பக்தி சீலம் போற்றிய சிவனடியார்கள்



கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மிகச் சிறந்த சிவனடியார்களில் சிலர் நாயன்மார்கள் எனப்பட்டனர். இவர்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிராகாரத்திற்குள் கற்சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவராகிய இவர்களின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன.



அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவர் மற்றும் நாயன்மார் வரிசையில் இடம்பெறாத மாணிக்கவாசகரும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ, சமய, குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், 4, 5, 6 - திருநாவுக்கரசராலும், 7ம் திருமுறை சுந்தரராலும் இயற்றப்பட்ட ராகத்துடன் கூடிய இசைப்பாடல்களாகும்.

நாயன்மாரில் பெரும்பாலோர்  புலமை படைத்தவர்கள் இல்லை. ஆனால், சிவபெருமான் மீது மிகச் சிறந்த பக்தி கொண்டவர்கள்; அவரது திருவிளையாடல்களுக்கு ஆளானவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது; சாதி, இன பாகுபாடு இல்லாமல் யார்வேண்டுமானாலும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதே இவர்கள் கற்றுக்கொண்ட, கற்பிக்கும் வாழ்க்கைப்பாடம்.

நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்க, அவர் பாடிய நாயன்மார்கள் மொத்தம் 60 பேர்தான்; 63 பேர் அல்ல. இவர் சிவபதம் ஏகியபின்னர், 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மார்களோடு, அவ்வாறு பாடிய சுந்தரர், அவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார் ஆகியோரையும் சேர்த்து 63 நாயன்மார்களாக ஆக்கினார்.

நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.



பரதவர், அந்தணர், வணிகர்,வேளாளர், இடையர், ஆதி சைவர், வேளிர், சான்றார், காடவர், செங்குந்தர், வேடர், செக்கார்,களப்பிரர், ஆதி சைவர், மாமாத்திரர், ஏகாலியர், புலையர், குயவர், பாணர், முனையர், அரசர், சாலியர்,குறும்பர் என்று பல்வேறு இனத்தவர்கள் இப்படி அறுபத்து மூன்று நாயன்மார்களாகப் போற்றப்படுகிறார்கள். அந்த சிவனடியார்கள் சிலரை இந்த இதழில் தரிசிப்போம்.

1. கலிக்கம்பர்


சித்தத்தைச் சிவன் பால் வைத்த சிவனடியார்களை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அவர்கள் கால்களைக் கழுவி உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கலிக்கம்பர். ஒரு முறை அவர்கள் வீட்டில் முன்பு வேலை செய்த அன்பர் ஒருவர் சிவனடியாராக மாறியிருந்தார். அதனை அறிந்த கலிக்கம்பர் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து கால்களைக் கழுவினார்.

அவர் மனைவியையும் அதே போன்று செய்யுமாறு கூற தன் வீட்டில் முன்பு வேலை செய்தவரின் கால்களைக் கழுவுவதா? எனக் கேட்ட மனைவியின் கைகளை வெட்டி எறிந்து அந்த சிவனடியாரின் பாதங்களைக் கழுவினார். அவர் பக்தியை மெச்சிய ஈசன் அவருக்குத் திருவருள் புரிந்தார்.

2. கண்ணப்பர்

திண்ணன் என்ற இயற்பெயர் கொண்டவர் வேடர் குலத்தில் பிறந்து வளர்ந்து வந்தார்.  அவர் தன் நண்பர்களான நாணன், காடன் என்பவர்களோடு வேட்டையாடச் சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் அந்த லிங்கமூர்த்தத்தை வணங்கி வந்தார்.

இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் எனும் அந்தணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்திருமேனியின் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் ஈசன். அதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் பெயர்த்து லிங்கத்தின் கண் இருக்கும் இடத்தில் இட்டார்.

லிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார். கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.



3. அரிவாட்டாயர்

சோழர்களது காவிரி நாட்டிலே கணமங்கலம் எனும்  நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்கும் ஊர் உள்ளது. அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் ஈசனிடம் மாறா பக்திகொண்டவர். மனையறம் பூண்டு வாழ்ந்த அவர் சிவபெருமானுக்கு ஏற்றவை என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து ஈசனுக்கு நிவேதிப்பதை கடமையாக செய்துவந்தார். 

