திருதராஷ்டிரனின் குருட்டுத்தனம்



மகாபரதம்

தருமபுத்திரர் திருதராஷ்டிரனை நோக்கி நடந்தார். கை கூப்பினார். ‘‘பந்தயப்படி நாங்கள் தோற்றுவிட்டோம். மான் தோல் உடுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். எங்களை ஆசீர்வதிக்க வேண்டு கிறோம். நாங்கள் விடை பெறுகிறோம். உங்களை வணங்குகின்றேன்.’’



குருடனான தன் பெரியப்பன் முன்னால் அவர் நிதானமாகவும், அழகாகவும் தெளிவாகவும் பேசினார். திருதராஷ்டிரன் சிலையென அமர்ந்திருந்தான். அவனுக்கு விடை கொடுக்கவும் தெரியவில்லை. கை உயர்த்தி ஆசீர்வதித்தான். அதுவே விடையாக தருமர் எடுத்துக் கொண்டார்.

தருமபுத்திரர் விதுரரை நோக்கி நடந்தார். ‘‘தருமா, யுதிஷ்டிரா, நீ பரமனிடம் தர்ம பாடம் கேட்டவன். பல ஞானிகளோடு பழகியவன். வேதாந்த விஷயங்கள் ருசி உள்ளவன். வாழ்வு பற்றிய கவலையுடையவன். போர் மட்டுமே நோக்கமாக உள்ள மன்னனாக இல்லாது தர்மம்தான் மிகப் பெரிய கவசம் என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவன். சிறிதும் பதட்டமின்றி வனம் போய் வா. வெள்ளி உங்களுக்கே உங்கள் சபதங்கள் நிறைவேறப் போகின்றன என்பதை நான் உணருகிறேன்.

உங்களுடைய தான தர்மங்கள் உங்களோடு வரும் உங்களுக்கு உதவி செய்யும். உங்களை பாதுகாக்கும். நல்லபடி போய் வா’’ என்று கை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார் சபையும் ஆசீர்வதித்தது. விதுரருடைய ஆசீர்வாதத்தை எல்லா பெரியவர்களுடைய ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டு தர்மபுத்திரர் வாசல் நோக்கி நடந்தார். சில மன்னர்கள் அவர்களை கேலி செய்தார்கள். சிலர் அவர்களுக்காக பரிதாபப்பட்டார்கள்.

அரண்மனைக்கு வெளியே வந்ததும் ஜனக் கூட்டம் அவர்களை பரிதாபத்தோடு பார்த்தது. ஆட்சியாளர்களுக் கிடையே பிளவு ஏற்பட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் கசந்து கொண்டால் சாதாரண ஜனங்களுக்கு அபிப்ராயம் சொல்லக்கூட தோன்றாது. எது சரி, எது தவறு என்று அவர்களால் யூகிக்க முடியாது. மற்றவர்களுடைய அபிப்ராயம் என்ன என்று கேட்டு அதன்பாற்பட்டுத்தான் இவர்கள் அபிப்ராயம் வளரும்.

பதட்டமாக இருந்த திருதராஷ்டிரன் விதுரரை அழைத்தான். ‘‘பாண்டவர்கள் எப்படி போகிறார்கள். என்ன மனோநிலையில் இருக்கிறார்கள்’’ என்று கலவரத்தோடு விசாரித்தான். சுற்றி நடக்கின்ற சப்தங்களால் அவனால் விஷயத்தை கிரகிக்க முடியவில்லை. யாரேனும் ஒருவர் அவனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. விதுரர் அவனுக்கு பதில் சொன்னார்.

‘‘தருமபுத்திரர் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு நடந்துபோகிறார். தன்னுடைய பார்வையில் கோபம் ஏற்பட்டு அவை யாரையும் தகித்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் நடந்து போகிறார். பீமன் தன் புஜங்களை பார்த்துக்கொண்டே போகிறான். இந்த புஜங்களினால் கௌரவர்களை அழிப்பேன் என்பதை திரும்பத் திரும்ப தன் மனதிற்குள்ளே உருவேற்றிக்கொண்டிருக்கிறான். அர்ஜுனன் நீண்ட சிந்தனையுடன், கலைந்த தலைமயிருடன் அவன் தலையிலிருந்து ரோமங்கள் மானங்களைப்போல உதிர்ந்துகொண்டிருக்கின்றன.

