அருள் ஒளிபொழியும் அபிராமி அந்தாதி



சக்தி தத்துவம்

ஒரு நூலைப் படிப்பதற்கு முன் அதை எழுதியது யார், பொதுவில் எந்த கருத்தைப் பற்றியது, நூலின் பெயர் என்ன, எந்த இலக்கண அமைப்பில் அமைந்தது, உரைநடையா, செய்யுளா, எந்த பொருளைப் பற்றியது, கேட்பதற்கு உரிய தகுதி யாது, கேட்பதனால் ஏற்படும் பயன் என்ன, எந்த காலத்தில் எந்த இடத்தில் எந்த காரணம் பற்றி இயற்றப்பட்டது என்பனவற்றையெல்லாம் நாம் அறிந்துகொண்டு படித்தல் பொதுவாக நன்று. இதனால் தேவையற்றதை தவிர்ப்பதற்கும், தேவையுள்ளதை தேர்ந்தெடுத்து விரைவாகப் படிப்பதற்கும் காலத்தை விரயம் செய்யாதிருக்கவும், நம் முன்னோர்கள் பாயிரம் என்ற ஒன்றை எழுதி நூலை பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவு செய்துள்ளனர்.

‘‘ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோரு ஆயெண் பொருளும்
வாய்பக் காட்டல் பாயிரத்து இயல்பே’’
(நூற்பா.47 நன்னூல்)

‘‘காலன் களனே காரணம் என்றுஇம்
மூவகை ஏற்றி மொழிஞரும் உளரே’’

இந்த நூட்பாவின் வழியே அபிராமி அந்தாதியை காண்போம். அதன்படி திருக்கடையூர் (அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர்) திருக்கோயிலில் சமையல்காரராகப் பணியாற்றிய அமிர்தலிங்க ஐயர் அவர்களின் குமாரர் சுப்பிரமணிய அய்யர் என்ற அபிராமிபட்டர்தான் நூலின் ஆக்கியோன் என்பதைப் பாயிரம்வழி கண்டோம்.

ஒவ்வொரு சமயமும் தனக்கென ஓர் இறைவனை கொண்டுள்ளது. வணங்குவதற்கென நூல்களும் உள்ளன. அந்த நூல்களை அடிப்படையாகக்கொண்டே அச்சமயத்தை பின்பற்றி வழிபாடு செய்கின்றனர். சக்தியை முழுமுதற்பொருளாகக் கொண்டு வணங்குவது சாக்தம். அவ்வாறு வணங்குபவர்கள் சாக்தர்கள் எனப்பட்டனர். அதில் முக்கிய தந்திரங்கள் என்ற சுமார் 64 செயலாக்க விரிவுரை நூல்களும் (ஆகமங்கள்), கருத்தாக்க நூல்களும் (தத்துவங்கள்) உள்ளன. அந்த அடிப்படை நோக்கில் அனைத்து சாக்தர்களும் தசமகாவித்யா, ஸ்ரீவித்யா என்ற குறியீடு சொல்லான மந்திரங்களைக்கூறி வழிபாடு செய்கின்றனர். மந்திரங்கள் என்பது இறைவனை அழைத்து நம் புலன்களுக்கு புலப்படுத்தும் சாதனமாகும்.

ஒவ்வொரு மகா மந்திரமும் 8 உறுப்புகளைக் கொண்டது.
1. மந்திரத்தின் பெயர் (உதாரணமாக - ேக்ஷிட
ஸாக்‌ஷரி, 16 எழுத்துகள்)
2. ரிஷி (மந்திரத்தை கண்டுபிடித்தவர்)
3. சந்தஸ் (எழுத்து மற்றும் ஒலி அளவை குறிக்கும் யாப்பு)
4. தேவதை - ஸ்ரீவித்யா
5. பீஜம் - மந்திரத்தின் முக்கிய எழுத்து, தேவதையின் உயிராக கருதப்படுவது.
6. சக்தி - தேவதையின் உடலாக கருதப்படுவது.
7. கீலகம் - தேவதையின் மனதாக கருதப்படுவது.
8. பயன் - (உதாரணமாக - பிரசாதஸித்யர்தே - அருளைப்பெற)

