பரந்தாமனோடு எளிதாகக் கலப்பது எப்படி?பகவத் கீதை - 50

காங்க்ஷந்த கர்மணாம் சித்தின் யஜந்த இஹ தேவதா க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர் பவதி கர்மஜா (4:12) ‘‘என் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்பவர்கள் என்னுடன் ஐக்கியமாகிறார்கள். அதைப் புரிந்துகொள்ளாதவர்கள் தம் கர்மாக்களை இயற்றி அவற்றுக்கான பலனை இந்தப் பிறவியிலேயே அனுபவிக்கக் காத்திருக்கிறார்கள். இந்த அனுபவத்தைப் பெறுவதற்காக அவர்கள் சில தேவதைகளை உபாசிக்கிறார்கள்.

அந்த உபாசனையால் அவர்களுக்கு அந்தப் பலன்கள் கிடைக்கவும் செய்கின்றன.’’ நான் மேற்கொள்ளும் பணிக்கு எனக்குக் கிடைக்கக்கூடிய பலன் என்ன என்பதே இப்போது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. என்னப் பரிகாரம் செய்தால் எனக்கு ஏற்பட்டிருக்கும் தோஷம் விலகும், எனக்கு நன்மைகள் ஏற்படும் என்பதும் அதுபோன்ற எதிர்பார்ப்புதான்.

இன்ன கோயிலுக்குப் போய் இன்ன தெய்வத்தை இன்னமாதிரி வழிபட்டால் இன்ன பலன் கிடைக்கும் என்று வழிநடத்துவதற்கு அனுபவப்பட்டப் பெரியவர்களும், அனுமானித்துச் சொல்லும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள். இப்படி, தேவதைகளாக வர்ணிக்கப்படும் கோயில் தெய்வங்களை வழிபடுவதால் ஒருவர் எதிர்பார்க்கும் நன்மையோ அல்லது ஏதேனும் பிரச்னையிலிருந்து விடுபட புது உத்தியோ அல்லது அந்தப் பிரச்னையைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையோ கிடைக்கக்கூடும்.

இதெல்லாம் லௌகீகமானவை. நிலைத்து நிற்பதில்லை. நன்மை, புது உத்தி, மனவலிமை ஆகிய நிரந்தரமில்லாத இந்தப் பலன்கள் கோயில் தேவதைகளை வழிபடுவதன் மூலம் கிடைக்கலாம். ஆனால், நிரந்தரமான நிம்மதி வேண்டுமானால் அது பரந்தாமனை அடைவதால் மட்டுமே சாத்தியமாகும். இப்படி நேரடியாக அடைவது என்பது எளிதானதல்ல. இதற்கான அடிப்படைத் தகுதி - ‘நான்’ என்ற முனைப்பை முற்றிலும் விட்டொழிக்கவேண்டும்.

தேவதைகளால் கிடைக்கும் பலன்கள் எல்லாம் ‘நான்’ என்ற உணர்வுடைய வனுக்கு, அவனுடைய ஐம்புலன்களைச் சார்ந்து சந்தோஷம் தரும். ஆனால், பரம்பொருளை அடைய முயற்சிப்பவனுக்கோ மீண்டும் ஒரு பிறவி, அதில் உழலுவது, இச்சைகளில் சிக்கித் துன்புறுவது அல்லது அற்ப சந்தோஷங்களில் மகிழ்வது என்ற அனுபவங்கள் மீண்டும் கிட்டாது.

இப்படி பரம்பொருளோடு கலந்துவிட எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வலி மிகுந்தவை. எத்தகைய வலி? பிரிவு, இழப்பு, துறப்பு என்பனபோன்ற வலி. இந்த வலிகளிலிருந்து மீண்டுவிட்டால் ஒருவன் வெகு எளிதாக அந்தப் பரந்தாமனோடு கலந்துவிடலாம். ஆனால், அது சுலபமல்ல என்பதுதான் பெரும்பாலானோரின் அனுபவமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் - பரம்பொருளோடு கலக்க இயலாதவர்கள் - அதற்குக் கீழான தேவதைகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்த தேவதைகள் அவர்களுக்குச் சிற்சில லோகாயதமான ஆதாயங்களை அளிக்கவல்லவை.

