கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ எந்த கடவுளை வணங்க வேண்டும்?



தெளிவு பெறு ஓம்

* தலைச்சன் பெண்ணிற்கு தலைச்சன் பிள்ளையை மணம் முடிப்பது கூடாது என்கிறார்களே, ஏன்?
- ப.த. தங்கவேலு, பண்ருட்டி.



இது முற்றிலும் தவறான கருத்து. ‘தலைச்சனுக்கு தலைச்சன் ஆகாது’ என்ற சொல் வழக்கை, ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்த ஆணுக்கு, இன்னொரு குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். ஆணோ, பெண்ணோ ஒரு பிள்ளையோடு நிறுத்திவிடுகிற இந்த காலத்தில் தலைச்சனுக்கு தலைச்சனைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் உண்மைதானே!

ஆனால், இந்தச் சொல்வழக்கிற்குப் பொருள் என்ன தெரியுமா? ஆனி மாதத்தை, ஜேஷ்ட மாதம் என்று அழைப்பர். (இந்த ஜேஷ்ட மாதம் என்பது வைகாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஆனி மாத அமாவாசை வரை உள்ள காலம் மட்டுமே.) இந்த ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்), அதே ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி), ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் வைகாசி அமாவாசைக்கு மறுநாள் முதல் ஆனி அமாவாசைவரை உள்ள காலமான ஜேஷ்ட மாத காலத்தில் திருமணம் செய்யக்கூடாது, சந்ததி பாதிக்கப்படும் என்று பொருள் உரைக்கிறது காலாமிருதம் என்கிற ஜோதிட நூல்.

இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளாமல், ஜேஷ்ட என்றால் தலைச்சன் என்று மட்டும் தெரிந்துவைத்துக்கொண்டு தலைச்சனுக்குத் தலைச்சன் ஆகாது என்று பொத்தாம் பொதுவாய் சொல்வது தவறு.

* கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ எந்த கடவுளை வணங்க வேண்டும்?
- சு. பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வருவது நல்லது. வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதரை வணங்கலாம். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் பெற்ற தாய்-தந்தையரை வணங்கினாலே போதும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவரவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்தால் எந்த தெய்வத்தையும் இதற்காக வணங்கவேண்டாம்! குடும்பத்திலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.



* சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் போல், சிவபெருமானுக்கு உகந்த நாள் எது?
- த. சத்தியநாராயணன், அயன்புரம்.

சோமவாரம் எனும் திங்கட்கிழமையை சிவபெருமானுக்கு உகந்த நாளாகச் சொல்வார்கள். சனிப்பிரதோஷத்தைவிட சோமவாரப் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திங்கள் எனும் சந்திரனை தனது தலையில் சூடிக்கொண்டு, பிறைசூடனாக, சந்திரசேகரனாக சிவபெருமான் நமக்கு அருள் பாலிப்பதால் திங்கட்கிழமையை சிவபெருமானுக்கு உகந்தநாள் என்று சொல்கிறார்கள்.

* மனிதன் தருகின்ற அவிர்பாகத்தை இறைவனிடம் கொண்டுசேர்க்கும் பணியை அக்னி செய்கிறது என்றும், இதற்காகத்தான் ஹோமங்களும், யாகங்களும் செய்யப்படுகின்றன என்றும் சொல்லியிருக்கிறீர்கள். நாம் தருகின்ற அவிர்பாகத்தை இறைவன் ஏற்றுக்கொள்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்?
- ஜி.டி. சுப்ரமணியன், கொளத்தூர்.

சாதாரணமாக நம் வீட்டில் செய்யும் கணபதி ஹோமத்தின்போதும், இதர பரிகார சாந்தி ஹோமங்களின்போதும், அல்லது கும்பாபிஷேகம் முதலான இடங்களில் செய்யப்படுகின்ற மிகப்பெரிய யாகங்களின் போதும் அக்னியில் இறைவனுக்கு ஆஹுதியாக அப்பம், கொழுக்கட்டை, வெள்ளை சாதம், சர்க்கரைப் பொங்கல், பழங்கள் போன்றவற்றையும், பூர்ணாஹுதி நிகழ்வின்போது, ஒரு பட்டு வஸ்திரத்தில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி சமர்ப்பிப்பதையும் கண்டிருப்பீர்கள்.

அம்பிகையை வேண்டி செய்கின்ற சண்டி ஹோமம் போன்ற பெரிய யாகங்களில், நிறைய புடவைகளை அக்னியில் சமர்ப்பிப்பார்கள். சற்றே எண்ணிப் பாருங்கள், பொதுவாக ஏதேனும் ஒரு துணியில் சிறு நெருப்புத் துளி பட்டாலே அதன் கருகும் துர்நாற்றம் வீசும். சாதம் சமைக்கும்போது பாத்திரத்தில் தண்ணீர் குறைந்தால், அது அடிபிடித்துக் கொண்டு வீடு முழுக்க தீய்ந்துபோன நாற்றம் வீசும். விளக்கின் உச்சியில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் புஷ்பம் விளக்கின் ஜ்வாலையில் லேசாகப் பட்டாலே அது கருகி ஒருவித துர்நாற்றம் வீசும்.