அவரை சோதிக்க எண்ணிய ஈசன் அவரை வறுமைக்கு ஆட்படுத்தினார். அப்படியும் அவர்  கூலிக்கு நெல்லறுத்து வாழ்பவராய்க் கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்கு சமைத்து படைத்து வந்தார். கார்நெல் அரிந்து கார்நெற்கூலிகொண்டு தாம் உண்டு வந்தார். இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன. அவற்றை அறுத்த நெற்கூலியினைக் கொண்டு “இது அடியேன் செய்த புண்ணியமே ஆகும் என்று சிந்தை மகிழ்ந்து, அக்கூலியெல்லாம் ஈசனுக்கு உணவு படைப்பதற்கே ஆக்கினார்.

தம் வீட்டுக் கொல்லையில் வளர்த்த கீரை வகைகளைக் கொய்து மனைவியார் சமைத்துத்தர அதனை உணவாகக் கொண்டார். ஒரு நாள் தொண்டனார் ஈசனுக்கு தூய செந்நெல் அரிசியும், மாவடுவும், கீரையும் சுமந்து மனைவியோடு செல்லும் போது பசிமயக்கத்தால் கீழே விழ அவர் சுமந்து சென்ற அனைத்தும் பூமியில் சிதற ஈசனுக்கு உணவு படைக்கமுடியாத இந்த உயிர் எதற்கு என அரிவாளால் தன் உயிரைமாய்க்க முன்வந்த போது ஈசன் அவர் கையைப் பிடித்து தடுத்து ரிஷபாரூடராய் திருக்காட்சி தந்து ஆட்கொண்டு அவருக்கு அரிவாட்டாய நாயனார் எனும் திருப்பெயரையும் சூட்டினார்.

4. திருநீலகண்டர்

சிதம்பரத்தில் வாழ்ந்த திருநீலகண்டரும் அவரது மனைவியும் ஒரு முறை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒருவரை ஒருவர் உடல் ரீதியாக தொட்டுக்கொள்ளாமல் இருப்பதாக ஈசன் மேல் ஆணையிட்டு அதன் படி வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் திருவிளையாடல் புரிய எண்ணம் கொண்ட ஈசன் சிவனடியார் போல் வந்து அவர்களிடம் தன் திருவோட்டைத் தந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் படி சொல்லிச் சென்று அந்த திருவோட்டையும் மறையச் செய்தார்.



பின் திரும்பவும் அவர்களிடம் வந்து திருவோட்டைத் திருப்பிக் கேட்க அது மறைந்து விட்டதாக அவர்கள் கூற, அத்தம்பதிகளை ஆலய திருக்குளத்தில் மூழ்கி எழுந்து அவர்கள் சொல்வது உண்மை என சொல்ல வேண்டும் என சிவனடியார் வடிவில் இருந்த ஈசன் கூறினார். அப்போது அவர்கள் தங்கள் சபதத்தை ஊராரிடம் சொல்லி ஒரு கொம்பைப் பற்றிக் கொண்டு குளத்தில் மூழ்கி எழுந்து இளமையான வடிவம் பெற்றதுடன் ஈசனின் திருவருளையும் சேர்த்துப் பெற்றனர்.

5. கணம்புல்லர்

நம்பி என்ற பக்தர் திருப்புலீஸ்சரம் எனும் ஊரில் வாழ்ந்து வந்தார். செல்வவளம் மிக்க அவர் அவ்வூர் ஈசன் ஆலயத்தில் விளக்குகளுக்கு எண்ணெய் வாங்கித்தரும் சேவையை புரிந்து வந்தார். செல்வ வளம் மிக்க போது பசு நெய் தந்த அவர், செல்வ வளம் மாறிய போது நல்லெண்ணெய் வாங்கித்தந்தார்.

