திருதராஷ்டிரனின் அதர்மக் கணக்கு



மகாபாரதம் 16

அர்ஜுனன் சட்டென்று தாள்பணிந்து, தன்சிரசை துரோணரின் பாதங்களில் வைத்து, “உங்கள்ஆசி, உங்களுடைய அன்பு, உங்களுடைய வழிகாட்டலை நான் நிச்சயம் மறவேன்” என்று கண்ணீர் மல்க கூறினான்.“எனக்கு இன்னொரு வாக்கு தர வேண்டும்.”“தருகிறேன். கேளுங்கள்.

”“ஒருவேளை யுத்தம் வந்தால் எனக்கு எதிரே நின்று போர் செய்ய வேண்டியிருந்தால் தயங்காது, முழுபலத்தோடு நீ என்னோடு யுத்தம் செய்ய வேண்டும். என்னை நீ கொல்ல வேண்டுமென்றாலும் அதை நீ சந்தோஷமாகச் செய்யலாம். நான் ஆனந்தமாக உன்னுடைய பாணங்களை ஏற்பேன். இதை ஒருபோதும் மறுக்காமல் நீ செய்ய வேண்டும்.”அர்ஜுனன் திகைத்தான். மறுபடியும் அவர் பாதங்களில் தன் சிரம் பதிய வைத்தான்.

“நீங்கள் சொல்லி நான் எதையும் மீறியதில்லை. இதையும் மீறப் போவதில்லை. ஒருவேளை உம்மோடு யுத்தம் என்றால் நான் மிகக் கடுமையாக உம்மை தாக்குவேன். அதில் எனக்கு விருப்பம் உண்டு. ஏனெனில், எனக்கு இணையான வில்லாளி நீர் ஒருவரே என்பதை அறிவேன்.

சமபலம் உடையவரோடு சண்டை போடுவதுபோல சந்தோஷம் ஒருவீரனுக்கு வேறுஎன்ன இருக்க முடியும்!”அர்ஜுனனும், துரோணரும் இறுகத் தழுவிக் கொண்டார்கள். கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டார்கள். மெல்லவிலகி ஒருவரையொருவர் ஆழ்ந்து பார்த்தார்கள். பிரபஞ்ச சக்தியில் இரண்டு புள்ளிகள் விவேகத்தோடு ஒன்றையொன்று பற்றி நின்றன. தலைகுனிந்து ஆத்மாவிற்கு ஆத்மா வணக்கம் சொன்னது. மெல்ல பின்னடைந்தது.

துரோணர் எந்தக் காரணமுமின்றி ஆசனத்தில் அமர்ந்து மெல்ல கண்ணீர்விட்டு அழுதார். அர்ஜுனன் தன்னுடைய அரண்மனைக்கு தனித்து தன்தேரில் போனபோது கண்களில் கண்ணீர் வழிந்தது. தூசுபட்ட கண்ணில் நீர்வருவதாக இருக்கும் என்று பார்த்தவர்கள் நினைத்தார்கள். அவரவர் துக்கம் அவரவருக்கு. எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

என்னோடு சண்டையிடு. கொல்வதென்றால் கொல் என்று எந்தகுரு சொல்வார்! நிச்சயம் செய்வேன் என்று எந்த சீடன்தான் சொல்வான்! உண்மையான குரு, உண்மையான சீடன். இவர்களுக்குநடுவேயெல்லாம் இறப்பும், யுத்தமும் இல்லவே இல்லை. எல்லாம் விளையாட்டுத்தான். குருவால் தொடப்பட்டு, இறுக்க தழுவப்பட்டு, உச்சி முகரப்பட்டு, கன்னங்களில் முத்தமிடப்பட்ட அந்தப் பதினாறு வயது இளைஞன் மிகப்பெரிய விவேகியாக இருந்தான். அவனுக்கு அவன்குரு அவன்போக வேண்டிய இடத்தை மிகத் துல்லியமாக சொல்லிக் கொடுத்தார்.

 அவன் மனம் கிருஷ்ண பரமாத்மாவிற்காக ஏங்கத் துவங்கி விட்டது. மகாபாரதத்தின் இன்னொரு திருப்பம் அங்கு ஏற்பட்டது. அவன் நினைக்க நினைக்க அங்கே துவாரகையில் கிருஷ்ணரும் அவன் நினைப்பாகவே இருந்தார். அடிக்கடி அர்ஜுனா என்று மனதிற்குள் நினைத்தார்.நான் அரசனாவது எப்போது? என்னால் அரசனாக முடியுமா? எனக்குப்பின் என் வம்சம் இந்த அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்யுமா.

