பதினெட்டாம் பெருக்கு அன்று காவேரியில் நீராடுவதன் மகத்துவம் என்ன?- எஸ். கிருஷ்ணவேணி, திருச்சி-2.

தெளிவு பெறு ஓம்

பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கப்படுகின்ற ஆடி மாதம் 18ம் தேதியன்று காவேரியில் நீராடுவது, நதிக்கு பூஜைசெய்து வணங்குவதால், பாவங்கள் தீரும். நல்ல புத்தியும், சகல சௌபாக்யமும் உண்டாகும். கீழ்காணும் ஸ்லோகம் இதனை உறுதி செய்கிறது:

“மருத் வ்ருதே மஹா பாகே மஹா தேவி மனோஹரே
ஸர்வாபீஷ்ட ப்ரதே தேவி ஸ்நானஸ்யதாம்
புண்ய வர்த்திநி
ஸர்வ பாப க்ஷயகரே மம பாபம் விநாஸய
கவேர கன்யே காவேரி ஸமுத்ர
மஹிஷிப்ரியே
ப்ரதேஹி புக்திமுக்தி த்வம் ஸர்வ
தீர்த்த ஸ்வரூபிணி
ஸிந்து வர்யே தயாஸிந்தோ மாமுத்தர
பவாம்புதே”

இதன் பொருள்: காற்றாய் பெருகுபவளும், மஹாபாக்யவதியும், எல்லோருடைய மனதையும் கவர்பவளும், விரதங்களை நிறைவேற்றுபவளும், ஸ்நானம் செய்பவர்களின் பாவங்களை அழித்து புண்ணியத்தைக் கொடுப்பவளுமாகிய தேவியே, நான் செய்த பாவங்களை போக்குவாயாக.

கவேர மன்னனின் குமாரத்தியும், சமுத்திரராஜனுக்குப் பிரியமான பட்டத்துராணியும், எல்லா புண்ய தீர்த்தங்களின் ஸ்வரூபமானவளும் ஆகிய காவேரி தேவியே, எனக்கு நல்ல புத்தியையும், சகல சௌபாக்யங்களையும், மோட்சத்தையும் தந்து காப்பாயாக. நதிகளில் உயர்ந்தவளே, கருணைக் கடலே, என்னை சம்சாரம் என்னும் கொடிய சாகரத்திலிருந்து கரையேற்ற வேண்டுகிறேன்.

சிறப்பு வாய்ந்த இந்த ஸ்லோகத்தினைச் சொல்லி காவேரியில் ஸ்நானம் செய்தால் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவதோடு வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்கள் அத்தனையும் குறைவின்றி வந்து சேரும்.

* ஆஞ்சநேயரை வீட்டில் வணங்கக் கூடாது, ஆலயத்தில்தான் வணங்க வேண்டும் என்று சொல்கிறார்களே... இது சரியா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

தவறு. இறைசக்திகளை வணங்குவதற்கு காலம், நேரம், இடம் போன்றவற்றை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ‘ராம ராமா’ என்று சொன்னாலே ஆஞ்சநேயர் வந்து நிற்பார் என்று சொல்வார்கள். ராமநாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் அனுமனை உணர்வுபூர்வமாக தரிசிக்க இயலும் என்பது பெரியோர் வாக்கு. ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை வழிபட்டாலேயே ஆஞ்சநேயரையும் சேர்த்து வழிபட்டதற்கான பலன் வந்து சேரும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி இருக்கையில் ஆஞ்சநேயரை வீட்டில் வணங்கக் கூடாது என்று எப்படி சொல்ல இயலும்? மேலும் ஆஞ்சநேயர் சிவ ஸ்வரூபம் என்று சொல்வோரும் உண்டு. மனசஞ்சலம் நீங்க ஆஞ்சநேயரை வழிபடவேண்டும். அறிவும், ஆற்றலும் ஒருங்கே இணையப்பெற்ற திருவுருவம் ஆஞ்சநேயர். இத்தனை சக்தி படைத்த ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபடுவதில் எந்தத் தவறும் இல்லை.

* இறந்தவர்களை வணங்குவதால் என்ன பலன்?
- சு.பாலசுப்ரமணியன், இராமேஸ்வரம்.

வணங்குதல் வேறு, வழிபடுதல் வேறு. பொதுவாக நம்முடைய போற்றுதலுக்கு உரியவர்கள் மூவர் - தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் என்று வரிசைப்படுத்தலாம். தேவர்களையும், ரிஷிகளையும் நாம் நேரடியாகக் காண இயலாது. இவ்வாறு காணமுடியாமல் அனுபவித்து மட்டுமே உணரக்கூடிய இந்த சக்திகளைப் போற்றும் முறைக்கு வழிபடுதல் என்று பெயர். பித்ருக்கள் என்று அழைக்கப்படுபவர்களை நேரடியாகக் கண்டிருப்போம், அவர்களது மறைவிற்குப் பின் அவர்களுடன் பழகிய நினைவுகளை எண்ணி அதனை அனுபவித்தும் உணர்வோம்.