மேலும் செல்வம் குறைந்தபோது கணம்புல் எனும் ஒருவகைப் புல்லைப் பறித்து விற்று அதனால் கிடைக்கக்கூடிய பணத்தில் ஆலய விளக்குகளை ஏற்றி மகிழ்ந்தார். கணம்புல்லும் கிடைக்காத கால கட்டத்தில் தன் தலைமுடியையே எண்ணெய் விட்டு விளக்காக எரித்து சிவத்தொண்டைத் தொடர்ந்தார். அவர் கணம்புல்ல நாயனார் என புகழடைந்தார்.

6. அப்பூதி அடிகள்

திருநாவுக்கரசரையே தன் குருநாதராக ஏற்று அறப்பணிகள் பல செய்தவர் அப்பூதி அடிகள். அவரை நேரில் தரிசிக்காவிட்டாலும் அவர் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர். தன் குழந்தைகளுக்குக்கூட முதல் திருநாவுக்கரசு, இரண்டாம் திருநாவுக்கரசு என்று பெயர் வைக்குமளவிற்கு அவர் மேல் பக்தி கொண்டிருந்தார். ஒரு முறை அவர் வாழும் ஊருக்கு விஜயம் செய்த திருநாவுக்கரசரை வணங்கி எழுந்து தன் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தார்.

விருந்து பரிமாற வாழையிலை பறிக்கச் சென்ற அப்பூதி அடிகளின் மகனை பாம்பு தீண்ட அவன் இறக்கிறான். அதனை மறைத்து அப்பூதி அடிகள் தன் குருவிற்கு விருந்து பரிமாற, தன்னுடன் அமர்ந்து உண்ண அவன் மகனையும் அமரச் சொன்ன திருநாவுக்கரசரிடம் மகன் மறைந்த செய்தியைக் கூற அவர் ஒன்றுகொலாம் எனும் பதிகம் பாடி அவர் மகனை மீண்டும் உயிரோடு வரச் செய்த அற்புதம் நிகழ்ந்தது. குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும் என்பதை உலகிற்கு உணர்த்திய நிகழ்வு இது.

7. இயற்பகையார்

சிவனடியார்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் தட்டாமல் அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுப்பதை சிவ காரியமாக ஒரு அடியவர் செய்து வந்தார். அதன் மூலம் பேரும், புகழும் பெற்றுத் திகழ்ந்தார். ஈசன் அவரை ஆட்கொள்ளும் பொருட்டு ஒரு சிவனடியாராகி தன் விரகதாபத்தைத் தீர்க்க அந்த அடியவரின் மனைவியை தன்னுடன் அனுப்புமாறும், அதற்கு எதிர்க்கும் ஊரார்களிடமிருந்து தன்னைக் காக்க அந்த அடியாரையே காவலுக்கு வருமாறும் கேட்டார்.

அதன்படியே தன் மனைவியை அந்த சிவனடியார் உருவில் இருந்த ஈசனோடு அனுப்பி காவலுக்கு சென்ற போது தன்னை எதிர்த்தவர்களை கொல்லத் துணிந்தார் அந்த சிவகைங்கரியம் செய்யும் அன்பர். ஈசன் அவர்கள் முன் காட்சியளித்து அருளினார். அந்த அடியவர் இயற்பகை நாயனார் என அழைக்கப்பட்டார்.



8. மானக்கஞ்சாற நாயனார்

மானக்கஞ்சாறர் எனும் சிவனடியார் தன்னால் முடிந்த அளவு சிவத்தொண்டினைப் புரிந்து வாழ்ந்து வந்தார். அவரின் மகள் மிக நீண்ட அடர்த்தியான கூந்தலைக் கொண்டவள். அந்த மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. அந்த வேளையில், ஈசன் ஒரு வீரசைவ முனிவர் வேடத்தில் அங்கு சென்று அந்த சிவனடியார் செய்த உபசரிப்புகளை ஏற்றார்.

