எட்டிக்காய் பளபளப்பில் ஏமாந்துவிடாதீர்கள்!



திருமூலர் மந்திர ரகசியம்

ஒரே நாளில் எட்டுகோயில்கள். ஏழு நாட்களில் 80 கோயில்கள்! - என்றெல்லாம் அறிவிப்புகளைப் பார்த்திருக்கலாம். நாமும் போயிருப்போம். போய் விட்டு வந்த பின்,
‘‘இந்தக் கோயில் பிரசாதம் சூப்பர் டேஸ்ட்! ஆனா, அளவுதான் ரொம்ப ரொம்பக் கம்ம.’’
‘‘அந்தக் கோயில்ல அள்ளி அள்ளிக் குடுத்தாங்க. ஆனா, வாயில வெக்க முடியல.’’

‘‘நல்ல வேளை! தெரிஞ்ச ஆளுங்க இருந்தாங்க. போன உடனே உள்ளாற கூட்டிக்கிட்டுப் போய் தரிசனம் பண்ணி வெச்சாங்க.’’நாம் கேட்டு வரும் வர்ணனைகள்தாம் இவை. இன்றைய நிலையும் இதுதான். இப்படிப்பட்ட திருத்தல யாத்திரைக்குத் திருமூலரும் சென்றிருக்கிறார். அவர் அனுபவம் என்ன? பாடலின் மூலம் அவரே சொல்கிறார்:

ஓடவல்லார் தமரோடு நடாவுவன்
பாடவல்லார் ஒலி பார்மிசை வாழ்குவன்
தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும்
கூட வல்லா அடி சூடுவன் யானே
(திருமந்திரம்-543)

கருத்து: தல யாத்திரை முதலிய செய்வார், உடன் நடப்பேன். பாடுகின்றவர் ஒலியைச் செவி வழியே கேட்டு இன்புறுவேன். அகத்தே தேட வல்ல பெரியவர்கட்கருள் செயும் சிவபெருமானொடும்கூட வல்லவர் திருவடிகளை, நானும் சேர்வேன்.இப்பாடலில் திருத்தல யாத்திரை செய்பவர்களுடன் நடப்பது; பாடல் பாடி இறைவனைத் துதிப்பதைக் கேட்டு இன்புறுவது, தெய்வீக அனுபவம் கொண்ட அடியார்களுடன் சேர்வது - என மூன்று

விதமான தகவல்கள் உள்ளன. சற்று விரிவாகப் பார்க்கலாம். முதலில் திருத்தல யாத்திரை.ஓடவல்லார் தமரோடு நடாவுவன் என்கிறார் திருமூலர். அதாவது, ‘‘ஓடு
பவர்களுடன் நடப்பேன் என்கிறார். சற்று முரணான சொற்கள் இவை. ஓடுபவர்களுடன் ஓடினால்தானே சரியாக இருக்கும். ஓடுபவர்களுடன் நடந்தால்? அவர்கள் எங்கேயோ முன்னால் ஓடிக் கொண்டிருக்க, திருமூலர் பின்தங்கி விடுவாரே! பிறகு இதன் பொருள்?

திருத்தல யாத்திரை செய்தபடி கோயில் கோயிலாக போய்க் கொண்டிருக்கும் அந்த அடியார்களின் வழியில் நடப்பேன்; அவர்களைப் போலவே அவர்களின் கூட்டுறவால் தூய்மையான மனம் கொண்டவனாக ஆவேன் என்பது பொருள். உதாரணமாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலானோர் எல்லாம் கோயில் கோயிலாகப் போனார்கள். அவர்களின் தூய தொண்டு உள்ளங்களின் காரணமாக, ஆங்காங்கே இறைவன் வெளிப்பட்டு அவர்களுக்கு அருள்புரிந்தார். அவர்களைப் போலவே தூய-தொண்டு உள்ளம் கொண்டிருந்தால்தான் திருத்தல யாத்திரை பலனளிக்கும். இல்லாத பட்சத்தில் அது வெறும் சுற்றுலாவாகவே முடியும்.