உயிருடன் இருக்கும்வரை அவர்களை வணங்கியும், இறந்தபின் அவர்களை தெய்வாம்சம் கொண்டவர்களாகக் கருதி அவர்களை வழிபடவும் செய்கிறோம். ஆக, உயிருடன் இருப்பவர்களைப் போற்றுவதை வணங்குதல் என்றும், கண்ணால் காண முடியாத சக்திகளைப் போற்றுவதை வழிபடுதல் என்றும் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கவேண்டும். இந்த இரண்டு முறைகளையும் நாம் பயன்படுத்துவது முன்னோர்களிடம் மட்டுமே.

இந்த மூவரில் தேவர்களிடம் ஏதேனும் ஒரு வேண்டுகோளை நிறைவேற்றக்கோரும் வகையில் நம்முடைய வழிபாடு அமைகிறது. ரிஷிகளிடம் ஞானத்தினையும், நல்லறிவினையும் தர வேண்டுகிறோம். இந்த இருவரிடமும் ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்தே நம்முடைய வழிபாடு அமைகிறது. ஆனால், முன்னோர்களை ஆராதனை செய்வது என்பது நாம் அவசியம் செய்ய வேண்டிய நம் கடமைகளில் ஒன்று என சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

பலனை எதிர்பாராமல் செய்யவேண்டிய கடமைகளில் அதிமுக்கியமானது முன்னோர் வழிபாடு. பித்ரு லோகத்தில் இருக்கும் அவர்களுக்கு ஆகாரம் அளிக்க வேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமை. ஈரேழு பதினான்கு லோகத்தில் உள்ளவர்களுக்கும் இறைவன் ஏதோ ஒருவழியில் உணவளித்துக்கொண்டுதான் இருக்கிறான் என்றாலும் பித்ரு லோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களது வம்சாவழியினர் அளிக்கின்ற உணவே திருப்தியைத் தருகிறது. தனயன் வெறும் தண்ணீரைத் தந்தாலும் அது அமிர்தமாக தந்தையைச் சென்றடைகிறது.

உதாரணமாக பள்ளியில் மாணவர்களுக்கு என்னதான் அரசாங்கம் மதிய உணவினைத் தந்தாலும், வீட்டிற்கு வந்து பெற்றோர் கையால் சாப்பிடும் உணவே அவர்களுக்கு முழுமையான மனநிறைவைத் தருகிறது. ஹாஸ்டலிலும், ஹோட்டலிலும் பணம் கட்டிச் சாப்பிட்டாலும், பெற்றவர்களின் கையால் சாப்பிடும் பழைய சோறுகூட பஞ்சாமிர்தமாக சுவைக்கிறது.

ஆக, அவரவருக்கு உரிமையானவர்கள் அளிக்கும் உணவே முழுமையான திருப்தியைத் தருவதால் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. வம்சவிருத்தி, மனத்தெளிவு, நிலையான சொத்து அமைதல் என சகல சௌபாக்யங்களும் முன்னோர் வழிபாட்டின் பலனாகக் கிடைக்கும் என்றாலும், இந்தப் பலன்களையெல்லாம் எதிர்பாராது செய்ய வேண்டிய அதிமுக்கியமான கடமை
முன்னோர்களை வழிபடுவதாகும்.

* சிவன் சொத்து குலநாசம் என்று குறிப்பிடுவது ஏன்?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

இங்கே சிவம் என்று குறிப்பிடப்படுவது பரமேஸ்வரனை மாத்திரம் அல்ல. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் நிறைந்த இறை சக்தி என்று பொருள். விநாயகர், சுப்ரமணியர், பரமேஸ்வரன், துர்க்கை, விஷ்ணு, மஹாலக்ஷ்மி என அனைத்து தேவதைகளுக்கு உரிய அஷ்டோத்தர நாமாவளிகளில் ‘சிவாயை நமஹ’  என்ற நாமமும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும்.

ஆக சிவம் என்ற சொல் பரமேஸ்வரனை மட்டும் குறிப்பதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிவம் என்ற சொல்லுக்கு கடவுள் என்று அர்த்தம். ஆக எந்த சுவாமியின் ஆலய சொத்தாக இருந்தாலும் அதனை தனி மனிதன் தனக்கு என்று பயன்படுத்திக்கொள்ளும்போது அவனது பரம்பரை துன்பத்திற்கு உள்ளாகும் என்பதை உணர்த்தவே ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று சொல்லி வைத்தார்கள்.

இந்தப் பழமொழி சிவன் கோயில், பெருமாள் கோயில், முருகன் கோயில், பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில் என அனைத்து ஆலயங்களுக்கும் பொருந்தும். இறைவனின் திருப்பணிக்காக என்று ஒதுக்கி வைத்த பணத்தையும், பொருளையும் தனிப்பட்ட சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையாகவே அமைந்ததுதான் ‘சிவ சொத்து குலநாசம்!’ என்ற சொலவடை.

* தீட்டு என்றால் என்ன என்பதை விளக்குங்கள்.
- கி.ரமேஷ், கும்பகோணம்.

