புகழ் விளங்கத் தோன்றுவீர் புவியீரே!குறளின் குரல் - 65

ஒரு குறள். மொத்தம் ஏழு சொற்கள்தான். ஆனால் அந்த ஏழே ஏழு சொற்களைக் கொண்ட ஒரே ஒரு குறள் எத்தனை எத்தனை சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது! வள்ளுவரின் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களும் தனித்தனியே ஆயிரக்கணக்கான சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல் பெற்றவை. அறத்துப்பாலில் இருபத்து நான்காம் அதிகாரமாகத் திகழ்கிறது `புகழ்’. அதில் ஒரு குறள்:

`தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.’
 
`பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும். அல்லாதவர்கள் பிறக்காமல் இருப்பதே நல்லது’ என்று இந்தக் குறளுக்குப் பரவலாகப் பொருள் சொல்லப்பட்டது. ஆனால், அறிஞர்கள் பலர் இந்தப் பொருள் சரியல்ல என்றும் சிந்தித்திருக்கிறார்கள்.பிறக்கும்போதே புகழோடு எப்படிப் பிறக்கமுடியும்? பிறந்தபின் செய்யும் சாதனைகளால்தானே ஒருவருக்குப் புகழ் ஏற்படுகிறது? மனிதர்கள் பல்வேறு துறைகளில் அரிய சாதனைகளைச் செய்து புகழ்மிக்க வாழ்வு வாழவேண்டும் என்பதுதானே ஏற்கக்கூடிய கருத்தாக இருக்க முடியும்?
 
அப்படியானால் `தோன்றின்’ என்ற சொல் எந்தப் பொருளைக் குறிக்கிறது? ஓர் அவையில் தோன்றும்போது, ஒரு செயலைச் செய்யவேண்டி முன்வரும்போது, புகழோடு தோன்றுக என்றே வள்ளுவர் சொல்லியிருக்க வேண்டும். தோன்றுதல் என்ற சொல், பிறப்பின் காரணமாகப் புவியில் தோன்றுவதைக் குறித்ததல்ல. செயலின் காரணமாக அவையில் தோன்றுதலைக் குறித்தது. தோன்றுவது என்பதைக் காட்சி தருவது, ஒருவர் முன் பிரசன்னமாவது என்றே கொள்ளவேண்டும்.

அப்படித்தான் தோன்றினார் கடவுள்! இறைவன் எங்கிருப்பான் எனக்கேட்டான் இறை நம்பிக்கையற்ற இரணியன். அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று கம்பீரமாக பதில் சொன்னான் திருமாலையே தஞ்சமடைந்திருந்த அவன் மகன் பிரகலாதன். இரணியன் ஒரு தூணை உதைத்தபோது அதனுள்ளிருந்து `தோன்றினார்’ நரசிம்மர். எவ்விதமெல்லாம் சூழ்ச்சியாக வரம் கேட்டிருந்தான் இரணியன்!

அவனை இரவிலும் கொல்ல முடியாது. பகலிலும் கொல்ல முடியாது. எனவே சாயங்காலத்தில் வந்தார் கடவுள். இரவும் பகலுமற்ற இடைநேரம் அது. அவனை வீட்டிற்கு வெளியிலும் கொல்ல இயலாது. வீட்டிற்கு உள்ளேயும் கொல்ல இயலாது. வாயில்படியில் வைத்து வதம் செய்தார். வாயில்படி வீட்டிற்கு உள்ளுமல்ல. வெளியுமல்ல! அவனை மனிதனாலும் கொல்ல முடியாது. மிருகத்தாலும் கொல்ல முடியாது. நரசிம்மம் மனிதனா, மிருகமா? இரண்டுமானவன்!
 
அவனை உயிருள்ள பொருளாலும் வதைக்க முடியாது. உயிரற்ற பொருளாலும் வதைக்க முடியாது. நகத்தால் அவன் குடலைக் கிழித்து வதைத்தார் நரசிம்மர். நகம் வளர்வதால் உயிருள்ளது. ஆனால், உணர்வற்றதால் உயிரில்லாதது! மனிதனின் சூழ்ச்சிகளை வெல்ல அந்த மனிதனையே படைத்த கடவுளுக்குத் தெரியாதா என்ன? நாராயண பட்டதிரி என்ற பக்திக்கவிஞர் எழுதிய அற்புதமான சம்ஸ்க்ருதக் கவிதை நூல் நாராயணீயம்.