அல்லது அஸ்தினாபுரத்தின் ஒரு ஓரத் தூணாக விளிம்பாக என் குலம் இருக்குமா? சிற்றரசர்களுக்கும் கீழாக அவர்களை வருக வருக என்று சொல்லும் வரவேற்பாளராக அரசாங்கப் பணியாளனாக என்னுடைய குலம் தாழ்ந்து போகுமா? ஏதோ ஒருவிதமாக என் தந்தை திருதராஷ்டிரனுக்கு இந்த அரச பதவி கிடைத்துவிட்டது. கண்கள் இருந்திருந்தால் மிக நியாயமாக அவர்தான் அரசாள வேண்டும். ஆனால், பாண்டுவிற்கு ராஜ்ஜியம் கொடுக்கப்பட்டது. திருதராஷ்டிரன் அங்கஹீனன் என்பதால் மறுக்கப்பட்டது. பாண்டு அரசாண்டதால் பாண்டுவிற்குப் பிறகு பாண்டுவின் குழந்தைகள்தான் அரசாள வேண்டும். அதுதான் விதி.

அரசனுடைய மகன்தானே இளவரசன். இளவரசன்தானே அரசன் என்று மக்கள் பேசத் துவங்கியிருந்தார்கள்.அப்படியொரு கணக்கு போட்டால் அந்த கணக்கின்படி யுதிஷ்டிரர்தான் அடுத்த வாரிசு. அவர்தான் அஸ்தினாபுரத்து வருங்கால மன்னர். வம்ச விஷயங்களை விட்டுவிடுவோம். குல ஆசாரங்களை மறந்து விடுவோம். யுதிஷ்டிரரைப்போல ஒரு நல்ல குணமுடைய அரசகுலத்தான் உண்டா.

 என்ன அமைதி. என்ன அடக்கம். எவ்வளவு கனிவு, பணிவு, அரசன் அஞ்சுகின்றவனாக இருத்தல் எவ்வளவு பெரிய அவஸ்தை. எந்நேரமும் அவன் பாதம் பார்த்தே பேசவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஜனங்களுக்கு எவ்வளவு கடினம். அரசனுடைய முகம் பார்த்து அவன் குறிப்பறிந்து பேசுகின்ற சந்தோஷம்போல் உண்டா.

தருமரிடம் முகம் பார்த்து பேசலாம். விண்ணப்பங்கள் வைக்கலாம். அவர் சொல்வதை மறுத்து அது அவ்விதம் அல்ல. இவ்விதம் என்று எடுத்துச் சொல்லலாம். தருமருக்கு பெரும் காதுகள். அதாவது, பெரிய மனது. காது கொடுத்து கேட்பார். அப்படியா... அப்படியா... என்று விசாரிப்பார். அதேநேரம் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் பிறவியும் அல்ல. இங்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அங்கு வேறு விதமாக செய்தி சேகரிப்பு நடந்துவிடும். எதிரே இருப்பவர் சொல்வது உண்மைதானா என்று சில நிமிடங்களில் அவருக்குத் தெரிந்து விடும்.

அதிகாரிகள் தயாராக இருப்பார்கள். அதிகாரிகள் சொன்னதை மனதில் வாங்கி வந்து எதிரே இருப்பவரிடம் குறுக்கு கேள்வி கேட்டு விஷயத்தினுடைய அடிவேரை கால் அரைக்கால் நாழிகையில் கண்டுபிடித்துவிடுவார். பிறகு என்ன? கொண்டுபோன பிரச்னை அத்தோடு தீர்ந்தது. சொன்னவரும் முக்கியமில்லை. கேட்டவரும் முக்கியமில்லை. பிரச்னையை தீர்ப்பதே முக்கியம். யுதிஷ்டிரர் மன்னர் என்றால் பிரச்னையே இல்லை என்றுதான் அர்த்தம்.‘‘யுதிஷ்டிரரைப் பற்றி மட்டுமே பேசுகிறீர்களே. துரியோதனன் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’’ வேண்டுமென்றே கேள்வி கேட்டவர் சபையை சுற்றிப் பார்த்தார். சபை மௌனமாக இருந்தது.

