எங்கிருந்து வருகிறது இந்த இடபவாய் நீர?



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்: ராமகிரி

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மதராஸ் ராஜதானியின் செங்கற்பட்டு மாவட்டத்துத் திருவள்ளூர் தாலுகாவில் திகழ்ந்த ஓர் ஊரே ராமகிரி. சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்து புத்தூருக்கு சுருட்டப்பள்ளி நாகலாபுரம் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலையில் ராமகிரி அமைந்துள்ளது. தற்போது இவ்வூர் ஆந்திர மாநிலத்து சித்தூர் மாவட்டத்து பிச்சாத்தூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது.

சுருட்டப்பள்ளியிலிருந்து செல்லும்போது ராமகிரி பேருந்து நிறுத்தத்திலிருந்து வலப்புறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் மலையடிவாரத்தில் வாலீஸ்வரர் திருக்கோயிலையும், அக்கோயில் அருகே உள்ள படிக்கட்டுப் பாதை வழியே மலைமீது சிறிது தூரம் ஏறினால் முருகப் பெருமான் திருக்ேகாயிலையும் காணலாம். புராதனமான இத்திருக்கோயில் ஆந்திர மாநிலத்து தொல்பொருள் பாதுகாப்புத் துறையால் பாதுகாக்கப்பெறும், மிகச்சிறந்த காலபைரவர் வழிபாட்டுத் தலமாகவும், மரகதாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயிலாகவும் விளங்குகின்றது.

வாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு வெளியே ஒரு குளமும், கோயில் வளாகத்துள் ஒரு குளமும் காட்சி நல்க, சிறிய மொட்டைக் கோபுர வாயில் எழில் செய்ய, இச்சிவாலயம் கம்பீரமாகக் காட்சி நல்குகின்றது. மேற்குத் திசையில் ஒரு வாயில், தென்திசையில் ஒரு வாயில் என இரு பிரதான வாயில்களைக் கொண்டிருக்கிறது இக்கோயில். இங்கு வாலீஸ்வரர் சந்நதியைவிட காலபைரவரின் சந்நதியே பெரிதாகவுள்ளது.

நின்றகோலத்தில் காலபைரவரின் திருமேனி சான்னித்தியத்துடன் காட்சி நல்குகின்றது. அவருக்கு எதிரே அவருடைய  வாகனமான நாயின் உருவம் பெரிய அளவில் காணப்பெறுகின்றது. காலபைரவரை வணங்கி பக்கவாட்டில் உள்ள வாயில் வழியே மூலவர் வாலீஸ்வரர் சந்நதியை அடையலாம். பெரிய லிங்க மூர்த்தமாக பெருமான் திகழ அவர் முன்றிலில் இடபமும், அதற்கு பின்புறம் ஈசனை வணங்கும் அனுமனின் திருமேனியும் இடம் பெற்றுள்ளன.

சிவபெருமானின் பஞ்ச முகங்களில் ஒன்றான ஈசான முகத்துடன் பெருமான் விளங்குவதாகத் தலபுராணம் சுட்டுகின்றது. வாலீஸ்வரர் சந்நதியை அடுத்து மரகதாம்பிகையாக தேவி நின்ற கோலத்தில் காட்சி நல்கும் திருக்காமகோட்டம் அமைந்திருக்கிறது. வாலி வழிபாடு செய்த தலமாதலின் இது வாலீஸ்வரம் என அழைக்கப்பெற்றதாக ஒரு கருத்துண்டு. ஆனால் இவ்வாலயத்துத் தலபுராணமோ, அனுமனால் காசியிலிருந்து எடுத்து வரப்பெற்ற சிவலிங்கமே வாலீஸ்வரர் என உரைக்கின்றது.

அந்தணனான ராவணனை ராமபிரான் போரில் கொன்றதால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட அது நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்வதற்காக அனுமன் காசியிலிருந்து கொணர்ந்த முதல் லிங்கத் திருமேனிதான் இவ்வாலயத்து மூலவர் என்று கூறுகின்றது. காசியிலிருந்து வான்வழியே லிங்கத்துடன் சென்ற அனுமனைக் கண்ட இத்தலத்து காலபைரவர் சூரியன், வாயு ஆகியோருக்குக் கட்டளை இட்டு கடும் ெவப்பத்தையும், கடுங்காற்றையும் அனுமன் மீது ஏவ, ெவப்பம் தாங்காத அனுமன் கீழிறங்கி நீராடிச் செல்ல விழைந்தபோது இத்தலத்து பொய்கையைக் கண்டான்.

அவ்வாறு  லிங்கத்துடன் இறங்கிய அனுமன் சிறுவன் வடிவத்தில் திகழ்ந்த காலபைரவரிடம் அந்த லிங்கத்தைக் கொடுத்து தரையில் வைத்துவிடாமல் பார்த்துக் கொள்ளக் கேட்டுக்கொண்டார். பிறகு நீராட முற்பட்டார். அந்த நேரத்தில் சிறுவன் எடைதாளாமல் லிங்கத்தைத் தரையில் இறக்கி வைத்துவிட, நீராடிவிட்டு வந்த அனுமன் லிங்கத்தை எடுக்க முற்பட்டார்.

