ஈசனருள் தேடும் மனம், இடும் - பையை நாடுமோ?



குறளின் குரல்

காலங்காலமாகப் புழங்கும் அதே திருக்குறள் நூல்தான். ஆனால், அதில் உள்ள சில குறள்கள் காலத்திற்குக் காலம் நெகிழ்ந்து கொடுத்து எத்தனை எத்தனை அர்த்தங்களைத் தருகின்றன! தங்கச் சுரங்கத்தில் தோண்டத் தோண்டத் தங்கம் வந்து கொண்டே இருப்பது மாதிரி, வள்ளுவமும் ஆராய ஆராய எத்தனை எத்தனையோ தங்கம் தங்கமான கருத்துகளைத் தந்துகொண்டே இருக்கிறது.



பரிமேலழகர் தொடங்கி, டாக்டர் மு. வரதராசனார்வரை எத்தனையோ அறிஞர்கள் திருக்குறளுக்கு உரை கண்டார்கள். ஆனால், இதுவரை இவர்கள் யாரும் சொல்லாத புதிய பொருள்களை இன்று சில அறிஞர்கள் காண்கின்றனர். அந்த அறிஞர்களின் புத்திக்கூர்மை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அதைவிட வியப்பு என்னவென்றால், அத்தகைய ஆய்வுக்கெல்லாம் இடம்கொடுக்கும் வகையில் அமைந்து இன்றுவரை புத்தம் புதிதாய்க் காட்சிதரும் நமது திருக்குறளின் அரிய சொல்லாழமும், அளவற்ற பொருளாழமும்தான்! திருக்குறளுக்கு அனைவரும் ஏற்கும் வகையில் புதுப்பொருள் காணும் அறிஞர்களில் இன்று பெரிதும் குறிப்பிடத்தக்க ஒருவர் பாரதி இலக்கியச் செல்வர் திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி அவர்கள். அவர் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறளுக்குக் காணும் பொருள் முற்றிலும் வித்தியாசமானது.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல!’

- என்பது குறள். இதில் உள்ள இடும்பை என்ற சொல்லுக்குத் துன்பம் என்றே இதுவரை பொருள் கண்டிருக்கிறார்கள். `விருப்பு வெறுப்பற்ற இறைவன் பாதங்களைச் சரணடைந்தால் எப்போதும் நமக்குத் துன்பமில்லை’ என்பதே இதுவரை சொல்லப்பட்ட பொருள். ஆனால், இடும்பை என்பதைப் பிரித்து இருவேறு சொற்களாக்கிப் பொருள் காண்கிறார் புலவர் இரா. இராமமூர்த்தி. `இடும் - பை’ எனப் பிரிக்கும்போது அது கருப்பையைக் குறித்ததாகிறது. மீண்டும் மீண்டும் கருப்பையில் ஜனித்து எண்ணற்ற துயரங்களைப் பலப்பல பிறவிகளில் அனுபவிக்கிறதே ஜீவன், இதற்கு ஒரு முடிவே கிடையாதா?

முடிவுண்டு. இறைவன் தாளை இறுகப்பற்றிக்கொண்டால் இந்தப் பிறவிப் பிணியிலிருந்து முழுமையாக விடுபடலாம். சம்சார சாகரத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கலாம். இந்தப் பிறவியில் இறைவனைச் சரணடைந்து வாழ்வதால் என்ன கிட்டும் என்பதை இக்குறளுக்கு முந்தைய குறளில் சொல்கிறார் வள்ளுவர்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.’



இப்பிறவியில் இறைவனைச் சரணடைந்து வாழ்ந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம். இது விஞ்ஞான பூர்வமாகவும் உண்மைதான். இறைவனிடம் நாம் நம்மைப் பற்றிய பொறுப்பை முழுமையாக ஒப்படைத்துவிட்டு வாழும்போது மனத்தில் நிம்மதி தோன்றும். எனவே கவலை ஒழியும். ரத்த அழுத்தம் சமனப்படும். ஆரோக்கியம் மேலோங்கும். அப்போது ஆயுள் நீடிப்பது இயல்புதானே?