இவ்வாறு தேவதைகள் நம் சில விருப்பங்களைப் பூர்த்தி செய்வதன் நோக்கமே, நாம் இந்த அற்ப ஆதாயங்களிலேயே ஆழ்ந்துவிடக்கூடாது, பரம்பொருளைத் தேடி அடையவேண்டும் என்ற மறைமுகமாக அறிவுறுத்துவதுதான். இப்படி சில நன்மைகள் கிடைப்பதால், நாம் இந்த சுகத்திலேயே ஆழ்ந்து, பரமாத்மாவை சிந்திக்க மறந்யதுவிடுவதும் இயல்பாக அமையக்கூடியதுதான். ‘எப்படி நிகழ்ந்தது இது!’ என்ற ஆச்சரிய அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். இதற்கு, நம்மைத் தவிர நம்மோடு கூடவே இயங்கும் ஏதேனும் ஓர் அமானுஷ்ய சக்தியும் காரணமாக இருக்கலாம்.

சாலையில் வாகனத்தில் போய்க்கொண்டிருக்கிறோம், திடீரென விபத்து. எதிரே வந்துகொண்டிருக்கும் பிரமாண்ட வாகனம் ஒன்று நாம் பயணிக்கும் வாகனத்தின் மீது மோதிவிடுகிறது. நாம் தூக்கியெறியப்படுகிறோம். பக்கத்திலிருக்கும் அகன்றதோர் செடி மீது விழுகிறோம். ஒரு சிராய்ப்பு இல்லை, அடி இல்லை, எந்த பாதிப்பும் இல்லாமல் எழுந்து நிற்கிறோம். உடன் பயணித்த சிலர் காயமும், பெருத்த அடியும் பட்டு வேதனையில் முனகி, கதறி, அழுதுகொண்டிருக்கும்போது நமக்கு மட்டும் இப்படியொரு அற்புதம் நிகழ்ந்தது எப்படி?

இதுதான் நம்முடனேயே வந்து நம்மைக் காத்துகொண்டிருக்கும் சக்தியின் வலிமை. இது பிறருக்குத் தற்செயலாகத் தோன்றலாம். இப்படி சேதமில்லாமல் தப்பித்ததற்கு ஏதேனும் குதர்க்கமான காரணங்களை அவர்கள் விவரிக்கலாம். ஆனால், விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து நம்மை மட்டும் யாரோ கைத்தாங்கலாகத் தூக்கி, பக்கத்து அகன்ற செடிமீது கிடத்திய அற்புதம் நமக்கு நிகழ்ந்திருக்கிறது.

நிச்சயமாக இந்தத் தப்பித்தல் நம்முடைய சமயோசித புத்தியால் நிகழ்ந்ததல்ல. விபத்து நடந்த கணத்தில் நாமே தாவி, வானோக்கிப் பறந்து இந்த அகன்ற செடியைக் கண்டு அதன்மீது நம் உடலைக் கிடத்திக்கொள்ளவில்லை. அப்படியென்றால் இந்த அதிசயத்தைச் செய்தவர் யார்? அதுதான் நாம் வழிபடும் தேவதையின் அருள்.

ஆனால், பரந்தாமனை ஒப்பிட்டு நோக்கும்போது இவ்வாறு தேவதையின் அருளால் நாம் தப்பித்தது என்பது மிகவும் அற்பமான ஒரு பலனே! இந்தத் தற்காலிகத் தப்பித்தலுக்கும், ஆயுள் நீட்சிக்கும் நாம் மகிழ்ந்து கொண்டாடுகிறோம் என்றால் இன்னும் நாம் பக்குவம் பெறவில்லை என்றுதான் அர்த்தம். இந்தத் தப்பித்தல் நமக்குப் பிடித்த சுவையான உணவு நமக்குக் கிடைத்தாற்போல, நாம் வசிக்க வசதியான வீடு கிடைத்தாற்போல, நாம் உடல் நிம்மதி பெற தடையற்ற உறக்கம் கொள்வதுபோல. அவ்வளவுதான்.