தன் முகத்திலுள்ள அபிப்ராயத்தை தெரிவித்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தோடு தன் முகத்தில் களிமண்ணை பூசிக்கொண்டு சகாதேவன் நடந்து போகிறார். தன்மீது யாரும் பச்சதாபம் கொள்ளக்கூடாது. தன் வனப்பு பார்த்து ஐயோ இவ்வளவு அழகிய பிள்ளை காட்டிற்கு போகிறதே என்று யாரும் நினைத்துவிடக்கூடாது என்று தன் உடம்பு முழுவதும் மண் பூசியபடி தன்னை அலங்கோலப்படுத்திக்கொண்டு  நகுலன் பின்தொடருகிறான். ஒற்றை ஆடையுடன் இவர்களுக்குப் பின்னே  திரௌபதி குனிந்த தலை நிமிராது மிருதுவாக நடந்துகொண்டிருக்கிறாள்.’’

‘‘ஜனங்கள் என்ன சொல்கிறார்கள்?’’ ‘‘அவர்கள் வாழ்க்கையின் மீது உள்ள பற்றை இழந்துவிட்டார்கள். போதும் போதும் இந்த வாழ்க்கை. போதும் இந்த அஸ்தினாபுரம். வீடுகளை விட்டு விட்டு வெளியேறி விடுவோம். இந்த வீடுகளில் இனி எலிகளும், பாம்புகளும் வசிக்கட்டும். இந்த வீடுகளில் இனி நல்லதுக்காக நெருப்பு எரியாமல் இருக்கட்டும். யாகமோ, ஹோமமோ, சமையலோ நடைபெறாது இருக்கட்டும். வீடு இடிந்து, சரிந்து வெறும் மண் மேடாகட்டும்.

நாம் பாண்டவர்கள் எங்கு வசிக்கிறார்களோ அங்கு வசிப்போம். அவர்களுக்கு ஏற்ற உணவை தானியங்களை முடிந்தவரை தூக்கிக்கொண்டு போவோம். ஒரு வனத்தில் தேவைப்படக்கூடிய சௌகரியங்களை அவர்களுக்கு செய்துகொடுப்போம். அதற்கான கருவிகளை வைத்துக்கொள்வோம் என்று பல விஷயங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வீட்டை விட்டு கிளம்ப தயாராகி விட்டார்கள். நகரமே நகர்ந்து அவர்கள் பின்னால் போவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அந்த காலத்திற்கு செய்ய வேண்டிய பூஜைகளை பிராமணர்கள் நிராகரித்துவிட்டார்கள். இனி என்ன பூஜை என்ற அலுப்பு ஏற்பட்டு விட்டது. எனவே நகரம் முழுவதும் இருளால் மூடப்பட்டதுபோல, களையற்றதாய், அலங்கோலமாய் காட்சியளிக்கிறது. கௌரவர்களை ஜனங்கள் மிக வேகமாக நிந்திக்கிறார்கள்.’’

‘‘கௌரவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?’’ ‘‘அவர்கள் துரோணரை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள்.’’ ‘‘எதற்கு?’’ ‘விதுரர் திருதராஷ்டிரனை விட்டு கௌரவர்கள் துரோணரிடம் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தார். துச்சாதனனும், சகுனியும், துரியோதனனும் தங்களுக்கு கிடைத்த காண்டவப்ரஸ்தம் என்ற நகரத்தை துரோணர் காலடியிலே ஆச்சாரியனுக்கு காணிக்கையாக வைத்தார்கள். துரோணர் சிரித்தார்.

‘‘என் முடிவும் ஒன்றும் புதியதல்லவே. அது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. என் நண்பனோடு சண்டை போட்டு அவனால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேறி அர்ஜுனனை உருவாக்கி அவன் மூலம் என் நண்பனான துருபதனை நான் சிறைபடுத்தினேன். அவன் அலங்கோலமாய் நிற்பதை பார்த்து கொக்கரித்தேன். ஒரு அந்தணனுக்கு எதிராக ஒரு க்ஷத்திரியன் நிமிர்ந்து நின்றுவிட முடியாது என்று வீரம் பேசினேன். அவன் காயம் பட்டான். மன்னித்து அவனுக்கு விடுதலை கொடுத்தேன்.

