நட்புச் செல்வமே!



குறளின் குரல் 13

வள்ளுவரைப் பெரிதும் ஈர்த்த ஒன்று நட்பு. அதனால் தான் `நட்பு (79), நட்பாராய்தல் (80), பழைமை(81), தீ நட்பு (82), கூடாநட்பு (83),  என நட்பு குறித்துப் பல அத்தியாயங்களை எழுதி இருக்கிறார் அவர். `நட்பின் தன்மை, யாரை நண்பர்களாகக் கொள்ள வேண்டும் என்ற ஆராய்ச்சி, பழகிய நட்பை மதித்தல், கொள்ளக் கூடாத தீய நட்பு பற்றிய எச்சரிக்கை, மனத்தால் ஒட்டாத நட்பு பற்றிய விளக்கம்` என்பன போன்ற பலவற்றை அவர் கூர்மையான கண்ணோட்டத்துடன் விவரிக்கிறார். வள்ளுவருக்குப் பல உயர்வான நண்பர்கள் இருந்திருக்க வேண்டும்.

பொதுவாகவே பெரும் அறிவாளியாக இருப்பவர்கள் உயர்தரமான நண்பர்களைப் பெற்றிருப்பார்கள். `உன் நண்பன் யார் என்று சொல். நீ யார் என நான் சொல்கிறேன்!’ என ஒரு பழமொழி உண்டு. மக்கட்செல்வம் எனக் குழந்தைச் செல்வத்தைச் சொல்கிறோம். நட்பும் ஒரு செல்வம்தான். நட்புச் செல்வம் யாருக்குச் சரியாகவும் அதிகமாகவும் அமைகிறதோ அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். சந்தோஷமான வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

உறவும் நட்புமாகவே நடக்கிறது வாழ்க்கை. உறவு நேர்வது. நட்பு தேர்ந்தெடுப்பது. உறவில் ரத்த பந்தங்கள் அனைத்தும் தானாய் அமைவனவே. கணவன்-மனைவி உறவு மட்டும் தேர்வு செய்து ஏற்படுத்திக் கொள்வது. எனவே அந்தக் கணவன்-மனைவி உறவை மட்டும் சட்டத்தால் ரத்து செய்ய இயலும். மற்றபடி ரத்த சம்பந்தத்தால் நேர்ந்த எந்த உறவையும் ரத்து செய்ய இயலாது.

`இவள் என் மூத்த சகோதரி. இவர் என் ஒன்றுவிட்ட அண்ணன். இவள் என் மாமா பெண். இவர்களுடன் எனக்கு எந்த வகையிலும் சரிப்படவில்லை. எனவே இவர்கள் உறவை நான் முற்றிலுமாக ரத்து செய்ய விரும்புகிறேன்!’ என்று எந்த நீதி மன்றத்திலும் வழக்குத் தொடுத்து இத்தகைய உறவுகளை நாம் ரத்து செய்ய இயலாது. வாழ்நாள் முழுவதும் இவர்களைச் சகித்துக் கொண்டு இவர்களுடன் வாழ்ந்துதான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. வேண்டுமானால் சண்டை போட்டுக் கொண்டு விலகி இருக்கலாம். அப்படி விலகி இருந்தாலும் உறவு ரத்தாவதில்லை.

நம் ஆன்மிக மரபின்படி இவர்கள் யாரேனும் காலமானால் நமக்குத் தீட்டு உண்டு. நாம் எத்தனை சண்டைபோட்டு விலகியிருந்தாலும் அந்தத் தீட்டு கட்டாயம்உண்டு! ரத்த சம்பந்த உறவுகள் நமக்குப் பிடித்தாலும் பிடிக்காமல் போனாலும் ஒருபோதும் ரத்தாவதே இல்லை. ஆனால், நட்பு விஷயம் அப்படியல்ல. விரும்பினால் நண்பர்களாக இருக்கலாம். இல்லையென்றால் பிரிந்துவிடலாம். நமக்கு முற்றிலும் சரிவராதவர்களோடு நாம் நட்புப் பாராட்ட வேண்டிய அவசியம் என்ன?
நட்பு நாம் தேர்ந்தெடுக்கக் கூடியது என்பதால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

`கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.’சொல்லொன்றும் செயலொன்றுமாக இருப்பவர்களின் நட்பு பெரும் கெடுதலைத் தரக் கூடியது. அப்படிப்பட்டவர்களைக் கனவிலும் நண்பர்களாகக் கொள்ளக் கூடாது.சிலர் நம்மைப் பாராட்டுவார்கள். பணிவோடு கைகூப்பித் தொழுவார்கள். அவர்களை நாம் நண்பர்களாகக் கொள்ளலாமா? வேண்டவே வேண்டாம் என அறைகூவுகிறது வள்ளுவம்.

`தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து.’கைகூப்பித் தொழுதானே என இரக்கப்பட்டு அவனை நம் நண்பனாகக் கருதினால் அந்தக் கூப்பிய கைக்குள்ளே நம்மைக் கொல்வதற்கான கருவியே கூட இருக்கலாம் என எச்சரிக்கிறார் வள்ளுவர். என்ன தீர்க்க தரிசனம் வள்ளுவருக்கு! வள்ளுவர் நெறியிலேயே வாழ்கிற ஒருவர் இந்தக் குறளின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாததால் பின்னால் கொல்லப்படுவார் என்பதைப் பல நூற்றாண்டுகள் முன்னாலேயே உணர்ந்த வள்ளுவரை எண்ணியெண்ணி நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

திருக்குறள் நெறிப்படித் தூய வாழ்வு வாழ்ந்தார் மகாத்மா காந்தி. அவரை நோக்கி வந்தான் கோட்சே. கைகூப்பினான். அவனை நட்புடன் நிமிர்ந்து பார்த்தார் மகாத்மா. எல்லோரையும் நல்லவர்கள் என நம்பித் தன்னைச் சந்திக்க அவர் அனுமதித்தது சரியா? சரியான பாதுகாவலைத் தனக்கு ஏற்படுத்திக் கொள்ள அவர் முன்வராதது சரியா? சரியல்ல என்று கோட்சேயின் துப்பாக்கி, சப்தத்துடன் பிரகடனம் செய்தது. அவன் தொழுத கைக்குள் மறைந்திருந்த கொலைக்கருவி, அவரைச் சுட்டுத் தள்ளியது.

சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் இது  போன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. மெய்ப்பொருள் நாயனாரைச் சிவனடியார் வடிவில் சந்திக்க வந்தான் அண்டை நாட்டு மன்னன் முத்தநாதன். வீரத்தால் வெல்ல முடியாத எதிரியான மெய்ப்பொருளாரைச் சூழ்ச்சியால் கொல்ல நினைத்தான் அவன்.

 `மைபொதி விளக்கே அன்ன மனத்திடைக் கறுப்பு வைத்து’ வந்த அவன், சிவனடியார்போல் தோற்றம் காட்டி, மறைத்து வைத்திருந்த கொலைக்கருவியால் மெய்ப்பொருளாரைக் கொன்று முடித்தான். தன்னை நாடி வருவோரில் யார் நண்பர், யார் பகைவர் என்று கண்டறியாவிட்டால் பெரும் ஆபத்து நேரும் என்பதையே பெரியபுராணமும், காந்தி வாழ்வும் நமக்கு உணர்த்துகின்றன.

நமக்குக் கெடுதல் வரும்போது நல்ல நண்பர்கள் நம்முடன் இருப்பர். அல்லாதார் நம்மை விட்டு விலகுவர். இது உலக இயல்பு. எனவே நமக்கு ஏதேனும் கெடுதல் வந்தால், அப்போது யார் யார் நம்முடன் இருக்கிறார்கள் என்றறியும் அளவுகோலாக அந்தக் கேட்டினைக் கருதி, நம் நண்பர்களில் உண்மையான நண்பர்கள் யார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

`கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.’அவ்வை தன் மூதுரையில் இதே கருத்தை வலியுறுத்துகிறார். குளம் வற்றி விட்டது. குளத்தைச் சார்ந்து வாழ்ந்த பறவைகள் பறந்து விட்டன. ஆனால், அதே குளத்தில் வாழ்ந்த நீர்ச் செடிகள், குளம் வற்றியபோதும் அதிலேயே தங்கித் தாங்களும் குளத்தின் துயரைப் பகிர்ந்து கொள்கின்றன. போலி நண்பர்கள் பறவைகளைப் போல் சொந்த ஆதாயம் தீர்ந்ததும் பறந்து விடுவார்கள். உற்ற நண்பர்கள் நீர்ச்செடிபோல் உடனிருந்து துன்பத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். எனவே அத்தகைய நண்பர்களைத் தேடிப் பெறவேண்டும்.

`அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர், அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு!’

பார்த்தால்தான் நட்பா? நேரில் அதிகம் பழகினால்தான் நட்பா? தான் பார்த்தேயிராத ஒருவரின் பண்புநலனைக் கேள்விப்பட்டு, அதனால் கவரப்பட்டு, அவரை நண்பராகக் கொண்டு அவருக்காக உயிரை விட முற்படுபவர்களும் உண்டு. `புணர்ச்சி பழகுதல் வேண்டாஉணர்ச்சிதான்நட்பாம் கிழமை தரும்.’நட்பைப் பொறுத்தவரை எத்தனை கால நட்பு என்பது முக்கியமல்ல. உணர்வின் தீவிரம் எத்தகையது என்பதே முக்கியம்.