கவலைப்படுபவர் எல்லாம் நாத்திகரே!’ என இதையே அழகாகச் சொன்னார் மகாத்மா காந்தி. கடவுளை முற்றிலும் நம்பி நம்மை ஒப்படைத்தால் கடவுள் எப்படியும் நம்மைக் காப்பாற்றுவார் என்ற திடசித்தம் தோன்றும். அப்போது கவலையே வராது; வரக்கூடாது. வள்ளுவருக்கும் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் இருந்த அத்தகைய பக்தி நமக்கு இருக்கிறதா? இருந்தால் அடுத்த பிறவியில் நமக்கு `இடும் - பை’ கிடையாது.

ஏனென்றால் நமக்குப் பிறவியே இனிக் கிடையாது. இறைவன் சரணங்களை இறுகப் பற்றிக் கொண்டால்தான் இந்த நிலை தோன்றும். இறைவன் அடியைச் சேர்ந்தவர்களே பிறவி என்கிற பெரிய கடலைக் கடப்பார்கள் என்பதை இன்னொரு குறளிலும் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்!’

- என்கிறது கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் கடைசிக் குறள். இறைபக்தியின் இறுதி இலக்கு என்பது பிறப்பற்ற நிலைதானே? எனவேதான் அதிகாரத்தின் இறுதிக் குறளில் இந்தக் கருத்தை மீண்டும் வள்ளுவர் சொன்னார் போலும். பிறவிகள்தான் எத்தனை வகை! மனிதப் பிறவி மட்டும் தானா, இன்னும் எத்தனையோ ஆயிரங்கோடிப் பிறவிகள் உண்டே? ஒரு காலில் வாழும் தாவரங்கள்! இருகாலில் வாழும் பறவைகள்! நான்கு கால்களில் வாழும் விலங்கினங்கள்! காலே இல்லாமல் வாழும் கடலுயிர்கள்! மாணிக்கவாசகர் தாம் எப்படியெல்லாம் பிறந்து பிறந்து இளைத்திருக்கக் கூடும் என்பதைப் பட்டியலிடுகிறார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் மிருகமாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அரசர் ஆகி முனிவராய்த் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எலலாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்...’

- என மாணிக்கவாசகர் அடுக்கும்போது கல்லையும் கூடப் பிறப்பில் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்கிறார். ஸ்ரீஅரவிந்த அன்னை நாற்காலி, கோப்புகள், புத்தகங்கள், துணிமணிகள் முதலிய அனைத்திற்கும் உயிர் உண்டு என்கிறாரே! இப்படி எதுவாகவும் பிறவாது இறைவனுடன் கலந்திருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

பிறப்பற்ற நிலையை அடைய வேண்டுமானால், நன்மை, தீமை ஆகிய இரு விஷயங்களிலிருந்தும் விடுபட வேண்டும். சுத்தானந்த பாரதியின் `தூக்கிய திருவடி துணையென நம்பினேன் துய்ய நடராஜனே! ஆக்கி அழித்துலகை நீக்கி மறைத்தருளி ஐந்தொழில் புரியும் அம்பலவாணனே!’ என்ற கீர்த்தனையில் `எத்தனை பிறவி எடுத்தெடுத்து இளைத்தேன், இருவினைப் பயன்களை எய்தி எய்தி களைத்தேன்.’ என்கிற வரி வருகிறது.
 
