாயின் மேல் உள்ள பாசத்தை முற்றிலுமாக விடமுடியவில்லை. ஏனென்றால் இவர்கள்தான் நமக்கு ஆதியும் அந்தமும். முதலும் முடிவும் இவர்களே. பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பவர்களுக்கு மத்தியில் அவர்களை வழிபடு கடவுளாக பார்க்கும் மனநிலையை நம் முன்னோர்களும், ரிஷிகளும், பெரிய மகான்களும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

‘யார் இல்லை என்றால் நான் இந்த மண்ணுக்கு வந்திருக்க முடியாதோ, யாரை இழந்துவிட்டால் நான் மீண்டும் பெற முடியாதோ அவள் பெயர்தான் தாய்.’ இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? மனித மனங்களை கொள்ளை கொண்ட அருட்பெரும் துறவி சுவாமி விவேகானந்தர்தான். வைணவ குருபரம்பரையில் மிகப்பெரிய ஆளுமையுடன் விளங்கிய சுவாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய கோதாஸ்துதியில் ஆண்டாள் நாச்சியாரின் பெருமையை எல்லாம் ஒன்று திரட்டி இந்த உலகத்திற்குத் தந்திருக்கிறார்.

கர்க்கடே பூர்வ பல்குண்யாம்
துளசிகாந நோத்பவாம்
பாண்ட்யே விச்வம்பராம் கோதாம்
வந்தே ஸ்ரீ ரங்கநாயகீம்
ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தந யோக த்ருஸ்யாம்
ஸாக்ஷாத் ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!

-உயர்ந்த ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் வில்லிபுத்தூரில் துளசி வனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் அவதாரம் செய்தாள், கோதை. பூமாதேவியின் அம்சமாக தோன்றினவள் ஆண்டாள் நாச்சியார். இந்த ஆண்டாளின் பெருமையை சொல்லிக் கொண்டே போகிறார் சுவாமி வேதாந்த தேசிகர்.

தான் ஒருத்தி மட்டும் வழிபட்டு இறையருளைப் ெபறாமல் தோழிமார்களை எல்லாம் எழுப்பி அனைவருக்கும் வாழ்வின் பேறுகளை அள்ளித்தந்த அருட்கொடை ஆண்டாள் நாச்சியார். பக்தி உலகத்தில் இந்து சமயத்தில் முதன் முதலில் கூட்டு வழிபாட்டிற்கு வித்திட்டவள் ஆண்டாள் நாச்சியார்!

தகப்பனுக்கு பாடம் சொன்ன முருகனைப்போல திருத் தகப்பனாரும், ஆசிரியருமான பெரியாழ்வாரையே மிஞ்சிவிட்டாள் ஆண்டாள். அதனால் அவளுடைய பக்தியும் தமிழும் அதில் மணக்கும் வாசமும் காலம் கடந்து நிற்கின்றன. ஆடிப்பூரத்தில் மட்டுமல்ல எப்போது நாம் ஆண்டாளை நினைத்தாலும் அவள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்வாள். இதைவிட பெரிய பேறு நமக்கு என்ன இருக்கமுடியும்?

திருவருட்பா படைத்த வடலூர் வள்ளல் பெருமகனார் தன்னுடைய ‘வடிவுடை மாணிக்க மாலை’யில்  வடிவுடை அம்மனை அப்படியே நம் மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே! உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே! அடல்விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே! நீங்கள் திருவொற்றியூரில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் வடிவுடை அம்மனை சென்று பாருங்கள்.

கூடவே காலம் தமிழுக்கு கொடுத்த கொடை வடலூர் வள்ளல் பெருமகனாரின் இந்த பதிகத்தை சொல்லிப் பாருங்கள். உயிர்ப்பு உள்ள ஒரு தெய்வீகப் பேரருள் உங்கள் முன்வந்து நிற்பதை உணர முடியும். பெருங்கருணை இல்லாவிட்டால் இப்படி சொற்கள் வரிசை கட்டி வந்து நிற்குமா?

