பக்தி துணுக்குகள்



கிருஷ்ணர்கள் ஐவர்!

தஞ்சையில் கிருஷ்ணர் பஞ்ச கிருஷ்ணராக அருள்பாலிக்கிறார். மகர நோன்புச் சாவடி ஸ்ரீகிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஸ்ரீஜனார்த்தனன், சகா நாயக்கன் தெரு, ஸ்ரீபூேலாக கிருஷ்ணன், மேலவீதி ஸ்ரீகிருஷ்ணன், கரந்தை யாதவக் கண்ணன் ஆகியோரே அந்த பஞ்சகிருஷ்ணர்கள்.



தனிச் சிறப்பு

திருவரங்கத்தில் பங்குனி உற்சவத்தில் ஒன்பதாம் நாள் சுவாமி ஸ்ரீரங்க நாச்சியாருடன் ஒரே சிம்மாசனத்தில் திருமஞ்சன உற்சவம் கண்டருள்வது தனிச்சிறப்பாகும்.   

நாயன்மார் அருகே நளன்

திருநள்ளாறில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சந்நதியில் கடைசியில் தனித்த மண்டபத்தில் கலி நீங்கிய நளன் உள்ளார். இவர் இத்தலத்திற்கு சிறப்புடையவர் ஆதலால் அறுபத்து மூவர் வரிசையில் இடம் பெற்றுள்ளார். 

அது என்ன கரக்கோயில்?

திருக்கடம்பூர் சிவாலய விமானமும், கருவறையும் ரதம், சக்கரம், குதிரை ஆகியவற்றுடன் திகழ்கின்றன. இக்கோயிலை இந்திரன் தன் கரத்தால் அகழ்ந்து கொண்டு போக எத்தனித்ததால் இது கரக்கோயில் என அழைக்கப்படலாயிற்று.

ராவணனின் ஆத்மலிங்கம்

கர்நாடக மாநிலம் கோகர்ணம் என்ற இடத்தில் ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கம் அமைந்துள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த லிங்கம் வெளியே எடுக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

ஒரு கருவறை இரண்டு முருகன்கள்

திருப்போரூர் கருவறையில் பனைமரத்தடியில் புற்றிடம் கொண்ட சுயம்பு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு சட்டம் சாத்தி கவசம் அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். அபிஷேகத்திற்கு என்று தனியே முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

மரத்தடியில் மகாதேவன்

காஞ்சிபுரத்தில் மாமரத்தினடியில் இறைவன் ஏகம்பரநாதனாகவும், திருப்பாசூர் மூங்கிலடியில் பாசூர் நாதனாகவும் காட்சி கொடுத்தருளினார்.

நரமுக விநாயகர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள ஜில்லாபுரி அம்மன் ஆலயத்தில் மனிதத் தலை கொண்ட ஆதி விநாயகர் அருள்பாலிக்கிறார். இவரை நரமுக விநாயகர் என்று அழைத்துக் கொண்டாடுகிறார்கள்.

சாந்தநாயகிக்கு மாங்கல்யம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது புனுகீஸ்வரர் ஆலயம். கன்னிப் பெண்கள் இவ்வாலய இறைவியான சாந்தநாயகிக்கு மாங்கல்யம் செய்து அணிவித்து பிரார்த்தனை செய்தால் அவர்கள் மனம்போல் திருமணம் நடைபெறுவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

- ஆர்.கே.லிங்கேசன்