கலர் ஆடை அணியும் கருடன்



பொதுவாக பெருமாள் கோயில்களில் உள்ள கருடனுக்கு வெள்ளை நிறத்தில் ஆடை அணிவிப்பார்கள். ஆனால், திருவாரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கண்ணமங்கை பெரிய பெருமாள் எனும் பக்தவத்சல பெருமாள் கோயிலில் மட்டும் கருடனுக்கு கலர் சேலை ஆடையாக அணிவிக்கப்படுகிறது.

 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு பெருமாள் 14 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்திலிருந்து 5 கி.மீ.க்குள் 5 பெருமாள் கோயில்கள் உள்ளன. இவற்றை பஞ்ச நாராயண ஸ்தலம் என்கிறார்கள்.

கை கட்டிய கருடன்

கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் வழியில் உள்ளது திருவஹீந்திரபுரம். இங்குள்ள வேதநாத சுவாமி கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகள் அம்சமாக மகாவிஷ்ணு தேவநாதப் பெருமாள் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இங்கு கருடன் பெருமாளிடம் பவ்யமாக கைகளைக் கட்டிக்கொண்டு காட்சியளிக்கிறார்!

கருட ஸ்தம்ப கோயில்

திருவாரூர் மாட்டம் மன்னார்குடியில் உள்ளது ராஜகோபால சுவாமி கோயில். இங்கு கோயிலுக்கு எதிரே 54 அடி உயர கருடஸ்தம்பம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு கம்பீரமாக நிற்கிறது. கம்பத்தின்மேலே கருடன் வீற்றிருக்கிறார். 

நகர்ந்த கருடாழ்வார்

பொதுவாக பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு எதிரேதான் கருடாழ்வார் இருப்பார். ஆனால், திருநெல்வேலியிலுள்ள தென்திருப்பேரையிலுள்ள பெருமாள் கோயிலில் கருடாழ்வார் வலப்புறமாக ஓரமாக சற்று விலகியவாறு காட்சி தருகிறார் ஏன் இப்படி? நம்மாழ்வார் பெருமாளை நோக்கிப் பாசுரம் பாட வசதியாக கருடாழ்வார் வடக்குப்புறமாக நகர்ந்து விட்டாராம்.

வினோத வடிவில் ஆஞ்சநேயர்

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருத்தலம் ‘கோழி குத்தி.’ இந்த கிராமத்தில் பிதுர்ஹத்தி, சனி தோஷங்களை நிவர்த்தி செய்யும் வானமுட்டி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிற்பக்கலைப்படி மூன்று அடி உயரத்தில் சப்த ஸ்வர ஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். வாலைச் சுருட்டி தலைக்குமேல்  வைத்திருப்பதும், வாலின் நுனியில் மணி தொங்கும்படியும் உள்ள சிறப்பு வடிவமாகும். இவரது உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு ஸ்வர ஒலி கேட்கும். அந்த ஒலி ‘சரிகமபதநி’ என்கிற ஸ்வரமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- டி.பூபதிராவ்

புற்று வடிவ அம்மன்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவில் குளச்சலில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம்.இங்கு சதுர வடிவம் கொண்ட கருவறையில் சுமார் 30 அடி உயரம் கொண்ட புற்றே அம்மன் வடிவமாக வழிபடப் பெறுகிறது. புற்றின் மேற்பகுதி ஐந்து பிரிவுகளாக அமைந்து ஐந்து பிரிவுகளாகக் காட்சியளிக்க அதில் ஒன்று திருமுகம் ஆக கருதப்படுகிறது.

புற்றில் சந்தனம், பன்னீர், நல்லெண்ணெய், மஞ்சள் பூசப்பட்டு ஐம்பொன் கவசமும் சாத்தப்பட்டுள்ளது.தினமும் ஐந்து கால பூஜை நடைபெறும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இங்கு கூட்டம் மிகுதி.மாசி மாத கொடை விழாவில் நள்ளிரவில் நடைபெறும் ஒடுக்கு பூஜை விசேஷமானது. அம்மனுக்குப் பக்தர்கள் மண்டையப்பம், முத்தப்பம், புட்டமுது, மரம், வெள்ளியால் ஆன உடல் உறுப்புகள், மிளகு, மஞ்சள்தூள், பட்டு ஆடைகள், வளையல்கள் ஆகியவற்றை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

- இரா.கணேசன்