நெஞ்சில் கல்வெட்டாய்ப் பதித்துவிட்டீர்கள்!



நவகிரக சுற்றுலா நல்கிய ஆன்மிக இதழ் மற்றும், சூப்பர் யாத்ரா ஆகியோருக்கு நன்றி! நன்றி! நன்றி! நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவுகள் இருக்கும். 2015 மே 9, 10 தேதிகளில் நவகிரக தலங்களுக்கு அழைத்துச்சென்று, எங்களை மகிழ்வித்து, தாங்கள் மகிழ்ந்தீர்! வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!

சுவையான, உடல்நலத்திற்கு உகந்த உணவுகளை வழங்கிய விதமும், நவகிரக தலங்களில் ஒவ்வொரு தலத்திலும் அரிய, பெரிய இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான தகவல்களைத் தந்த, சிவச்சாரியாரின் சிறப்பான விளக்கங்களும் பங்கேற்ற எங்கள் இதயங்களில் நினைவுக் கல்வெட்டாக நிலைத்துவிட்டன.

நவகிரக தலங்கள் தவிர ‘சுவாமி மலை’, பட்டீஸ்வரர் ஆலயங்களுக்கும் அழைத்துச் சென்று எங்களுக்கு 100% புண்ணியம்
தேடிக்கொடுத்திருக்கிறீர்கள் என்பது மிகையல்ல.
- கே.விஜயலட்சுமி, ஆற்காடு.
 
வைகாசி விசாகம் பக்தி ஸ்பெஷல் அட்டையில் வடிவமைக்கப்பட்டிருந்த உமை மைந்தனின் வண்ணப்படம் முதல், வைகாசி மாதத்தில் நடைபெற இருக்கும் பல ஆலயங்களின் வைபவங்கள் குறித்த தகவல்கள் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தன.
- வி.மோனிஷா ப்ரியங்கா, திருச்சி.

 யாத்திரை புரோகிராம் மிகவும் நன்றாய் இருந்தது. நான் பார்த்திராத பல கோயில்களைப் பார்க்க முடிந்தது, மனதிற்கு சந்தோஷம் தந்தது.  சாப்பாடு, டிபன் எல்லா அயிட்டமும் பிரமாதம். இந்த சம்பவத்தை என்றுமே மறக்க முடியாது. மிகவும் நன்றி,
- மகாலட்சுமி,
சித்தூர், ஆந்திரபிரதேசம்.

‘தெளிவு பெறு ஓம்’ பகுதியில் வெளியாகும் பதில்கள் யாவும் மனதைத் தொட்டன. கல்வெட்டு சொல்லும் கதைகள் வரிசையில் மன்னார்குடி கோயில் பற்றி விரிவாக அறிந்தோம். அபூர்வ ஸ்லோகத்தில் நடராஜ தசகம் பக்தர்களுக்கு ஒரு வரப்ரசாதமாக அமைந்திருந்தது.
- இரா.கல்யாணசுந்தரம், வேளச்சேரி.

திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் ‘‘கற்றவர்க்கே சென்றவிடமெலாம் சிறப்பு’’ கட்டுரைத் தொடரில் திருக்குறள் வழி கல்வியின் சிறப்புகள் பற்றி மிக சிறப்பாக எழுதியிருந்தார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இக்கட்டுரை ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
- அ.கோவிந்தன், சேலம்.

ஆன்மிகம் இதழைக் கடந்த 3 வருடங்களாக வாசித்து பலன் பெற்ற வாசகி நான். தினகரன் ஆன்மிகம் - கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி இணைந்து நடத்திய ‘நவகிரக தல சுற்றுலா’வில் நான் எனது பெற்றோருடன் கலந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தங்குமிடம், உணவு வழங்குதல், உபசரித்தல், ஸ்தல பெருமைகள் குறித்து திரு.ரமேஷ் சிவம் அளித்த விளக்கம், வாசகர்களை ஒருங்கிணைந்த பாங்கு என அனைத்து–்ம் பாராட்டுதலுக்குரியது. இந்த பயணம் திருப்தியாக அமைந்தது. நவகிரக நாயகர்களின் திருவருளைப் பெற எங்களுடன் இணைந்து நீங்களும் பயணித்தது, வழிநடத்தியதற்கு நன்றி.
- திருமதி, ப்ரவீணா அருண்பொன்னாகரம், தர்மபுரி.

நிலை உயரும்போது, தேனடை தேனீக்களாய் வந்து மொய்க்கும் சொந்தங்கள், நிலை கொஞ்சம் தாழ்ந்து போகும் போது, அற்றக் குளத்து அறுநீர் பறவைகளாக
விலகிப் போகும். ஆனால், தெய்வம் நம்மோடு துணை நிற்கும். பலம் சேர்க்கும் என்பதை யதார்த்தமாக புரிய வைத்தது பொறுப்பாசிரியர் கடிதம்.
- மல்லிகா அன்பழகன், சென்னை.

தென்னை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட வடகுரங்காடுதுரை தயாநிதீஸ்வரர் ஆலய பெருமைகளையும், தென்னை பற்றிய முழு விவரங்களையும் வெளியிட்ட ஆன்மிகம் இதழுக்கும், கட்டுரையாளருக்கும் நன்றி
- கே.அண்ணாமலை, மல்லூர்.

கொட்டியூர் மகாதேவனின் வைகாசி சுவாதித் திருவிழாவும், நெய் அபிஷேகமும், இளநீர் ஆட்டமும், வாள் பூஜையும், விரதமுறைகளும், படித்தவுடன் கொட்டியூர் மகாதேவனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு பக்தனின் உள்ளத்திலும் தோன்றியிருக்கக் கூடும்.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

கேரளம் கொட்டியூரில் உள்ள மகாதேவர் ஆலயம் குறித்த தகவல்கள் பிரமிக்க வைத்தன. கேரளத்தில் இப்படியொரு அரிய ஆலயம் இருப்பதை முதன்முதலாக அறிந்தேன்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

எங்களுக்கு கோயில்களின் வரலாறுகளை எடுத்து சொல்லி எங்களுக்கு உறுதுணையாக கூடவே வந்து வழிகாட்டிய திரு ரமேஷ் சிவம் அவர்களுக்கும், எங்களை தங்கள் உறவினர் போலவே பாவித்து எந்த குறையும் இல்லாமல் அன்புடன் உபசரித்து கவுரவப்படுத்திய ஆன்மிகம் ஆசிரியர் குழுவுக்கும், கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி குழுவினருக்கும் நன்றி.

விடைபெறும்போது வழிபயண சாப்பாட்டையும் கொடுத்த பெருந்தன்மைக்கு ஈடு ஏது! நாங்கள் எதிர்பார்த்தது ஒன்பது நவகிரக கோயில்களைத்தான்; ஆனால், நீங்கள் மேலும் பல கோயில்களை தரிசிக்கவைத்து எங்களை மிகவும் சந்தோஷப்படுத்தி விட்டீர்கள்.

- சி.வேதவள்ளி, புதுச்சேரி.

உணவில் ஆசை கொண்டவன் எதற்கும் துணிவான் - மகாபாரதத்தை பாலகுமாரன் எடுத்தாண்ட விதம் படுஜோர். வைகாசிக் கோயில்கள் ஒவ்வொன்றும் பௌர்ணமி நிலவைப்போல் பிரகாசித்தன.

- சிம்மவாஹினி, வியாசர்பாடி.