விடுதலை அடைந்தவன் தன்னுடைய இடத்திற்குப் போய் மிகப்பெரிய யாகம் செய்தான். அந்த அக்னியினுடைய விளிம்பிலிருந்து அவனுக்கு ஒரு மகன் தோன்றினான். அவனுக்கு திருஷ்ட்டித்யும்னன் என்று பெயர். அவன் என்னைக்கொல்வதற்காகவே உருவாக்கப்பட்டவன். என்னைக்கொல்ல வேண்டும் என்று துருபதன் வேண்டி பிறந்தவன். அந்த அக்னியின் மத்தியிலிருந்து திரௌபதி தோன்றினாள்.

என்னைக் கொல்வதற்காக திருஷ்ட்டித்யும்னனையும், தன்னை சிறை பிடித்த அர்ஜுனனை பாராட்டும் வண்ணமாக அவனுக்கு மணம் முடிக்க திரௌபதியையும் அந்த யாகத்தில் துருபதன் தோற்றுபித்தான். அது நடந்து முடிந்தது. திரௌபதி அர்ஜுனனுக்கு வாழ்க்கை பட்டாள். ஐவருக்கும் உரிமையானாள். அர்ஜுனனின் மைத்துனனான திருஷ்ட்டித்யும்னன் மிக கம்பீரமாக வளர்ந்து வருகிறான். எவர் எங்கு போயினும் அவன் அர்ஜுனனுக்குத்தான் உதவி செய்வான். சம்பந்தி அல்லவா.

தன் சகோதரியை கொடுத்தவனிடம் அவன் ஒருபோதும் பகை பாராட்ட மாட்டான். அவனுக்கு எதிராக யார் வந்தாலும் அழிப்பான். எனவே, அர்ஜுனனுக்கு எதிராக நான் போரில் இறங்கினால் என்னைக் கொல்ல திருஷ்ட்டித்யும்னன் இருக்கிறான். என் கதை எப்பொழுதோ முடிந்து போயிற்று. என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துகொண்டிருக்கிறது. முழுமனதாக உங்களுக்கு போரில் உதவி செய்வேன். உங்களை ஆதரிப்பேன்.

ஆனால், வெற்றி பெறுவேன் என்று சொல்வதற்கில்லை. பதினான்கு வருடங்களுக்குப்பிறகு நீங்கள் தோல்வி அடையப்போவது நிச்சயம். எனவே, இந்த மரியாதை நீங்கள் காட்டுகின்ற அன்பு எனக்கொன்றும் உவப்பாக இல்லை. வருத்தத்தைத்தான் கொடுக்கிறது’’ என்று சொல்லி அமைதியானார். ‘‘பனை மரத்தினுடைய நிழல் இரண்டரை நாழிகை. அவ்வளவுதான். இந்த சொற்ப நேரத்தில் நீங்கள் சந்தோஷமாக சுகபோகங்களை அணுகி உலக இன்பத்தை அனுபவியுங்கள். யுத்தம் தீர்மானமாகி விட்டது. இதிலிருந்து யாரும் பின்வாங்க முடியாது.’’
துரோணர் சொல்வதை திருதராஷ்டிரனும் கேட்க நேர்ந்தது.

‘‘துரோணர் சொல்வது உண்மைதான். எல்லாம் முடிந்துபோயிற்று. யுத்தம் வரப்போகிறது. அவர்கள் கோபத்தில் போயிருக்கிறார்கள். அவர்களை மறுபடியும் பேசி அழைத்து வா. அவர்கள் வராது போனால் பெரும்படையை அவர்களுக்கு அனுப்பு. அவர்கள் எல்லாவித சௌகரியங்களோடும் வனங்களை சுற்றி வரட்டும். அவர் களும் என் குழந்தைகள்தான். அவர்கள் துன்பப்படக்கூடாது.’’ என்று பேசினான். அவன் பேச்சு உளறலாக இருந்தது.

