ஆயிரத்தில் ஒருவர்



ஆக்கூர்

சிறப்புலியார், ஒரு சீரிய சிவத் தொண்டர். ஆக்கூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த அவர், அங்கே கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரரை தினமும் தரிசனம் செய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். அதைவிட தினமும் சிவனடியார்களுக்கு அமுது அளிப்பதைத் தன்னுடைய லட்சியமாகவும் கொண்டவர். லட்சியம் ஓரளவு நிறைவேறினால் அடுத்து, பெரிய அளவில் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவலும் பெருகுமல்லவா? சிறப்புலியாருக்கும் அப்படியே பெருகியது.



அதை ஒருவகையில் பேராசை என்றும் சொல்லலாம். ஆமாம், ஒரே நாளில் ஆயிரம் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கவேண்டும் என்று தீரா வேட்கை கொண்டார் அவர். இறைவன் அருளால் அது நிறைவேறும் என்றும் நம்பினார். வெகுநாள் யோசனை, திட்டங்களுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் அதற்கான நாளையும் நிச்சயித்து விட்டார். அந்த மாதத்தில், பூராட நட்சத்திரத்தன்று ஆயிரம் பேருக்கு அமுது படைப்பது என்று மன உறுதி கொண்டு, அருகி லுள்ள ஊர்களுக்கெல்லாம் தகவல் சொல்லியனுப்பினார். தான் சந்திப்பவர் களிடம், தெரிந்தவர்களையெல்லாம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவாழை இலைகளை சேகரித்தார். அறுசுவை விருந்துக்கான காய்கனி வகைகள், நல்ல அரிசி மற்றும் தானியங்கள் அத்தனையும் சேகரித்து தன் நோக்கம் நிறைவேற்றப்பட தயாராகி விட்டார். அந்த நாளும் வந்தது. ஆக்கூர் தலம் முழுதும் வண்ண அலங்காரங்கள். எங்கெங்கு நோக்கினாலும் அங்கெல்லாம் சிவனடியார்கள் நிறைந்திருந்தார்கள். ‘ஓம் நமசிவாய’ மந்திர ஒலி விண்ணையும் நிறைத்தது.

மிகப்பெரிய மைதானத்தில் பந்தலிட்டு, தரையில் விரிப்பு விரித்து, ஆயிரம் வாழை இலைகள் போடப்பட்டதில் தரையே பசுமைப் பொலிவுபெற்றது. காய்கறிகள், சாதம் எல்லாம் பரிமாறப்பட்டன. யாருக்கும் எந்த சுவைக்குறைவோ, உணவு பற்றாக்குறையோ ஏற்பட்டுவிடாதபடி கவனித்துக் கொண்டார். ஒரே ஒரு கவலைதான் - ஆயிரம் சிவனடியார்கள் வரவேண்டுமே! ஒருவர்கூடக் குறையக் கூடாதே!



உணவுச் சாலை வாசலிலேயே காத்தி ருந்தார் சிறப்புலி நாயனார். ஒவ்வொரு சிவனடியாரையும் வரவேற்கும் பண்பு ஒரு காரணம், எண்ணிக்கை கணக்கு வைத்துக்கொள்வது இன்னொரு காரணம். சிவனடியார்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக
எண்ணிக்கை பல நூறுகளைக் கடந்தது. ஐநூறு, ஆறு நூறு, ஏழு நூறு... நிச்சயமாக  ஆயிரத்தைக் கண்டுவிடலாம்! சந்தோஷத்தில் திளைத்தார் சிறப்புலியார். இன்னும் இருநூறு பேர் தான் பாக்கி... எண்ணூறு, தொள்ளாயிரம்... இன்னும் நூறே பேர்தான் வேண்டும்... எப்படியும் ஆயிரம் பேர் வந்துவிடுவார்கள்.

