அகத்தை வேரறுக்கும் அருணாசலம்



சகலமும் அறிந்த பார்வதி தேவியின் முன்பு அருணாசல மகாத்மியத்தை சொல்கிறோம் என்கிற சந்தோஷமும், இதைச் சொல்ல வைப்பதும் அவளே என்கிற எண்ணத்தோடும் கௌதம மகரிஷி தொடர்ந்து பேசத் தொடங்கினார். ‘‘அருணாசலம் என்பது ஞானக் கனல். அறிந்தும் அறியாமலும், மகிமையை உணர்ந்தும் உணராமலும், போக வாழ்க்கையையே வேண்டிக்கொண்டு வந்து வலம் வந்தாலும், விளையாட்டாகவே இதை வலம் வந்தாலும் சரிதான் அவர்கள் தன்னை அறிதல் என்கிற உச்சபட்சமான ஆத்மிகமான விஷயத்தை அறிந்துகொள்வார்கள்.



இந்த க்ஷேத்ரம் அப்படித்தான் செய்யும். இது ஈசனின் ஆணை. உலகத்திலுள்ள எந்தவொரு விருத்தியும் இந்த தன்மை என்ற சொரூபத்திலிருந்து தூர விலக்கி வைக்கும். அதாவது தன்மை என்கிற ஞான உணர்விலிருந்து விலக்கியே வைக்கும். ஆனால், இதோ உங்கள் எதிரே விருத்தியடைந்து நிற்கும் இந்த அருணாசல விருத்தியானது உங்கள் தன்மையிலிருந்து தூர விலக்காது. அதாவது தூர விலக்காத துவைத விருத்தியாகும். அதாவது அத்வைத பொருளாகிய ஆத்ம வஸ்துவே அருணாசலமாகும்.

உனக்குள் இருக்கும் ஆத்மா வெளியே அருணாசலமாக தோன்றி உன்னை உள்ளுக்குள் செலுத்தும் சூட்சுமம் மிக்க விருத்தியாகும். அதனால், இந்த விருத்தியான அதாவது ஊனக் கண்களின் எதிரே தோன்றியுள்ள, விருத்தி ரூபத்திலுள்ள அருணாசலத்தை நினையுங்கள். அதையே வலம் வாருங்கள். காலக்கிரமத்தில் அதுவே தன்னோடு சேர்த்துக் கொள்ளும்.

ஒரு பசுவானது நடப்பட்ட முளைக் குச்சியை சுற்றிச் சுற்றி வரும்போது முளை குச்சியின் அருகே வந்து எப்படி நகர முடியாது நிற்குமோ, அதுபோல அருணாசலத்தை வலம் வர வலம் வர உங்கள் மனம் நகராமல் அருணாசலத்தோடு ஒட்டிக் கொண்டு விடும். அப்புறமென்ன? அதுவே நீங்கள் ஆவீர்கள். ஏற்கனவே அதுவாகவே நீங்கள் இருப்பதையும் உணர்வீர்கள். அங்கு துவைதம் எங்குள்ளது. ஏகமான பிரம்மம் மட்டும் உண்டு. அவ்வளவுதான்.’’

பார்வதி தேவி இமைகள் மூடாது நெடுநெடுவென்றிருக்கும் அருணாசலத்தை மீண்டும் பார்த்தாள். அருணாசல மகாத்மியம் என்பது இதுதானா? என்று பேச்சற்று மோனமாக இருந்தாள். ‘‘ரகசியம்... பரம ரகசியம்... என்கிறார்களே. அதுதானா இது. அருணாசலத்தின் ரகசியம் என்பது இதுதானா.’’ ஒரு இளம் வயது இல்லறச் சீடர் வினவினார். ‘‘இல்லை. ரகசியமே இங்கு இல்லை. உள்ளுக்குள் ஆத்மா உள்ளது. அதுதான் நீங்கள்.

அதுவே உங்களின் சொரூபம் என்பதுதான் சாதாரண மாயையில் உள்ளவர்களுக்கு ரகசியம். ஆனால், அதே ஆத்மா, ஈசன், பரம்பொருள் இங்கு ரகசியமாக இல்லாது வெளிப்படையாகவே மலை வடிவில் எழுந்தருளியிருக்கிறார். அதை நினைக்க வேண்டும் என்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது. அதை வலம் வாருங்கள் என்பதில் என்ன சிரமம் வந்துவிடப் போகிறது.

அருணாசலத்தை வலம் வருதலும், நீங்கள் உள்ளுக்குள் உங்களின் சொரூபத்தை நோக்கி நகர்தலும் ஒன்றே. நான் யார் என்று ஆராயப்புகும் ஞான விசார முயற்சிகளில் ஐயம் ஏற்பட்டால் அருணாசலத்தை வலம் வாருங்கள். அருணாசலம் எனும் வார்த்தையே மகாவாக்கியம். அந்த நாமமே அகத்தையே அதாவது அகந்தையை வேரோடு அறுக்கவல்லது. அதற்கு இங்கு வாழும், இனி வரப்போகும் ஞானிகளே சாட்சியாகும்.

(தினகரன் ஆன்மிக மலர்  இதழில் தொடராக வந்த திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை கட்டுரைகளின் தொகுப்பாக இப்புத்தகம் வெளியாகி இருக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதியைத்தான் மேலே படித்தீர்கள்.)