துரோணர் அவன் பக்கம் திரும்பினார். ‘‘இன்றைய செயலுக்கு காரணம் நீங்களே. உங்களாலேயே இந்த முடிவு ஏற்பட்டது. உங்களால் உங்கள் பிள்ளையை திருத்த முடியவில்லை. அவனுக்கு எதிராக செயல்பட முடியவில்லை. அவன் எப்படி ஆசைப்படுகிறானோ அதையெல்லாம் நிறைவேற்றுவதே உங்கள் வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறீர்கள். எது தர்மம் என்று உங்களுக்குத் தெரியவில்லை.

தெரிந்திருந்தாலும் புரிந்துகொள்ள விருப்பமில்லை. பிள்ளையின் பேச்சை கேட்பதே தர்மம் என்று இருந்து விட்டீர்கள். அதற்குண்டான பலன்களை உங்கள் பிள்ளைகள் அனுபவித்துதான் ஆகவேண்டும். திருதராஷ்டிரன் குருட்டுத்தனம்போல எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது. அறிவு வேலை செய்ய மறுக்கிறது. அந்த குருட்டுத்தனத்தால் இல்லாதது இருப்பதுபோலவும், இருப்பது இல்லாததுபோலவும் ஏற்படுகின்ற வேதனையைப்போல, அநியாயமானது நியாயம்போல, நியாயமானது அநியாயம் போலவும் தோன்றுகிறது.

இந்த குழப்பத்தில் மாட்டிக்கொண்டவன் தவறு செய்யத்தான் செய்வான். தவறுக்குண்டான விளைவை, வினையை அனுபவிக்கத்தான் செய்வான். பாண்டவர்கள் தலை கலைத்து தோலாடை உடுத்தி அஸ்தினாபுரத்து அரண்மனையிலிருந்து ஒற்றை ஆடையுடன் பின்தொடர்கின்ற திரௌபதியோடு வெளியேறினார்கள். அஸ்தினாபுரத்தின் வடக்கு பக்கத்திலிருந்து விலகி நகர்ந்தார்கள். அஸ்தினாபுரத்து மக்கள் அவர்கள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு கண்ணீர் சிந்த அவர்களை பின்தொடர்ந்தார்கள்.

இன்றல்ல என்றுமே அரசியலில் நேரிடையாக ஈடுபட முடியாத மக்களுடைய எதிரொலிப்பு ஒரு பெரிய ஊர்வலமாகத்தான் இருக்கிறது. மன்னர்கள் இரண்டு பேர் சூதாடுகிறார்கள். சூதாடுவது தவறு. அதை தடை செய்வோம் என்று அவர்கள் கிளம்பவில்லை. சூதாட்டத்தின் முடிவில் தோல்வியுற்ற பாண்டவர்கள் பின்னே அழுது, அரற்றியபடி ஊர்வலமாகப் போனார்கள். ஒருவேளை துரியோதனன் தோற்றுப் போனாலும் ஊர்வலமாக சில பேறாவது போயிருக்கக்கூடும்.

ஜனங்களுக்கு தோற்றவர் மீது பரிதாபப்படுவது இயற்கை. என்ன, ஏது என்ற காரண காரியங்கள் முக்கியமில்லை. தோற்றவருடைய வருத்தம்தான் அவர்களை வருத்தமடைய வைக்கிறது. ஆனால், அஸ்தினாபுரவாசிகளில் சிலர் விவேகமானவர்களாக இருந்தார்கள். பின்தொடர வேண்டாம் என்று யுதிஷ்டர் சொன்னபோது, கை கூப்பி, ‘‘இனி எங்களுக்கு அஸ்தினாபுரத்தில் என்ன இருக்கிறது. வீடுகள் பாழாகட்டும். அதில் எலிகளும், பாம்புகளும் வசிக்கட்டும். இடிந்து பெரும் குப்பை மேடாக போகட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. துரியோதனன் இருக்கும் இடத்தில் நாங்கள் எப்படி வசிக்க முடியும்.