‘‘அபிப்ராயம் ஏதும்
இல்லையா?’’
‘‘இருக்கிறது?’’
‘‘என்ன?’’
‘‘லாயக்கில்லாதவன்’’ சபை வாய்விட்டு சிரித்தது.‘‘ஏன் என்ன குறை?’’‘‘நான், எனது என்று இருப்பவர் எப்படி மன்னராக முடியும். நான், எனது என்று இருப்பதில்கூட தவறில்லை. அடுத்தவர்மீது துவேஷம் பாராட்டுவது அழகல்லவே.’’‘‘யார் யார் மீது பாராட்டினார்கள்?’’ சபை மௌனமாக இருந்தது. அது எல்லோருக்கும் தெரிந்த சங்கதியாகவே இருந்தது.ஒற்றர்கள் ஜனங்களுடைய அபிப்ராயத்தை துரியோதனனிடம் சொன்னார்கள். துரியோதனன் தவித்தான். மனம் குழம்பினான். யாரிடம் இதை பேசுவது என்று தெரியாமல் முன்னும் பின்னும் அலைந்தான்.

சுவரைப் பார்த்தும், வெட்ட வெளியைப் பார்த்தும், திரைச்சீலையை பார்த்தும் பேசத் துவங்கினான். வேறு வழியில்லாமல் தந்தையிடம் சகலரையும் வெளியேறச் சொல்லி அவருக்கு அருகே உட்கார்ந்து ரகசியமாக பேசத் துவங்கினான்.‘‘நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்கள் மகன் துரியோதனன். என்னைப்பற்றி ஏதேனும் சிந்தனை உண்டா. என் எதிர்காலம் பற்றி ஏதேனும் திட்டம் உண்டா. நீங்கள் அந்தகராய் இருப்பது ஒரு சௌகரியம் என்று நினைக்கிறீர்களா.

எந்தப் பிரச்னையையும் பெரிதாக எடுத்துத் தலையில் வைத்துக் கொள்ளாமல் பீஷ்மரிடமோ, விதுரரிடமோ, கிருபரிடமோ தூக்கிப் போட்டுவிட்டு இருள் கனவில் மூழ்கிக் கிடப்பது என்பது உங்களுக்கு சௌகரியமாகி விட்டதா. உங்களுக்கு இணையாக கண் தெரியாது கண்களை கட்டிக் கொண்டு என் தாயோடு

உட்கார்ந்து கொண்டு தத்வார்த்தம் பேசுகின்ற சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீரா. உண்ண உணவு, படுக்க படுக்கை, வேலை செய்ய ஆட்கள் போதாதா. சுகம் இதுதானே’’ குத்திப் பேசினான். மகனுடைய கோபம் திருதராஷ்டிரனுக்குப் புரியவில்லை.

‘‘என்ன வேண்டும் என்று கேள்?’’‘‘எனக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’’‘‘நான் நினைப்பது இருக்கட்டும். உன்னுடைய விஷயம் என்ன? கேள். பேச நீதானே வந்தாய்.’’‘‘ஆஹா.

இந்த மடக்கு பேச்சில் எந்த குறையும் இல்லை. ஒரு குறை வந்தால் ஒரு நிறை வந்துவிடுகிறது. உங்களின் கண் பார்வைக்குத்தான் குறைவு. உங்கள் வாய் பேச்சுக்கு எந்த குறையும் இல்லை. அது கொடிகட்டிப் பறக்கிறது.’’ மறுபடியும் குத்தினான். வேதனை தாங்காது திருதராஷ்டிரன் நெளிந்தான்.‘‘தயவு செய்து சொல். என்ன வேண்டும்?’’‘‘அடுத்தவருடைய சோற்றுக்கு கையேந்தி நிற்காத நிலைமை வேண்டும்.’’

‘‘அப்படி உனக்கில்லையே.’’‘‘இருக்கிறதே. இது பாண்டுவின் ராஜ்ஜியம். உங்களுக்கு ஏதோ ஒரு விதமாக கொடுக்கப்பட்டது. பாண்டுவினுடைய ராஜ்ஜியம் என்பதால் பாண்டுவினுடைய புத்திரர்கள்தான் மறுபடியும் அரசாள வேண்டும். தருமன்தான் இங்கே அரசாள வேண்டும். யுதிஷ்டிரன் என்கிற அந்த தருமன்தான் இங்கு மிகச் சிறந்தவனாகக் கருதப்படுகிறான். அப்படியானால் நான் யார்? எனக்கு என்ன தகுதி?