அச்யுத பிட்சாரோடி என்ற தம் குருவுக்கு வந்த வாதநோயைத் தான் வாங்கிக்கொண்டு, அந்த நோயைப் போக்கிக்கொள்ள வேண்டி எழுதப்பட்ட நூல் அது. `ஏ குருவாயூரப்பா!’ எனக் கடவுளுடன் பேசுவதுபோல் கடவுளை முன்னிலைப்படுத்தி எழுதிய புது உத்தியை உடையது. தசாவதாரம் முழுவதும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
 
கண்ணனின் சரிதமான பாகவத புராணத்தை 1034 செய்யுள்களில் சொல்கிறது இந்நூல். பதிகம் என்று பத்துப் பாடல்கள் அடங்கிய தொகுப்பைத் தமிழில் சொல்கிறோம். இதைப்போல் தசகம் என்பது பத்து சம்ஸ்க்ருதச் செய்யுள்களின் தொகுப்பு. நாராயணீயம் சுமார் நூறு தசகங்களை உடையது. பக்தி உணர்ச்சிக்காகவும் அற்புதமான இலக்கிய நயத்திற்காகவும் இந்நூல் கொண்டாடப்படுகிறது. நாராயணீயம்  பாராயணம் செய்பவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.
 
இதை எழுதிய நாராயண பட்டதிரி 1560ல் பிறந்தவர். 27 வயதில் நாராயணீயம் இயற்றினார். 105 வயது வரை வாழ்ந்தார். ஒவ்வொரு நாளும் பத்துப் பத்துப் பாடல்கள் வீதம் நூறுநாள் நாராயணீயத்தைப் பாடினார். நூறாம்நாள் கண்ணனை நேரில் தரிசித்தார். கேசாதி பாதமாக கண்ணக் கடவுளைக் கசிந்துருகி வர்ணித்தார். அவர் நோய் குணமாயிற்று.

முன்னர் அனந்தராம தீட்சிதர் மற்றும் இப்போது தாமல் ராமகிருஷ்ணன் போன்றோர் நாராயணீயம் என்ற அந்த அற்புதமான காவியத்தைத் தம் சொற்பொழிவுகள் மூலம் பிரபலப்படுத்தி வருகிறார்கள். நாராயணீயத்தில் நரசிம்மவதாரம் பற்றி சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உருகி உருகி எழுதினார் நாராயண பட்டதிரி. அவர் நெஞ்சில் தாபம் பெருகியது. கழிவிரக்கம் நிறைந்தது.

‘பிரகலாதனுக்கு தரிசனமளித்து இரணியனை வதைத்த குருவாயூரப்பன் என்முன் தோன்றி என்னைப் பிடித்துள்ள வாதநோய் என்ற இரணியனை ஏன் இன்னும் வதைக்கவில்லை? பிரகலாதன் மேல் மட்டும்தான் குருவாயூரப்பன் அன்பு கொண்டவரா?’ பிரகலாத சரித்திரத்தில் நரசிம்மர் தோன்றிய காட்சியை வர்ணிக்கும்போது, `பிரகலாதப்ரியா!’ என உருக்கத்துடன் குரல் கொடுத்தார் பட்டதிரி.

அவர் எழுதும் நாராயணீயத்தின் சொற்சுவை முழுவதையும் கற்சிலையாய் இருந்து செவிமடுக்கும் குருவாயூரப்பன், அவரின் உருக்கமான குரலையும் செவிமடுத்தான். அந்தக் கற்சிலை உள்ளிருந்து கணீரென்று பதில் சொல்லிற்று:  `நான் பிரகலாதப்ரியன் மட்டுமல்ல, பக்த ப்ரியன்!’ புல்லாங்குழலை வாசிப்பவனின் புல்லாங்குழலை விட இனிமையான குரலைக் கேட்டு மயங்கியது பட்டதிரியின் உள்ளம்.

அவர், தம் நோய் நீங்கும் என நம்பிக்கை கொண்டார். அவர் நாராயணீயத்தின் இறுதிப் பகுதியை எழுதி முடித்தபோது கண்ணன் அவர் முன் `தோன்றினான்’. அவர் நோயைத் தன் பார்வையால் குணப்படுத்தினான். அவர் குணம்பெற்றதால் அன்றுதொட்டு மக்கள் அவரைக் கொண்டாடலானார்கள். எனவே பட்டதிரி மக்கள் மனத்தில் புகழோடு `தோன்றியதும்’ அப்போதுதான். `தோன்றின் புகழொடு தோன்றுக’ என்று வள்ளுவர் சொன்னது இப்படித் தோன்றுவதைத்தான்.

நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கிறாள் அன்னை அபிராமி. அமிர்தகடேஸ்வரர் ஆலயத்து அம்பிகை. அவளையே நினைந்து வாழ்ந்தார் அபிராமி பட்டர். அபிராமியின் பக்தராதலால் அவருக்கு அந்தப் பெயர் வந்ததே தவிர, உண்மையில் அவர் இயற்பெயர் சுப்பிரமணியன். அன்று அமாவாசை. அம்பிகையின் முழுநிலவு போன்ற முகத்தை அகத்தில் கண்டு விழிமூடி பக்தியில் தோய்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்தான் சரபோஜி மன்னன். கண்களை மூடி மெய்ம்மறந்திருந்த அவரது தோளைத் தட்டி இன்று என்ன திதி எனக் கேட்டான். அன்னையின் முழுநிலவு முகத்தில் முழுமையாய் ஈடுபட்டிருந்த அவர், பெளர்ணமி என பதில் சொல்லிவிட்டார்! மன்னன் சீறினான். அன்று இரவு நேரத்தில், வானில் முழுநிலவு வரவில்லை என்றால் உன் தலையைச் சீவுவேன் என உறுமிவிட்டுச் சென்றான்.
 
கேட்டுக்கொண்டிருந்த மக்கள் பதறினார்கள். ஆனால், பட்டர் பதறவில்லை. இரவு வந்தது. சரபோஜி மன்னன் வந்தான். `வானில் எங்கே முழுநிலவு?’ எனக் கடும் கோபத்துடன் கேட்டான். `சொல்லடி அபிராமி! வானில் சுடர்வருமோ? எனக்கு இடர் வருமோ?’ என நெஞ்சுறுதியோடு அபிராமி பதிகம் பாடி உள்ளம் உருகினார் பட்டர்.
 
அபிராமி அன்னையின் உள்ளமும் உருகியது. தன் குழந்தை பட்டரைக் காக்க வேண்டியது தனது கடமையல்லவா? தன் செவிகுளிர அந்தாதிப் பாடலாய்த் தமிழிசைக்கும் அவன் பாடல்தானே தன் காதுகளின் அணி? அதுதவிர எதற்கு இன்னொரு காதணி? தோடுடைய செவியனின் மனைவியான அன்னை, தன் தோடுகளில் ஒன்றைக் கழற்றி நீலவானில் வீசினாள்.

அந்தரத்தில் அந்தத்தோடு முழுநிலவாய் மின்னி ஒளிவீசியது. அமாவாசையன்று வானில் முழுநிலவு தோன்றிய அதிசயத்தைப் பார்த்த மன்னன் அவர் பாதங்களில் விழுந்து பணிந்தான் என்கிறது வரலாறு. அன்னையின் தோடு வானில் தோன்றியதே, அதுவும் புகழோடு தோன்றியது. அன்றே அபிராமி பட்டரும் புகழோடு `தோன்றினார்’. அதுமுதல் மன்னன் மனத்திலும் மக்கள் மத்தியிலும் அபிராமி பட்டரின் புகழ் வளர்ந்தது. தோன்றில் புகழொடு தோன்றுக என வள்ளுவம் சொன்னது அபிராமி பட்டர் தன் பக்தியை நிரூபித்து மக்கள் மன்றத்தில் புகழோடு தோன்றியதைத்தான்!

அன்னை அபிராமி மட்டும்தான் பக்தர்களுக்கு நேரில் தோன்றுவாளா? அவள் கணவன் பரமசிவன் தோன்ற மாட்டானா என்ன? மனைவிக்கிருக்கும் கருணை கணவனுக்கு இருக்காதா? பரமசிவன் ஓர் ஏழைப் புலவனின் வேண்டுகோளின்பேரில், மன்னன் அவையில் நேரில் தோன்றியதைச் சொல்கிறது  தமிழ் இலக்கிய வரலாறு. அரிமர்த்தன பாண்டியன் தன் மனைவி பெருந்தேவியோடு அமர்ந்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தான். அப்போது எழுந்தது அவன் அதுவரை நுகராத நறுமணம்.

