ஆனந்த வாழ்வளிப்பாள் அழகு பார்வதி அம்மன்



ஜமீன் கோவில்கள்

-சுரண்டை

ஊத்துமலை திருவிழாவில் தன் கிராமத்தாருக்கு நேர்ந்த அவமரியாதை சுரண்டை ஜமீன்தாரை மனவருத்தமடையச் செய்தது. அங்குபோய் திருவிழாவில் பங்கேற்பானேன், நாமே நம் ஜமீனிலேயே அதை நடத்தி நம் மக்களை மகிழ்விப்போமே என்று கருதினார். ஊர் மக்களும் அவர் கருத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். ஊத்துமலை ஜமீனைப்போலவே தேர் மற்றும் தெப்பத் திருவிழாக்களை நடத்த தீர்மானித்தனர்.



உடனே உள்ளூர் தச்சர்களைக் கொண்டே தேரை உருவாக்கினர். இந்தப் பணியை அங்கீகரிக்கும் வகையில் திருவிழாவின் பத்தாம் நாள் மண்டகப்படியை, தேர் உருவாக்கிய அந்தக் கலைஞர்களுக்கு அளித்தார் சுரண்டை ஜமீன்தார். அன்றிலிருந்து இன்றுவரை 10ம் திருநாள் மண்டகப்படியை விஸ்வகர்ம சமூகத்தினர் சிறப்புடன் செய்து வருகிறார்கள். இந்த ஏற்பாட்டின்படி திருவிழாவின் 10ம் நாளில் சப்பரத்தில் அம்மன் வீதி உலா புறப்படுவார்.

தச்சர் பெருமக்கள் குடியிருக்கும் தெருவுக்கு செல்வார். அம்மனை அவர்கள் தங்களது வீட்டுக் குழந்தைபோலவே பாவித்து மாலை அணிவித்து குடும்பத்தோடு வணங்கி மகிழ்வர். அதன் பிறகே அம்மன் கோயிலுக்கு திரும்புவார். திருவிழாவின் முதல்நாள் மண்டகப்படி ஜமீந்தாரால் நடத்தப்படுகிறது. இதில் ஜமீனின் இளைய ராஜாவான எஸ்.கே.பி. ராஜாவுக்கு மாலை மரியாதை செய்து பரிவட்டம் கட்டி, முதல்மரியாதை செய்யப்படுகிறது. இரண்டாம் நாள் மண்டகப்படி, தேவர் சமுதாயத்துக்குரியது.

மூன்றாம் நாள் மண்டகப்படி, செட்டியார் மற்றும் பிள்ளைமார் சார்பில் நடத்தப்படுகிறது. நான்காம் நாள் மண்டகப்படி, நாடார் சமுதாயத்தினருக்குரியது. (சிவகாசியிலிருந்து வியாபாரத்துக்குச் சென்றபோது அழகு பார்வதி அம்மனை அழைத்து வந்தவர்கள் இவர்கள்தானே!) ஐந்தாவது நாள் மண்டகப்படி முதலியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது. ஆறாவது நாள், படையாச்சி சமுதாயத்தினரும், ஏழாவது நாள் கிளையில்லா தேவர் சமுதாயத்தினரும் மண்டகப்படியைத் திறம்பட நடத்தி வருகிறார்கள்.

எட்டாம் நாள் அனைத்து சமுதாயத்தினர் சார்பிலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பூப்பண்டார சமுதாயத்தினர் திரளாகக் கலந்துகொள்கிறார்கள். அப்போது வேண்டுதலை  நிறைவேற்ற ஆயிரங்கண் பானை உருவம் மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபடுவர். நேர்ச்சை பொருட்களை கைகளில் வைத்து மார்போடு அணைத்தவாறு தங்கள் பிரச்னையை தீர்க்கக்கோரி அம்மனை மனமுருக வணங்குவர். அவர்கள் கேட்ட வரம் கிடைத்ததும், மறுவருடம் சந்தோஷமாக நன்றி செலுத்த வருவார்கள். அம்மனுக்கு பட்டு பரிவட்டங்களை காணிக்கையாக செலுத்தி மகிழ்வார்கள். 
 


ஒன்பதாவது நாள், தேரோட்டம். அம்மன்  ஒய்யாரமாய் தேரில் எழுந்தருளி பவனி வருவார். திரளான பக்தர்கள் ஒருசேர தேர் இழுப்பார்கள். பத்தாவது நாள் ஜமீன்தார் உத்தரவுப்படி தச்சர்கள் தெருவில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளுவார். சுரண்டை ஊருக்குள் நுழையும் போது காணப்படும் பிரமாண்டமான வரவேற்பு வளைவு, அம்மனின் அருளாட்சியைப் பறைசாற்றுகிறது. கோயிலில் ஒய்யாரமாய் அழகு பார்வதி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

ஆதிகாலத்தில் இங்கு வீற்றிருந்த காளியம்மன் தற்போதும் தென்பகுதியில் அருள் வழங்குகிறார். இவருக்கு அசைவ படையல். ஆனால் அழகு பார்வதி அம்மனுக்கு எப்போதும் சைவப் படையல்தான். கோயிலுக்கு தெற்கு வாசலும் உண்டு. இங்கு பிள்ளையார், பாலமுருகன், காவல் தெய்வமாக கருப்பசாமி ஆகியோர் உள்ளனர். தேர்த் திருவிழா மட்டுமின்றி ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றன. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, விளக்கு பூஜை நடக்கிறது. இதில் சுரண்டை மட்டுமின்றி சுற்று வட்டார கிராம பெண்களும் பங்கேற்கிறார்கள்.

ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி. அன்று திருமணத்தடை நீங்கவும், குழந்தைவரம் வேண்டியும் பெண்கள் அம்மனை வழிபடுவர். அம்மன் அருளால் மறுவருடமே, தாம் கோரிய வரம் நிறைவேறி மகிழ்வர். சிவராத்திரியின்போது பத்து நாள் திருவிழா மற்றும் கந்த சஷ்டி திருவிழா ஆகியவையும் இங்கே சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் கார்த்திகை நட்சத்திர நாளிலும் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளுவார்.

இப்பகுதியில் மற்றொரு ஆலயமும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் ஒரு பின்னணி உண்டு. சுரண்டை ஜமீன்தார் ஏகோபித்த புகழுடன், வளத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் பெரும்படை வைத்திருந்தார். இந்தப் படை சிறப்பாக விளங்க, ராமநாதபுரத்திலிருந்து வந்த சிவனுபாண்டி, பரமசிவபாண்டி ஆகிய இரு படைவீரர்களே முக்கிய காரணம். எதிரிகளுக்கு இவர்களைக் கண்டாலேயே அடிவயிறு கலங்கும். இருவரும் பிரம்மசாரிகள். தங்களது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தனர். சுரண்டை ஜமீன்தாருக்கு மெய்க்காவலர்களாகத் திகழ்ந்தனர்.



அந்த காலத்தில் சுரண்டை ஜமீனுக்கும், நடுவக்குறிச்சி ஜமீனுக்கும் அடிக்கடி பகை மூண்டது. ஒவ்வொரு முறையும் தான் தோல்வியையே அடைவதைக் கண்டு மனம் வெறுத்த நடுவக்குறிச்சி ஜமீன்தார், சுரண்டை ஜமீன்தாரின் இரு மெய்க்காவலர்கள்தான் அந்தத் தோல்விகளுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களை எப்படியாவது கொன்றுவிட திட்டமிட்டார்.

ஒற்றர்கள் மூலம் அவர்களை அணுகி பணத்தாசை காட்டித் தம் பக்கம் இழுக்க முனைந்தார். ஆனால், சுரண்டை ஜமீன்தாருக்கே தாங்கள் விசுவாசமாக இருப்பவர்கள் என்றும் யாராலும், எந்த காரணத்தாலும் தங்களை சோரம் போகச் செய்யமுடியாது என்று உறுதியாக நின்றனர் அந்த இளைஞர்கள். ஆனாலும் நடுவக்குறிச்சி ஜமீன்தார் முயற்சியை விட்டுவிடவில்லை.

சுரண்டை ஜமீன்தார் அரண்மனையில் அந்த இரு வீரர்களுக்கு பிடிக்காத கணக்குப் பிள்ளை ஒருவர் இருந்தது அவருக்குத் தெரியவந்தது. அவரைத் தன் வசமாக்கி அவர் மூலம் காயை நகர்த்தினார். ‘சிவனையும், பரமசிவனையும் பெரும்தொகை கொடுத்து எங்களுக்கு அடிமையாக்கிவிட்டோம். இனி அவர்கள் எங்களுக்கு சாதகமாகத்தான் போர்புரிவார்கள்’ என்று ஒரு புரளியைக் கிளப்பினர். அதைக் கேட்ட கணக்குப் பிள்ளைக்கு கோபம் வந்து விட்டது.

ஏற்கெனவே அவர்கள் அவருக்கு ஆகாதவர்களாக இருந்தார்கள். உடனே அரண்மனைக்குப் போய் ஜமீன்தாரிடம், அவ்விருவரும் துரோகிகள், ஜமீனுக்கு எதிராகக் கலகம் செய்ய துணிந்து விட்டார்கள் என்று கூறினார். ஏற்கனவே ஒற்றர்கள் மூலம் நடுவக்குறிச்சி ஜமீன்தாரின் ஆட்கள் அவ்வீரர்களின் வீட்டுக்கு வந்ததை அறிந்திருந்த ஜமீன்தார், கணக்குப்பிள்ளை கூறியதை நம்பினார். இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அந்தப் பொறுப்பை கணக்குப் பிள்ளையிடமே ஒப்படைத்தார்.

இதற்காகவே காத்திருந்த கணக்கு பிள்ளையும் தனக்கு விசுவாசமான ஏவலாட்களுடன் இருவரையும் தீர்த்துக்கட்ட தருணம் பார்த்தார். ஒருநாள் நடுவக்குறிச்சி ஜமீன்தாரின் ஆட்கள் சுரண்டை ஜமீன்தார் வயலில் நெற்கதிர்களைத் திருடியபோது விவரம் அறிந்த பரமசிவன், சிவனுபாண்டி இருவரும் வயற்காட்டிற்கு வந்தனர்.