ஆனால், ஸ்வாஹா என்ற மந்திரத்தின் துணையோடு ஹோமத்திலும், யாகத்திலும் சமர்ப்பிக்கப்படுகின்ற பொருட்கள் என்றாவது, எங்காவது தீய்ந்துபோன நாற்றம் அடித்து உணர்ந்திருக்கிறீர்களா? மாறாக பூர்ணாஹுதியின்போது ஒருவித நறுமணம் கமழ்வதையே சுவாசித்திருக்கிறோம். அந்த நேரத்தில் ஹோமகுண்டத்தில் இருந்து எழும் ஜ்வாலையில் இறைவனின் திருவுருவத்தையும் காண்கிறோம். மனிதன் தருகின்ற அவிர்பாகத்தை ஹோமங்களின் மூலமாக இறைவன் ஏற்றுக்கொள்கிறான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?

* தங்கள் பிள்ளையின் திருமணத்திற்கு பெண் தேடும் பெற்றோர்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை ஒதுக்குவது சரியா?
- வை. சிங்காரவேலன், அரியலூர்.
   
மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்ற தவறான கருத்து நம்மிடையே நிலவுகிறது. ஒருசிலர் ஆண்களுக்கு நட்சத்திர தோஷம் ஏதுமில்லை என்றும், மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணால்தான் மாமனாருக்குப் பிரச்னை என்றும் வாதிடுவர். இன்னும் சிலர், மூல நட்சத்திரம் முதல்பாதத்தில் பிறந்தால்தான் தோஷம் என்றும் சொல்வர். ‘ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியை பலரும் சொல்லக் கேட்டிருப்போம்.

மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் அதனால் நிர்மூலம் உண்டாகும் என்றும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு ஆனி மூலம் அரசாளும், பெண் (கன்னி) மூலம் நிர்மூலம் என்பதே சரியான பொருளாகும். அதாவது, ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள், பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரசயோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி.

அதனால்தான் ஆனிமூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது. பெண் மூலம் என்பது கன்னி மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரநாள். இது அஷ்டமி அல்லது நவமியோடு இணைந்து வரும். துர்காஷ்டமி அல்லது ஆயுதபூஜையோடு இணைந்து வருகிற நாள். இந்த நாட்களில் அசுரர்களை அம்பாள் நிர்மூலம் ஆக்கிய நாள் என்பதால் பெண் (கன்னி-புரட்டாசி) மூலம், நிர்மூலம் என்ற சொல்வழக்கும் தோன்றியது.

இந்த உண்மையான பொருளை உணராமல் மூல நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஆகாது என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். தங்கள் பிள்ளைக்குப் பெண் தேடும் பெற்றோர், மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை ஒதுக்குவது முற்றிலும் தவறு. மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று சொல்வது முழுமையான மூடநம்பிக்கையே என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

* ஆனித்திருமஞ்சன நாளில் சிவாலயங்களில் நடராஜர் உற்சவம் நடைபெறுவதன் காரணம் என்ன?
- கா. கோபாலகிருஷ்ணன், அறந்தாங்கி.

சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் வருடத்திற்கு இரண்டு முறை பிரம்மோற்சவம் நடக்கும். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆருத்ரா தரிசனப் பெருவிழாவும், ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆனித் திருமஞ்சனத் திருவிழாவும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இவ்விரு நாட்களிலும் நடராஜப் பெருமான் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து ஆடிக்கொண்டே கனகசபைக்குள் எழுந்தருளும் அற்புதக் காட்சியினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பர்.

ஆனித்திருமஞ்சன நாள் அன்று சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில், அதாவது, கன்னி ராசியில் சந்திரனும் சஞ்சரிப்பர். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கின்ற இவ்விரு கோள்களும் மிதுனம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலமே ஆனித்திருமஞ்சன நாள். மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுமே புதன் கிரஹத்தின் ஆளுமை பெற்றவை. கல்விக்கு அதிபதியான புதன் குறிப்பாக வானவியல் அறிவினைத் தருவார்.

