கண்ணன் ஏன் வெண்ணெய் திருடினான்?



ஊத்துக்காடு, ஊத்துக்குளி - இந்த இரு ஊர்களுக்கும் பெயர் பொருத்தம் தவிர, இன்னொரு பொதுப் புள்ளியும் உண்டு: வெண்ணெய்!ஊத்துக்குளியில் வெண்ணெய் ஃபேமஸ். இன்னொரு பக்கம் ஆயர்ப்பாடியில் வெண்ணெயை அள்ளி அள்ளி உண்ட கண்ணனை விதவிதமாகக் ‘கிருஷ்ண கானம்’ பாடிய வேங்கட சுப்பையரின் ஊர், ஊத்துக்காடு.

‘அலைபாயுதே’, ‘குழலூதி மன மெல்லாம்’,  ‘பால் வடியும் முகம்’ என்று ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் ஏராளமான பாடல்கள் கர்நாடக இசை மேடைகளிலும், மக்களிடையேயும் நன்கு பிரபலமானவை. வெண்ணெய் உண்ணும் கண்ணனின் அழகை, குறும்பை அவர் பலவிதமாகப் பதிவு செய்துள்ளார். அதில் கொஞ்சம் நாமும் அள்ளி உண்போமா?

ஓர் ஆயர் குலப்பெண். அவளுக்குக் கண்ணன் மேல் அன்பு. ஆனால், அவனோ எந்நேரமும் வெண்ணெயைத் தின்றுகொண்டிருக்கிறான். இதனால் அந்தப் பெண்ணுக்கு வெண்ணெய் மேல் கோபம் வந்துவிடுகிறது. இப்படிப் பாடுகிறாள்:

பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே,
பச்சைப்பிள்ளைத்தனம் போகவில்லையே!
மிச்சம் மீதிஇல்லாது வெண்ணெய்களவாடுவான்,
அலைந்து வெண்ணெய் திருட, அதில் என்ன இருக்கோ!

இந்தக் கண்ணன் வாமணனாகப் பிறந்தபோது, பூமியையும் வானத்தையும் அளக்கும் அளவுக்கு பெரிதாக வளர்ந்தான். ஆனால், என்னபிரயோஜனம்? மனத்தில் இன்னும் சின்னக் குழந்தையாகத்தானே  இருக்கிறான்! பின்னே? ஊரில் யாருக்கும் ஒரு துளி வெண்ணெயை விட்டுவைக்காமல் களவாடிவிடுகிறான். அப்படி அலைந்து திரிந்து திருடித் தின்னும் அளவுக்கு அந்த வெண்ணெயில் அப்படி என்னதான் ருசி?

(ஆன்மிகம் இதழில் திரு.சொக்கன்
எழுதி வரும் பக்தித் தமிழ் தொடரின், புத்தகமாக வந்திருக்கும் முதல் பகுதியிலிருந்து.)