வாணிபம் செழிக்க வழிகாட்டும் வழித்துணைநாதர்!



-விரிஞ்சிபுரம்

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மிகப்பழமையான, மிகப்பெரிய மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இத்திருக்கோயில் அப்பர், சம்பந்தர், திருமூலர், அருணகிரிநாதர், அப்பைய தீட்சிதர், பட்டினத்தார், இரட்டைப்புலவர், மார்க்கசகாயதேவர், கிருபானந்த வாரியார் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலம் என்ற பெருமை வாய்ந்ததாகும். மேலும் அருணாசலபுராணம், சிவரகசியம், காஞ்சி புராணம், காளத்திமான்மியம், பிரம்மாண்டபுராணம் போன்ற புராணங்களிலும் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிவஸ்தலம் விரிஞ்சைமூதூர், விரிஞ்சையம்பதி, திருவிரிஞ்சிபுரம் என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. இத்தலத்து இறைவன் சுயம்புமூர்த்தியாக சற்று சாய்ந்த வண்ணம் காட்சி தருகிறார். என்ன காரணம்? பிரம்மனும், மஹாவிஷ்ணுவும் ஈசனின் முடி, அடியைக் கண்டுவிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிவபெருமான் தனது உருவத்தை பெரிதாக்கிக் கொண்டே சென்றார். ஈசனடி காணமுடியாத தன் தோல்வியை விஷ்ணு ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மன் சிவபெருமானின் முடியிலிருந்து உதிர்ந்து விழுந்த தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்லவைத்து, தான் முடியைக் கண்டுவிட்டதாகக் கூறினார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மனை பூமியில் பிறக்குமாறு சபித்தார்.

இதனால் பிரம்மன் திருவிரிஞ்சையில், சிவநாதன்-நயனாநந்தினி தம்பதிக்கு மகனாய் அவதரித்தார். அவனுக்கு சிவசர்மன் என்று பெயரிட்டார்கள். தந்தையார் சிவசர்மனுடைய இளம் வயதிலேயே காலமானார். தாயார், சிவசர்மனுக்கு உபநயனம், சிவதீட்சை முதலானவற்றைச் செய்வித்து உதவுமாறு தனது உறவினர்களிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், உறவினர்களோ தங்களுடைய பூஜை உரிமை பறிபோய்விடும் என்று பயந்து அவரைப் புறக்கணித்தார்கள்.

ஒருநாள் சிவசர்மனிடம் ‘‘நாளை உனது பூஜை முறை வருகிறது. நீ முறைப்படி பூஜை செய்யவேண்டும். இல்லையானால் உனது பூஜை முறை மற்றும் நிலங்களை எமக்கு எழுதித்தர வேண்டும்,’ என்றார்கள். இதை அறிந்த தாயார் விரிஞ்சியம்பதி கடவுளிடம்  கண்ணீர் மல்க வேண்டி அருள்புரியுமாறு கேட்டுக் கொண்டாள். அன்றிரவு அவள் கனவில் தோன்றிய ஈசன் ‘நாளை நமது பிரம்மதீர்த்தத்தில் உன் மகனை நீராட்டு. அதன் பிறகு நாம் பார்த்துக் கொள்கிறோம்’ என்று கூறினார். 

அவருடைய உத்தரவுப்படி தாயார் தன் மகனை தீர்த்தக் கரைக்கு அழைத்துச் சென்றார். தாயாதியர் தீட்சை பெறாத பாலகன் எப்படி பூஜை செய்ய முடியும் என்று கோயில் வாயிற்கதவைப் பூட்டிவிட்டார்கள். தீர்த்தக்கரையில் சிவபெருமான் ஒரு வயோதிகனாகத் தோன்றி பாலகனுடன் தீர்த்தத்தில் மூழ்கி, அவனுக்கு உபநயனம், பிரம்மோற்சவம் சிவதீட்சை போன்றவற்றை செய்தருளினார்.

பின்னர் கரையேறி மறைந்தார். திருக்குளத்தில் மூழ்கிய சிறுவன் சிவபூஜை செய்வதற்குரிய தீட்சை பெற்றவனாக கரையேற, அனைவரும் வியப்படைந்தார்கள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.  சிவபெருமான் தங்கள் கனவில் கூறியபடி மன்னன், அப்பாலகனை யானைமீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்து கோயிலின் முன்னால் நிறுத்த, பூட்டப்பட்ட கதவுகள் தாமாகத் திறந்து கொண்டன.