ஆனித்திருமஞ்சன நாளில் நடராஜப்பெருமானை தரிசிக்க வானவியல் ஆய்வாளர்கள் நிறையபேர் வருவதை நாம் இன்றும் காணமுடியும். ஆனி மாதத்தில் வானம் தெள்ளத் தெளிவாகக் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே சென்னையில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கம், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள ஆலங்காயம் உள்பட அனைத்து வானவியல் ஆய்வு மையங்களிலும் இந்த ஆனி மாதத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஓய்வின்றி செயல் படுவர்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவது சிதம்பரம். அண்டவெளியை ஆய்வு செய்கின்ற அமெரிக்க விஞ்ஞானிகளும் கூட அம்பலத்தில் ஆடுகின்ற ஆடலரசனை, நடராஜப் பெருமானை ‘அஸ்ட்ரானமி’ எனப்படும் ஆகாய அறிவியலின் ஆண்டவனாக ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனி மாதத்தில் வருகின்ற உத்திர நட்சத்திர நாள் ஆகாய அறிவியலின் ஆரம்ப நாள் என்பதால்தான் அந்த நாளில் நடராஜப் பெருமானின் உற்சவம் கொண்டாடப்படுகிறது என்பது ஆன்மிக ஆய்வாளர்களின் கருத்து. ஆன்மிகத்திற்கும், அறிவியலுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதையும் இந்த விழாவின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.

* விதியை மதியால் வெல்லமுடியுமா?
- ஆர். வைத்தியநாதன், பெங்களூரு.

‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழி நம்மிடையே புழங்கிக்கொண்டிருக்கிறது. சிரமத்திற்கு உள்ளாகும் நேரத்தில், ‘எல்லாம் விதிப்படிதான் நடக்கும்’, என்று விரக்தியுடன் பேசுவோரை உற்சாகமூட்ட இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவது வழக்கம். பகுத்தறிவுவாதிகள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள்கூட அடிக்கடி இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துவதைக் காண்கிறோம். உண்மையில் இது ஒரு ஜோதிட ரீதியான பழமொழி என்பதை நம்மில் பலரும் அறிவதில்லை!

விதி, மதி, கதி என்று ஜனன ஜாதகத்தை மூன்றாகப் பிரிப்பார்கள். விதி என்பது ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தையும், மதி என்பது சந்திரன் அமர்ந்திருக்கும் ஜென்ம இராசியையும், கதி என்பது (கதிரவன்) ஜனன ஜாதகத்தில் சூரியன் அமர்ந்திருக்கும் ஸ்தானத்தையும் குறிக்கும். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து முதல் 30 ஆண்டுகள் விதி என்னும் லக்னத்தை அடிப்படையாகக் கொண்டும், 30 வயதில் இருந்து 60 வயது வரை மதி அல்லது சந்திரா லக்னம் என்று அழைக்கப்படும் ஜென்ம ராசியை அடிப்படையாகக் கொண்டும், 60 வயதிற்கு மேல் கதியாகிய சூரியனின் அமர்விடத்தை அடிப்படையாகக் கொண்டும் பலன் உரைப்பார்கள்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் வலுவிழந்து காணப்பட்டால் அவன் அதிக சிரமத்திற்குள்ளாவான் என்பது விதி. அதே ஜாதகருக்கு சந்திரா லக்னம் எனப்படும் ஜென்ம ராசி வலிமையாக இருந்தால் அந்த சிரமத்தினை எதிர்கொண்டு வெற்றி காணும் தன்மையை அந்த ஜாதகர் பெற்றிருப்பார். இதையே ‘விதியை மதியால் வெல்ல முடியும்’ என்று அக்காலத்தில் உரைத்தனர். தசாபுக்தி ரீதியாக சிரமமான பலன்களைக் கண்டு வருபவர்களும்கூட கோச்சார ரீதியாக ஜென்ம ராசி சுப வலிமை கொள்ளும்போது ஓரளவிற்கு சிரமங்கள் குறைந்து நற்பலன்கள் கிடைக்கக் காண்கிறார்கள்.

ஜனன காலத்தில் சந்திரன் (மதி) சஞ்சரிக்கும் இடமே ஜென்ம ராசி என்று அழைக்கப்படுகிறது. விதி எனும் லக்னத்தின் வலிமை குறையும்போது அதற்கு மாற்றாக மதி எனும் ஜென்ம ராசி வலுவாக இருந்தால் நன்மை கிடைக்கும் என்றுணர்ந்து விதியை மதியால் வெல்லலாம் என்றுரைத்தார்கள். மாறாக மதி என்று நம்மவர்கள் கருதும் அறிவுத்திறனைக் கொண்டு விதியை வென்றுவிட முடியாது.

அறிவினால் விதியை வெல்லமுடியும் என்று பொருள்கொண்டால் அது ஆணவத்தையே தரும். விதியை வெற்றிகொள்ள ஆண்டவனின் அருளிருந்தால் மட்டுமே முடியும். நம் மதியை இறைவனைத் துதிப்பதில் செலுத்துவோம். அவன் அருளைப் பெறுவோம். விதியை வெல்வோம்.