சுபாவமாகவே அவர் முன்கோபி. ஆத்திரப்படுபவர். அசூயை உள்ளவர். அவரைப் போன்றவர்களை தலைவர்களாக வைத்துக்கொண்டு வாழ்வது என்பது நடுக்கத்திற்குரியது. நல்லவர்கள் இத்தனைப் பேர் இருக்கும்பொழுதும் இம்மாதிரி செய்கைகள் நடைபெறுகிறது என்றால் அங்குள்ள நல்லவர்களுக்கு எந்த வலிவும் இல்லையென்றுதான் அர்த்தம். துரியோதனன் தானே அங்கு எல்லாம். இப்பொழுது தட்டிக்கேட்கக்கூடிய நீங்களும் அங்கு இல்லையென்றால் அஸ்தினாபுரம் என்ன ஆகும்.

எனவே, எங்களுக்கு அஸ்தினாபுரம் தேவையில்லை. நீங்கள் எங்கு போகிறீர்களோ அங்கு போவோம். அந்த இடத்தில் நகரம் அமைத்துக்கொள்வோம். எந்த சௌகரியமும் இல்லாத வனமாக இருந்தாலும் உத்தமமான தலைவன் இருந்தால் அந்த இடம் நாடாக மாறும் என்ற நம்பிக்கை அவர்கள் பேச்சில் இருந்தது. யுதிஷ்டர் சோகமாக சிரித்தார்.

‘‘நீங்கள் பேசுவது என்ன நியாயம். என்னை ஆதரித்த விதுரரும், துரோணரும், பீஷ்மரும், என்னைச்சார்ந்த மற்றவர்களும் அங்கு இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டாமா. காடு போக வேண்டும் என்ற கட்டளையை மேற்கொண்டு காடு போவது என்பதில் உங்கள் எல்லோரையும் அழைத்துப் போக வேண்டும் என்ற விதி இல்லையே. வீடு, வாசல் இடிந்து போகட்டும்.

பாம்பும், எலிகளும் விளையாடட்டும். இந்த நகரம் பாழாகப் போகட்டும். நாங்கள் உங்கள் பக்கம் வருகிறோம் என்பதில் ஒரு ஆவேசம்தான் இருக்கிறதே தவிர அறிவுடமை இல்லை. அப்படியானால் நீங்கள் ஒன்று தீர்மானித்து விட்டீர்கள். மறுபடியும் காட்டிலிருந்து யுதிஷ்ட்ரன் நாட்டுக்கு வரப்போவதில்லை. பன்னிரெண்டு வனவாசம் முடித்து, ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் முடித்து பதினான்காவது வருடம் யுதிஷ்ட்ரனும், பஞ்ச பாண்டவர்களும் இங்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை.

இதோடு என் கதை முடிந்துபோயிற்று என்று என்னை பின்தொடர்கிறீர்கள். அப்படி நான் திரும்ப வருகிறபோது அஸ்தினாபுரம் என்னை வரவேற்க வேண்டாமா, மலர் மாரி பொழிய வேண்டாமா...? இப்பொழுது இருக்கின்ற சிறுவர்களெல்லாம் இளைஞர்களாக ஓடிவந்து எங்களை வணங்க வேண்டாமா. நண்பர்களே, ஒரு நகரத்தை  பாழாக்கிவிட்டு இன்னொரு நகரத்தை உருவாக்குவதுதான் இந்த பந்தயத்தினுடைய முக்கியமான குறிக்கோள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த வனம் போதலுக்கு நல்ல காரணம் இருக்கிறது.

எனவே, தயவு செய்து ஆவேசப்படாமல் நகரவாசிகளான நீங்கள் எங்களை பின்தொடராமல் இருக்க என் மீது ஆணையிட்டு கேட்டுக்கொள்கிறேன்.’’ இந்த ஆணையிட்டு என்ற வார்த்தை அவர்களை அசைத்ததுபோலும். அவர்கள் அழுதார்கள். அரற்றினார்கள். பின் தொடராது அமைதியாக நின்றார்கள். நகரத்துவாசிகளுக்கு பின்னே அவர்கள் போகட்டும் என்ற அந்தணர்கள் பின்தொடர்ந்தார்கள். நகரத்து வாசிகள் ஒதுங்கி வழிவிட்டதும், அந்தணர்கள் நெருங்கி யுதிஷ்டரையும் பஞ்ச பாண்டவர்களையும் அடைந்தார்கள்.