இதற்கெல்லாம் மேலானதுதான் நாம் பரம்பொருளுடன் ஐக்கியமாகிவிடும் பேரின்பம். இந்த இன்பம் நம் வாழ்நாளிலேயே நமக்குக் கிடைக்கக்கூடியதுதான் - நாம் ஞானிகளாக மாறுவோமானால்! நம்மிடையே வாழ்ந்த சுவாமி விவேகானந்தர், காஞ்சி முனிவர் போன்றோர் இத்தகைய ஞானிகள். அவர்கள் உணவு, உடை, உறக்கம், உறைவிடம் என்று எதிலும் அக்கறை காட்டாதவர்கள். அவர்களுடைய பெருநோக்கம், பரந்தாமனுடன் ஐக்கியமாகிவிடுவதுதான்.

அதனால்தான் அவர்கள் நிகழ்த்திய அதிசயங்கள் இன்றளவும் நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. தீர்க்கதரிசனமாக, பின்னால் நடக்கவிருப்பவற்றை மிகவும் எளிதாகச் சொல்லிவிடும் ஆற்றல் நிரம்பப் பெற்றிருந்தவர்கள் அவர்கள். இது எப்படி அவர்களுக்கு சாத்தியமாயிற்று? அவர்கள் அற்ப சுகங்களை அப்படியே புறந்தள்ளியவர்கள். அதாவது, தேவதைகளை உபாசித்து நலன்களைப் பெற விரும்பாதவர்கள்.

சில சந்தர்ப்பங்களில் காட்சி மயக்கமாக அவர்கள் காளி, காமாட்சி அம்மன் என்று தேவதைகளை வழிபட்டார்கள்தான் என்றாலும், அந்த தேவதைகளையும் மிஞ்சிய மேலான உயர்சக்தியைத்தான் உள்ளூர ஆராதித்திருந்திருக்கிறார்கள். அதனால்தான் உலகியல் விஷயங்களை அவர்களால் விரல் நுனியில் வைத்துக்கொண்டிருக்க முடிந்திருக்கிறது. ‘இவர் எந்தப் பத்திரிகையை, எந்த நூலைப் படித்தார், யாருடன் பேசினார், எப்படி அப்-டேட்டான விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்ற ஆச்சரிய புதிர் அனைவருக்குமே ஏற்படுவதுண்டு.

இதற்குக் காரணம் அவர்கள் பரம்பொருளை நேரடியாக உபாசித்ததுதான். ஒரு புத்தகத்தை (எந்திரன் திரைப்படத்தில் வருவதுபோல) ஒருமுறை விசிறியாகப் பிரித்தார்களென்றால் அதிலுள்ள எல்லா விஷயங்களும் அவர்களால் கிரகிக்கப்பட்டுவிடும்! பிறகு சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல வெளிச் சொல்லவும் முடியும். இந்த அளவுக்கு அவர்கள் தேவைப்படும்போது திறந்துகொள்ளும் பல அறைகள் கொண்ட மாபெரும் கம்ப்யூட்டரையே தங்கள் மூளையாக அவர்கள் வைத்துக்கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்!

அதனால்தான் வெகு எளிதாக அவர்களால் அடுத்து நடக்கவிருப்பவற்றை உணர முடிந்திருக்கிறது, அவற்றை எடுத்துச் சொல்லவும் முடிந்திருக்கிறது, குறிப்பிட்ட நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களைக் காக்கவும் முடிந்திருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள், தாம் இவ்வாறு காப்பாற்றப்பட்டதை, இந்த அதிசயத்தை வாயாரப் புகழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கலாமே தவிர, பிறரிடம் விவரித்து வியந்துகொண்டிருக்கலாமே தவிர, கேட்போரும் விழிவிரித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கலாமே தவிர, தமக்கும் அதுபோன்ற அற்புதம் வாய்க்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கலாமே தவிர, ஞானிகள் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே பாராட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

காரணம், அவர்கள் பரமாத்மாவுடனேயே லயித்திருப்பதுதான். இந்த ஞானிகள், பாமரர்களின் பார்வையில் தங்களுடைய நலம் காத்த தேவதைகளாகத் தெரியலாம். ஆனால், ஞானிகள் எதற்காகவும் தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்வதில்லை. இந்த ஆன்மாக்கள் உடலோடும், உயிரோடும் இந்த உலகத்தில் சஞ்சரிப்பது இதுவே கடைசி பிறப்பு, இனி இவர்கள் பரந்தாமனுடன் ஐக்கியமாகிவிடுவார்கள் என்றே நம்பலாம்.