இந்தஎட்டு 8 உறுப்புகளில் ரிஷி மிக முக்கியமானவராக கருதப்படுகிறார். தான் சொன்ன மந்திரத்தைக் கூறி தேவதையின் அருளை அடைந்தவர் அவர். ஒரே தேவதைக்குப் பல ரிஷிகளும் உள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ரிஷியும் தனது வம்சத்தில் வந்தவர்களுக்கோ அல்லது சீடர்களுக்கோ அந்த மந்திரத்தை உபதேசித்துள்ளனர். இதைத்தான் குருபரம்பரை என்பார்கள். பிற்காலத்தில் இந்த மந்திரத்தைச் சொல்பவர்கள் முதலில் அந்த குரு பரம்பரையைச் சொல்லியே (குருவந்தனம் செய்தபிறகே) தன் வழிபாட்டை துவங்க வேண்டும்.

இவ்வாறான வழிகளும் பல உள்ளன. ஒவ்வொரு வழியும் தனக்கான சிற்சில தனித்தன்மையை கொண்டு திகழ்கின்றது. அந்த வழியில் அபிராமி பட்டர் மிகத்தெளிவாக 97வது பாடலில் (‘ஆதித்தன், அம்புலி...) குறிப்பிடுகின்றார். இவர்கள் அனைவரும் ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தின் குருக்கள் ஆவார்கள். அவர்கள் சொன்ன  மந்திரத்தையே திருக்கடையூர் அபிராமியை வணங்குவதற்கு பயன்படுத்தி உள்ளார் என்பதை இப்பாடலின் மூலம் அறியலாம்.

இதையே ‘திரிபுரோப நிஷத்’ மிகத்தெளிவாக சூரிய வித்யா, சந்திர வித்யா, ஜாதவேதஸ், குபேர வித்யா, இந்திர வித்யா, பிரம்ம வித்யா, பரமசிவ வித்யா, விஷ்ணு வித்யா, அகஸ்திய வித்யா, ஷண்முக வித்யா, கணேச வித்யா, சோடஷாக்‌ஷரி வித்யா என்ற ஸ்ரீவித்யாவாகின்ற தேவதையை வணங்குகின்ற சாத்தர்களான 12 தேவதைகளின் பெயரையும் குறிப்பிடுகின்றனர்.

ஆதித்தன், அம்புலி, அங்கி
குபேரன், அமரர் தங்கோன்
போதிற் பிரமன், புராரி
முராரி, பொதிய முனி
காதிப் பொருபடை கந்தன்
கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்
போற்றுவர் தையலையே!

நூற்பாவின்வழியே அபிராமி அந்தாதியில் எல்லை என்பது நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் அபிராமி பதிகத்தில் அபிராமி பட்டரே ‘ஆதிகடவூரின் வாழ்வே’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக்கொண்டு இந்த நூல் வழங்கும் எல்லை, திருக்கடையூர் என அறியப்படுகிறது. சக்தி வழிபாடு மேற்கொள்ளப்படும் ஆலயங்கள் எழுந்தருளியுள்ள அனைத்துமே எல்லை எனவும் கூறலாம்.

அபிராமி அந்தாதியைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்து, அசை, சொல், சீர், அடி, ஆகியவற்றுள் ஒன்று அதற்கடுத்த பாடலில் முதலாவதாக வரும்படி அமைத்து பாடி இறுதிப் பாடலின் இறுதியும் முதல் பாடலின் முதலும் ஒன்றாக இணையும்படி மண்டலித்து மாலை போலத் தொடுத்து முடித்திருப்பதாகும்.