அந்த மணம் அவன் தேவியின் கூந்தலிலிருந்து வந்தது. அது இயற்கை மணமா, இல்லை வாசனைத் திரவியங்கள் பூசுவதால் எழும் செயற்கை மணமா? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா? சிந்தித்த மன்னன் மறுநாள் முரசறைவோனை அழைத்து நாடெங்கும் இந்த செய்தியை முரசறையச் சொன்னான்: அரிமர்த்தன பாண்டிய மன்னன் மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அது என்னவென்று அறிந்து அதைத் தீர்த்து வைப்பவர்க்குப் பொற்கிழியொன்று பரிசாக வழங்கப்படும்.

சந்தேகம் என்னவென்றே தெரியாதபோது அதைத் தீர்த்து வைப்பது எப்படி? தலைமைப்புலவர் நக்கீரர் உள்பட அனைவரும் திகைத்தார்கள். ஏழைப் புலவன் தருமிக்கு அளவற்ற இறைநம்பிக்கை உண்டு. எப்படியாவது மன்னனின் மனத்தில் உள்ள சந்தேகத்தைத் தீர்த்துவைத்து அந்தப் பொற்கிழியைத் தான் அடைய வேண்டும் என்று தாளாத வேட்கை கொண்டான் அவன். சொக்கனை பக்தியோடு அழைத்தான்.

சொக்கன் ஒரு புலவன் வேடத்தில் அவன்முன் `தோன்றினான்!’ தோன்றியது மட்டுமல்ல, ஒரு பாடல் எழுதி அவன் கையிலும் கொடுத்தான். அந்தப் பாடலை சொந்தப் பாடல் எனக்கூறிப் பரிசுல் பெறுமாறு சொக்கன் அறிவுறுத்தினான். தருமி மன்னர் அவைசென்று இறைவன் தந்த பாடலைத் தன் பாடலாகப் படித்தான்:

`கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே!’

`ஏ வண்டே, பல மலர்களில் அமர்கிறாயே, என் மனைவியின் கூந்தலைப்போல் வாசனைமிக்க மலர் ஏதும் அவற்றில் உண்டோ?’ என்பது இப்பாடலின் சுருக்கக் கருத்து. மன்னன் மனம் பாடலைக் கேட்டுத் தெளிந்தது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற தன் சந்தேகத்தை உண்டு எனப் பதில்கூறி அந்தப் பாடல் தீர்த்து வைத்ததால் பொற்கிழிப் பரிசை தருமிக்கு அளிக்க முன்வந்தான் மன்னன்.

தலைமைப் புலவர் நக்கீரர் தடுத்தார். அந்தப் பாடலில் பொருள் குற்றம் உள்ளதென்றும் பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாதென்றும் வாதிட்டார். திகைத்த தருமி என்ன செய்வான் பாவம்? மறுபடியும் சொக்கா என, தான் நம்பும் சிவனை உருகிக் கதறி அழைத்தான். அந்த பக்தனின் அழைப்பை ஏற்று உடன் அந்த சபையில் சொக்கனுக்காக மறுபடியும் `தோன்றினான்’ சிவபெருமான்.

அதன் பின்னர் நடந்த கதை அனைவரும் அறிந்தது. பக்தர் குரலைக் கேட்டு உரிய நேரத்தில் உரிய இடத்தில் `தோன்றுவது’, சிவனின் இயல்புக் குணம். `தோன்றில் புகழொடு தோன்றுக’ என்று வள்ளுவம் சொல்கிறதே, அது இந்தத் தோன்றல்தான். வெறுமே மண்ணில் பிறப்பதல்ல. தெய்வங்கள் தோன்றுவதுபோல் மானிடர்களும் தம் செயல்களால் மக்கள் மன்றத்தில் புகழுடன் தோன்ற வேண்டும்.

தம் பக்தியை நிரூபித்துப் பிரகலாதனும், அபிராமி பட்டரும், தருமியும் மக்கள் மன்றத்தில் புகழோடு தோன்றினார்களே, அப்படித் தோன்ற வேண்டும். சிலர் கல்லறையில் ‘தோற்றம் - மறைவு’ என்று பதிவிட்டிருப்பார்கள். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எத்தனைமுறை ‘தோன்றி’ புகழ் ஈட்டினார் என்பதுதான் முக்கியம்! வள்ளுவம் சொன்னபடி, ஒரே ஒரு நூலை எழுதி தமிழ் இலக்கிய உலகில் என்றென்றும் நிலைக்கும் வகையில் `தோன்றினார்’ ஒரு புலவர். அந்தப் புலவர் யார் தெரியுமா? திருவள்ளுவரேதான்!

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்