மானக்கஞ்சாறரின் மகள் அந்த முனிவர் வேடத்தில் வந்த ஈசனை வணங்கியபோது ஈசன் அவளின் கூந்தலை பஞ்சவடி என்ற தன் பூணுலாக பயன்படுத்த கேட்டார். உடனே மானக்கஞ்சாறரும் மகளின் அனுமதியோடு அந்த கூந்தலை வெட்டி எடுத்து ஈசன் உருவில் வந்த முனிவரிடம் தர ஈசன் அவ்விருவரையும் ஆட்கொண்டார்.

9. சாக்கிய நாயனார்

சாக்கிய நாயனார் என்ற சமணத்துறவிக்கு ஈசனிடம் அபரிதமான பக்தி ஏற்பட்டது. தன் தோற்றம் சமணத் துறவியைப் போலிருந்தாலும் மனதளவில் சிவபக்தனாகவே வாழ்ந்து வந்தார். தாம் கொண்டிருந்த சமணத் துறவி கோலத்திற்கேற்றவாறே வீதியில் உள்ள கற்களை எடுத்து வெளியிடத்தில் காணப்பட்ட சிவலிங்கத் திருமேனியின் மீது பூக்களாக பாவித்து எறிவார். ஈசனும் எறியப்பட்டது கல்லாக இருந்தாலும் எறிந்தவரின் எண்ணத்தில் பூத்திருந்த மலரை ஏற்று அவரை ஆட்கொண்டார்.

 9a. மூர்க்கனார்

ஒரு சிவபக்தர் சூதாட்டம் போன்ற தீய வழி களில் ஈடுபட்டு பணம் சேர்த்து வந்தார். அதோடு மட்டுமல்லாது தன்னிடம் சூதில் தோற்றவர்களைக் கொன்று அவரது உடைமைகளை எல்லாம் பறித்தும் வந்தார். இப்படி தீய வழிகளில் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களை உபசரித்தும் அவர்களுக்கு உணவிட்டும் செலவு செய்து வாழ்ந்து வந்தார். அதனால் அவர் மூர்க்க நாயனார் என அழைக்கப்பட்டார்.

10. சிறப்புலியார்

சிறப்புலி நாயனார் சிறந்த சிவபக்தராய்த் திகழ்ந்தவர். வேத சாஸ்திர விற்பன்னராக இருந்தார். தினம் தோறும் ஈசனின் நினைவோடு வேத பாராயணம் செய்வார். சைவநெறி தவறாது வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்கு உணவிடுவதை தலையாய கடமையாகக் கொண்டிருந்தார். ஒரு முறை அவர் ஆயிரம் சிவனடியார்களுக்கு உணவிடும் போது ஈசனே ஆயிரமாவது அடியாராக வந்து உணவருந்தி சிறப்புலியாரை ஆட்கொண்டார்.

11. மெய்ப்பொருள் நாயனார்

சிவபக்தி நிரம்பிய மன்னன் ஒருவன் தன் பகைவர்களை வென்று திறமையாக அரசாட்சி புரிந்து வந்தான். முத்தநாதன் எனும் மன்னனின் எதிரி மன்னனை வெல்லமுடியாததால் நயவஞ்சகமாக சிவனடியார் வேடம் பூண்டு சைவ சித்தாந்த நூல் ஒன்றை மன்னருக்கு மட்டும் தனியாக உபதேசம் செய்ய வேண்டும் எனக் கூறினான்.

மன்னர் தனியாக இருந்த சமயம் மன்னனை குறுவாளால் குத்தி விட்டான். சத்தம் கேட்டு ஓடி வந்த தளபதி மற்றும் போர் வீரர்களைத் தடுத்து தத்தா நமர் என ஆணையிட்டு தடுத்து விடுகிறார் மன்னர். போலி சிவனடியாரை பாதுகாப்போடு வெளியேற்ற ஆணையிட்டு மடிகிறான். அதனால் அம்மன்னன் மெய்ப்பொருள் நாயனார் என்று போற்றப்பட்டார்.

12. ஆனாயர் 

மாடு மேய்க்கும் குலத்தைச் சார்ந்த ஆனாயர் ஈசனிடம் மாறா பக்தி கொண்டிருந்தார். ஒரு நாள் பசுக்களை காட்டிற்குள் மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றார். அங்கு ஒரு கொன்றை மரம் அழகாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அந்த மரத்தின் அழகிய தோற்றம் ஆனாயருக்கு ஈசனாகவே காட்சியளிக்க தன்னை மறந்த நிலையில் அந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டார் ஆனாயர்.