நன்மை, தீமை ஆகிய இரு வினைகளாலும் பிறப்பு மீண்டும் மீண்டும் உருவாகிறது. நன்மையின் நல்ல பலன்களை அனுபவிக்க நற்பிறப்பு அமைகிறது. தீமையின் மோசமான பலன்களை அனுபவிக்க புல்லாய்ப் புழுவாய்ப் பலவிதங்களில் பிறந்து உழல வேண்டியிருக்கிறது. இதையே வள்ளுவரும்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு’

- என்கிறார். இறைவனை உண்மையாக உணர்ந்தவர்க்கு நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் சேரா. இரண்டு வினைகளையும் துறக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் `சும்மாயிரு சொல்லற’ என்றார் தாயுமானவர். சும்மாயிருப்பதென்றால் செயலோய்ந்து இருப்பது மாத்திரமல்ல; மனத்தில் நினைவற்று இருக்க வேண்டும். பெரும் பயிற்சி தேவை இதற்கு.

`எண்ணங்களை வெளியிலிருந்து வருவதாக பாவித்து ஓர் எண்ணம் உன் மனத்தில் நுழையும் போதே வலுவான உன் மனக்கரத்தால் அதைப் பிடித்து வெளியே போடு!’ என ஸ்ரீஅரவிந்தரின் தொடக்க கால குருவான லேலே, அரவிந்தருக்கு உபதேசித்தார். ஸ்ரீரமணர் எண்ணமற்ற, நிர்ச்சலன நிலையில் வாழும் பேராற்றல் பெற்றிருந்தார்.

காரைக்கால் அம்மையாருக்கு இனி ஒரு பிறவி அமைந்து அதில் தனக்கு இடும்- பை’ நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அளவுகடந்த அக்கறை. அவர் இப்பிறவியிலேயே சதையைத் துறந்து எலும்போடு மட்டும் நடமாடிய பெருமைக்குரியவர். அவர் தம் வாழ்வின் இறுதிப் பகுதியில், இவ்வுலகில் மீண்டும் பிறவாமையை வரமாக வேண்டுகிறார். அத்தகைய மனப்பக்குவம் வருவதற்கான பல சந்தர்ப்பங்கள் அவர் வாழ்வின் முற்பகுதியில் வருகின்றன.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் மங்கையர்க்கரசியார், இசைஞானியார், காரைக்கால் அம்மையார் ஆகிய மூவர் மட்டுமே பெண்கள். காரைக்கால் அம்மையார் அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் போன்ற நூல்களால் தமிழின் பக்தி இலக்கியத்தை வளப்படுத்திய பெருமைக்குரியவர்.

புனிதவதி என்பது காரைக்கால் அம்மையாருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர். சிவபக்தியில் தோய்ந்து வாழும் புனிதவதி, பரமதத்தனை மணக்கிறார். அவன் மதிய வேளையில் பணியாள் மூலம் கொடுத்தனுப்பிய இரு மாங் கனிகளை வீட்டில் வாங்கி வைக்கிறார். அமுது தயாரிக்கும் முன் ஒரு சிவனடியார் வர, அவருக்கு எதை இடுவது என யோசித்து ஒரு மாங்கனியை பக்தியுடன் அவனது திருவோட்டில் இடுகிறார். அவர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் செல்கிறார்.

பின்னர் தன் கடையில் பணி முடித்து உணவுண்ண இல்லத்திற்கு வருகிறான் பரமதத்தன். ஒரு மாங்கனியைக் கணவருக்குப் பரிமாறுகிறார் புனிதவதி. மேலும் ஒரு மாங்கனி அனுப்பினேனே, அதையும் கொண்டுவா என்கிறான் அவன். என்ன செய்வாள் புனிதவதி? சிவனே என்றிராமல் சிவனை பக்தியுடன் வேண்டுகிறாள் அந்த பக்தை. உள்ளம் உருக வேண்டிய பின்னும் அருளாவிட்டால் பிறகு கடவுள் எதற்கு? இறையருளால் கையில் தோன்றுகிறது ஒரு கனி.

அதன் வரலாறு அறியாமல் அதை உண்ட கணவன் அதிசயிக்கிறான். அத்தகைய சுவையுள்ள மாங்கனியை அவன் தன் வாழ்நாளில் உண்டதே இல்லை! இது ஏது என வினவ சிவனருள் தந்த கனி என உண்மையைச் சொல்கிறாள் புனிதவதி. அப்படியானால் இன்னொன்று கொண்டுவா என்கிறான் கணவன். இன்னொன்றையும் சிவன் அருள, அதையும் கணவனுக்குப் படைக்கிறாள் புனிதவதி.