வரிசையாய் உட்கார்ந்து யுதிஷ்டிரன் முகத்தை பார்த்து, நான் உண்ணலாமா என்று கேட்டு அவர் சரி என்று சொல்ல, நான் உண்ணுகின்ற பிச்சைக்காரனாக இருக்க வேண்டுமா. உங்களுக்கு மகனாகப் பிறந்த ஒரே பலன் இதுதானா.’’‘‘உனக்கு என்ன வேண்டும் துரியோதனா?’’ இடைமறித்து திருதராஷ்டிரன் கேட்டான்.

‘‘எனக்கு இந்த ராஜ்ஜியம் வேண்டும். நான் மன்னனாக வேண்டும். அஸ்தினாபுரத்திலிருந்து பஞ்சபாண்டவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.’’‘‘எதற்காக? பாண்டு மிக நல்லவன். உத்தமன் என்று பெயர் பெற்றவன். மக்களும் அதிகாரிகளும், சேனாதிபதிகளும் அவரிடம் மிகுந்த நம்பிக்கையோடும், அன்போடும், விசுவாசத்தோடும் இருந்தார்கள். பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனிடம் இன்னும் பிரியத்தோடும் இன்னும் அதிக விசுவாத்தோடும் இருக்கிறார்கள். பாண்டுவை விட பாண்டுவின் புத்திரனான யுதிஷ்டிரன் இன்னும் நேர்மையாகவும், தெளிவாகவும், திடமாகவும் இருக்கிறான். அவனுடைய இனிமையான சொற்கள் ஜனங்களை கவர்ந்து இழுப்பதில் ஆச்சரியமேயில்லை.

இதற்காக நீ கோபப்படுவானேன். இதை பிச்சை என்று நீ நினைப்பானேன். எல்லோருக்கும் உண்டான பங்குதானே. உனக்குண்டான பங்கு உன்னிடம் வந்து நிற்கிறது. அவ்வளவுதானே. நீ மன்னனாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் என்ன. நம்முடைய முயற்சிகளுக்கு அப்பால்தானே இங்கு விஷயங்கள் நடைபெறுகின்றன. நான் அரசனாவேன் என்று நினைத்தேனா. அரசனானேன். அரசனாக இருப்பதும் இல்லாதிருப்பதும் எனக்கு ஒன்றாகத்தான் இருக்கிறது.’’

உங்களுக்கு அப்படித்தான் இருக்கும். உங்கள் நிலைமை அப்படி. உங்கள் மனைவியைப்போல நானும் கண்களை கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிட்டால் எனக்கும் நிம்மதி. ஆனால், நான் அப்படி இருக்க விரும்பவில்லை.

 நான் ஆட்சி செய்ய வேண்டும். என் சகோதரர்களை நான் காப்பாற்ற வேண்டும். பஞ்ச பாண்டவர்களுடைய பராக்கிரமத்திலிருந்து என் சகோதரர்களை நான் ரட்சிக்க வேண்டும். அப்பா, என்ன செய்வீர்களோ தெரியாது. ஏது செய்வீர்களோ தெரியாது. பாண்டவர்கள் அஸ்தினாபுரம் விட்டு வெளியேற வேண்டும். ஏதாவது உபாயம் செய்யுங்கள். மந்திரிகளிடம் பேசுங்கள்.’’ கால் உதைத்து எழுந்துவிட்டு அவன் அறையை விட்டு வெளியேறினான்.

திருதராஷ்டிரன் குழம்பினான். அவனுக்கு தன் மகனைப் பற்றிய பெருமை இருந்தது. அதேசமயம் நியாய புத்தியும் இருந்தது. திரும்பத் திரும்ப யோசிக்கையில் நியாயத்தைவிட துரியோதனின் ஆசையே முக்கியம் என்று அவனுக்குத் தோன்றியது. மகன் மீதுள்ள பாசம் மிக பலமானது. அது எல்லாவிதமான தர்ம நியாயங்களையும் புறக்கணிக்கக்கூடிய வல்லமையுடையது. புறக்கணித்தது.

துரியோதனன் வருத்தப்படுகிறான் என்றால் தூங்க முடியுமா. பஞ்ச பாண்டவர்கள் விலகினார்கள் என்றால் சிறிது நாளில் மனம் தேறிவிடலாம். துரியோதனன் வேதனைப்படுகிறான் என்றால் உண்ண முடியாது, உறங்க முடியாது, உட்கார முடியாது, நிற்க முடியாது. எனவே துரியோதனனே முக்கியம் என்ற முடிவிற்கு வந்தான்.
தர்மத்தோடு வாழ்வது என்பது எளிதான காரியம் அல்ல. எல்லோராலும் தர்மத்தோடு வாழ்ந்து விட முடியாது.