யாப்பிலக்கணத்தின்படி எழுத்தெண்ணி பாடும் கட்டளைக் கவித்துறையில் நூறு பாடல்களை கொண்டதாவும் அமையும். சாத்தர்கள், தாங்கள் கடவுள் சக்தி என்றும் அவளை அடைவதனால் நாம் பெரும் பேறு, முக்தி என்றும், அதை பெறுவதற்கு சாதனம், பக்தி என்றும், அதற்கு மிகவும் முக்கியம், மந்திரம் என்றும் அதை தருபவர் குரு என்றும், அப்படிப் பெறுகின்ற செயலை, தீட்சை என்றும் இந்தக் கருத்துகளை விளக்கிக் கூறுவது ஆகமம் என்றும், அதை செயல்படுத்தி அனுபவத்தில் பெற முயல்வதை விளக்குவது பத்ததி என்றும் கூறுகின்றனர்.

இது ஒவ்வொரு சமயத்திற்கும், தனித்தனியாக அமைந்துள்ளது. அந்த வழியே அபிராமி பட்டர், பாடல் எண். 6, ‘சென்னியது உன் திருவடித் தாமரை’ என்று தீட்சையையும், ‘சிந்தையுள்ளே மன்னியது உன் திரு மந்திரம்’ என்பதனால் தீட்சையினால் மந்திரம் பெறப்பட்டதையும், ‘சிந்துர வண்ணப் பெண்ணே!’ என்று சக்தியையும், ‘முன்னிய நின் அடியாளுடன் கூடி’ என்று தீட்சை தரக்கூடிய குருவையும், ‘முறை முறையே பன்னியது’ என்று அப்படி குருவினால் பெறப்பட்ட மந்திரத்தை மனதினால் எண்ணி தொழும் முறையையும், ‘என்றும் உன்தன் பரம ஆகமப் பத்ததியே’ என்று செயலாக்க கொள்கையையும் விளக்குகின்றது. விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய்புளகம் அரும்பித் ததும்பி ஆனந்தமாகி அறிவிழந்து கரும்பிற் களித்து, மொழி தடுமாறி முன்சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே!
(பாடல் 94)

இந்த பாடல் மூலம் அபிராமி அம்மையை தொழவிரும்புவோரே மேற்கண்ட பக்குவமுடைய அடியார்கள். அவர்களே இந்நூலை கேட்பதற்கு உரியவர் என்பதை விளக்கமாக கூறுகின்றார். முதல் பாட்டிலேயே ‘உணர் உமையோர் மதிக்கின்ற மாணிக்கம்’ என்பதன் மூலமும் விளக்குகின்றார். 
 
‘நாயகி... சரணம் அரண் நமக்கே…’
(50வது பாடல்)

‘தனம் தரும்... பொருள் தரும்…’
(69வது பாடல்)

‘ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்
‘வான் அஹமான வடிவுடையாள்....
இன்பம்…’ (பாடல் 11)

‘அழியாத முக்தி வீடுமன்றே…’ (பாடல் 15)

மேற்கண்ட பாடல் வரிகளின் மூலம் இந்த நூலை படிப்பவர், அதன் வழி நடந்தால் அறம், பொருள், இன்பம், வீடு இந்த நான்கையும் பயனாக பெறுவர். கி.பி. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன் காலத்தில் அபிராமி அந்தாதி இயற்றப்பட்டது.

தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னன் ஒரு தை அமாவாசையன்று கடல் நீராடவும் அன்னை அபிராமியைத் தரிசிக்கவும் திருக்கடவூருக்கு வந்தார். அவ்வேளையில் அபிராமி பட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அன்னை அபிராமியைத் தமது ஸஹஸ்ரார கமலத்தில் இருக்கும் பூர்ண சந்திர மண்டலத்தில், அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் கண்டு தன்னை மறந்த நிலையில், இவ்வுலக ஸ்மரணையே அற்று சமாதி நிலையில் இருந்தார்.