கணவன் கையில் அது வந்ததும் அவன் கண்முன்னே அது சடாரெனக் காற்றில் மறைகிறது! திகைத்த கணவன் இவள் சாதாரணப் பெண்ணல்ல என அறிந்துகொள்கிறான். அவளிடம் ஏதொன்றும் சொல்லாமல் அவளை விட்டுப் பிரிகிறான். இன்னொரு பெண்ணை மணந்து தனக்கு அந்தப் பெண்ணால் பிறந்த மகளுக்குப் புனிதவதியின் பெயரைச் சூட்டுகிறான்.

சில ஆண்டுகள் கழித்து விவரமறிந்து உறவினர்கள் புனிதவதியைக் கணவனிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.  ஆனால், கணவனோ தனது புதிய குடும்பத்தோடு அவள் காலில் விழுந்து பணிகிறான்! உறவுக் கூட்டம் திகைக்கிறது. புனிதவதி கணவனின் மனநிலை கண்டு, தனக்கு இனி அழகெல்லாம் எதற்கு எனச் சிந்திக்கிறாள். சதைப்பற்றுள்ள மாங்கனியை இறைவனிடம் பெற்ற அவள், தன் உடலின் சதைமேல் உள்ள பற்றை முற்றாக விடுகிறாள்.

சிவனிடம், உடலில் சதையே இல்லாத எலும்புரு வேண்டிப் பெறுகிறாள். அவளைக் காரைக்கால் அம்மையே எனப் போற்றித் துதித்து அச்சத்தோடு விலகுகின்றனர் உற்றாரும் ஊராரும். காரைக்கால் அம்மையார் கயிலையங்கிரி நோக்கி நடக்கிறார். இமயம் சிவன் உறையும் இடமல்லவா, அதை எவ்விதம் காலால் மிதிப்பது என இமயத்தில் தலையாலேயே நடந்து செல்கிறார். எலும்புருவோடு தலைகீழாய் நடந்துவரும் இவர் யார் என வியப்போடு கேட்கிறாள் பார்வதிதேவி. `என் அன்னை இவர்’ எனச் சொல்லி மகிழ்கிறான் பரமசிவன்.

`தந்தை-தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்தத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா?’ என்று தம் கீர்த்தனையின் பல்லவியில் பக்தி மேலிட்டு நெகிழ்ச்சியுடன் கேட்டார் கவிஞர் பொன்னையா பிள்ளை. இப்போது தன்னைப் பெற்ற தாய் இல்லாவிட்டாலும், ஒரு தாயைத் தனக்காகப் பெற்றுவிட்டான் பரமன்!

தாயுமிலி, தந்தையிலி, தான்தனியன் ஆன சிவன், காரைக்கால் அம்மையாரை அம்மையே என அழைத்து என்ன வரம் வேண்டும் என உள்ளன்போடு வினவுகிறான். காரைக்கால் அம்மையார் ஆழ்மனத்தில் இனியொரு பிறவி வேண்டாம், இனி இடும் - பை வேண்டாம் என்ற சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மை பரமனிடம் வேண்டுகிறார்:

இறவாத அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்
உன்னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்
மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழ்இருக்க
என்றார்’

 - என்கிறது சேக்கிழார் எழுதிய பெரியபுராணம். பிறவாமையே மனிதப் பிறவிகளின் இலக்கு. இடும் - பை இனி நமக்கு இல்லாதிருக்க வேண்டும் என்பதே நம் ஆன்மிகத்தின் குறிக்கோள். இந்தக் குறிக்கோளுக்கு மிகப் பழங்காலத்திலேயே தம் குறளால் வித்திட்டிருக்கிறார் வள்ளுவர் என்பதே நம் தமிழின் பெருமை.

(குறள்  உரைக்கும்)