சிவ பஞ்சாட்சர மந்திரத்தை தன் புல்லாங்குழலில் இசைக்கலானார். அந்த இடமே சிவசாந்தித்தியத்தால் நிறைந்தது. பசுக்களும், காட்டு விலங்குகளும், பறவைகளும் தங்கள் பகைமைகளை மறந்து ஒன்றாகக் கூடி ஆனாயரின் காலடியில் கிடந்து இசை இன்பத்தைப் பருகின. ஆனாயரின் பக்தியை மெச்சி ஈசன் அவரை ஆட்கொண்டார்.

13. பூசலார் நாயனார்

பூசலார் எனும் சிவனடியார் திருநின்றவூரில் வாழ்ந்து வந்தார். பொருள் வசதி இல்லாததால் அவர் ஈசனுக்கு தன் மனதிலேயே ஓர் ஆலயம் எழுப்பி வந்தார். மானசீகமாக மனதிலேயே ஆலயம் எழுப்பி எல்லா திருப்பணிகளும் முடித்தார். மனதில் எழுப்பிய ஈசன் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்ய நாளும் குறித்தார். அதே சமயம் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னனும் தான் உண்மையிலேயே கட்டியிருந்த கோயிலுக்கான கும்பாபிஷேகத்தை பூசலார் குறித்திருந்த முகூர்த்தத்திலேயே செய்ய தீர்மானித்திருந்தான்.

மன்னனின் கனவில் தோன்றிய ஈசன் அந்த குறிப்பிட்ட முகூர்த்தத்தில் தான் திருநின்றவூர் பூசலார் ஆலய கும்பாபிஷேகத்திற்கு செல்வதால் வேறொரு முகூர்த்தத்தில் அவர் ஆலய கும்பாபிஷேகம் செய்ய ஆணையிட்டார். இதனால் திருநின்றவூர் வந்த மன்னன் அங்கே எந்த ஸ்தூல வடிவ கோயிலையும் காணாது பூசலார் தன் மனதில் கோயில் கட்டி வந்த மாண்பினை அறிந்து கர்வம் அடங்கி அவரைப் பணிந்தான். பின் இருதயாலீஸ்வரர் திருக்கோயிலை மன்னனே அங்கு கட்டித் தந்தான்.

14. திருமூலர்

மூலன் என்ற இடையன் பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்தான். ஒரு நாள் பசுக்களை மேய்த்துக் கொண்டு காட்டிற்குள் சென்ற மூலன் இறந்து விடுகிறான். அவன் மீது பற்று வைத்த பசுக்கள் அவனது உடலைச் சுற்றி நின்று கொண்டு கண்ணீர் சிந்தின. அக்காட்சியைக் கண்ட சித்தர் ஒருவர் யோகசக்தியால் தன் உடலை ஓரிடத்தில் வைத்துத் தன்னுடைய ஆன்மாவை மூலனின் உடலினுள் செலுத்தி மூலனை உயிர்ப்பித்து எழச் செய்தார். உயிர் பெற்றெழுந்த மூலனைக் கண்ட பசுக்கள் ஆனந்தம் அடைந்தன. அந்த சித்தர் மூலன் உடலிலேயே வாழ்ந்திருந்து 3000 பாடல்களைக் கொண்ட திருமந்திரம் என்ற சைவ சித்தாந்த நூலினை வருடத்திற்கு ஒரு பாட்டாக இயற்றி அருளினார்.

15. சத்தி நாயனார்

சத்தி எனும் மன்னன் வரிஞ்சை என்ற சிறிய பகுதியை ஆட்சி செய்து வந்தார். அவர் ஈசனிடம் இணையில்லாத அன்பு கொண்டு விளங்கினார். ஈசனை இகழ்வோரின் நாக்கினை இழுத்து வெட்டி எறிந்து விடுவார். இதை ஒரு சிவத்தொண்டாகவே செய்து வந்தார். அவர் இவ்வாறு செய்ததால் ஈசனை இகழ்ந்தவர்கள் மீண்டும் அவ்வாறு இகழாமல் இருந்ததோடு மற்றவர்களும் ஈசனை இகழும் எண்ணத்தையே வரவிடாமல் செய்தது. அவர் சத்தி நாயனார் என அழைக்கப்பட்டார்.