இதைத்தான், அந்த அடியார்கள் காட்டிய வழியில் நடப்பேன் என்கிறது பாடல். அடுத்தது இப்பாடலில், தமரோடு என்ற சொல் இடம் பெற்றுள்ளது. தமர் என்ற சொல்லிற்கு -நண்பன்-தோழன்-ஒத்த கருத்து உடையவன் என்பது பொருள். அப்படிப்பட்ட நல்லவர்களுடன் தோழமை பூண்டு, அவர்கள் வழியிலேயே நடப்பேன் என்பது பொருள். உதாரணமாக, தம்பிரான் தோழர் எனப் பெயர் பெற்ற சுந்தரருடன் தோழமை பூண்டு, சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலையில் இறைவனை நேருக்கு நேராகத் தரிசித்தது இதை விளக்கும்.

அடுத்தது, இறைவனைத் துதித்துப் பாடுபவர்களின் பாடலைக் கேட்டு வாழ்வேன் என்பது. இது ஆன்மிகமாக மட்டுமல்ல, லௌகீகமாக சராசரி உலகாயத வாழ்விற்கும் மிகவும் நல்லது. சாதாரணமாக,  பரபரப்பு செய்திகளில் ஈடுபடும் மனது, போகப் போக அச்செய்திகளில் ருசிகண்டு, பிறகு அவற்றிலேயே ஈடுபட்டு விடும். மனம் கலங்கும். கரையேற முடியாது. அதனால் அதை விடுத்து, இறைவன் புகழை-துதியைக் கேட்கத் தொடங்கினால் பிரச்னைகள் நம்மைத் தீண்டாது.

மேலும், கோயில் கோயிலாகப் போகமுடியாவிட்டால் கூட, இருந்த இடத்தில் இருக்க இறைவன் புகழைக் கேட்கலாம். இதைக் குறிக்கும் முகமாகவே, திருமூலர் இவ்வாறு பாடலை அமைத்தார். அப்படியும் அவருக்குத் திருப்தியாகவில்லை. இறைவனை உள்ளத்தில் வைத்து அனுபூதி நிலை அடைந்த உத்தமர்களின் திருவடிகளைச் சேர்வேன் என்கிறார்.

இங்கே உத்தமர் திருவடிகள் என்பது, அந்த அனுபவசாலிகளின் நூலறிவையும்(கல்வியறிவையும்) வாலறிவையும் (அனுபவத்தையும்) நான் அடைவேன் என்பது கருத்து.

ஆக மொத்தத்தில், நல்வழி காட்டும் உத்தமர்களின் உறவை வேண்ட வேண்டும், அடைய வேண்டும் என்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த பாடலை, தன் மனதுக்கு உபதேசம் செய்வதைப் போல அமைக்கிறார் திருமூலர். இந்தத் தொடர்பு ஆச்சரியமானது. ஏனென்றால், யாராவது ஏதாவது நல்லது சொன்னால்? ‘‘நீ யார் எனக்குச் சொல்வது? உன் வேலையைப் பார்!’’ என்று எகிறுவதுதான் பெரும்பாலாக வழக்கத்தில் இருக்கிறது.

பெற்றெடுத்துப் படாத பாடுபட்டு வளர்த்துப் படிக்க வைத்து, பிள்ளைகளின் நன்மையைக் கருதி வாழ்வையே தியாகம் செய்த பெற்றோர்களைப் பார்த்து, ‘‘பெத்ததோட உன் கடமை முடிஞ்சு போச்சு! என் வழியைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். மூடு வாயை! அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே!’’ என்று பேசும் பிள்ளைகளையும் பார்க்கிறோமே!

இதை எண்ணித்தான் போலிருக்கிறது, இந்தப் பாடலைத் தன் மனதை நோக்கியே சொல்கிறார் திருமூலர். தாம் இடர்ப்பட்டுத் தளிர் போல் தயங்கினும்மா மனத்து அங்கு அன்பு வைத்தது இலையாகும் நீ இடர்ப்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமேபோம் இடத்து என்னொடும் போது கண்டாயே.

(திருமந்திரம்-544)கருத்து: கொழுகொம்பு இல்லாமல் துவண்டு தீயிடைப்பட்ட தளிர்போல வாடினாலும், மனமே! நீ சிவபெருமானிடம் அன்பு வைக்கவில்லை. இவ்வாறு அத்துன்பத்திலேயே இருந்து நீ என்ன செய்யப் போகிறாய்? நான் போகின்ற இடத்திற்கு நீயும் என்னுடன் வா!பக்குவப்பட்ட ஆன்மா, மனதை நோக்கிப் பாடும் பாடல் இது.