தெய்வவடிவுடன் தேஜோமயமான ப்ரகாசத்துடன் கூடிய திருமேனியுடன் விளங்கும் அபிராமிபட்டரைக் கண்ட மன்னன் அவரிடம் பேச்சு கொடுக்க விரும்பி, ‘இன்று என்ன திதி?’ என்று கேட்டார். அபிராமிபட்டர், ‘இன்று சுத்த பூர்ணமதியாயிற்றே’ என்று பதில் கூறினார். மன்னன் குழப்பமடைந்து தன் முகாமிற்கு சென்றார். சிறிதுநேரம் கழித்து சமாதி நிலையிலிருந்து மீண்ட அபிராமிபட்டர் நடந்ததை உணர்ந்து தன் தவறுக்காக வருந்தினார்.

எல்லாவற்றையும் அன்னைக்கே அர்ப்பணித்துவிட்ட அபிராமிபட்டர் சதசூத்ர பிரமாணம் அமைத்து அன்னையின் மேல் அந்தாதி பாடத் தொடங்கினார். ‘விழிக்கே அருளுண்டு…’ என்ற பாடலை பாடியதும், தம் அடியாரை மேலும் சோதிக்க எண்ணாது, அன்னை அபிராமி தனது தாடகம் (தோடு) ஒன்றை வானில் வீசியெறிந்தாள், அது பூர்ண சந்திரனாக, புவனங்கள் பதிநான்கிலும் ஆனந்த ஒளியாகப் பிரகாசித்தது, மன்னன் சரபோஜியும் அன்னையின் அடியாரை சோதித்து விட்டோமே என்று தன் மதியீனத்திற்கு வருந்தி அபிராமி பட்டரின் திருவடிகளில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார்.

அபிராமிபட்டர் மறுத்தும் அவர் சந்ததியினருக்கு பலவிதமான மான்யங்களை (சூரிய-சந்திரர் உள்ளவரை) கொடுத்துவர ஆணைதந்து தஞ்சை சென்றார். இதற்குரிய உரிமைச் செப்புப் பட்டயம் ஒன்று அபிராமிபட்டர் சந்ததியிடம் இன்னும் இருந்து வருகின்றது என்று சொல்லப்படுகின்றது. அன்னை அபிராமி தன் கருணை உள்ளத்தால், மண்ணுலகில் வாழும் மக்கள் அனைவரின் நலம் கருதி, அபிராமிபட்டர்- சரபோஜி மன்னன் என்ற இருவரைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு ஒரு நாடகம் நடத்தி, அபிராமிபட்டரின் வாயிலாக அருளிய அரும் பொக்கிஷமே, அபிராமி அந்தாதியாகும்.

ஒரு நாட்டு அரசன் தான் போருக்கு புறப்படும்போது எதிரியை குறித்து கோபமுடன் நான் அவனை இவ்வாறு செய்வேன் (செய்யாவிடின் எங்கனம் ஆவேன்) என்று கூறுவது ஆகும். மேற்கண்டதைப்போலவே தன் கொள்கையை நிறுவுவதற்கு அந்தணர் கூறும் உரையை ‘பிரதிக்ஞா’ என்பர். அவ்வகையில் ஹரதத்த சிவாச்சாரியார், காய்ச்சிய ஆசனத்தின்மீது அமர்ந்து சிவதத்துவத்தை நிறுவினார் (மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தில் இச்சிற்பம் உள்ளது).

ஞானசம்பந்தர் அனல்வாதம், புனல்வாதம் செய்தார் (பெரியபுராணம்). அதுபோல அபிராமி பட்டரும் சதசூத்திர பிரமாணம் என்ற முறையை கையாண்டு தன் கொள்கையை நிறுவுகின்றார். சதசூத்திர பிரமாணம் என்பது அம்மையின் அருளைப்பெறும் பொருட்டு நூறு கயிறுகளை (கண்ணிகளை) உடைய உரி போன்ற அமைப்பைக் கட்டி அதன் கீழே வேள்வித்தீ மூட்டி, அருள்புரியவேண்டி இறையைப் புகழ்ந்து ஒவ்வொரு பாடலாகப் பாடி, ஒவ்வொரு கயிறாக அறுத்துக் கொண்டே வருவார்.