உலகத்து உயிர்களை எல்லாம் சமதிருஷ்டியில் நேசித்த மகானுபவான் வடலூர் வள்ளலாரின் ‘வடிவுடை மாணிக்க மாலை’யை மனம் ஒன்றிப் படித்துப் பாருங்கள். அதன் அனுபவமே தனியாக இருக்கும். வடிவுடை மாணிக்க மாலையில் தெய்வீகப் பேரருள் ததும்பும்  வடிவுடை அம்மனை நினைத்து உள்ளம் உருக இந்தப் பாமாலையை படைத்திருக்கிறார் வள்ளல் பெருமான்.

வாழி நின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
வாழி நின் தாள்மலர் போற்றிநின் தண்ணளி வாழி நின் சீர்
வாழி என் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும் நீ
வாழி என் ஆரூயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!

- வடிவுடை அம்மனிடம் தன்னையே சரணாகதி பண்ணியிருக்கிறார் வடலூர் வள்ளல் பெருமான். இல்லாவிட்டால் என் ஆருயிர் வாழ்வே என்று கருணை ததும்பும் இந்த வைரவரிகள் நமக்கு கிடைத்திருக்குமா? தன்னை முழுவதுமாக இழந்தால்தான் தாயின் கருணைப் பார்வை நமக்குக் கிடைக்கும் என்று யதார்த்த உண்மையை எடுத்துச் சொல்கிறார் வள்ளல் பெருமகனார். திருவொற்றியூர் என்ன சாதாரண ஸ்தலமா?

பட்டினத்து அடிகளும், வள்ளல் பெருமானும், திருஞான சம்மந்தப் பெருமானும், அப்பர் அடிகளும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தங்கள் ஆன்மாவையே இறக்கி வைத்த இடமல்லவா? திருவொற்றியூர் திருத்தலத்தைப் பற்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் படைத்த தேவாரம் ஒன்றைப் பார்க்கலாம். ஊனை உருக்கி உள்ளத்தை நெகிழச் செய்யும் அதி அற்புத தேவாரம் இது-அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்;
அதுவும் நான் படப்பாலதுஒன்று ஆனால்,

பிழுக்கை வாரியும் பால் கொள்வர்; அடிகேள்!
பிழைப்பன்ஆகிலும் திருவடிப்
பிழையேன்;
வழுக்கி வீழினும் திருப்பெயர்அல்லால்,
மற்று நான் அறியேன், மறு மாற்றம்;
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து
உரையாய்---
ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!

‘‘என் தலைவனே! திருவொற்றியூரில் அமர்ந்து அருள்பாலிப்பவனே! அடியேன் அழுக்கேறிய உடலுடன் உன் திருவடியை அடைந்தேன். இத்துயரம் நான் அடைவதற்கு உரியவனாக இருந்தாலும் குன்றிய என் கண் ஒளிக்கு ஒரு மருந்தினைத் தருவாய்! நான் கதறி அழுவது உன் காதில் விழவில்லையா? பசுவின் பாலைப் பெற்று பயன் அடைபவர்கள் அந்தப் பசுவை நன்கு பராமரித்து காப்பாற்றுவதில்லையா? அதனுடைய சாணத்தைக் கூட பயன்படுத்திக் கொள்வார்களே அதை எவ்வளவு புனிதமாக கருதுவார்கள்.

இனி நான் பிழை செய்யமாட்டேன். அப்படியே வழுக்கி விழுந்தாலும் உன் திருப்பெயரைத் தவிர பிற பெயர்களைக் கூறேன். அடியவனை ஏற்று அருள்க!’’ என்று நெஞ்சம் மன்றாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சிவனை நண்பனாகப் பெற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே இந்த நிலைமை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

சிற்றின்ப சகதியிலே வலம் வரும் நாம் பேரின்பத்தை நோக்கி நம் மனத்தை நகர்த்துவோம். பெரும் மகான்களின் ஆன்மா குடிகொண்டிருக்கும் திருஒற்றியூருக்கு ஒருமுறை சென்று சிவபெருமானையும் இணையில்லா பேரழகு படைத்த வடிவுடை அம்மனையும் தரிசியுங்கள். அந்த நற்கருணைப் பேற்றுக்கு பாத்திரமாவோம். நலம் பலவும் விளையும். 

ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்