கிணற்று ஆமைக்குத் தெரியுமா கடலின் பெருமை!



திருமுறைக் கதை

அந்த சிவன் கோயிலில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஏதேனும் உபந்யாசம் நடப்பது வழக்கம். சிவனுடைய பராக்கிரமத்தையும், அவர் கருணையையும் அந்த உபன்யாசத்தில் கேட்டறிந்தார் ஒரு பக்தர். அன்றிலிருந்து அவருடைய உள்ளம் முழுதும் சிவபெருமானே நிறைந்து, நாள்தோறும் அவரை நினைந்து பக்தியில் திளைக்கும்படி மாறியது. ஊர், ஊராகச் சென்று இறைவனை நெக்குருக தரிசித்தார்.



தேவதேவனாகிய மகாதேவனைத் தரிசித்ததோடு, அங்கங்கே அவர் புகழையும் பாடினார். இங்குமங்கும் அலையும் மனத்தை அடக்கி அவனை ஒருமித்துத் தியானித்தார். நாட்கள் செல்லச் செல்ல அவர் உள்ளத்தை அதுவரை அலைக்கழித்த தீய குணங்கள் யாவும் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கின.  உள்ளமெனும் திருக்கோயிலில், ஞானமென்னும் விளக்கேற்றி, இறைவனை அங்கு எழுந்தருளச்செய்து போற்றினார்.

எந்தவகையிலாவது பொருள் ஈட்டி, அதை மேலும் மேலும் சேமிப்பதே  தன் வாழ்க்கையின் குறிக்கோளாக எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பணப்பித்தர், இந்த பக்தரைச் சந்திக்க அவர் இல்லம் வந்தார். வெறும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்க்கை குறிக்கோளாகக் கொண்டிருந்த அவரை பாவகாரி என்றே சொல்லலாம்!  “உங்கள் முகத்தில் புதிதாக தேஜஸ் தெரிகிறதே, ஏதாவது புதையல் கிடைத்ததா என்ன?’’ என்று கேட்டார். பக்தரும் உடனே “உங்களுக்கு எப்படித் தெரிந்தது? புதையல்தான் கிடைத்தது!’’ என்று பதில் அளித்தார்.

“அப்படியா! பொருளாகவா, பொன்னாகவா? எவ்வளவு கிடைத்தது?’’
 “பொருள்தான் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்,” பக்தர் கூறினார்.
‘‘அப்படியா? என்ன பொருள் கிடைத்தது?’’
“ பரம்பொருள்!’’
‘‘அப்படியென்றால்…?’’
“சிவ பரம்பொருள்.’’
‘‘ஓ! அப்படியும் ஒரு பொருள் இருக்கிறதா?” 
“ஆம். உண்டு. சிவ பரம்பொருள் தன்னுடைய பெருந்தன்மையால் தன்னை ஒருபோதும் நினைக்காதவரையும் காப்பாற்றுகிறது, வேண்டியவை யாவற்றையும் வழங்குகிறது.’’
‘‘புரியவில்லையே! நீங்கள் எந்த மனிதரைப் பற்றிச் சொல்கிறீர்கள்?”
“அவர் மனிதர் அல்ல. உலகத்தில் இருக்கும் மனிதர்கள் யாவரையும் காப்பாற்றி அருளும் பெருமான்.’’
“அப்படியானால் நீங்கள் குறிப்பிடுபவர் தேவரோ?”
“தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவன். தேவ தேவன். மகாதேவன்’’
“அந்த மகாதேவனால் நமக்கு என்ன பயன்? நமக்கு கை, கால்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றனவே. அதனால் ஏதோ ஒருவகையில் உழைத்துச் சம்பாதிக்கிறோமே!’’.