16. மூர்த்தியார்

மூர்த்தி எனும் சிவனடியார் சிவாலயங்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் கைங்கரியத்தை செய்துவந்தார். அவன் வாழ்ந்து கொண்டிருந்த நாட்டின் மன்னன் வேறுமதத்தைத் தழுவினான். அதனால் சிவாலயங்களுக்கு வழங்கப்பட்ட சந்தனக்கட்டை மானியத்தை நிறுத்தினான். வேறு பக்தர்களும் ஆலயங்களுக்கு சந்தனக்கட்டை வழங்கக்கூடாது என உத்தரவிட்டான்.

சிவபூஜைக்கு சந்தனக்கட்டை கிடைக்காத துயரத்தோடு மூர்த்தி நாயனார் தன் கைகளையே சந்தனக்கட்டையாக பாவித்து சந்தனக்கல்லில் இழைத்து ரத்தம் வடிய கை எலும்புகள் தெரிய சேவை செய்தார். அந்நிலையில் அந்த நாட்டு மன்னன் இறக்க பட்டத்து யானை மூர்த்தி நாயரை மன்னராக தேர்வுசெய்ய விபூதி, ருத்ராட்சம், சடைமுடி போன்ற மூன்றையும் தன் அரசு சின்னமாக ஏற்றுக் கொண்டு அரசாண்டு இறுதியில் ஈசனின் கழலை அடைந்தார்.

17. புகழ்ச்சோழர்

புகழ்ச்சோழர் எனும் மன்னன் கருவூரை ஆண்டு வந்தான். அவன் மிகச்சிறந்த சிவபக்தனாகத் திகழ்ந்தான். ஒரு முறை அவன் எதிரிகளோடு போர் புரிந்தான். அதில் வெற்றி வாகையும் சூடினான். அப்போரில் இறந்த வீரர்களின் வெட்டுண்ட தலையை அவன் முன் குவித்தனர் போர்வீரர்கள்.

அவற்றுள் ஒன்று ஜடைமுடியுடனும் சிவசின்னங் களுடனும் இருக்க அந்த தலையை தங்கத் தட்டில் வைத்து தீ மூட்டி அதை மூன்று முறை வலம் வந்து சிவனடியாரைக் கொன்ற பாவம் தீர மனதாற ஈசனிடம் மன்னிப்பு கேட்டு அத்தீயில் விழுந்து இறவாப்புகழ் பெற்றார் புகழ்ச்சோழர்.

18. கூற்றுவனார்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள களந்தை எனும் ஊரை கூற்றுவன் எனும் குறுநிலமன்னன் ஆண்டு வந்தான். அவன் போர் புரிவதில் திறமை பெற்றவன். சோழ நாட்டின் பல்வேறு ஊர்களை ஆண்ட சிற்றரசர்கள் மீது படையெடுத்து அவர்களை வென்று தன் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டேயிருந்தான்.

அவன் சிவபக்தனாக இருக்கவே தில்லைவாழ் அந்தணம் மூவாயிரம் பேர்களையும் தன் இருப்பிடம் வந்து தன்னை சோழமன்னனாக முடிசூட்டும்படி வேண்டினான். அவர்கள் மறுக்கவே நடராஜப்பெருமானிடம் மனமுருகி வேண்டினான். அதனால் மனமகிழ்ந்த நடராஜப்பெருமான் தன் திருவடிகளையே அவன் தலையில் மணிமுடியாக வைத்து அருளினார்.

19. குலச்சிறையார்

கூன் பாண்டியன் எனும் மன்னன் ஆட்சி செய்தபோது குலச்சிறையார் எனும் சிவனடியார் அவரது அவையில் முதலமைச்சராய் பதவி வகித்தார். மன்னர் சமண மதத்தைச் சார்ந்தவர் எனினும் அரசி மங்கையர்க்கரசியின் அனுமதியுடன் திருஞானசம்பந்தப் பெருமானை பாண்டிய நாட்டுக்கு அழைத்து வந்தார்.

