சிவலிங்கத் திருஉருவில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்தெலங்கானா

மஹாவிஷ்ணு மீன். விலங்குகள் மற்றும் மனித உருவில் அவதாரங்கள் எடுத்திருக்கிறார். ஆனால் மனிதன் பாதி - மிருகம் பாதி அவதாரமான நரசிம்ம தோற்றம் தனிச்சிறப்பு வாய்ந்தது. நம் நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நரசிம்மருக்கு எண்ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் அவை மிக அதிகம்.

பொதுவாக நரசிம்மர் ஆலயக் கருவறைகளில் லட்சுமி நரசிம்மராக, யோக நரசிம்மராக, இரணியனை வதம் செய்யும் உக்ர நரசிம்மராகப் பல்வேறு தோற்றங்களில் அருள்பாலிக்கிறார். இவற்றில் மிகவும் வித்தியாசமானது - சிவலிங்க வடிவில் அவர் காட்சி தருவதுதான். விபூதி மற்றும் நாமம் தரித்து இவ்வாறு நரசிம்மர் காட்சி தரும் அற்புத ஆலயம் தெலங்கானா மாநிலம், மஹபூப் நகர் மாவட்டத்திலுள்ள சிங்கோட்டம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

இந்த சிங்கோட்டம் ஆலய லட்சுமிநரசிம்மர், திருமலை திருவேங்கடவனைப் போன்றே ஸ்ரீவாரு என்று அழைக்கப்படுகிறார். சிங்கோட்டத்தைச் சுற்றிலும் உள்ள கிராம மக்களுக்கு இவர் குலதெய்வமாகத் திகழ்கிறார். இந்த ஆலயம் உருவான நிகழ்ச்சியை தல புராணம் தெரிவிக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வயலில் உழுது கொண்டிருந்த ஒரு உழவரின் கலப்பை ஒருநாள் திடீரென்று ஒரு கல்லின் மீது மோதி நின்றது.

கலப்பையைத் தடுத்தாட்கொண்ட சிவலிங்க வடிவிலான அந்தக் கல்லை அகற்றி வயலின் ஒரு பக்கத்தில் வைத்தார். ஆனால் மறுநாள், அந்த லிங்கம் வயலில் முதல் நாள் இருந்த அதே இடத்தில் மீண்டும் காணப்பட்டது! அவர் திகைத்தார். மறுபடியும் அதை அகற்றி ஓரத்தில் வைக்க, அடுத்தநாள் பழைய இடத்திலேயே சிவலிங்கம் காட்சியளிப்பதுமாகப் பல நாட்கள் தொடர, இந்த அற்புதத்தைக் கண்டு பிரமித்த அவர் ஊர் மக்களிடம் விவரம் சொல்ல அது மன்னன் சிங்கமராயரின் காதுகளையும் எட்டியது.

ஜடப்ரோலு சமஸ்தானத்தை ஆண்டுவந்த அந்த மன்னரின் கனவில் நரசிம்மர் தோன்றி, அந்த சிவலிங்கத்தை வைத்துத்  தனக்கு ஓர் ஆலயம் கட்டுமாறு ஆணையிடவே, மன்னரும் வயலில் லிங்கம் காணப்பட்ட அதே இடத்தில் ஒரு சிறிய ஆலயத்தை எழுப்பி, அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்தார். சிவலிங்கத்தை வைத்துத் தனக்குக் கோயில் கட்டுமாறு ஸ்ரீநரசிம்மர் பணித்தது மட்டும் மன்னருக்குப் புதிராக இருந்தது.

ஆனால் இறைவனே சைவ-வைணவ ஒற்றுமைக்கு வழிகாட்டும்போது அதைப் பின்பற்றவேண்டியது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்தார் மன்னர். சிங்கமராயர் உருவாக்கிய இந்த ஆலயத்தைச் சுற்றியுள்ள இடம் ‘நரசிம்ம’ரின் பிரதிஷ்டைக்குப் பின்னர் சிங்கப் பட்டணம் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் சிங்கோட்டம் என்று மருவியது. அடுத்து இப்பகுதியை ஆண்டுவந்த சுரபி சமஸ்தான மன்னர்களால் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு, பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டது.