இறைவனும், மனித குலம் தழைக்க, ஞானி தகுதிக்கு ஆளாக்கிக்கொள்ள வேறு சில ஆன்மாக்களுக்கு உயிரும், உடலும் தந்து அனுப்பிவைக்கிறான் என்றும் கொள்ளலாம். தன் அற்ப நன்மைகளுக்காக தேவதைகளின் அருளை எதிர்நோக்குபவன் ஆணவம் கொண்டவனாக இருப்பான். தான் குறிப்பிட்ட தேவதையை வணங்குகிறோம், அது தனக்குத் தேவையானதை நிறைவேற்றித் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்த ஆணவத்தில் அடங்கியிருக்கும்.

ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீயவழிக்கான தேவதையின் துணை இருப்பவர்களுக்கு இந்த ஆணவம் அதிகமாகவே இருக்கும். தாங்கள் சொல்வது செயலாகவேண்டும், செய்வது பலிக்கவேண்டும் என்ற மூர்க்கப் பிடிவாதம் கொண்டிருப்பார்கள். அர்ஜுனன் மறைமுகமாக அந்த ஆணவத்துக்கு உட்பட்டவனாகவே இருக்கிறான்.

எதிரிலிருக்கும் உறவினர்களைக் கொல்லத் தனக்கு மனம் ஒப்பவில்லை என்று போர்க்களத்துக்கு வந்தபிறகு அவன் பின்வாங்குகிறான் என்றால், தன்னால் அவர்கள் எல்லோரும் மாய்க்கப்பட்டுவிடுவார்கள் என்ற தலைக்கனம் அவனுக்கு ஏறியிருந்தது என்றும் ஊகிக்கலாம். அதாவது, அவனால் இல்லாவிட்டால் அவர்கள் யாராலும், எதனாலும் மரணமடையமாட்டார்கள் என்ற ஆணவம்!

தன்னால்தான் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற ஓவர் கான்ஃபிடன்ஸ்! அதையே, ‘அவர்களைக் கொல்லவேண்டியிருக்கிறதே!’ என்ற கழிவிரக்கமாகவும் அவன் வெளிப்படுத்திக்கொள்கிறான்! விந்தையான மனித குணம்! அதனாலேயே இந்தக் கட்டம்வரை அவன் தன்னருகிலேயே நின்றுகொண்டிருக்கும் பரந்தாமனோடு ஒன்றிவிட இயலாதவனாக இருக்கிறான். அவருடைய அறிவுரையை, ஆணையை ஏற்கத் தயங்குகிறான், மறுக்கிறான். உறவினர்களும், குருமார்களும் அழிந்துவிடுவார்களே என்று போலியாக விசனப்படுகிறான்.

இவனுக்கு போதிக்கும் முறையில்தான், ‘எனது சித்தாந்தத்தைப் புரிந்துகொண்டவர்கள் என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்’ என்று சொல்கிறார் கிருஷ்ணன். அதாவது, கிருஷ்ணனாகவே ஆகிவிடுகிறார்கள்! அதாவது, எது தர்மம், எது அதர்மம் என்பதைப் புரிந்துகொண்டுவிடுவார்கள். ‘அழிப்பதிலும் தர்மத்தையும், அழிக்காது ஒதுங்குவதிலும் அதர்மத்தையும் நிலைநாட்ட முடியும்’ என்ற உண்மையைத் தெரிந்துகொண்டுவிடுவார்கள்.

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகா
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர் தாரமவ்யயம் (4:13)

‘‘அர்ஜுனா, ஒவ்வொரு மனிதருடைய குணத்தின் அடிப்படையில், அவர் மேற்கொள்ளும் கர்மாவின் அடிப்படையில், மனித குலத்தை நான்கு வர்ணங்களாக நான் பிரித்தேன். ஆனால், இவற்றை உருவாக்கிய நான் அழிவற்றவன், நான் மாறுதலுக்கு உட்படாதவன் என்பதையும் நீ அறிந்துகொள்.’’ ‘குணத்தளவே ஆகுமாம் குலம்’ என்கிறர் கிருஷ்ணன். பின்னாளில் வந்த ஔவையாருக்கு யார் மேல் என்ன கோபமோ, ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்று பாடிவிட்டுப் போய்விட்டார்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.
- என்பது அவருடைய பாடல்.