கோப்பெருஞ்சோழன் மன்னன். பிசிராந்தையாரோ ஏழைப் புலவர். ஆனால், இருவரும் ஒருவரது குணத்தால் மற்றவர் கவரப்பட்டு ஒருவர்பால் ஒருவர் மாறாத நட்புக் கொண்டார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் இருவரும் சேர்ந்து இறந்தார்களே, அதற்குமுன் ஒருவரையொருவர் சந்தித்ததே இல்லை!
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்நீக்க முடிவுசெய்தான்.

தன் அருகே தன் நண்பரான பிசிராந்தையாருக்கும் ஒரு குழி வெட்டச் சொன்னான். எல்லோரும் நகைத்தார்கள். நட்புக்காக உயிரை விடுவானா இதுவரை நேரில் பார்த்திராத நண்பன்? ஆனால் என்ன ஆச்சரியம்! சோழன் சொன்னபடி புலவர் வந்தார். தானும் உடன் வடக்கிருந்து உயிர் துறந்தார். இதைப் பார்த்த இன்னொரு புலவரான பொத்தியாருக்கு அளவுகடந்த வியப்பு.

`வருவான் என்ற கோனது பெருமையும்
அதுபழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே!’
என அதிசயித்துப் பாடினார் அவர்.
வள்ளுவத்திற்கு வரலாறு சாட்சிக்
கையெழுத்துப் போட்ட சரித்திரம் இது.

`நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மெற்சென்று இடித்தற் பொருட்டு.’
`முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.’

நல்ல நண்பன் முகத்திற்கு நேரே சிரிப்பவனாக மட்டும் இருக்க மாட்டான். ஒருவன் குற்றம் செய்தால் நண்பன் அந்தக் குற்றத்தைச் சுட்டிக்காட்டி அவனை இடித்துரைப்
பவனாகவும் வழி நடத்துபவனாகவும் இருப்பான். நல்ல நட்பின் இலக்கணம் என்பது ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டே இருப்பதல்ல. தவறும்போது தட்டிக் கேட்பதும் தான்.

`உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.’

ஆடை நழுவினால் கை எவ்வளவு அவசரமாக மானத்தை மறைக்கிறது? ஒருவனுக்குத் துன்பம் வந்தால் அந்தத் துன்பத்தை நீக்க உடனே ஓடிவந்து கைகொடுப்பவன் தான் நல்ல நண்பன். மானம் காப்பவன் நண்பன் என்பது இந்தப் பொருளில்தான். `நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு’சான்றோர்களின் நட்பு வளர் பிறைபோல் வளரும். அல்லாதோரின் நட்பு தேய்பிறையாய் மெலியும்.

பரம ஏழையான குசேலருக்கும் பரமாத்மாவான கண்ணனுக்கும் இருந்த நட்பை பாகவதம் பேசுகிறது. பாரதியார் கண்ணனை நாயகனாய், நாயகியாய், ஏவலனாய், தந்தையாய், தாயாய் பல நிலைகளில் கண்டு பாடினார். வாழ்க்கையில் குசேலர் தானே பாரதியார்? கடைசிவரை அவரைத் துரத்திய வறுமையை ஓரளவேனும் விரட்ட அவருக்கு உதவியவர்கள் பரலி சு. நெல்லையப்பர் போன்ற அவரது நண்பர்கள்தான் அல்லவா? நண்பர்களிடம் தானே அவர் உரிமையோடு பொருள் கேட்க முடிந்தது? எனவே கண்ணனை பாரதி நண்பனாய்க் கண்டு கவிதை எழுதியபோது, `கேட்டபொழுது பொருள் கொடுப்பான், சொல்லும் கேலி பொறுத்திடுவான்!’ எனத் தன் நண்பர்கள் தனக்குச் செய்த உதவிகளைக் கண்ணன் செய்ததாய் உணர்ந்து எழுதுகிறார்.

ராமாயணத்தில் குகன், சுக்ரீவன், விபீஷணன் ஆகிய ராமனின் நண்பர்கள், ராமனால் சகோதரர்களாகவே உணரப்பட்டவர்கள். ராமனுக்கு உதவியவர்கள். ராமனின் இந்த மூன்று நண்பர்களில் உயர்ந்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது. சுக்ரீவன் ராமனுக்கு உதவினாலும் கூட அவன் நட்பு கடைநிலை நட்புத்தான். ஏனென்றால் அவன் உதவி வாலி வதம் என்ற நிபந்தனையின் பேரில் நடக்கிறது. எனக்கு ஒன்றைச் செய்தால் உனக்குஇன்னொன்றைச் செய்வேன் என்னும் ஒப்பந்த நட்பு அது.

விபீஷணன் எதையும் வேண்டவில்லை என்றாலும், அவனுக்கு இலங்கை அரசன் என்ற பதவி ராமனால் வழங்கப்பட்டு விடுகிறது. ஆக ராமன்மேல் விபீஷணன் கொண்ட நட்புக்குப் பரிசு கிடைத்துவிடுகிறது. ஆனால், ஏழை வேடனான குகனோ எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்கவும் இல்லை. எதிர்பாராததைப் பெறவும் இல்லை. நட்புக்காகவே ராமன்மேல் நட்புக் கொண்ட பக்தன் அவன். அவன் நட்பே தெய்வீகப் படிக்கட்டில் உயர்ந்த நிலையை எட்டுகிறது.

மகாபாரதம் நட்பின் இலக்கணமாக கர்ணனைப் படைத்துக் காட்டுகிறது. தன் நண்பன் துரியோதனனுக்காக உயிரையும் விடச் சித்தமாகிறான் கர்ணன். இறப்போம் என்பது தெரிந்தே போரிடுகிறான். துரியோதனன் மனைவி பானுமதியின் மேகலையைப் பிடித்து இழுத்ததும் முத்துகள் சிதற, தற்செயலாக அங்கு வந்த துரியோதனன் `எடுக்கவோ கோக்கவோ?’ எனக் கேட்டானே? அந்த இரு வார்த்தைகளை விட நட்பின் மகத்துவத்தைக் கொண்டாட வேறு வார்த்தை எந்த மொழியிலேனும் உண்டா?தற்கால இலக்கியத்தில் தடம்பதித்த சா. கந்தசாமியின் `சாயாவனம்’ என்ற உயர்தர நாவல், இன்றைய நட்பின் யதார்த்த நிலையைப் பேசுகிறது.

வாழ்க்கைச் சூழலில் பிரிந்த உற்ற நண்பர்கள், காலப்போக்கில் மீண்டும் சந்தித்துக் கொள்ளும்போது எத்தகைய உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை உள்ளது உள்ளபடி மிகையில்லாமல் சித்தரித்து வாசகர்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பெற்றுவிட்டது அது. ஒப்பீட்டு மனோபாவம் பெருகியுள்ள இன்றைய சூழலில், இன்றைய வணிக மயமான காலகட்டத்தில் உயர்ந்த நட்புக்கு என்ன இடமிருக்கிறது அல்லது உண்மையில் இடமிருக்கிறதா என்று நம்மை யோசிக்க வைக்கிறது அந்நாவல்.

நட்பை வானளாவப் போற்றிய
வள்ளுவரின் உள்ளம் உயர்ந்த
நட்புக்கு ஓர் உவமையைத் தேடுகிறது.
உலகில் வேறு
எந்தப் புலவனும் நட்புக்குச் சொல்லாத
ஓர் அற்புத உவமையைத் தன் குறள்
வெண்பாவில் சொல்லி நம்மை வியக்க
வைக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
`நவில்தொறும் நூல்நயம் போலும்
பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு’

`பண்புடையவர்கள் தங்களுக்குள்ளே கொள்ளும் நட்பு படிக்கப் படிக்க மீண்டும் மீண்டும் புதிது புதிதாக நயங்களைப் புலப்படுத்தும் புத்தகத்தைப் போன்றது. அத்தகைய நட்பு பழகப் பழக என்றென்றும் இன்பம் தருவது’ என நல்ல புத்தகத்திற்கு நல்ல நட்பை உதாரணமாகக் கூறுகிறார் அவர்.

 வள்ளுவர் வழியில் நாம் இப்படிச் சொல்லலாம்:திருக்குறள் பயிலப் பயில எப்படிப் புதுப்புது நயங்களைப் புலப்படுத்திக் கொண்டே இருக்கிறதோ அதுபோல் பண்புள்ள சான்றோர்களின் நட்பும் பழகப் பழக இனிக்கும்! எனவே நல்ல சான்றோர்களுடன் நாம் நட்புப் பாராட்டுவது என்பது, நம் கையில் எப்போதும் திருக்குறள் புத்தகத்தை வைத்துக் கொண்டிருப்பதைப் போன்றது!

(குறள் ஒலிக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்