உன் மந்திரிகளோடு ஆலோசனை செய். துரியோதனன் சொல்லிவிட்டு போய்விட்டான். எந்த மந்திரியோடு, யாரை நம்புவது, யாரை இங்கு ஆலோசனையை சொல்லிவிட்டு நேரே போய் யுதிஷ்டிரனிடம் உனக்கு எதிராக ஆட்சி நடத்த திருதராஷ்டிரன் முயலுகிறான் என்று சொல்லாமல் இருப்பார். திருதராஷ்டிரன் சகுனியை கொண்டு ஆலோசித்தான். சகுனி தன் மந்திரி கனிஷ்கனை கூட்டிக்கொண்டு வந்தான்.

ராஜ்ய விவகாரங்களில் மிகுந்த தந்திரசாலி என்றும் ஆட்சி மிக்கவன் என்றும், ஆசைப்படுகிறவன் என்றும் புகழ்ச்சியில் விருப்பம் உள்ளவனுமான அந்த அந்தணன் திருதராஷ்டிரனுடைய சபையை வந்தடைந்தான். வந்தவுடனேயே அவனுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன. அவன் சந்தோஷமாக வாங்கிக் கொண்டான்.

‘‘ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டியிருக்கிறது. ரகசிய ஆலோசனை செய்ய வேண்டியிருக்கிறது. இன்று இரவு அரண்மனைக்கு வருகிறீரா’’ கனிஷ்கன் பல் தெரிய சிரித்தான்.

‘‘ரகசிய ஆலோசனை என்கிறீர்களே. இரவு நேரம் வரச்சொல்கிறீர்களே.’’‘‘இரவுதானே சரியான நேரம். ரகசியமாக பேசுவதற்கு.’’‘‘இல்லை. நீங்கள் ரகசியமாகப் பேசுவதை வேறு யாரேனும் ரகசியமாக கேட்கிறார்களா என்பதை இரவு நேரத்தில் கண்டுபிடிக்க முடியாது. ரகசிய ஆலோசனை எதுவும் இரவு நேரம் செய்யக்கூடாது. நல்ல அரசன் செய்ய மாட்டான்.’’‘‘பிறகு?’’‘‘பகல் நேரமே சரியான நேரம். விடிந்து வெளிச்சம் பரவிய நேரம். உயிரினங்கள் ஆசுவாசமாக  இருக்கின்ற நேரம். அந்த நேரத்தில் நாம் ரகசிய ஆலோசனை செய்வோம்.’’‘‘நாளை விடிந்த பிறகு வருகிறீர்களா?’’
‘‘எங்கு?’’

‘‘அரண்மனைக்கு’’‘‘அரண்மனையில் ரகசிய ஆலோசனை செய்யக்கூடாது.’’ மறுபடியும் திருதராஷ்டிரன் திகைத்தான்.‘‘வேறு எங்கு செய்ய வேண்டும்?’’‘‘ஒரு பரந்த புல்வெளியில், மேல் மாடியில் அல்லது பெரிய நதியினுடைய நடுவே படகில் போய்க்கொண்டு என்றுதான் ரகசிய ஆலோசனை செய்ய முடியுமே தவிர, தூண்கள் நிறைந்த, திரைச்சீலைகள் நிறைந்த, உயர்ந்த மர ஆசனங்கள் நிறைந்த அரச சபையில் ஆலோசனைகள் நடக்கக்கூடாது. சபைதான் நடக்கலாம்.’’

‘‘நான் கண் இல்லாதவன். புல்வெளிக்கு போய்விடுவோம். காலை நேரத்தில் போர்த்திக்கொண்டு உட்கார்ந்து விடுவோம். தொலைவில் எல்லா திக்கிலும் வீரர்களை நிறுத்தி யாரும் அருகே வராது செய்துவிடுவோம்.’’ அப்படியே நடந்தது.‘‘என்ன வேண்டும் சொல்லுங்கள்’’ மறுநாள் காலை அந்த அந்தணன் சொர்ணம் வாங்கிய திருப்தியோடு மேலும் வாங்கும் எண்ணத்தோடு அரசனிடம் பேசினான். காசுக்காக ஆலோசனை சொல்ல வருபவர்கள் மிக உற்சாகமாக இருப்பார்கள். மிக அக்கறையாக இருப்பார்கள். எல்லா வகையிலும் ஆலோசனை கேட்டவரை, அரசனை திருப்தி செய்யும் வகையிலேயே இருப்பார்கள்.