தொடர்ந்து நடந்தார்கள். கங்கைக்கரையின் வட கரையில் பெரிய ஆலமரத்தின்கீழ் அந்திசாயும் நேரத்தில் அமர்ந்துகொண்டார்கள். அந்தி நேரத்தின் நீர் கடன்களை முடித்தார்கள். கையில் கொண்டு வந்திருந்த உணவுகளை உண்டார்கள். பைசாசங்களும், பூதங்களும் அலைகின்ற அந்த வேளையில் அக்னி வளர்த்து மந்திரங்கள் சொல்லி மாலை நேர பிரார்த்தனை முடித்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்தார்கள்.

‘‘நகரவாசிகளுக்கு இதம் சொன்னேன். அவர்கள் கேட்டுக் கொண்டு திரும்பி விட்டார்கள். எல்லாம் அறிந்த அந்தணர்களான உங்களுக்கு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு தூரம் நீங்கள் எங்களை பின் தொடரப் போகறீர்கள் என்று புரியவில்லை. உங்களால் வனவாசத்தை மேற்கொள்ள முடியுமா. காடு என்பது விஷ ஜந்துக்களும், கொடிய மிருகங்களும் உடையது. இத்தனை பெரிய கூட்டத்தை எங்களால் காப்பாற்றி அழைத்துப் போக முடியுமா.

அந்தணர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுக்காமல் போனால் அது அரசனுக்கு மிகப் பெரிய பாவமில்லை. எவரையும் தீண்டும் விஷமல்லவா அது. தயவு செய்து இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழியை எனக்கு நீங்கள் காட்ட வேண்டும்.’’ ‘‘காடுகளில் காய்களும், பழங்களும், கிழங்குகளும் இருக்கின்றனவே. சில உத்தமமான இலைகளும் உணவாகுமே’’ என்று அந்தணர்கள் சொல்ல, அவர் மறுத்து சிரித்தார்.

அந்தணர்கள் திருப்தியுரும் வண்ணம் உணவிட வேண்டும் என்பது தான் இந்த உலகின் கொள்கையாக இருக்கிறது. எப்போதும் உங்களைப் போன்ற கற்றறிந்தோர் தான் உலகத்தை வழி நடத்துகிறார்கள். உலகத்தின் தர்மத்தை பேணி காக்கிறார்கள். உங்களுக்கு கிழங்கும், அரைவயிறு உணவும் எப்படி போதும். அது தர்மத்திற்கு குந்தகம் அல்லவா விளைவிக்கும். தயவு செய்து சொல்லுங்கள். இந்த நேரத்தில் நான் என்ன செய்வது?

‘‘தர்மா, வேதத்தின் அடிப்படை சாரமான ஒரு தத்துவ விஷயத்தைச் சொல்கிறேன் கேள். மனிதருக்கு திருப்தி என்று எதில் உண்டாகும். அந்தணர்கள் திருப்தியாகும் வரை உணவு இட வேண்டும் என்று சொன்னாய். எந்த மனிதருக்கு எதில் திருப்தி ஆகும்.’’ ஒரு அந்தணர் பேசினார்.

‘‘திருப்தி என்பது உடல் கூற்றா. இல்லை அது மனம் தான் தேகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறவனுக்குத்தான் பிணி என்பது பெரிதாகிறது. பிணி என்பது பெரிதாகும் போதுதான் மனக்கிலேசங்கள் பெரிதாகின்றன. மனம் மயக்கமுற்று தவிக்கிற ேபாது அலங்கோலப்படுகிற போது தர்மத்தைப் பற்றிய கேள்விகள் வந்து விடுகின்றன. தர்ம பிழற்சியும் ஏற்பட்டு விடுகிறது. கொன்றால் தான் உணவு என்றால் கொன்று தின்றுவது மிக முக்கியமான விஷயமாக போய் விடும். உயிரின் வலியும், வேதனையும் அப்பொழுது நெல் முனையளவும் தெரியாது.