எவ்வளவு முயன்றும் எடுக்க முடியவில்லை. இறுதி முயற்சியாகத் தன் வாலை லிங்க பாணத்தின்மேல் சுற்றி பெயர்க்க முற்பட்டும் லிங்கத் திருமேனியை அசைக்கக்கூட இயலாதவராகி அங்கேயே அப்பெருமானை பூசை செய்து வணங்கினார். மீண்டும் காசி சென்று வேறு லிங்கத்துடன் ராமபிரானை சந்தித்தார் என்று அப்புராணம் விவரிக்கின்றது. இதனை விளக்கும் முகமாக இவ்வாலயத்து சுவர் ஒன்றில் லிங்கபாணத்தை தன் வாலால் சுருட்டி இழுக்க முயலும் அனுமனின் உருவம் புடைப்புச் சிற்பமாகக் காணப்பெறுகின்றது.

இதனை ஒத்த சுதை சிற்பமொன்று ஆலயத்து முகப்பில் தேவி, பைரவர் உருவங்களோடு இடம் பெற்றுள்ளது. ராமனுக்காகக் கொண்டு வந்த லிங்கம் இது என்பதால் இவ்வூர் மலைப்பகுதி ராமகிரி என அழைக்கப்படலாயிற்று. நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுச் சாசனங்கள் இவ்வாலயத்து சுவர்களிலும், தூண்களிலும் இடம் பெற்றுத் திகழ்கின்றன.

அவற்றில் தொண்ணூறு விழுக்காடு தமிழ் கல்வெட்டுகளே. சோழர், யாதவராயர், ஹரிகரர், புத்தர் போன்ற விஜயநகரப் பேரரசர்கள், வீரகண்டகோபாலர் போன்ற பல அரச மரபினர்தம் கல்வெட்டுகளும், தனி நபர்களின் கொடை குறித்த சாசனங்களும் காணப்பெறுகின்றன. விஜயநகர அரசர் மூன்றாம் விருபாக்ஷரின் கி.பி. 1480ம் ஆண்டுக்குரிய சாசனங்கள் பைரவரை வயிரவநாயனார் என்று குறிப்பிடுகின்றன.  சோழர் கல்வெட்டுகளில் இவ்வூர் திருக்காரிக்கரை என்ற பெயரால் மட்டுமே அழைக்கப்பெற்றிருப்பதாகவும் தெரியவருகிறது.

அக்கல்வெட்டுகள் வாலீஸ்வரரை திருக்காரிக்கரை உடைய நாயனார் என்றும் காலபைரவரை திருக்காரிக்கரைப் பிள்ளையார் என்றும் குறிப்பிடுகின்றன. மேலும் ஊரினை ‘ஜயங்கொண்ட சோழமண்டலத்து நடுவில் மலை நின்றய நாட்டு திருக்காரிக்கரை’ என்றே கூறுகின்றன. விஜயநகர அரசர்கள் காலத்தில் எழுதப்பெற்ற இக்கோயிலின் தலபுராணம் இவ்வூரில் திகழும் மலையை ராமகிரி என்று குறிப்பிடுவதால் பிற்காலத்தில் திருக்காரிக்கரை என்ற பெயர் மறைந்து ராமகிரி என்ற பெயர் நிலைத்துவிட்டது.

இமயமலையில் திகழும் தேவாரப் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதாரம் எனப்பெறும் கேதார்நாத்துக்கு அருகே குப்த காசி எனும் இடத்தில் ஒரு சிவாலயம் உள்ளது. திருக்கேதாரம் 6 மாத காலம் பனி மூடியிருக்கும்போது அத்தலத்து சிவாச்சாரியார்கள் குப்தகாசியில் தங்கி கேதாரத்துப் பெருமானை ஆறுமாத காலம் பூஜிக்கின்றனர்.

அத்தகைய புனிதத்தலமான குப்தகாசி சிவன் கோயிலுக்கு முன் ஒரு சிறுகுளம் உள்ளது. அதன் கரையில் உள்ள நந்தியின் தலைஉருவின் வாயிலிருந்தும், யானை ஒன்றின் வாயிலிருந்தும் தங்கு தடையின்றி எல்லா காலங்களிலும் நீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. பக்தர்கள் அந்த நீரை சொம்புகளில் பிடித்து ஈசனின் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர்.

குப்தகாசி சிவாலயம் போன்றே ராமகிரி வாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு குளம் உள்ளது. அதன் கரையில் ஒரு பழமையான சிவாலயம் காணப்பெறுகின்றது. அதனை ஒட்டி குளக்கரையில் ஒரு ரிஷபத்தின் கல் உருவம் இடம் பெற்றுள்ளது. அதன் வாயிலிருந்தும் எப்போதும் நீர் கொட்டியவாறு உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தடையின்றி இவ்வாறு கொட்டிவரும் இந்தக் காளைவாய் நீர் குளத்தில் நிரம்பி பின் வடிகால் வழியாக வெளியேறுகிறது.