ஆனால், குணத்தை அடிப்படையாக வைத்தே குலத்தைப் பிரித்திருக்கிறார் கிருஷ்ணன். பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் என்று அவர் மனித குலத்தை வகைப்படுத்தியிருக்கிறார் என்றால் அந்தப் பாகுபாடு அவரவர் குணங்களை அடிப்படையாக வைத்துதான். ஆனால், துரதிருஷ்டவசமாக பின்னால் வந்தவர்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தொழிலைக் கற்பித்து, அந்தத் தொழிலைச் சார்ந்ததாகவே அந்தப் பிரிவினரின் குலத்தையும் தீர்மானித்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

கிருஷ்ணன் குணத்தின் அடிப்படையில் வகுத்தபடி, சத்வ குணமுள்ளவன் பிராமணன், சத்வ குணமும் கூடவே ரஜோகுணமும் கொண்டவன் க்ஷத்ரியன், சத்வமும், ரஜோவும், தமோ குணமும் உள்ளவன் வைசியன், தமோ குணமும் ரஜோகுணமும் படைத்தவன் சூத்திரன் என்று சொல்லலாம். வெண்மை நிறம் சத்வ குணத்தைக் குறிப்பதாகவும், சிவப்பு ரஜோகுணம் என்றும், கறுமை தமோகுணம் என்றும் விளக்கப்பட்டதாலேயே மனித குலம் ‘வர்ண’ப் பிரிவுகளாக வகுக்கப்பட்டது.

ஆனால், கிருஷ்ணன் குணத்தைதான் அடிப்படையாகக் கொண்டார். அதாவது ஒருவரே தம்முடைய குண மாறுதல்களைப் பொறுத்து ஒரே பிறவியில், பிராமணனாக வாழலாம், க்ஷத்ரியனாக வாழலாம், வைசியனாக வாழலாம், சூத்திரனாக வாழலாம் என்றுதான் கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். சத்வகுணம், நற்காரியங்களில் மனதைச் செலுத்தும், மன, புலன் அடக்கம், சகிப்புத் தன்மை, விவேகம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல், தன்னிலேயே மகிழ்ந்திருத்தல், தானம், பணிவு மற்றும் எளிமை ஆகிய இயல்புகளைக் கொண்டதாக இருக்கும்.

இந்த சத்வகுணத்தால், தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்வது, பலன் எதிர்பாராமல் செயலாற்றுவது ஆகியன சாத்தியமாகும். ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் ஆர்வம், புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதம், பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகிய இயல்புகளைக் கொண்டிருப்பது ரஜோகுணம்.

இந்த ரஜோகுணத்தால், இன்பத்தில் பற்று, அசுரத்தன்மை, செயல் புரிவதில் ஆர்வம், கனவில் சஞ்சரிப்பது ஆகியன சாத்தியமாகும். காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேஷம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், தகுதியில்லாமல் பிறர் பொருட்களை எதிர்பார்த்தல், பிறர்க்கு கேடு விளைவித்தல், பகட்டுச் செயல்கள் ஆகிய இயல்புகளைக் கொண்டிருப்பது தமோ குணம். இந்த தமோ குணத்தால் சோம்பல், ராட்சசத் தன்மை, மோகம் ஆகியன சாத்தியமாகின்றன.

வெறும் தோற்றமும், தோல் நிறமும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை, குலத்தைச் சார்ந்தவர் என்பதற்கான தீர்மானமான அடையாளங்கள் இல்லை என்பதையும் உணரவேண்டும். சத்வகுணம் என்ற பிரிவில் வருபவர் வெண்மை நிறத்தவர் என்றால், உலகில் எல்லா வெண்மை நிறத்தவரும் அந்தப் பிரிவில் அடங்கவேண்டும். ஆனால், எல்லா வெண்மை நிறத்தவரும் சத்வகுணத்தின் இயல்புகளைக் கொண்டிருப்பதில்லை என்பது அனுபவபூர்வமான உண்மை. ஆகவே, வெறும் நிறம் ஒருவரை மேலே சொன்ன மூன்று குணங்களுக்குள் பாகுபடுத்தாது, குணம்தான் பாகுபடுத்தும்.

(தொடரும்)

பிரபுசங்கர்