எந்த விதமான துணையும் இல்லாமல், பிடிமானமும் இல்லாமல், துயரத்திலேயே சிக்கித் தவித்து, வெளியேற வழி தெரியாமல், வழி தெரிந்தாலும் செயல்படாமல் இருக்கிறோமே! நெஞ்சே! இப்படிப்பட்ட துயரமான நிலையிலும், சிவபெருமானிடம் அன்பு வைக்க மாட்டேன் என்கிறாயே! என்னுடன் சிவபெருமானிடம் வா! அதன் பின், விளையும் ஆனந்தத்தை நீயே அனுபவித்துப் பார்!’’ என்று மனதை நோக்கிப் பாடுவதாகப் பாடல் அமைந்திருக்கிறது.
தலைசிறந்த வேதாந்த கருத்தைச்சொல்லும் பாடல் இது.

அவரவர் தமக்குத்தாமே, மனது வைத்து துயரங்களில் இருந்து விடுபட வழியைத் தேடி, இறைவனைத் துணை கொண்டு துயரங்களில் இருந்து விடுபட வேண்டுமே தவிர, அடுத்தவர் யாராலும் உதவ முடியாது. உதாரணமாக, ஓர் ஊருக்குப் போகிறோம். திரும்பவழி தெரியவில்லை. யாராவது, வழி தெரிந்த ஒருவரின் துணை கொண்டு திரும்பி வருகிறோமல்லவா? அதுபோல, நாம் இந்த பூமிக்கு வந்து பிறந்து விட்டோம். வழி தெரியவில்லை. துயரத்தில் சிக்கித் தவிக்கின்றோம். மற்றவர்களால் நம்மை மீட்க முடியாது. இறைவனின் துணை மட்டுமே நம்மை மீட்கும்.

இதற்கெல்லாம், (நம்) மனது வழிப்பட வேண்டும். அதனால்தான், தன் மனதை நோக்கிப் பாடுகிறார் திருமூலர். இப்படித் திருமூலர் தன் மனதை நோக்கிப் பாடியதைப் போல, பட்டினத்தாரும் தன் மனதுக்கு உபதேசம் செய்வதைப் போலப் பாடியிருக்கிறார்:ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல் அறமும் நட்பும் நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு மனமே!

உனக்கு உபதேசம் இதே. நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை அடர்ந்த சந்தை கூட்டமென்றே இரு வாழ்வைக் குடம் கவிழ் நீர் ஓட்டமென்றே இரு நெஞ்சே உனக்குபதேசம் இதே திருமூலர், பட்டினத்தார் முதலான மகான்களே இப்படி வழி காட்டியிருக்கும்போது, நமக்கென்ன கவலை? நாமும் நம் மனதை நோக்கி, அதேபோல உபதேசித்து விடலாமே, இது ஒரு பெரிய விஷயமா என்ற எண்ணம், சாதாரணமாகத் தோன்றும். ஆனால், கொம்பாதி கொம்பர்கள் எல்லாம் கவிழ்ந்த இடம் இது.

அருந்தமிழ்ப் பாடல்களை அமுதமயமாகப் பாடிய, அத்வைத மகாஞானியான தாயுமானவ ஸ்வாமிகள் கதறுகிறார்: ‘‘எத்தனை விதங்களில் கற்கினும் கேட்கினும் என் இதயம்தான் ஒடுங்கவில்லையே!’’ அவரே அப்படிப் புலம்பி இருக்கும்போது, நாம் எந்த மூலைக்கு!அப்படிப்பட்ட தவராஜ சிங்கங்கள் மனசுக்குச் சொன்னதைப்போல, நாம் நம் மனதிற்கு உபதேசம் செய்கின்றோமோ, இல்லையோ, நாம் நம் மனதிற்குச் செய்வதைத் திருமூலர் அடுத்த பாடலில் சொல்கிறார்:

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்றவாறே.
(திருமந்திரம்-2901)

கருத்து: அறிவும் அறியாமையும் (கொட்டியும் ஆம்பலும் போல) பூத்த சம்சார (குளத்தில்) சாகரத்தில், நாம ரூபங்களாகிய எட்டியையும் வேம்பையும் விட்டுவிட்டு, சத்து, சித்து, ஆனந்தம் எனும் (வாழை, கற்கண்டு, தேன்) மூன்றையும் அனுபவிக்காதவர், கவர்ச்சி நிறைந்த உலக போகங்கள் எனும் எட்டிப்பழத்தை நாடி வீணாகிப் போகிறார்கள்.