பாய்ந்து சென்று நடுவக்குறிச்சி ஜமீன் படை வீரர்களை விரட்டி அடித்தார்கள். திருடர்களிடமிருந்து நெல் மூட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டு வெற்றிக் களிப்புடன் இருவரும் ஜமீன் அரண்மனையை நோக்கிச் சென்றபோது கணக்குப் பிள்ளையின் ஏவலாட்கள் திடீரென எதிர்ப்பட்டு அவ்விருவருடைய தலைகளையும் வாளால் கொய்தனர்.

தன் பேரப்பிள்ளைகள் கொலையுண்டதை அறிந்த பாட்டி, ஓடோடி வந்து அந்த சடலங்களைப் பார்த்து அழுது அரற்றினாள். சுரண்டை ஜமீனே கதி என்று கிடந்த தனது பேரன்களை அதே ஜமீன்தார்தான் கொலை செய்திருக்கிறார் என்றறிந்ததும் மேலும் ஆவேசமானார். உடனே அரண்மனை நோக்கிச் சென்று ஆத்திரம் மிக, மண்ணை அள்ளி வீசி சாபமிட்டார்: ‘நீயே கதி என்று கிடந்த எனது பேரன்கள் இருவரையும் நம்ப வைத்து கழுத்தறுத்தாயே! உனது அரண்மனை இப்போதே அழிந்து போகும்,’ என்று சபித்ததோடு தானும் அங்கேயே விழுந்து இறந்தார். 
காலங்கள் உருண்டோடின. பாட்டியின் சாபம் பலித்தது. அரண்மனை அழிந்துபட்டது. ஜமீன்தார் வாரிசுகளும் விருந்தினர் மாளிகைக்கு குடியிருப்பை மாற்றினர். அரண்மனை இருந்த இடம் இப்போது பொதுமக்கள் குடியிருப்பாக மாறிவிட்டது. தொடர்ந்து வாரிசுகளுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டன. கணக்குப் பிள்ளை குடும்பத்தாரும் பிரச்னையிலிருந்து தப்பவில்லை.

இதற்கான பரிகாரத்தை மலையாள மந்திரவாதி களிடம் கேட்டபோது, ‘சிவனு பாண்டியும், பரமசிவ பாண்டியும் நல்ல ஜீவன்கள். கடைசிவரைக்கு அரண்மனைக்கு விசுவாசமாக இருந்தவர்கள். ஜமீன்தார் அவர்களை பலி வாங்கியதால் அவர்களுடைய ஆன்மாக்கள் அமைதியடையாமல் அலைந்துகொண்டிருக்கின்றன. அவை சாந்தியடைந்தால் எல்லா பிரச்னையும் தீரும்’ என்றனர்.

அழகு பார்வதி அம்மன்கோயில் அருகே மேற்கு நோக்கி இருவருக்கும் பீடம் அமைத்து வணங்க ஆரம்பித்தனர். அதன் பிறகு பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக  தீர்ந்து விட்டது. வேண்டும் வரம் தரும் தெய்வமாக சிவனு பாண்டியும், பரமசிவ பாண்டியும்  விளங்குகின்றனர். தற்போதைய ஜமீன்தார் வாரிசு சிவஞான ராஜா அந்த ஆலயத்துக்கு மணி மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார். இத்தனை பிரச்னைக்கும் மூலகாரணமான நடுவக்குறிச்சி ஜமீன் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

1910ம் ஆண்டு அரசு ஆவணப்படி, கடைசியாக இங்கு ராமசாமி ஜமீன்தார் என்பவர் ஆண்டு வந்தார் என்ற குறிப்பு மட்டுமே காணப்படுகிறது. சிவனு பாண்டி, பரமசிவபாண்டிக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கணக்குப் பிள்ளை வாரிசுகள் கொடை கொடுக்கின்றனர். இதில் ஜமீன்தாரும் கலந்துகொள்கிறார். இந்தக் கோயில் கொடைவிழாவின்போது வேளாளர் வீட்டில் இருந்து சிவனு பாண்டி, பரமசிவபாண்டி மற்றும் அவர்கள் வளர்த்த நாய் முதலிய மண்சிலைகளை தலைச்சுமையாக அரண்மனைக்குக் கொண்டு வருகிறார்கள்.

அங்கே பூசாரி மூன்று சிலைகளுக்கும் ஜமீன்தார் முன்னிலையில் கண் திறந்து வைப்பார். அதன்பின் சிலைகளைக் கோயிலில் வைத்து கொடைவிழா கொண்டாடுவார்கள். இந்தக் கோயில் பெயரையே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதுடன் குழந்தைக்கு காது குத்துதல், மொட்டைபோடுதல் போன்றவற்றையும் பல பக்தர்கள் இங்கேயே செய்கின்றனர். வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷகாலங்களில் குடும்பத்துடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

(தொடரும்)
படங்கள்: அபிஷ் விக்னேஷ், துர்க்கை முத்து