கைலாசபட்டி கைலாசநாதர் திருக்கோயில்



பெரிய குளத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலும், தேனியிலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கைலாசபட்டி கைலாசநாதர் திருக்கோயில் கைலாசநாதர் திருக் கோயில் பெயரை வைத்து ‘‘கைலாசபட்டி’’ என்ற ஊர் உருவானது. மேற்கு மலைத் தொடர்ச்சியிலுள்ள இக் கோயிலுக்கும், இமயமலை அருகிலுள்ள கைலாய மலைக்கும் தொடர்பு உண்டு.



முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டு முழுமை அடையாமல் நின்றுபோன இத் திருக்கோயிலை, புதியதாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் முன் மண்டபம், மூலகணபதி சப்தமாதர்கள், இச்சாசக்தி, கிரியாசக்தி, வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், திருத்தியமைக்கப்பட்ட மூலஸ்தானம் என புதிய வடிவில் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவண்ணாமலை போன்று கார்த்திகை நாளில் தீபம் எற்றுதலும், கிரிவலமும் நடைபெற்று வருகிறது.

கிரிவலம் மலையைச் சுற்றிலும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கிரிவலப் பாதையின் எண் திசைகளிலும், இந்திரலிங்கம், அக்னி லிங்கம், இமயலிங்கம், நிருருதிலிங்கம், வாயுலிங்கம், வருணலிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என்று அஷ்டதிக்கு லிங்கங்கள் உள்ளன. இந்த மலையைச் சுற்றிலும், ஓமச்செடிகளும், மூலிகைகளும் நிறைந்துள்ளதினால், உடல் நோய்கள் நீங்கி வருகின்றன.

இம் மலையில் பல சித்தர்கள் உலா வந்துள்ளனர். அவர்களில் சட்டமுனி சித்தர், மௌனகுருசாமி சித்தர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தக் கோயிலில் திரிசக்கர தரிசனம், சதுர்க்கர தரிசனம், ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், கனி அபிஷேகம், மகா சிராத்திரி, சோமவார பூஜை, கார்த்திகை பூஜைகள், பிரதோஷங்கள் போன்றவைகள் நடைபெறுகின்றன.

தமிழ்ப் புத்தாண்டின் சித்திரை முதல் நாள், பெரிய குளம் தீர்த்தத் தொட்டியில் இருந்து 108 குடங்களில் கொண்டு வரும் நீரால் கைலாசநாதருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றன. அன்றைய நாள் திருவிழாவை கிராமத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

கள்ளிப்பட்டி புனுகு கருப்பண்ண சுவாமி

கழுவிலேற்றப்படும் உயிரினங்கள் உயிர் பிழைப்பது என்பது அபூர்வம். கழுவிலேற்றப்படும் சேவல் கூவுகிறது என்றால் அதிசயம்தானே! தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில்தான்அந்த அதிசய சம்பவம் நடைபெற்று வருகிறது. வைகாசி மாதம் கடைசி வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் புனுகு கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா கொண்டாடப்படுகிறது. முதல் நாள் காலையில் பக்தர்கள் வைகை ஆற்றுக்குச் சென்று தீர்த்த நீராடி விட்டு தீர்த்தக் குடங்களை எடுத்துக் கொண்டு வருவர்.

இரண்டாம் நாள் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு மரக் குச்சியினை ஐந்து முழ அளவுக்கு வெட்டி, மாட்டுக் கொம்பினைக் கூர்மையாக சீவுவதைப் போல மரக்குச்சியினை சீவி சந்தனம், குங்குமப் பொட்டிட்டு அலங்கரிப்பர். இரவு ஒரு மணியளவில், கூவும் சேவல் ஒன்றினை பீடத்தின் அருகே கழு மரமாக வைக்கப்பட்டிருக்கும் தேக்கு குச்சியில் அருள் கொண்ட பூசாரி கழுவிலேற்றுவார்.

பக்தர்கள் எல்லாரும் கழுவிலேற்றப்பட்ட சேவலையே கண் விழித்து இரவெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பர். காலை நான்கு மணியளவில் கழுவிலேற்றப்பட்ட சேவல் கூவி அதிசயத்தை உண்டாக்கும். சேவல் கூவும் குரலைக் கேட்டவுடன் பக்தர்கள், கருப்பண்ணசாமியே ‘‘உங்கள் குழந்தைகளாகிய எங்களை காப்பாத்திட்டே’’ என்று குரல் கொடுத்து ஆடிப்பாடி ஆனந்தக் கூத்தாடி மகிழ்வர்.

- கோட்டாறு ஆ.கோலப்பன்