அபூர்வமான பாடல் இது. ஏதோ கொட்டி, ஆம்பல், எட்டி, வேம்பு என அண்ணாச்சி கடையில் கறிவேப்பிலை, கொத்தமல்லி கேட்பதைப் போன்ற பாடல் இது என எண்ணி ஏமாந்து போகக் கூடாது.தண்ணீர் இல்லாத குளத்தில், பார்த்தால் பார்வைக்கு எதுவுமே தெரியாது. அதே குளத்தில் தண்ணீர் ஊறத் தொடங்கியதும் அல்லது மழை பெய்து குளத்தில் நீர் சேரத் தொடங்கியதும், கொட்டியும் ஆம்பலும் தாமே முளைக்கத் தொடங்கி பூக்கவும் பூக்கும். அது போல, இந்த சம்சார சாகரத்தில் அறிவும் அறியாமையும் சேர்ந்தே முளைக்கின்றன; வெளிப்படுகின்றன.

அதாவது, அறிவின் மூலமாக ஒவ்வொன்றையும் நாம் அறிய அறிய, இவ்வளவு நாட்கள் அதைத் தெரிந்து கொள்ள வில்லையே என்ற அறியாமையும் வெளிப்படும். சரி, அத்துடன் நிற்கிறதா என்றால், இல்லை. நம் அறிவின் மூலமாக அனைவரையுமே, அறியாமை நிறைந்தவர்களாக (முட்டாள்களாக)க் கருதுகிறோம்;

அல்லது நிரூபிக்கத் தொடங்குகிறோம். அத்துடன் நாம, வடிவங்களின் மனதை இழக்கிறோம். அதாவது, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, மக்கள் எனும் பெயர்களிலும் அவர்களின் வடிவங்களிலும் நம்மை இழக்கிறோம்; ஒவ்வொருவரிடமும் அவர்களால் நமக்கு என்ன கிடைக்கும் என்று, மனது ஆராய்ச்சி செய்து அசை போடுகிறது.

கடைசியில்தான், நாம் விரும்பியது எல்லாம், நமக்குக் கிடைத்தது எல்லாம், எட்டிக் காயாகவும் அல்லது பழமாகவும் வேம்பாகவும் கசக்கின்றன. இருந்தாலும் பளபளப்பான, அழகான எட்டிப்பழத்தைக் குழந்தைகள் விவரம் தெரியாமல் விரும்புவதைப் போல, உலக போகங்களிலேயே மனதைச் செலுத்தி மேலும் மேலும் துயரச் சேற்றில் ஆழ்கிறோம். ஆனந்தத்தை வழங்கக்கூடிய ஆண்டவனிடம் மனது ஈடுபடமாட்டேன் என்கிறது.

இப்பாடலில், வேறொரு விளக்க உரையுமுண்டு. தத்துவமயமான அந்த விளக்கம் இப்பாடலில் சொல்லப்பட்ட கொட்டி-புற நிலைத் தத்துவங்கள், ஆம்பல்-உள் நிலைத் தத்துவங்கள், குளம்-பஞ்ச பூதங்களால் ஆன (நமது) உடல். எட்டி-ஆணவமலம், வேம்பு - மாயை. வாழை-ஜீவாத்மா (கற்கண்டு) கட்டி -சத்தினி பாத விவேகம். தேன் - தலைவன் இறைவன்.இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு, தத்துவார்த்தத்தைப் பார்க்கலாம்.

பஞ்சபூதங்களால் ஆன இந்த உடம்பு உள்ளே தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல, வெளியே சுகங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது. ஆணவம் தலை எடுக்கிறது; மாயை சூழ்கிறது. அந்த நேரத்தில் அம்பிகையின் அருட்சக்தி (நமக்கு) நல்லது-கெட்டதை உணர்த்துகிறது.

ஆனால், நாமோ உண்மையை உணராமல், கற்கண்டு கடினமாக இருந்தாலும் இனிமையாக இருப்பதை உணராமல், பளபளத்த தோற்றம் கொண்ட எட்டிப் பழத்தை விரும்புவதைப் போல, இறை இன்பத்தை உணராமல் அடையாமல் இறைவனுடன் இரண்டறக் கலக்காமல், அறியாமையிலேயே உழன்று கொண்டிருக்கிறோம். பளபளப்பில் புத்தியைச் செலுத்தாதே, பகவானிடம் புத்தியைச் செலுத்து என்கிறார் திருமூலர்.

(மந்திரம் ஒலிக்கும்)