இந்த நீர் மிகத் தூய்மையுடையதாகவும் சுவை மிகுந்ததாகவும் உள்ளது. சுற்றுப்புற ஊர் மக்களுக்கு இந்த இடப வாய் நீர்தான் குடிநீராகும். இந்த இடப உருவத்திற்கு (நந்திக்கு) ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பெருமை உண்டு. அதன் பின்உடலில் கி.பி. 9-10ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் ஒரு அரிய கல்வெட்டுப்பொறிப்பு உள்ளது. அதில்,

‘ஸ்ரீ பரமேஸ்வரன் தரிசினத்தில்
ஏறு இடு என்று பிரசாதம் செய்ய
சாமுண்டி மகன் கூவத்து பெருந் தச்சன் இட்ட ஏறு’

- என்ற தமிழ்ப் பொறிப்பு இடம் பெற்றுத் திகழ்கின்றது. சென்னைக்கு அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் கூவம் என்றதோர் ஊர் உள்ளது. அந்த ஊரினைச் சார்ந்த சாமுண்டி என்பானின் மகன் கூவத்துப் பெருந்தச்சன் என்ற சிற்பிக்கு கனவில் எழுந்தருளிய பரமேஸ்வரன் தனக்குக் கல்லில் ரிஷபம் ஒன்று அமைக்குமாறு கூற அதன்படி வடிக்கப் பெற்றதே இந்த காளைச் சிற்பம் (நந்தி) என்ற செய்தியே மேற்படி கல்வெட்டுப் ெபாறிப்பாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எக்காலத்திலும் குறைவின்றி நீரை வாயிலிருந்து உமிழ்ந்து கொண்டிருக்கும் இந்த ரிஷப உருவத்தின் அருகே குளத்திற்கென ஒரு கைப்பிடிச் சுவரினை உருவாக்கியவர்கள் கல்வெட்டோடு கூடிய இடபத்தின் பெரும்பகுதியை சுவரினுள் மறையுமாறு செய்துவிட்டனர். நூறாண்டுகளுக்குள் நடந்த இத்திருப்பணிகள் காரணமாக அரிய தகவலைத் தரும் தமிழ்க் கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் நற்பேறாக இந்திய தொல்லியல் துறையினர் 1904ம் ஆண்டில் அதனைப் படிஎடுத்துக் காப்பாற்றிவிட்டனர். இந்த இடபத்தின் வாயில் திகழும் குழல்போன்ற பகுதிக்கு எங்கிருந்து நீர் வருகிறது என்பது யாருக்கும் ெதரியாத புதிராகவே உள்ளது. எங்கிருந்தோ வற்றாத இந்த நீரோட்டம் இடபத்தின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. புனிதம் மிகுந்த இந்த நீரை இறைவனின் திருமஞ்சனத்திற்கும், மக்களின் தாக சாந்திக்கும், புனித நீராடவுேம பயன்படுத்த வேண்டும்.

சில அன்பர்கள், கை, கால்கள் கழுவுவதற்காக பயன்படுத்துவது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தில் இந்த அற்புதப் படைப்பு திகழ்ந்தாலும் ஒரு தமிழ்ச் சிற்பியின் அறிவியல் திறனோடு கூடிய அரிய சாதனை இது என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை, ஆனால் அதுதான் உண்மை!

திருக்காரிக்கரையுடைய மகாதேவர் கோயில், திருவாலீசுரம் என முதன் முதலில் குறிக்கப் பெறுவது வீரகம்பண உடையாரின் கி.பி. 1365ம் ஆண்டு சாசனத்தில்தான். அதே சாசனம் இத்தலத்து காலபைரவரை வைரவ நாயனார் என்று குறிப்பிடுகின்றது. பெரும்பாலான சாசனங்கள் திருவிளக்குகள் எரிப்பதற்காக அளிக்கப்பெற்ற கால்நடைப் பண்ணைகள் மற்றும் நிலதானங்கள் பற்றி குறிப்பிடுகின்றன. ஒரு சாசனத்தில் குலோத்துங்க சோழனின் ராஜகுருவான சுவாமி தேவர் பெயரில் திருக்காளத்தி தேவ சதுர்வேதி மங்கலத்தில் காணிவிட்ட ெசய்தி குறிக்கப் பெற்றுள்ளது.

சென்னையிலிருந்து புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் தடத்தில் திகழும் ராமகிரியில் அருள்பாலிக்கும் காலபைரவர், வாலீஸ்வரர், மரகதாம்பிகை மற்றும் மலைேமல் திகழும் முருகப் பெருமானையும் தரிசிப்பதோடு ஆயிரம் ஆண்டுகளாக வற்றாத கங்கை நீரைத் தந்துகொண்டிருக்கும் கூவத்துப் பெருந்தச்சன் அமைத்த இடபவாய் நீரையும் பருகி புனிதம் பெறுவோம்; தமிழகத்தில் இருந்தவாறே இமயமலையின் குப்தகாசி இடபவாய் கங்கை நீரைப் பருகிய நிறைவினைப் பெற்றுய்வோம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்