‘‘துரியோதனன் பாண்டவர்களை கண்டு பயப்படுகிறான். பாண்டவர்களை ஒழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறான். தானே அரசாள வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டியது தகப்பனாகிய என்னுடைய கடமை. ஏதோ ஒருவிதமாக எனக்கு இந்த அரசாட்சி வந்தாலும் இதற்கு உரியவர் யுதிஷ்டிரனே தவிர, துரியோதனன் அல்ல. ஆனால், துரியோதனன் தான் அரசனாக வேண்டும் என்றும், இந்த தேசத்தை விட்டு அவன் எதிரியாக நினைக்கின்ற பஞ்சபாண்டவர்கள் விலகிப்போக வேண்டும் என்றும் நினைக்கிறான். இதற்கான உபாயத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.’’

‘‘எதிரி என்று தீர்மானித்த பிறகு விலகி இருக்க வேண்டும் என்று நினைப்பது அவ்வளவு ஆரோக்கியமாக இல்லையே.’’ கனிஷ்கன் மறுபடியும் சிரித்தான். அவன் சிரிப்பில் குரூரம் இருந்தது.‘‘விலகி இருக்க வேண்டும் என்று நினைக்காமல் வேறு எதை யோசிப்பது.’’‘‘கொன்று போட வேண்டும். விலகியிருந்தால் நெருங்கி வரமாட்டார்களா.

வலிவு மிகுந்து வர மாட்டார்களா. வந்து அடக்க மாட்டார்களா. எதிரி என்று ஒரு அரசனுக்குத் தோன்றிய பிறகு யார் எதிரியோ அவன் உயிரோடு இருத்தல் கூடாது. ஏதேனும் ஒரு வகையில் அவனை அழித்து ஒழிக்க வேண்டும். அவனை கொன்று போட வேண்டும். அப்போதுதான் நிம்மதியாக தூங்க முடியும்.’’‘‘என்ன இவ்வளவு மோசமாக பேசுகிறீர்கள்.’’

‘‘இல்லை. நான் சத்தியத்தைப்பற்றி பேசுகிறேன். அரசாங்கம் பற்றி பேசுகிறேன் அரசியல் பேசுகிறேன். அரசனைப்பற்றி பேசுகிறேன். ஒரு அரசன் அவனைச்சுற்றி
அவனுடைய நண்பர்களைத்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

அடிவருடிகளோடுதான் இருக்க வேண்டும். காசுக்கு ஆசைப்பட்டவர்களை காசும், பெண்களுக்கு ஆசைப்பட்டவரை பெண்களை கொடுத்தும், அதிகாரத்திற்கு ஆசைப்படுகிறவரை அதிகாரம் கொடுத்தும், சொத்து சுகங்களுக்கு ஆசைப்படுபவருக்கு சொத்து சுகங்கள் கொடுத்தும், உணவுக்கும், மதுவிற்கும் ஆசைப்படுபவர்களை அதைக் கொடுத்து திருப்தி செய்தும் தன் அருகே வைத்துக்கொள்ள வேண்டும்.

இவைகளுக்கு பணியாத எதிரியை அவன் வைத்துக்கொண்டு என்ன புண்ணியம். அவரால் என்ன லாபம். உறக்கமின்மைதான் அவர்களால் எற்படும். எனவே, எதிரிகள் என்று நினைத்தவரை எப்படியேனும் கொன்று தீர்ப்பதுதான் ஒரு அரசனுடைய கடமை.’’

திரும்பத் திரும்ப யோசிக்கையில் நியாயத்தைவிட துரியோதனின் ஆசையே முக்கியம் என்று அவனுக்குத் தோன்றியது. மகன் மீதுள்ள பாசம் மிக பலமானது. அது எல்லாவிதமான தர்ம நியாயங்களையும் புறக்கணிக்கக்கூடிய வல்லமையுடையது. புறக்கணித்தது. காசுக்காக ஆலோசனை சொல்ல வருபவர்கள் மிக உற்சாகமாக இருப்பார்கள். மிக அக்கறையாக இருப்பார்கள். எல்லாவகையிலும் ஆலோசனை கேட்டவரை, அரசனை திருப்தி செய்யும் வகையிலேயே இருப்பார்கள்.

(ெதாடரும்)