“அந்தக் கை, கால்களைக் கொடுத்தவனே அவன்தான் ஐயா! அதையும், அவனையும் மறந்துவிடலாமா? ‘இவன்தான் நம்மை நினைக்கவில்லையே, இவனிடமிருந்து கை, கால்களைப் பறித்துவிட்டுப் பயன்படாமல் செய்து விடலாம்’ என்று அவன் ஒருபோதும் நினைத்ததில்லை. நாம் செய்யும் குற்றங்களைக்கூட அவன் பொருட்படுத்துவதில்லை. அத்தகைய பெருந்தன்மையாளன் அவன்!’’
“ஏன் ஐயா, அந்தத் தேவன் நம் யாவரையும் விடப் பெரியவனா என்ன ?”  “ஆம்! அளக்கவொணாத பெம்மான்”
“சரி! அவனை நான் பார்க்கமுடியுமோ?”
‘‘பார்க்கும் முறையிலே பார்த்தால் நிச்சயமாக அவரைப் பார்க்கலாம்”
“ஓ! அது என்ன முறை?”
“அவனிடம் ஆராத அன்புகொண்டு வழிபட்டால் அவனைப் பார்க்கலாம். அந்த சிவபெருமானின் பெருமைகளை விளக்குகிறேன், கேளுங்கள்.’’
“நீங்கள் சொல்வதெல்லாம் சுத்தப்பொய்! அப்படி ஒருவனைப் பார்க்கவே முடியாது”

அவருடனான வாக்குவாதத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டால்தான் நல்லது, இனிப் பேசிப் பயனில்லை என எண்ணி பக்தர் பேசாது இருந்தார். ஆனாலும், ஆற்றமாட்டாமல் “கல்லால் ஆன பசுவிடம் பால் கறக்க முடியுமா? கிணற்று ஆமைக்குக் கடலின் பெருமையை உணர்த்த முடியுமா?” என்று முணு முணுத்துக்கொண்டார் பக்தர்.

“ஏதோ சொல்கிறீர்களே, ஆமை, கடல் என்று…. என்ன அது?  கொஞ்சம் விரிவாகத்தான் சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்” வெட்கத்தைவிட்டுக் கேட்டார் பணப்பித்தர். சரி, கதையைக் கேட்ட பிறகாவது இவர் சிவபிரானுடைய பெருமைகளை அறிந்துகொள்கிறாரா என்று பார்ப்போம், என்று கருதிய பக்தர் அந்தக் கதையைக் கூறலானார்: 

ஒரு ஊரில் சிறிதளவே நீர் கொண்ட ஒரு சிறிய கிணறு இருந்தது. அங்கிருந்து சற்றுத் தொலைவில் பெரிய கடல் அலைவீசிக்கொண்டிருந்தது. பல நாட்களாகக் கடலில் வாழ்ந்து வந்த ஆமை ஒன்று, வேகமாக வீசிய அலையில் சிக்கி, கரையில் வந்து விழுந்தது. பிறகு வழி தடுமாறி, கரையில் இருந்த மணல் மேட்டில் ஏறி ஒன்றும் புரியாமல் திக்குத் தெரியாமல் சென்றுகொண்டே அந்த கிணற்றுக்கு அருகில் வந்து நின்றது.

கிணற்றுச் சுவரில் ஏறி கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது. அதில் தண்ணீர் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தது. ஆனால், அது கடல் நீர் மாதிரி இல்லையென்றாலும், இப்போதைக்குப் பாதுகாப்பான இடமாகப்பட்டதால் அந்தக் கிணற்றுக்குள் குதித்தது. கிணற்றில் ஏற்கெனவே ஒரு சிறிய ஆமையும் தவளையும் வசித்து வந்தன. கிணற்று ஆமைக்குக் கடல் ஆமையைப் பார்த்து மிகவும் வியப்பு.

ஏனென்றால் அந்த மாதிரிப் பெரிய ஆமையை அது இதுவரை பார்த்ததே இல்லை. அது அதுவரைத் தன் வாழ்நாளைக் கிணற்றிலேயே கழித்தது அல்லவா? அதனால் அதற்கு வெளியுலகத்தைப் பற்றித்  தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. தோற்றத்தில் தன்னைப் போலவே இருந்த கடல் ஆமையைப் பார்த்து, “நீ என்னைப்போலவே இருக்கிறாயே? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டது.