தன்னுடைய இந்த சாதனையில் சற்றே இறுமாப்பு கொண்டாரோ? தான் செய்வதும், அடியார்கள் வருகையும் தான்தோன்றீசனின் அருள்தான் என்பதை சற்றே மறந்துவிட்டாரோ? அப்படித்தான் இருக்கும். இன்னும் வரவேண்டியவர்கள் நான்கு, மூன்று, இரண்டு என்றாகி, இன்னும் ஒரே ஒருவர்தான் வர வேண் டும் என்று குறை படுகிறதே...காணோம். அந்த ஆயிரமாவது அடியாரைக் காணோம். கண்ணுக் கெட்டிய தூரம் வரை பார்த்தாகிவிட்டது. காணவே காணோம்... அடடா, இத்தனை முயற்சித்தும் பலன் முழுமையடையவில்லையே! ‘முயற்சியா? யாருடைய முயற்சி? நீ செய்யும் முயற்சிகளுக்கெல்லாம் நீயேதான் காரணமா?’ மனசின் மூலைக்குள் உறுத்தலாக ஒரு கேள்வி.

அடியார்கள் உணவருந்த ஆரம்பித்துவிட்டார்கள். உண்டு முடித்து, ஒவ்வொருவராக எழுந்து வெளியேறினார்கள். வாசலிலேயே நின்றிருந்த சிறப்புலியார், திரும்பிச் செல்பவர்களை ஏக்கத்துடன் பார்த்தார். ஒருவர், ஒரே ஒருவர் இல்லாமல் போய் விட்டாரே! எல்லோரும் வெளியேறிய பிறகு கனத்த இதயத்துடன், உணவுக் கூடத்தில் நுழைந்தார். ஆயிரம் பேருக்கு இலை போட்டு பரிமாறினோமே! ஒரு இலை மீதம் இருக்க வேண்டுமே! சிந்தித்தபடியே உணவுக் கூடம் முழுவதும் சுற்றி வந்தார். என்ன ஆச்சரியம், ஆயிரம் இலைகளிலும், அனைவரும் சாப்பிட்ட தடம் இருந்தது. ஒரு இலைகூட மீதம் இல்லை. என்ன அதிசயம் இது!

தன்னை சோதித்திடவே ஆயிரத்தில் ஒருவர் குறைந்துவிட்டதுபோல் தோற்றுவித்து, பிறகு, தானே ஆயிரமாவது சிவனடியாராக உள்ளே வந்து அமர்ந்து அமுதுண்டு சென்றிருக்கிறான் இறைவன் என்ற உண்மை அவருக்குத் தேனாய் புரிந்தது. பக்திப் பரவசமானார்.ஆட்டுவிப்பவன் அவனாயிருக்க, தான் ஆடியது என்ன சிறுமைத்தனம் என்று எண்ணி வெட்கினார். 

அந்த ஆயிரத்துள் ஒருவன் குடிகொண்ட திருத்தலமே ஆக்கூர். மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில், பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நுழைந்ததும் சித்தி விநாயகரை தரிசிக்கலாம். மாடக் கோயிலின் படிகளில் ஏறி உள்ளே சென்றால் நந்தி, பலிபீடத்தைக் கடந்து ஈசனின் கருவறை. இருபுறமும் அழகு மிகு துவார பாலகர் சிற்பங்கள். யானை ஏறமுடியாத மாடக் கோயில்கள் பல கட்டிய கோச்செங்கட்சோழன், இறை-வனைப் பாடும் நிலையில் சிலையாக உள்ளார்.

சிறப்புலி நாயனாருக்கும் தனி இடம் உள்ளது. அவருக்கு எதிரே தெற்கு  நோக்கிய சந்நதியில், ‘ஆயிரத்துள் ஒருவர்’, நான்கு கரங்களுடன், இடக்கரத்தில் தண்டு ஊன்றிய நிலையில் காட்சியளிக்கிறார். இறைவிக்கு இந்தத் தலத்தில் வாள் நெடுங்கண்ணி என்று பெயர். நால்வர், முருகன், நடராஜர் சந்நதிகளும் உள்ளன. தான்தோன்றீஸ்வரரையும், ஆயிரத்தில் ஒருவரையும் தரிசித்தால் பஞ்சம், பட்டினி இருக்காது என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

- பி.எஸ்.
படங்கள்: குருவேல்