நிரந்தர தீபம்



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரியில் இரட்டைப் பிள்ளையார் கோயில் இருக்கிறது. கருவறையில் மாப்பிள்ளை போன்று அலங்காரம் செய்யப்பட்ட இந்த இரு பிள்ளையாருக்கும் மத்தியில் ஒரு தீபம் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது.



திங்கட்கிழமை மட்டுமே வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம் பரக்காலக்கோட்டை கிராமத்தில், பொது ஆவுடையார் கோயில் உள்ளது. இங்கு திங்கட்கிழமை தோறும் நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வழிபாடு நடைபெறுகிறது. மற்ற நாட்களில் நடைதிறக்கப்படுவதில்லை. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நள்ளிரவு பூஜை முடிந்து இங்கு தனது பரிவாரங்களுடன் அவர் எழுந்தருள்வதாக ஐதீகம். தை முதல் நாள் பொங்கல் அன்று மட்டும் காலை முதல் மாலைவரை வழிபாடு நடைபெறும்.

காசியைப் போலவே ஸ்ரீசைலம்

காசி, ஸ்ரீசைலம் ஆகிய இரண்டு இடங்களில்தான் ஜோதிர் லிங்கமும், தேவியும் ஒன்றாக தரிசனம் அளிக்கிறார்கள். காசி தலத்தைப் போலவே சைலத்திலும் பக்தர்கள் தாங்களாகவே இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறார்கள்.

வெண்ணெய்க் காப்பில் விநாயகர்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் கோபுர வாசலுக்கு மேல் இடது பக்கமாக வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார். இப்பிள்ளையாருக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு நடத்தப்படுகிறது.

பாத தரிசனம் காணவேண்டுமா?

திருவாரூர் தியாகராஜர் சந்நதியில் மரகத லிங்கம் உள்ளது. இவருக்கு ‘வீதி லிடங்கர்’ என்பது பெயர். தியாகராஜருக்கு முக தரிசனம் மட்டுமே. மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா விழா அன்று இடது பாத தரிசனமும் உண்டு - பிற அங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- வசந்தா மாரிமுத்து