பிற்காலத்தில் 1857ம் ஆண்டில் ராணி ரத்தினமாம்பா காலத்தில் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, இந்த ஆலயத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள சிறிய குன்றின் மீது தாயாருக்குத் தனி ஆலயமும் கட்டப்பட்டது. ராணியின் பெயரால் இக்குன்று ரத்னகிரி என்று அழைக்கப்படுகிறது. தாயார், ஸ்ரீரத்னலட்சுமி எனப் பெயர் கொண்டாள். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீலட்சுமி தேவி விக்கிரகம் சென்னையிலிருந்து எடுத்து வரப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இக்காலகட்டத்தில் ஸ்ரீநரசிம்மர் ஆலய வளாகத்தில் சிவ சந்நதியும் அமைக்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரி குட்டா நரசிம்மர் ஆலயத்தை அடுத்து மிகப் பிரபலமான சிங்கோட்டம் நரசிம்மர் ஆலயம் இன்னொரு யாதகிரி குட்டாவாக பக்தர்களால் போற்றப்படுகிறது. ஆலய நுழைவாயிலை மூன்று கலசங்களுடன் கூடிய மூன்று நிலை ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. முக மண்டபம், மஹாமண்டபம் அடுத்து கருவறை என்று அமைந்துள்ளன.

சிறிய கருவறையின் மேற்பகுதியில் உக்ர மற்றும் யோக நரசிம்மரின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கருவறையில் லட்சுமி நரசிம்மர் சிவலிங்க வடிவினராக ஊர்த்வ புண்ட்ரம் (நாமம்) மற்றும் விபூதியோடு காட்சி தருகிறார். இவரது சிரசின் மீது அமைந்துள்ள தாமரை பிரம்மனைக் குறிப்பதால், இவரை மும்மூர்த்தி அம்சமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். உற்சவர் லட்சுமி நரசிம்ம மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.

கருவறையில் அருள்பாலிக்கும் லிங்க வடிவிலான முகம் மட்டுமே உள்ள இந்த நரசிம்மருக்கு, பெருமாளுக்குரிய  ஊர்த்வ புண்ட்ரம் என்ற நிலுவ நாமமும், சிவ புண்ட்ரம் என்ற அட்டநாமமும் அணிவிக்கப்படுவது பிற எந்தத் தலத்திலுமே காணக்கிடைக்காத தனிச்சிறப்பு. முகத்தின் இரு புறங்களிலும் சங்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த சுயம்பு  நரசிம்மர் ஆண்டுதோறும் வளர்ந்து வருவதாக பக்தர்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. ஆலய வளாகத்தில் விநாயகர், அனுமன், வாகனம் மற்றும் தேவியருடன் தனித்தனிப் பீடத்தில் நவகிரக சந்நதிகள் உள்ளன.

இந்த சிங்கோட்டம் ஆலயத்திற்கு வருகை தருகின்ற பக்தர்கள் முதலில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள பிரம்ம குண்டத்தில் புனித நீராடிவிட்டு ஆலய தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தங்களின் பிரச்னைகள் தீர பூசணிக்காயை காணிக்கையாக அளிப்பதோடு, அருகில் ‘ந்ருஸிம்ஹ சாகரம்’ என்றும் ‘ ஸ்ரீவாரி சமுத்ரம்’ என்றும் அழைக்கப்படும் புஷ்கரணியில் வெல்லத்தைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இந்த புஷ்கரணி ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீரால் நிரப்பப்படுகிறது.

ஒவ்வோரு ஆண்டும் மாக (தை-மாசி) மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின்போது நடைபெறும் கருட வாகன சேவை, தெப்ப உற்சவம் மற்றும் ரத உற்சவத்தில் கலந்துகொள்ள மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கொல்லாப்பூர் சமஸ்தானத்தினரால் நிர்வகிக்கப்படும் இந்த  பிரம்மோற்சவத்தின் போது முப்பதாயிரம் முதல் ஒரு லட்சம்வரை பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலயத்தில் நரசிம்ம ஜயந்தி மிக முக்கியமான, உன்னதமான, கோலாகலமான விசேஷமாகும்.

மாவட்டத் தலைநகரான மஹபூப்நகரிலிருந்து கொல்லாப்பூர் 94.கி.மீ. தொலைவிலும், இங்கிருந்து சிங்கோட்டம் 9 கி.மீ. தொலைவிலும் உள்ளன. சிங்கோட்டம் அருகில் உள்ள மிகப்பிரபலமான பிற ஆலயங்கள்: சோமசிலா ஸ்ரீலலிதா சோமேஸ்வரஸ்வாமி ஆலயம், ஸ்ரீரங்கப்பூர் ஸ்ரீரங்கநாயக ஸ்வாமி ஆலயம், ஜடப்ரோலு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம்.

- விஜயலட்சுமி சுப்ரமணியம்