சிம்ம வாகனத்தில் சக்கரத்தாழ்வார்



மதுரையிலிருந்து தென்காசி செல்லும் சாலையிலுள்ள கடையநல்லூரில் உள்ளது நீலமணிநாத சுவாமி கோயில். இக்கோயிலில் சக்கரத்தாழ்வார் தனி சந்நதியில்  16 கைகளுடன் அருள்கிறார்.

இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சுவாமியையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கின்றன. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் இருப்பது அபூர்வமானது. இந்த விசேஷமான சுதர்சனரை ‘சுதர்சன ஹோமம்’ செய்து வழிபட்டால் பயம் நீங்கி, எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

தசாவதார காட்சிகளுடன் சக்கரத்தாழ்வார்

திண்டுக்கல்லிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள யானை தெப்பம் அருகிலுள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள நரசிம்மர் நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார். சுற்றிலும் அஷ்டலட்சுமி உள்ளனர்.

ஒரு துளை வழியாக இவரை தரிசிக்கலாம். கோயில் பிராகாரத்திலுள்ள சக்கரத்தாழ்வாரை சுற்றிலும் பெருமாளின் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அமைப்பில் சக்கரத்தாழ்வார் மற்றும் நரசிம்மரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். சித்திரை நட்சத்திர நாட்களில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனத்துடன் விசேஷ பூஜை நடைபெறுகிறது.

மந்திர எழுத்துகளுடன் சக்கரத்தாழ்வார்

மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருமோகூர் எனுமிடத்திலுள்ள காளமேகப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனிசந்நதி உள்ளது. இவரை தரிசனம் செய்தால் தீய குணங்கள் எல்லாம் அழியும் என்பது நம்பிக்கை.

காரணம் இவர் 16 கைகளிலும் ஆயுதம் ஏந்தியபடி, மந்திர எழுத்துகளுடன் காணப்படுவதுதான். சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இத்தலத்தில் ‘க்ஷீராப்தி தீர்த்தம்’ உள்ளது. இதற்கு ‘பாற்கடல்’ என்று பொருள். பாற்கடலில் கிடைத்த அமுதத்தின் துளி விழுந்ததால் உண்டாகிய தீர்த்தம் என்கிறார்கள் இதை.

மூலஸ்தானத்திற்குள்ளேயேகருடன்

நாகப்பட்டினம் மாவட்டம் தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் சுவாமியின் வாகனமான கருடன் மூலஸ்தானத்திற்குள்ளே இருக்கிறார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டுமென்பதற்காக  சுவாமி கருடனை அருகில் அமர்த்தியுள்ளார். இந்த தரிசனம் அபூர்வமானது. மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

- கோவீ.இராஜேந்திரன்