ஆக, இங்கே தான், உடம்பு, தன் பசி என்கிற பாவத்தினாலேயே இந்த தொல்லைகள் ஏற்படுகின்றன. தன் உடம்பு பற்றின பிரஞ்ஞை இல்லாது தன் மனதை ஆத்மாவில் லயிக்க விடுகிறவனுக்கு இந்த பிரச்னை எழாது. இதை தெளிவாகவும், தீர்மானமாகவும் கற்று வைத்திருக்கிற அந்தணர்களுக்கு நீ சொல்கிற கஷ்டம் எதுவும் இல்லை. எனவே, எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

என்ன கிடைத்ததோ அதைப் பற்றி அக்கறையில்லாமல் உண்ணுவதற்கு தெரியும். நல்ல அந்தணன் அரிசி உணவையும் அருமையாக உண்பான். வெறும் நீரையும் குடித்துவிட்டு உயிர் வாழ்வான். பூமி பரந்தது. பல தாவரங்கள் நிறைந்தது. எத்தனையோ உயிர்கள் அந்த தாவரங்களின் அடிப்படையில் உயிர் வாழ்கின்றன. அத்தனை உயிர்களுக்கும் இந்த பூமியில் உணவு கிடைக்கும் பொழுது எங்களுக்கு கிடைக்காதா. அதைப் பற்றி கவலைப்படாதே.’’ என்று மிருதுவாகப் பேசினார்.

யுதிஷ்ட்ரர் அவர் பேச்சை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘‘நன்றாக இருக்கிறதே. மாமரத்திலிருந்து ஒரே ஒரு செங்காயை பறித்து ஒரு அந்தணனுக்கு கொடுத்து பசியாறுங்கள் என்று சொல்லுகின்ற கடின புத்தி என்னிடம் இல்லை. இதுவரை நான் கொடுத்து கொடுத்தே பழக்கப்பட்டவன். உங்களுக்கு கொடுக்க முடியவில்லை என்கிற போது எனக்கு துக்கம் மண்டுமே... அதை நான் எவ்வாறு தீர்ப்பேன். எவ்விதம் சகித்துக் கொள்வேன். இதுவே என்னை அயற்சியுச் செய்து விடுமே.

நீங்கள் சொல்லுகின்ற தத்துவ விஷயங்கள் எனக்கு புரிகின்றன என்றாலும் அடுத்தவருக்கு கொடுத்து கொடுத்து பழக்கப்பட்ட என்னைப் போன்ற க்ஷத்திரியனுக்கு அதுவும் அந்தணருக்கும் மரியாதையாக வழங்கி பழக்கப்பட்ட என்னைப் போன்ற க்ஷத்திரியனுக்கு அப்படி கொடுக்க முடியவில்லை என்பது மிகப் பெரிய தாபம். ஆகவே தான் இதோடு நின்று விடும்படி உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.

என் கதை எப்பொழுதோ முடிந்துபோயிற்று. என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துகொண்டிருக்கிறது. முழுமனதாக உங்களுக்கு போரில் உதவி செய்வேன். உங்களை ஆதரிப்பேன். ஆனால், வெற்றி பெறுவேன் என்று சொல்வதற்கில்லை. பதினான்கு வருடங்களுக்குப்பிறகு நீங்கள் தோல்வி அடையப்போவது நிச்சயம். எனவே, இந்த மரியாதை நீங்கள் காட்டுகின்ற அன்பு எனக்கொன்றும் உவப்பாக இல்லை. வருத்தத்தைத்தான் கொடுக்கிறது.

பூமி பரந்தது. பல தாவரங்கள் நிறைந்தது. எத்தனையோ உயிர்கள் அந்த தாவரங்களின் அடிப்படையில் உயிர் வாழ்கின்றன. அத்தனை உயிர்களுக்கும் இந்த பூமியில் உணவு கிடைக்கும் பொழுது எங்களுக்க கிடைக்காதா. அதைப் பற்றி கவலைப்படாதே.

(தொடரும்)