நூறு பாடலை பாடி முடிப்பதற்குள் இறையருள் கிடைக்காவிடில் கீழுள்ள தீக்குண்டத்தில் விழுந்து மாள்வார். சதசூத்திரபிரமாணம் - சதம் என்றால் நூறு, சூத்திரம் என்றால் கயிறு, பிரமாணம் என்றால் நிறுவுதல். நூறு கயிறுகளை கொண்டு நிறுவுகிற கொள்கை. அவர் எடுத்த சபதம் - அமாவாசை அன்று, இறையருளால் நிலவைப் பெறுதல்.

இது அந்தாதி பாடப்பட்ட விதத்தைப்பற்றி கூறப்படுகின்ற செவிவழி செய்தி. அதன்படி அவர் அந்தாதி பாடி வெற்றியும் பெற்றார். இவரைப்போலவே உமையம்மை வழிபாட்டில் அமாவாசை அன்று நிலவை வரவழைத்தவர் ஸ்ரீரத்னகோட தீட்சிதர். மேற்கண்டவாறு உண்மையாகவே மெய்யுருகி இறைவியை வணங்கிய பட்டருக்கு உமையம்மையானவள் நேரிலே தோன்றி தன் காதில் இருக்கும் தோட்டை வானத்தை நோக்கி வீசி எறிந்தாள். அந்த தோடானது நிலவை போல் காட்சியளித்தது. இதன் மூலம் அமாவாசையன்று பட்டர் கூறியதுபோலவே இறையருளால் வானில் நிலவு தோன்றியது.

ஸ்வயம் ஆச்சரதே சைவ
ஆசார ஸம்ஸ்தா பயத்யபி
ஆச்சார்ய: இத்யபிதியதே

- சாத்திர பொருளை கற்றவரும், கற்ற வழியில் நடப்பவரும், அப்படியே பிறரைப் பின்பற்ற செய்பவரும் ஆச்சார்யன் எனப்படுவர். அந்த வகையில் அபிராமி பட்டர் சக்தியை வணங்கக் கற்றவரும், கற்றதன்படி வணங்கியவரும், வணங்கியதனால் அருள் பெற்றவரும், அவரைப்போலவே நம்மையும் பெற தூண்டுவதுமாகின்றவர். இந்த அபிராமி அந்தாதியை சாத்திர நோக்கில் இனி தொடர்ந்து காண்போம்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர் சிவாச்சாரியார்

இந்தத் தொடரின் ஆசிரியா்: சென்னைப் பல்கலைக்கழகத்தில் வடமொழியில் இளங்கலை, முதுகலை, ஆய்வில் நிறைஞர், முனைவர் ஆகியவற்றைப் பயின்று, இயந்திர வரைபடலாளர் தொழிற்கல்வியும் பயின்றவர். மேலும், ஆலய பணி செய்வதால், ஐந்தாண்டு சிவகாமப் பயிற்சியும், ஏழாண்டு வேத முறையில் சடங்குகள் செய்யும் பயிற்சியும் ஆரிய முறை வேதாகமப் பாடசாலைகளுள் பயின்று தேறியவர்.

தமிழ்த்துறையில் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம், இளங்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவம் பெற்றுள்ளார்.

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனசமய பிரசார நிலையத்தில் திங்கள்தோறும் மாலையில் ‘வளமான வாழ்விற்கு வழிபாட்டுச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். வடமொழியில் ‘‘சர்வரோக நிவாரணி’’ (சென்னைப் பல்கலைக்கழக சித்தாந்தத்துறை வெளியீடு), தமிழில் ‘அந்தாதியில் ஆகமம்’ (சிவாகம பக்தஜனா ட்ரஸ்ட் வெளியீடு), ‘ஆதிசைவம்’, (உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்), ‘கேள்வி மருத்துவம்’ (உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு) என நான்கு நூல்களை இயற்றியுள்ளார்.