சமீபத்தில் முகநூலில் வந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். தீட்டு என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலம் காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம். தீட்டு என்பது என்ன? இறைவன் இருக்கும் இடத்தில் இந்த தீட்டுகள் ஆகாது.

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப்பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள். ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால்தான் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும், சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்காக இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள். தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் ஆகியனவாகும்.

முதலில் காமத்தீட்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசைவைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் பற்றிய ஞாபகமாகவே இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்துவிட்டால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

இல்லையென்றால் நீடித்த வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்திக்க முடியாது.  இதனால்தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றார்கள். இரண்டாவதாக குரோதத் தீட்டு. குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.

சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள், சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிபேர். கோபம் எழும்பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சிவசப்பட்டவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றி சிந்தனை செய்ய முடியாது. இதனால்தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.
மூன்றாவது, லோபத் தீட்டு. லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருட்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீயவழியில் பொருட்களைச் சம்பாதிக்கும் நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழநினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருட்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால்தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள். அடுத்தது மதத்தீட்டு. மதம் என்பது கர்வம் (ஆணவம்). ஒருவரையும் மதிக்காது மமதையோடு இருப்பது. எதையும் தான் மட்டுமே சாதிக்க முடியும் என்ற கர்வத்தினையும் தருவது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதையும், ஆணவத்தால் யாவரையும் துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடையும் குணத்தினையும் தருவது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால்தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.

இறுதியாக, மாற்சரியத் தீட்டு. மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் நலமாய் வாழ்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் வேதனைப்படுவது. எந்த நேரமும் நாம் அவரைப்போல நல்லபடியாக இல்லையே என்று தன்னையே நொந்து கொள்ளவைக்கும். எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, அவர்களெல்லாம் எப்பொழுது கஷ்டப்படுவார்கள், எப்பொழுது அழிவார்கள் என்று நெகடிவாக எண்ணத் தூண்டுவது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மை வளரும். நல்லபடியாக இருக்கும் யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாத எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால்தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இவற்றைத் தீண்டுபவர்களே தீட்டு உடையவர்கள் ஆகிறார்கள். இவர்களால் இறைவனை உணர முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுக்கள் அண்டவே அண்டாது.

* பரம்பரை என்பதன் பொருள் என்ன?
- திருமலைவாசன், விழுப்புரம்.

நமக்கு முன்னரும், பின்னரும் தோன்றுகின்ற தலைமுறையினரைக் குறிப்பது பரம்பரை எனும் சொல். நமக்குப் பின்னால் தோன்றுபவர்களை மகன்-மகள், பேரன்-பேத்தி, கொள்ளுப்பேரன்-கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேரன்-எள்ளுப்பேத்தி என்று வரிசைப்படுத்துகிறோம். அதேபோல நமக்கு முன்னால் தோன்றியவர்களை தகப்பன்-தாய், பாட்டன்-பாட்டி, பூட்டன்-பூட்டி, ஓட்டன்-ஓட்டி, சேயோன்-சேயோள், பரன்-பரை என்று நம் பண்பாடு வரிசைப்படுத்துகிறது.

ஏழாவது தலைமுறையைச் சேர்ந்த தாத்தாவிற்கு பரன் என்றும், அவரது மனைவியை பரை என்றும் தமிழுலகம் அழைக்கிறது. பரன்-பரையில் இருந்து தோன்றியவர்கள் என்பதால் அந்த வம்சம் பரம்பரை என்று அழைக்கப்படுகிறது. பரம்பரை என்று வரும்போது இந்த ஏழு தலைமுறையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதால்தான் பிறப்பாகிலும் சரி, இறப்பாகிலும் சரி, பங்காளிகளுக்குள் தீட்டு என்பது ஏழு தலைமுறைக்கு உண்டு என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

* பக்திக்குப் பயம் தேவைதானா? பயபக்தி என்கிறார்களே!
- கணேசன், காஞ்சிபுரம்.

தேவையில்லை. மனிதனுக்கு மனதில் கடவுள் பற்றிய பயம் இருப்பதனால்தான் பக்தி உண்டாகிறது. அதனால்தான் அதனை பயபக்தி என்று சொல்கிறார்கள் போலும்! தற்காலத்தில் சாதாரணமாக பண்டிகை நாட்களைவிட ராகு-கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி போன்ற கிரஹங்களின் பெயர்ச்சி நாட்களில்தான் ஆலயங்களில் கூட்டம் அலை மோதுகிறது!

இந்த கிரஹங்களினால் எந்த கெடுபலனும் உண்டாகிவிடக்கூடாது என்ற பயத்தின் காரணமாக இறைவனின் மீதான பக்தி அதிகரிக்கிறது! உண்மையில் பக்திக்கு பயம் அவசியமில்லை. இறைவனின் மீதான நம்பிக்கையும், சிந்தனையைச் சிதறவிடாது அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனை செய்யும் திறனும் இருந்தாலே போதும். இறைவன்பால் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையே உண்மையான பக்தி. உண்மையான பக்திக்கு பயம் எதற்கு? அவசியமில்லை.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா