கல்விக் கடவுளரின் கனிவான தரிசனம்



கூத்தனூர்

திரிபுர சுந்தரியாகிய அம்பிகை நமக்காக ஏற்றுக் கொண்ட வடிவங்களில் சிறப்பாகப் போற்றப்படுபவை மூன்று: துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி. இவர்களில், தன்னை நாடி வரும் அடியார்க்கு தன் பேரருளை அள்ளி வழங்கும் பொருட்டு, கருணாகடாட்சியாய் எளிய திருக்கோலத்துடன் சரஸ்வதி வீற்றிருக்கும் இடம்தான் கூத்தனூர்.

திருவாரூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் பஸ் நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூத்தனூர். இதற்கு ஹரிநாகேஸ்வரம் என்ற பெயரும் உண்டு.

மாமன்னன் இரண்டாம் ராஜராஜன், தன்     காலத்தில் அவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்கு இவ்வூரை பாரிசாக வழங்கினான். அதனால் கூத்தன் ஊர் - ‘கூத்தனூர்’ எனப் பெயர் பெற்றது.  தவம் செய்யும் முனிவர்கள் அமைதியை தேடி சென்றதை படிக்கிறோம். ஞான சொரூபமான தட்சிணாமூர்த்தியின் உருவமும் இதையே நமக்கு உணார்த்துகிறது. சரஸ்வதியும் அப்படி தவம் செய்ய கருதினாள். பூவுலகில் அமைதியும் அழகும் நிறைந்த ஓரிடத்தை தேர்ந்தெடுத்தாள். அந்த புண்ணிய தலம்தான் இன்றைய கூத்தனூர். அம்பாளின் ஊர் ஆதலால் ‘அம்பாள்புரி’ என்றும் அழைக்கப்படுகிறது.

கவிச் சக்கரவர்த்தி எனப் பெயர் பெற்ற வரான ஒட்டக் கூத்தர், வரகவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜித்தார். கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்தும், தட்சிண வாஹினியாய் ஓடும் ஹரிசொல் மாநதியின்   நீரினால் அபிஷேகம் செய்தும், நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வரலானார். கூத்தனூரின் தொண்டில் மகிழ்ந்தநாமகள், தம் வாய் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவியாக்கினாள்.

இக் கலைமகளின் அருளைப் பெற்ற இன்னொரு பக்தனும் உண்டு. அவர் கும்பகோணத்தை சேர்ந்த சாரங்கபாணி தீட்சிதர். வித்யா உபாசகரும், காஞ்சி முனிவரால் அன்னதான பிரபு என அழைக்கப்பட்டவரும், பல தர்ம காரியங்களை முன்னின்று நடத்தியவருமான ராமானந்த யதீந்திரர், சரஸ்வதியை வழிபட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பு மகாசமாதி அடைந்தார்கள்.

இத்தகு அருள்மிகு ஞான சரஸ்வதியின் திருக்கோலத்தை காணக் கண்கள் ஆயிரம் வேண்டும். லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கராயர்,
‘‘இவ்வம்பிகையின் எழிலுருவை கண்டு களிப்பதற்கு, முன்செய் புண்ணியம் வேண்டும்’’ என்கிறார். சரஸ்வதியின் வடிவத்தை தேவி மகாத்மியம் இவ்வாறு கூறுகிறது:
‘‘அசுரர்களை அழிக்க அம்பிகை எடுத்த உருவம் அது.

ஆனால், தன் குழந்தைகளுக்கு ஞானப்பால் ஊட்ட திருவுள்ளம் கொண்டதால் அமைதியே சொரூபமாக கொண்டாள். வெள்ளுடை தரித்து, வெண்தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை, இடக் கீழ்க் கையில் புத்தகமும், வலக் கீழ்க்கையில் சின் முத்திரையும், வல மேல் கையில் அட்சர மாலையும், இட மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி ஜடாமுடியுடன், துடி இடையும், கருணை புரியும் இரு விழிகளும், ஞானசக்ஷுஸ் என்ற மூன்றாவது கண்ணும், புன்னகை தவழும் திருவாயுமாய் கிழக்கு முகமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள். அன்னையின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.


செட்டிப் புண்ணியம்

அது 1848ம் வருடம். ஊரின் மையமாய் வரதராஜப் பெருமாள் அருட்குடி கொண்டிருந்தார். அவ்வூரைச் சேர்ந்த ராவ்சாகிப் ரங்காச்சார் ஸ்வாமி எனும் பரமபக்தர் திருவஹிந்திரபுரம் தேவநாத ஸ்வாமி மீது பெரும் பக்தி பூண்டொழுகினார். யோகஹயக்ரீவர் மீது அளவிலா பிரேமை கொண்டார். தம் கிராமத்திற்கு தேவநாதப் பெருமாளையும், பரிமுகப் பெருமானையும் எழுந்தருளச் செய்ய வேண்டும் என பேரவா கொண்டார்.

திருவஹிந்திரபுரம் தேவஸ்தானத்தின் அனுமதியின் பேரில் 1848ம் வருடம், வைகாசி 22ம் தேதி  தேவநாதப் பெருமானின் உற்சவ விக்ரகத்தையும், வேதாந்த தேசிகர் ஆராதித்த யோக ஹயக்ரீவ மூர்த்தியையும் செட்டிப்புண்ணியத்திற்கு எழுந்தருளச் செய்தார். ஊர், கோலாகலமாய் வரவேற்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. எம்
பெருமானின் அருள் மழையில் நனைந்தது. செட்டிப் புண்ணியம் செய்த புண்ணியம்  என்னே என்று அருகிலுள்ள ஊர் மக்கள் வியந்தார்கள். எம்பெருமானை சேவித்தார்கள்.

இக்கோயிலில் வரதராஜப் பெருமாளும், தேவநாத ஸ்வாமியும், யோக ஹயக்ரீவரும் இன்றும் அருளாட்சி செய்து வருகிறார்கள். இங்குள்ள ஹயக்ரீவர்
அருளால் கல்வி கேள்விகளில் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். ஞான மூர்த்தியான இவர், கல்வி ஞானத்தை வாரி வழங்குகிறார். இங்கு வந்து ஹயக்ரீவ பிரசாதமாய் கற்கண்டைப் பெற்றுக் கொண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்போர் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும்.

தேர்வின் போது வேண்டிக் கொண்டு, எழுதுகோலை ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து எடுத்துச் செல்லும் மாணவ, மாணவியர்களும் ஏராளம். செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள சிங்கப் பெருமாள் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் ஹயக்ரீவர் ஆசி வழங்கத் தயாராக உள்ளார்.

நங்கநல்லூர்

சென்னை புறநகர் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தக் காலக்கட்டத்தில் 1967ல் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிதான் நங்கநல்லூர். அங்கே சுமார் நூறு   குடும்பங்கள் வசித்து வந்தன. அந்த குடும்பத்தினர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கையில் ஈர்க்கப்பட்டு, அதை வளர்க்க ராமானுஜரின் வழித்தோன்றலான தேசிகருக்கும் அவருடைய ஆராதனை பெருமாளாகிய ஹயக்ரீவ பெருமாளுக்கும் தனியாக ஒரு கோயில் கட்ட முடிவு செய்தார்கள்.

அதற்காகவே  வேதார்த்த ஸ்தாபன சபையை உருவாக்கி, விசிஷ்டாத்வைத பிரசாரம் செய்து வந்தார்கள். அந்த குடும்பங்கள் அமைந்திருந்த வீதிகளில் விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் செய்தபடி வலம் வந்தார்கள். நாராயணனின் நாமத்தால் ஈர்க்கப்பட்ட நிவாசன்-ஜெயலட்சுமி தம்பதி ஹயக்ரீவருக்கு ஆலயமெழுப்ப தங்களது நிலத்தை நன்கொடையாக வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து நல்ல உள்ளங்கள் பலரின் கூட்டு முயற்சியால் மிக அழகாக ஆலயமெழுப்பப்பட்டு, 1972ம் ஆண்டு பாஞ்சராத்ர ஆகமப்படி குடமுழுக்கு நடைபெற்றது. அன்று முதல் லட்சுமி ஹயக்ரீவர் அமர்க்களமாய் அங்கு அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். 1976ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. 1982-83ல் ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார் சந்நதிகள், மண்டபங்கள் கட்டப்பட்டன.

மண்டப தூண்களில் தசாவதார மூர்த்திகளின் சுதைச் சிற்பங்கள் வடிக்கப்பட்டன.  1992ல் கொடிமரம் நாட்டப்பட்டு சக்கரத்தாழ்வார் சந்நதியும் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஹனுமன், கருடன், சேஷன் என பல வாகனங்கள் செய்யப்பட்டு பிரம்மோத்ஸவம் துவங்கியது. ஹயக்ரீவரின் அவதாரத் திருநாள் ஆவணி திருவோணம். ஆகையால் ஆவணி மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெறுவது வழக்கமானது. படிப்படியாக விரிவுபடுத்தப்பட்ட இந்த கோயில் இன்று சென்னையில் குறிப்பிடத்தக்க புனிதத் தலமாக விளங்குகிறது.

கர்ப்பக் கிரகத்தில் நெய் விளக்குச் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பெருமாளுக்கு சூட்டிய மாலைகளிலிருந்து அவரது அருளோடு கலந்து வரும் நறுமணம் நம் மனதை நிறைக்கிறது. கண்களையும் மனதையும் கூர்மையாக்கிக் கொண்டு மூலவரைப் பார்க்கிறோம். பெரிய திருமேனியுடன் பெருமாள் காட்சியளிக்கிறார்.

ஹயக்ரீவர் ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக இருப்பவர். எல்லா கலைகளுக்கும் உறைவிடமாகத் திகழ்பவர். மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியையும் குதிரையின் கழுத்தையும் உடையவர். இவர் ஞானபிரான் என்று போற்றப்படுபவர். ஹயக்ரீவரை துதிப்போருக்கு தெளிவான ஞானம் கிடைக்கும். குழப்பமான சூழ்நிலையில் இவரை தியானித்தால் சரியான முடிவு கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க ஹயக்ரீவரை தரிசிக்கிறோம் என்கிற போதே மனம் பளிங்கு போன்று தெளிவாகி பலமாகிறது.

 கிழக்கு நோக்கி குதிரை திருமுகத்துடன் அமர்ந்திருக்கும் பெருமாளின் இடது தொடையில் வித்யாலட்சுமி தாயார் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறார். நான்கு திருக்கரங்களோடு காட்சி தரும் ஹயக்ரீவர், வலது கைகளில் வ்யாக்யா முத்திரைகாட்டியும், வலது மேல் கையில் சக்கரத்துடனும் இடது கையில் புத்தகமேந்தியும் இடது, மேல் கையில் சங்குடனும் காட்சி தருகிறார்.

உற்சவர்களான தேவி-பூதேவி
சமேத தரன், மகாலட்சுமி தாயார்,
லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி நரசிம்மர்
மற்றும் செல்வர் ஆகியோரும் மூலவர்
சந்நதியில் நமக்கு அருள் தருகிறார்கள்.

ஆரத்தியாக காட்டும் நெய் தீபத்தில் பெருமாள் மிக அழகாய் காட்சி தருகிறார். மன மாயைகள் அந்த ஒளியில் மறைவதை பூரணமாக உணரமுடிகிறது. அவனது அருள் மழையில் நனைந்த மகிழ்வோடு பிராகாரத்தில் வலம் வரத் தொடங்குகிறோம். சக்கரத்தாழ்வார் சந்நதியை அடைகிறோம். முன்புறம் 16 கரங்களில் 16 ஆயுதம் தாங்கி சக்கரத்தாழ்வாராகவும், பின்புறம் நான்கு திருக்கரங்களில் சக்கரங்கள் கொண்டு யோக சக்கர நரசிம்மராகவும் காட்சி தருகிறார்.எழும்பூர்-தாம்பரம் மார்க்கத்தில் உள்ள பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில், நங்கநல்லூர் லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

திருக்கண்டியூர்

சாதாரணமாக பிரம்மாவுக்கு வெறெங்கும் இத்தனை புராணச் சிறப்பு கோயில்களே இல்லை எனலாம். தேவ கோஷ்டத்தில் தனியே வீற்றிருப்பார் பிரம்மா. ஆனால், இத்தலத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் தம்பதி சமேதராக வீற்றிருக்கும் சந்நதி காண்போரை பரவசப்படுத்தும். பிரம்மாவின் தலையைத் திருகி எடுத்ததால் இத்தல ஈசனுக்கு பிரம்மசிரகண்டீசர் எனும் திருநாமம். பிரம்மாவுக்கென்று தனிக்கோயில் எனில் அது இதுதான். நல்ல கட்டமைப்பு கொண்ட ஜீவக்கலை ததும்பி நிற்கும் சிலை. வேறெங்கும் காணமுடியாத திகைப்பூட்டும் அதிசயம் இது.

மனிதனைப் படைத்த பிரம்மாவை அவரே படைத்துக் கொண்டாரோ என்று திணறடிக்கும் அழகு. நான்கு முகங்களிலும் ஞானத்தின் பூரிப்பு பரவிக் கிடக்கிறது. பேரானந்தச் சிரிப்பொன்று இடையறாது உதட்டில் பொங்குகிறது. இப்படியொரு சிலையை வேறெங்கேயாவது காணமுடியுமா என்பது சந்தேகமே.
அழகிய ஜடையின் அலங்காரமும், மார்பின் மேல் பரவியிருக்கும் ஹாரங்களும், பூணூலின் மெல்லிய நுணுக்கமும் பார்ப்போரை மயக்கும் கலையழகு. அதுமட்டுமல்லாது தனது கணவனோடு சாந்தமாகி அமர்ந்திருக்கும் சரஸ்வதி நான்கு கரங்களோடு வீற்றிருக்கிறாள்.

கல்வியும், ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞானவாணி. பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரியிறைக்கும் வெண்ணிறநாயகி. அவ்விரு தரிசித்து பொங்கும் படைப்பில் திரண்டு நிற்கும் ஞான அமுதத்தை அகத்தில் தரிப்போம். இத்தலம் தஞ்சாவூர்-திருவையாறு பாதையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது, திருக்கண்டியூர்.

உத்தமர் கோயில்

உத்தமர் கோயிலில் ஒரே வளாகத்திற்குள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் புருஷோத்தமர் என்ற திருநாமத்தோடு திருமாலும், அவருக்கு நேர் பின்புறம் மேற்கு நோக்கி பிட்சாண்டார் என்ற திருநாமத்தில் சிவபெருமானும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இவர்களோடு நான்முகனான பிரம்மாவும், தேவி சரஸ்வதியோடு இங்கு அருள்பாலிப்பதால் இத்தலம் மும்மூர்த்தி தலமாக வழிபடப்படுகிறது.

திருச்சி மாவட்டத் தலைநகரான திருச்சியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும், திருவரங்கத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ள பிட்சாண்டார் கோயில் என்ற உத்தமர் கோயில் திருமாலும், சிவபெருமானும் ஒரே ஆலய வளாகத்தில் எழுந்தருளியிருக்கின்ற அற்புதமான சிவ விஷ்ணு ஆலயமாகும்.
ஒவ்வொரு சிவாலயத்திலும் கருவறைக்கு வடகிழக்கே அமைந்துள்ள நவகிரக சந்நதியில் குருபகவான் அருள்பாலிக்கிறார். மேலும், கருவறையில் தென்புற கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியும் குருவாக வழிபடப்படுகிறார். தட்சிணாமூர்த்தி வடிவத்தில் 64 வகைகள் உள்ளதாக ஆகம நூல்கள் தெரிவிக்கின்றன. மேதா, ஞான, தாம்பத்ய, வீணா தட்சிணாமூர்த்தி போன்ற பல வடிவங்கள் உள்ளன.

திருப்பூந்துருத்தி

இத்தலத்தின் சிறப்பம்சமே இங்குள்ள வீணாதட்சிணாமூர்த்தியே ஆகும். ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தவர்களும், தேவர்களும், நாரதரும் வினவ பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார். குருவும் எழுந்தருளி வீணையை ஏந்தி மீட்ட நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர். இக்கோலம் வேறெங்கும் காணமுடியாத அற்புதம். இசையில் தேர்ச்சிபெற இத்தல தட்சிணாமூர்த்தியை வணங்குவோர் பெரிதும் சாதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தலம் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

வேதபுரி

தேனி-மதுரை வழியில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள அரண்மனைப் புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. சென்றால் வேதபுரியை அடையலாம். இங்கு பிரஜா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

திருநெய்த்தானம்

பிருகுரிஷி இத்தல லிங்கத்தின் மீது வில்வத்தளங்களை மெதுவாய் தூவி பூஜிக்க வில்வம் விசுவநாதனாக விளங்கும் விராட்புருஷனான சிவத்தை அதற்குள் அலையாக பரவிடச் செய்தது. சர்வசக்திமயமாக விளங்கும் வெண்ணிற நாயகி, வேதவாணி மகாசரஸ்வதியை அவ்வலை தவழ்ந்து நகர்ந்து அசைத்தது. எங்கேயோ மகேஸ்வரன் தம்மை முழுதுமாக முகிழ்த்திடத் தொடங்கிவிட்டார் என்றறிந்தவள் நாதனின் நாமத்தை வீணாகானத்தில் இசைத்து பூவுலகை மையல் கொள்ளச் செய்தாள். வாணியின் வீணையில் லயித்த மூலநாயகன் விநாயகன் தன்னை மறந்து கிடந்தான்.

வாணியும், கணபதியும், காமதேனுவும் ஒருசேர காவிரியின் கரையோரம் வந்தமர்ந்த திருக்காட்சியைக் கண்ட மஹரிஷி நெக்குருகினார். கோயிலின் உட்பி
ராகாரத்தைச் சுற்றி வரும்போது சரஸ்வதி பூஜித்ததற்கு ஆதாரமாக அழகான சரஸ்வதி வீணையேந்தி நாதம் பெருக்கும் சிலை காணுதற்கரியது. கலைமகளான சரஸ்வதி வழிபட்டதற்கு ஆதாரமாக அம்பாளின் திருநாமம் பாலாம்பிகை. பாலை என்று சரஸ்வதிக்கு ஒரு திருநாமம் உண்டு.

அதையே பால்யம் என தொணித்தால் இளமை என்று இன்னொரு பொருள் பிறக்கும். அப்பரடிகள் நெய்த்தானத்து நாயகியை ‘‘ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே’’ என அகங்குழைகிறார். தனது திருப்பார்வையின் சிறு வீச்சிலேயே துன்பமனைத்தையும் கலைகிறாள், பாலாம்பிகை. சரஸ்வதி பூஜித்ததால் கலைமகளின் இருப்பு திடமாக இருப்பதால் பாலாம்பிகையை வழிபட்டாலே சரஸ்வதியை வணங்கியதற்குச் சமமானது. திருநெய்த்தானம் எனும் தில்லைஸ்`தானம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

வேதாரண்யம்

கல்யாண வீட்டின் குதூகலமும், கூட்டமும் மறைக்காட்டு மணாளனான வேதாரண்யேஸ்வரர் சந்நதியில் நிறைந்திருக்கிறது. லிங்கத் திருமேனியில் எழுந்தருளியுள்ளவரை பார்க்கும் போது உள்ளம் சிறகாகிறது. வெண்ணீற்றின் மணம் கடற் காற்றாக அவ்விடத்தை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. பிராகாரத்தை வலமாக வருகையில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள்.

வேறெங்கும் காண முடியாத, வீணையில்லாத கைகளில் சுவடியோடு வீற்றிருக்கிறார். இத்தலத்து உமையம்மையின் குரல் இவள் யாழைவிட இனிமையாக இருப்பதால் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே அம்பாளின் திருப்பெயர் யாழைப்பழித்த மொழியம்மை. யாழைப் பழித்த மொழியம்மை எனும் திருப்பெயரை
உச்சரிக்கும்போதே நெஞ்சில் அமுதூறுகிறது.

யாழைப்பழித்த மொழியாளின் விழிகள் கருணையை மழையாகப் பொழிகிறது. அவள் திருப்பெயர் போலவே வாழ்விலும் இனிமை கூட்டுகிறாள். இந்த பிரமாண்டமான கோயிலை அங்குலம் அங்குலமாக அனுபவித்து கொடி மரத்தின் கீழ் பரவி நிமிர மறைக்காடர் இதயத்தின் மத்தியில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறார்.

புதுச்சேரி ஹயக்ரீவர்

ஒரு சமயம் திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளில் மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் தோன்றினர். திருமாலிடமிருந்து தோன்றிய தைரியத்தில், தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட திருமால் குதிரை முகத்துடன் தோன்றி அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு நான்முகனிடம் தந்தார். மது, கைட
பரால் பெருமை இழந்த வேதங்களை, பரிமுகக் கடவுளாகிய ஹயக்ரீவர், உச்சி முகர்ந்து புனிதப்படுத்தினார்.

அந்த மூச்சுக் காற்றால் வேதங்கள் புனிதம் பெற்றன. ஆனாலும் அசுரர்களுடன் போரிட்ட வேகத்தில் ஹயக்ரீவர் உக்ரமாக இருக்கவே, அதைத் தணிக்க திருமகள் அவரது மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தினாள். அந்த நிலையில் அவர் லட்சுமிஹயக்ரீவர் என வணங்கப்பட்டார். வேதங்களை மீட்டதால் இவர் கல்விக் கடவுளானார். அந்த ஹயக்ரீவருக்கு புதுச்சேரியில் ஒரு ஆலயம் உள்ளது.

மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்திய திருக்கோலத்தில் அவர் சேவை சாதிக்கிறார். கருவறையில் ஹயக்ரீவ மூர்த்தியின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது
கை எம்பிரானையும் அணைத்த வண்ணம் உள்ளன. கல்விக்குரிய கடவுள்களில் ஹயக்ரீவ மூர்த்தி எனும் பரிமுகக் கடவுள் வழிபாடு, தொன்மையானது.
படிப்பில் மந்தமாக உள்ளவர்களும் பேச்சுத் திறன் குறை உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து பெருமாளை தரிசித்து அக்குறைகள் நீங்கப்பெறுகின்றனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையில், ராமகிருஷ்ணா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

அம்மன்குடி

மகிஷாசூரனை கொன்று பெரும் வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்ததால் இத்தலத்தை ‘தேவி தபோவனம்’ என அழைத்தனர். ராஜராஜசோழனின் படைத் தலைவரான கிருஷ்ணன் ராமனான பிரம்மராயரின் சொந்த ஊர் இதுவேயாகும்.

அம்மன்குடி கோயில் கட்டி அதற்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாகக்கூட வரலாறு உண்டு. அம்மனின் வாயிலில் மிக அபூர்வமான ஒரு சரஸ்வதியின் சிலை உள்ளது. கண்கள் மூடி, கைகளில் ஜபமாலையோடு வீற்றிருக்கும் கோலம் காணுதற்கு அரியதாகும். நவராத்திரியில் பிரதம நாயகியான லக்ஷ்மி துர்க்காவோடு தானும் தவத்தில் ஆழ்கிறாளோ என்று தோன்றுகிறது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் -உப்பிலியப்பன் கோயில்-அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும்இக்கோயிலை அடையலாம்.

பிலானி சரஸ்வதி கோயில்

மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் உயர் கல்வி பெற விரும்பும் பிலானியில் உள்ள (Birla) தொழில் நுட்ப கல்லூரியில் பிர்லா குழுமத்தினரால் சரஸ்வதிக்கென்று கோயில் கட்டப்பட்டுள்ளது. பிர்லா தொழில்நுட்ப கல்வி வளாகத்தில் வித்யா விகார் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தரையிலிருந்து 7 அடி உயரத்தில் 29000 சதுர அடி பரப்பில் இத்திருக்கோயில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேல் உள்ள விமானம் 110 அடி உயரமுள்ளது. கோயிலின் உட்புறம் பல்வேறு தெய்வ வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்புறத்தில் முனிவர்கள், மேதைகள், விஞ்ஞானிகள் ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

தக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம்-பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். வலது கை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன் கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தியின் திருவுருவை இங்கே தரிசிக்கலாம்.

அகரம் கோவிந்தவாடி

காஞ்சிபுரம்-அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். 6 அடி உயரத்தில் அமைந்துள்ள அற்புத சிலை இது. இந்தச் சிலையின் கண்கள் அமைப்பு புதிரானது. அந்த விழிகள் எவரையும் காணாதது போலவும் இருக்கும்;  எல்லோரையும் காண்பது போலவும் இருக்கும்! சிறந்த குரு பரிகாரத் தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

தஞ்சை மாமணிக் கோயில்

நான்கு திவ்யதேசங்கள் ஒரே வளாகத்துள் இருப்பது காஞ்சிபுரத்து ஆன்மிக அதிசயம் என்றால், தஞ்சையில் மூன்று கோயில்களைச் சேர்த்து ஒரே திவ்ய தேசமாக தரிசிக்கலாம்! ஆமாம், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் ஒன்றுக்கொன்று சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் மூன்று கோயில்கள் அவை. மூன்றில் முதலாவதான முக்கியத்துவம் இருப்பதாலோஎன்னவோ, இந்தக் கோயில் ராஜ கோபுரத்துடன் திகழ்கிறது.

தலை வணங்கி அதற்கு மரியாதை தெரிவித்து உள்ளே நுழைந்தால் இடது பக்கத்தில் லக்ஷ்மி ஹயக்ரீவர் முதலில் அருளாசி வழங்குகிறார். இவருக்கு எதிரே சுவாமி தேசிகன் தனிச் சந்நதி கொண்டிருக்க, இவருக்கு வலது பக்கம் ஆழ்வார்களும், இடது பக்கம் ராமானுஜரும் அருள்பாலிக்கிறார்கள்.