“நான் கடலிலிருந்து வருகிறேன்,” பெருமையாகச் சொன்னது கடல் ஆமை. “கடலா? அப்படியென்றால் என்ன?” “அங்கு நிறைய்ய்.....ய நீர் இருக்கும்” ‘‘இந்த கிணற்றில்கூடத்தான் நிறைய நீர் இருக்கிறது. இந்தக் கிணற்றளவு ஆழம் இருக்குமா உன் கடல்?’’ இந்த இரண்டு ஆமைகளும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட தவளை, ‘‘இந்த ஆமையை ஏன் கேட்கிறாய்? நான் பல நீர்நிலைகளுக்குப் போயிருக்கிறேன்.

ஆனால் இந்தக் கிணற்றில் உள்ள நீர் ஆழத்தைப் போல் நான் எங்குமே கண்டதில்லை,’’ என்று கிணற்றுப் பெருமை பேசிற்று. கிணற்றுத் தவளையும், ஆமையும் கூட்டுச் சேர்ந்ததைக் கண்டு கடல் ஆமை சும்மா விடுமா? அதுவும் தன் பங்குக்குக் கடலைப் பற்றிப் பெருமையாகக் கூறியது. “கடல் எவ்வளவோ பெரியது! அதற்கு ஒரு பக்கம்தான் கரை. மறுகரையை நான் பார்த்ததே இல்லை. அதன் ஆழத்தை யாராலும் அளவிடவே முடியாது.’’

கிணற்று ஆமை அதை நம்பவில்லை. ‘‘நீ பொய் சொல்கிறாய்! கரை இல்லாமல் தண்ணீர் எங்காவது நிற்குமா? ஆழம் தெரியாமல் அப்படி ஒரு கிணறு இருக்குமா?” என்று வியப்புடன் கேட்டது. “உங்களுக்குச் சொன்னால் புரியாது. கிணற்றுக்கும் கடலுக்கும் நெடுந்தூரம்…’’ கடல் ஆமை நொந்துகொண்டது.

ஆனால், கிணற்று ஆமை, கடல் ஆமையின் கூற்றை நம்பாமல் இதெல்லாம் சுத்தப்பொய் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அதனால் கடல் ஆமை இவை இரண்டுக்கும் கடலைப் பற்றிச் சொல்லி  ஒரு பிரயோஜனமும் இல்லை  என்று கருதி பேசாமல் இருந்துவிட்டது. இதுதான் அந்தக் கதை. 

“இவ்வளவுதானா கதை? நானும்தான்  சொல்கிறேன், நீங்கள் மகாதேவனைப் பற்றிச் சொல்வதெல்லாம் பொய் என்று,’’ என்று கிணற்று ஆமை போல் கூறிக்கொண்டே இருந்தார் பணப்பித்தராகிய பாவகாரி! இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் குறிப்பதுபோல அப்பர் சுவாமிகள் ஐந்தாம் திருமுறையில் நூறாவது பதிகமாகிய திருக்குறுந்தொகையில், ஐந்தாம் பாடலாகப் பாடியிருக்கிறார்:

கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலோடு ஒக்கு மோகடல் என்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரிது என்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே

பொருள்:- கிணற்றிலுள்ள ஆமை, அலைகள் ஆர்ப்பரிக்கின்ற கடலில் உள்ள ஆமையிடம், ‘கூவலுக்குச் (கிணற்றோடு) சமமாகுமா உன் கடல்?’ என்று கடலின் பெருமையை அறியாமல் கேட்பது போல், பாவம் செய்தவர்கள் தேவ தேவனாகிய சிவபெருமானுடைய  சிறந்த அருட் குணத்தை ‘நேரே காண இயலாது’ என்று சொல்வார்கள்.

-உமா பாலசுப்பிரமணியன்