எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்?



இங்கே நாம் வகைவகையாக, நமக்குப் பிடித்த உணவுவகைகளைத் தயாரித்து இறைவனுக்குப் படைக்கிறோம். ஆனால், கோயில்களில் நிவேதிக்கப்படும் உணவு வகைகள் அந்தந்த கோயிலுக்கென்றே உரித்தான ஒழுங்குமுறைப்படி தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் என்று பார்க்கலாமா?

> ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.> திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.
> திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.
> காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.
> திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.
> கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை
அப்பம் ஏற்கும் கணபதி இவர்.
> முஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை
தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.
> கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.
> நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.

பேரீச்சை வெல்ல கீர்

என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர், பேரீச்சை வெல்லம் - 250 கிராம்,
பாசுமதி அரிசி - ½ கப், சர்க்கரை - ½ கப் (தேவை இருந்தால்) ,
பச்சரிசி மாவு - ½ கப்.

எப்படிச் செய்வது?

பாலை சுண்டக் காய்ச்சவும். இதனுடன் அரிசியை சேர்த்து வேக வைக்கவும். பால், அரிசி இரண்டும் நன்கு வெந்து கீர் பதம் வந்ததும் பேரீச்சை வெல்லத்தை பொடித்து, கரைத்து சுத்தம் செய்து வடித்து, கொதிக்க விட்டு கீருடன் சேர்க்கவும். இத்துடன் அரிசி மாவை பாலில் கரைத்து சேர்த்து பாயசம் (கீர்) பதம் வந்ததும் இறக்கி குளிர வைத்து பரிமாறவும். தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.

குறிப்பு: இந்த கீர்க்கு ஏலம் வேண்டாம். பேரீச்சை மணத்துடன் மிக சுவையாக இருக்கும். இரும்பு சத்து மிக அதிகமாக இருக்கும். பேரீச்சை வெல்லம் கிடைக்காவிட்டால் பனை வெல்லத்திலும் செய்யலாம்.

நமக் பாரா காரம்

என்னென்ன தேவை?

மைதா-1 கப், உடைத்த மிளகுத்தூள்-1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் அல்லது நெய் -2 டீஸ்பூன், கருப்பு சீரகம் (அல்லது) சீரகம்-சிறிது, உப்பு, எண்ணெய்-தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மைதா மாவுடன் உப்பு, நெய்/வெண்ணெய், சீரகம்/கருப்பு சீரகம், மிளகு சேர்த்து நன்கு கலக்கவும். பின் சிறிது நீர் விட்டு கெட்டியாக ரொட்டி மாவு பதம் பிசைந்து மூடி 10 நிமிடம் வைத்து பின் சிறிது கனமான பெரிய ரொட்டியாக தேய்த்து வேண்டிய வடிவில் வெட்டி மிதமான தீயில் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: ஆறியதும் கலகலவென்று சத்தம் வரும். இது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஸ்பெஷல் பிரசாதம். கடவுளுக்கு படைக்கவும் செய்வார்கள். இதனுடன் புதினாவை பொடித்து சேர்த்தும் செய்யலாம்.

சிறு பருப்பு தயிர் வடை

என்னென்ன தேவை?

சிறு பருப்பு - 1 கப், புளிப்பில்லாத தயிர் - 1½ கப், கெட்டியான பால் - ¾ கப், கேரட் துருவல் - 1 டீஸ்பூன், புளி சட்னி, இனிப்பு சட்னி, மல்லி சட்னி யாவும் தேவைக்கு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பச்சை மிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சிறு பருப்பை ½ மணி நேரம் ஊற வைத்து கழுவி சுத்தம் செய்து கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் பச்சை மிளகாய் சேர்க்கவும். பின் சீரகம், உப்பு சேர்த்து கலந்து எண்ணெயை காய வைத்து சிறு சிறு பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

1 கப் தயிருடன், ½ கப் பாலும், தேவையான உப்பும் சேர்த்து கலந்து பொரித்து வைத்திருக்கும் வடையின் மீது ஊற்றி சிறிது ஊற விடவும். பரிமாறும்போது மீண்டும் மீதி உள்ள தயிர் பால் ஒரு சிட்டிகை உப்பு கலந்து கெட்டியான தயிர் பால் கலவையை வடைகளின் மேல் ஊற்றவும். அதன் மேல் புளிப்பு சட்னி, இனிப்பு சட்னி, மல்லி சட்னி ஊற்றி துருவிய கேரட் கொண்டு அலங்கரித்து குளிர வைத்து சம்மர் ஸ்பெஷலாக, இந்த வித்தியாசமான சிறு பருப்பு தயிர் வடை படைத்து பரிமாறவும்.குறிப்பு: மல்லி சட்னி-மல்லி, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை, இஞ்சி சேர்த்து அரைக்கவும். இனிப்பு + புளிப்பு சட்னிக்கு-புளி விழுது, பேரீச்சை வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

சக்கர் பாரா ஸ்வீட்

என்னென்ன தேவை?

மைதா மாவு - 2 கப், நெய் - 1/4 கப், சர்க்கரை - 2 கப், பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - 1/2 சிட்டிகை

எப்படிச் செய்வது?

நெய்யுடன் மைதாவை பிசையவும். இது ரவை மாதிரி வரும் போது உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். பின் மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு விருப்பமான வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் கட் செய்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பின் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். பொரித்த துண்டுகளை பாகில் போட்டு நன்றாக கலந்து தட்டில் பரப்பி வைக்கவும்.குறிப்பு: பாகில் சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.