சம்பந்தரை சமண மதத்தாருடன் அனல் வாதம், புனல்வாதம் போன்றவற்றில் ஈடுபடச் செய்து அதில் வெற்றி பெறவும் செய்தார். பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க காரணமாக இருந்த சிவனடியார்களில் முக்கியமானவர் குலச்சிறையார்.

20. குங்கிலியக் கலயனார்

கடவூர் எனும் ஊரில் வாழ்ந்த கலயன் எனும் சிவனடியார் சிவாலயங்களுக்கு குங்குலிய தூபம் இடுகின்ற திருத்தொண்டினைச் செய்து வந்தார். நாளடைவில் அவர் செல்வம் எல்லாம் கரைந்தது. வறுமையில் வாடிய நிலையிலும் தன் திருத்தொண்டை அவர் தொடர்ந்தார். தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று நெல் வாங்கி வர சென்ற அவர் வழியில் குங்கிலிய வியாபாரியை சந்திக்கவே அந்த தாலியை அவரிடம் தந்து அதற்கு ஈடான குங்கிலியத்தை வாங்கி ஆலய திருப்பணிக்கு உபயோகித்தார்.

அதனால் அவர் குங்குலிய நாயனார் என அழைக்கப்பட்டார். அவர் பக்தியை உலகிற்கு உணர்த்த நினைத்த ஈசன் அவ்வூர் சிவாலய லிங்கத்தை சற்றே வளைத்தார். மன்னர்களும் போர்வீரர்களும் எவ்வளவோ முயற்சித்தும் அந்த லிங்கத்தை நிமிர்த்த முடியவில்லை. குங்கிலியக்கலய நாயனார் கயிற்றை தன் கழுத்தில் கட்டிக் கொண்டு இழுக்க லிங்கம் நேரே நிமிர்ந்தது.

21. சண்டேசர் 

சோழவளநாட்டில் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் என்ற ஊர் ஒன்று உள்ளது. இது முருகன் வழிபட்டதலமாகும். இவ்வூரில் அந்தணர் மரபில்எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமர் என்று நாமகரணமிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளில் வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.

ஒருநாள் மறை ஓதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்  கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப்புடைத்தான். பசுவை அடிப்பதைக் கண்டு பதைபதைத்த விசாரசருமர் இடையனைத்தடுத்து ஐயா! பசுக்கள் தம்முடலுறுப்புகளில் தேவர்களையும், முனிவர்களையும் புண்ணிய தீர்த்தங்களையும் கொண்டுள்ளன.

பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழி படும்நெறி என்று இடையனிற்கு எடுத்துத்துரைத்து அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார். நாள்தோறும் பசுக்களை ஓட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர்நிலைகளுக்கு ஓட்டிச் சென்று நீரளிப்பார். பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது என சிந்தித்தார்.

சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார். மணியாற்றின் கரையில் ஒரு மணல் திட்டில் அத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் திருமஞ்சனம் செய்தார், ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.

இது தவறானது என்று ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் என கலகம் செய்தான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.

மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மலர்களை கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்து வைத்துக் கொண்டு சிவபூஜையைத் தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.

சற்றுத் தூரத்தில் ஒரு மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.

இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவாபாராதமாகையால் அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் ஒரு மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களை துணிந்தார். எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார். விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசருமர் அவரைத் தொழுது, பின் வீழ்ந்து வணங்கினார்.

சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து “நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்” என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார். சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார்.

“தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்றுரிமையாக்கி “சண்டீசன்” என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் “சண்டேஸ்வர நாயனார்” ஆனார். சண்டீச பதவியும் பெற்றார். எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கபட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலோகம் சென்றார்.

தொகுப்பு: ந.பரணிகுமார்
படங்கள்:கலைச்செம்மல் கோ.திருஞானம்