சிவசர்மன் சிவபெருமானுக்கு முறைப்படி பூஜைகள் செய்து திருமஞ்சனக் குடத்துடன் அபிஷேகம் செய்ய முற்பட்டபோது, சிறுவனாகையால் லிங்கத்தின் உச்சி அவனுக்கு எட்டவில்லை! பிரம்மனாக இருந்தபோது முடியைக் காணமுடியாத ஏக்கம் இந்தப் பிறவியிலும் அவனுக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கருணையில் பெருமானே தனது திருமுடியை வளைத்து சிவசர்மனின் பூஜையை ஏற்றுக் கொண்டார்.

இதனால்தான் இத்தலத்தில் லிங்கம் சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இத்திருக்கோயில் இறைவனுக்கு மார்க்கபந்தீஸ்வரர், வழித்துணை நாதர் என்ற திருநாமங்கள் உண்டு. இதற்கும் புராணக் காரணம் உண்டு. மைசூரில், குந்தளபுரி என்ற பகுதியில் தனபாலன் என்ற வணிகர் மிளகு வியாபாரம் செய்து வந்தார். ஒருசமயம் எருதுகளில் மிளகுப்பொதிகளை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கிச் சென்றபோது, இரவு விரிஞ்சையம்பதியில் தங்க நேரிட்டது.

அப்போது காஞ்சி மார்க்கத்தில் வேடர்கள் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்ததை அறிந்து அச்சம் கொண்டார். காஞ்சிக்குச் சென்றாலும் பிரச்னை, ஊருக்குத் திரும்பிச் சென்றாலும் நஷ்டம் ஏற்படும். என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது திருவிரிஞ்சைப் பெருமானிடம் தனக்கு வழித்துணையாய் வந்து வியாபாரம் சிறப்பாக நடக்க உதவினால் பத்து பொதி மிளகை காணிக்கையாத் தருவேன் என்று  வேண்ட, அன்றிரவு கனவில் தோன்றிய ஈசன் ‘கவலை வேண்டாம்.  நாளை உனக்கு நல்ல வழித்துணை அமையும்’ என்று அருளினார்.

சொன்னபடியே சிவபெருமான் ஒரு வேடுவன் உருவம் தாங்கி வெள்ளைக் குதிரையில் வந்து தனபாலனுக்கு வழித்துணையாய் அமைந்தார். பின்னர் காஞ்சி சென்ற தனபாலனிடமிருந்து வேடனாகிய சிவபெருமான் விடைபெற்றுச் சென்றார். வணிகன் மிளகுப்பொதிகளை நல்ல விலைக்கு விற்றார். ஆனால், மறதியால் இறைவனுக்குக் காணிக்கையாகத் தருவதாய்ச் சொன்ன பத்து மிளகுப்பொதிகளையும் நல்ல விலைக்கு விற்று விட்டார்.

ஆனால், இந்தப் பொதிகளில் இருந்த மிளகுகள் எல்லாம் பயறுகளாக மாறிவிட, மிளகு என்று நினைத்து வாங்கிச் சென்றவர்கள் திரும்பி வந்து தனபாலனைப் பலவாறாக இகழ்ந்து பேசினார்கள். தன் தவறை உணர்ந்த வணிகன் தவறுக்குப் பரிகாரமாக ஒரு மிளகுப்பொதியுடன் சேர்த்து பதினோரு மிளகுப் பொதிகளாகத் தருவதாகவும் தவறை மன்னித்து அருளும்படியும் இறைவனை வேண்ட, பயறுகள் மீண்டும் மிளகுகளாயின.

உடனே தனபாலன் பதினோரு மிளகுப்பொதிகளை விரிஞ்சியம் பெருமானுக்குச் செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். விரிஞ்சையம்பெருமான் வழித்துணையாக வந்த காரணத்தினால் அவர் மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயதேவர், வழித்துணை நாதர், வழித்துணை மருந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். திருவாரூர், தேருக்குப் புகழ் பெற்றது. திருவிடைமருதூர் தெருவிற்குப் புகழ் பெற்றது.

அது போலவே விரிஞ்சிபுரம் கோயிலின் மதில் சுவர் அத்தனை புகழை பெற்றது. திருக்கோயிலுக்குள் கிழக்கு கோபுரத்தின் வழியாகச் செல்லவேண்டும். ஏழு நிலைகளைக் கொண்ட இந்த கோபுரம் 110 அடி உயரமுடையது. இத்திருத்தலத்தில் கிழக்கு கோபுரம் மேற்கு கோபுரம் வடக்கு கோபுரம் ஆகிய மூன்றிற்கும் நுழைவாயில்கள் காணப்படுகின்றன. ஆனால், தெற்கு திசையில் மட்டும் நுழைவாயில் இன்றி மதில் மேல் சிறிய கோபுரம் மட்டுமே காணப்படுகிறது.  

கிழக்கு கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும் சிம்ம தீர்த்தத்தின் அருகில் பதினாறு கால் மண்டபம் அமைந்துள்ளது. கோயிலில் வடமேற்கில் ஒன்றும் தென்மேற்கில் ஒன்றுமாக இரு கல்யாண மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்களில் பல அபூர்வமான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கே நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ளது.  மகாமண்டபங்களில் அழகிய சிற்பங்களும் பிச்சாண்டேஸ்வரர் சந்நதியில் அழகிய ஓவியங்களும் நிறைந்துள்ளன. செல்வ விநாயகர், சொர்ண விநாயகர், முருகன் ஆகியோரும் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள்.

கஜபிருஷ்ட வடிவத்தில் அமைந்த கருவறையைச் சுற்றிலும் கோஷ்டச் சிற்பங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, வாசுதேவப்பெருமாள், பிரம்மா மற்றும் துர்க்கை காட்சி அளிக்கிறார்கள். கருவறையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாகச் சற்று சாய்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி மரகதாம்பிகையாக அருளாசி வழங்குகிறார். அம்பாள் கர்ப்பகிரஹம் பாதாள அறையுடன் கூடியது என்றும் இங்கிருந்து வேலூர் கோட்டைக் கோயிலுக்கு வழி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தலத்தின் இரண்டாவது பிராகாரத்தில் தலவிருட்சமான பனைமரம் அமைந்துள்ளது. இங்கு சிம்மதீர்த்தம், சுலி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் காணப்படுகின்றன. குழந்தைப்பேறு வாய்க்காதவர்கள் இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடி இரவு கோயிலிலேயே ஈரஉடையோடு படுத்துறங்கி கனவில் இறைவனின் தரிசனம் கிடைக்கப்பெற்று குழந்தைப்பேறு அடைகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இவற்றில் சிம்மதீர்த்தம் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் ஒரு சிங்கத்தின் வாய் வழியாக நுழைந்து செல்லும் முறையில் அமைந்த ஒரு நடபாவிக் கிணறாகும். இத்தகைய கிணறுகள் தமிழகத்தில் சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளன. காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள சஞ்சீவராயர் கோயிலிலும் இத்தகைய அமைப்பில் ஒரு நடபாவிக் கிணறு அமைந்துள்ளது.

இந்த சிம்மதீர்த்தம் ஸ்ரீகௌரி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிம்மபுஷ்கரணி ஸ்ரீகௌரியால் தன் கருமை நிறம் நீங்க ஈஸ்வரனை வழிபட்ட சமயத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்திருக்கோயிலில் காலை ஏழு மணிக்கு காலசந்தி பூஜை, காலை பதினோரு மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை ஆறு மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு எட்டு மணிக்கு அர்த்தசாம பூஜை என நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. 

சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி வசந்த விழாவும், ஆனி மாதத்தில் நடராஜர் ஆனித்திருமஞ்சன அபிஷேகமும், ஐப்பசி மாதத்தில் பௌர்ணமி அன்னாபிஷேகமும், கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு அன்று திருக்கார்த்திகை கடைஞாயிறுப் பெருவிழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் தேரோட்டத்துடன் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் பத்து நாட்கள் ஆடிப்பூர விழா தேரோட்டத்துடனும் வெகுவிமரிசையாக நடந்தேறுகிறது. பங்குனி மாதத்தில் இத்தலத்தின் சுயம்பு மூர்த்தியின் மீது பகலவனின் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இதனாலேயே இத்தலம் பாஸ்கர ேக்ஷத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிம்மதீர்த்தத்தில் நீராடினால் பில்லி ஏவல் சூனியம் போன்றவை அகலும் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலுக்கு வந்து வழித்துணைநாதரை வழிபட்டால் வாணிபத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கி வாணிபம் செழித்து விளங்கும், திருமணத் தடைகள் அனைத்தும் அகலும்.

பிரம்மனுக்கு சிவபெருமானே உபநயனம், தீட்சை போன்றவற்றைச் செய்வித்த காரணத்தினால் உபநயனம் மற்றும் கல்வி தொடங்கவும் இத்தலம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சென்னை-பெங்களூரு மார்க்கத்தில் வேலூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் செதுவாளை என்ற இடத்திலிருந்து வலது பக்கமாகத் திரும்பி ஒரு கி.மீ. சென்றால், விரிஞ்சிபுரத்தை அடையலாம்.

- ஆர்.வி.பதி