சப்த மாதர்களும் சக்தியின் அம்சங்களே!



ஆதி சங்கர பகவத் பாதாள் வகுத்த ஷண்மத ஸ்தாபனம் என வழங்கப்படும் சூரியன், விநாயகர், முருகன், அம்பிகை, திருமால், சிவன் ஆகிய  தெய்வங்களின் வழிபாட்டில் அம்பிகை வழிபாடு, தேவியை பல ரூபங்களில் வழிபட வகுக்கப்பட்டு உள்ளது.

அதில் சப்த மாதர்கள் என வழிபடப்படும் ப்ராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வாராஹி, வைஷ்ணவி, மாஹேந்தி, ஐந்த்ரீ என ஏழு தேவியரின் வடிவங்களின் தோற்றத்தையும், குணங்களையும், வழிபடு பலன்களையும் அறிவோம்.

பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் இந்த எழுவரின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. ‘’கன்னிமார்’’ என பண்டைய காலத்தவர்கள் இவர்களை அழைத்து வழிபட்டுள்ளனர். மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், விஷ்ணு தர்மோத்திரம், பத்ரகாளி மகாத்மியம் போன்ற நூல்களிலும் இவர்களின் பெருமைகள் பரக்கப் பேசப்படுகின்றன.

பாரதப் போர் நடப்பதற்கு முன் கௌரவர் சபைக்குக் கண்ணன் தூது செல்லும் சமயம், கோபத்தால் தன் அரிய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினார். அப்போது அவரைத் துதித்து அமைதிப்படுத்திய தேவர்கள் ‘மதனப்புத்தேன்...’ எனும் துதியால் துதித்தனர். அதில்  ‘இமயனும், வருணனும், எண்வகை வசுக்களும், வீரப்பெண்மையின் மெல்லியர் எழுவரும்’ என எழுச்சிமிகு இந்த கன்னியர் எழுவரும் அந்த விஸ்வரூபத்தில் தரிசனம் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

கண்ட முண்டாசுரர்கள் சாமுண்டாதேவியினால் போர்க்களத்தில் வீழ்ந்தனர். அதனால் சினமுற்ற சும்பாசுரன் தம் படைவீரர்கள் அனைவரையும் மகாசரஸ்வதியுடன் போர்புரிய ஏவினான். அச்சமயம் அசுரர்களை வதைக்கவும், தேவர்களுக்கு நன்மைகள் கிட்டச் செய்யவும் பிரம்மா, ருத்ரன் போன்றவர்களின் சக்திகள் அவரவர் உலகினின்றும் அவரவர் தரித்துள்ள ஆயுதங்களுடன் தோன்றினர் என தேவி பாகவதத்திலும் கூறப்பட்டுள்ளது.

 அப்படித் தோன்றிய எழுவரும் பண்டாசுர வதம் நிகழ நடந்த போரில் பராசக்திக்கு உதவ, அவளின் திருமுக மண்டலத்தினின்று ப்ராம்ஹியும், காதுகளிலிருந்து மாஹேஸ்வரியும், கழுத்திலிருந்து கௌமாரியும், கைகளிலிருந்து வைஷ்ணவியும், பிருஷ்டபாகத்திலிருந்து வாராஹியும், ஸ்தனங்களிலிருந்து இந்திராணியும், வெளிவந்து தேவியின் உடலிலிருந்து நேராக உதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அம்பிகையுடன் அம்பாசுரன் நேரிடையாகப் போர் புரியும்போது சப்த மாதர்களும் அவளுக்குத் துணையாய் நின்று பெரும் போர் புரிந்தனர்.அது கண்டு கோபமுற்ற அம்பாசுரன் பராசக்தியை நோக்கி, ‘‘உன்னால் தனித்து நின்று என்னுடன் போர் புரிய முடியாது. சப்த மாதர்கள் துணையுடன் என்னுடன் நீ போர்புரிவது தான் உன் வீரமோ?’’ என எள்ளி நகையாடினான். அதற்குப் பதிலளித்த தேவி, ‘’அம்பாசுரா! உலகில் நான் ஒருவள்தான் உள்ளேன்.

என்னைத் தவிர வேறு சக்திகள் கிடையாது. இவர்கள் எழுவரும் என் அம்சமே. இவர்கள் ஒன்றாக ஐக்கியமாகி விடுவதைப் பார்,’’ என்றாள். உடன் எழுவரும் தேவியின் உடலிலேயே ஒன்றி தேவி ஒருத்தியாகவே எஞ்சி நின்றாள். எனவே, இந்த சப்த மாதாக்கள் தேவி நினைத்தால் வெளிவருவார்கள்; தேவையில்லாதபோது அவளின் தேகத்திலேயே அடங்கியிருப்பர்.

சக்தி வழிபாட்டிலும், லலிதா ஸஹஸ்ரநாமத்திலும், லலிதோபாக்யானத்திலும் சப்த மாதர்களின் பெருமை பேசப்படுகிறது. பைரவ வழிபாட்டில் இவர்கள் பல்வேறு வகையான பைரவர்களின் தேவியர்களாக வணங்கப்படுகின்றனர். கும்பகோணத்தை அடுத்த திருத்தலம் திருச்சக்கரப்பள்ளியாகும். அவ்வூரைச் சுற்றி அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுபதிமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை எனும் ஊர்கள் உள்ளன.

அரிமங்கையில் மாகேஸ்வரியும், சூலமங்கையில் கௌமாரியும், நந்திமங்கையில் வைஷ்ணவியும், பசுபதிமங்கையில் வாராஹியும், தாழமங்கையில் இந்திராணியும், புள்ளமங்கையில் சாமுண்டியும் வழிபட்டு பேறு பெற்றதாக சான்றோர்கள் கூறுகின்றனர். திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்தில் சப்த மாதர்களும் ஈசனை வழிபட்டு தத்தமது பெயர்களில் லிங்கத்தை நிறுவி பூஜித்துள்ளனர். அந்த லிங்கங்களை ஆலய பிராகாரத்தில் நாம் தரிசிக்கலாம். குளித்தலை கடம்பர் ஆலயத்தின் கருவறையில் சப்தமாதர்களை நாம் தரிசித்து மகிழலாம்.

இனி இவர்களைப் பற்றி அறிவோம்பரந்து விரிந்துள்ள இந்த உலகிற்கு எல்லா மங்களங்களையும் வழங்கக்கூடிய இந்த ஏழு மாதர்களும் எட்டாவதாக மகாலட்சுமியும் அனைத்து தெய்வீக யந்திரங்களிலும் அஷ்ட தளங்களிலும் இடம் பெற்று அருள்கின்றனர்.சக்கரத்தில் முதல் ஆவரண பூஜையில் இந்த சப்தமாதர்கள் பூஜை செய்யப்படுகின்றனர். பகவதி ஸ்தோத்ரமாலையில் சப்தமாதர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கலிங்கத்துப் பரணியிலும் சப்தமாதர்களுக்கு கடவுள் வாழ்த்தில் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.

சிந்து சமவெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் காணப்படும் சப்த மாதர்களின் தலையில் சிகை அலங்காரத்தைக் குறிக்கும் அடையாளங்களுடன் உள்ளன. சாளுக்கியர் வணங்கிய சப்தமாதர்களின் சிற்பங்கள் பாண்டியர் குகைக் கோயில்களில் காணப்படுகின்றன. இந்த எழுவரையும் பற்றி சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜர், கோலாரில் உள்ள கோலாரம்மன், தென்காசியில் உள்ள ஒரு தனிவீதி, முஷ்ணம் பூவராகர் கோயில், மதுராந்தகம் ஏரிக்கரை, மேல்மருவத்தூர் புற்றுமண்டபம், காஞ்சிபுரம் காந்திசாலை, மாமல்லபுரம், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் ஆலயம், ஆவடி கன்னிகாபுரம் கன்னிகாபரமேஸ்வரி ஆலயம், வேலூர் செல்லியம்மன் ஆலயம், சேலம் அம்மாபேட்டை காளியம்மன், மருதமலை பாம்பாட்டி சித்தர் சமாதிக்கு அருகே, என பாரெங்கிலும் உள்ள ஆலயங்களில் சப்தகன்னியர்கள் எடுப்பாகவும், எழிலாகவும் எழுந்தருளியுள்ளனர்.  அந்த  எழுச்சி மிகு ஏழு கன்னியர்களைப் பற்றி பார்ப்போம்.

1.பிராம்ஹிபிரம்ம தேவனின் முதல் எழுத்தாகிய ‘ப்ராம்’ என்பதே இவளின் பீஜாட்சரமாகத் துலங்குகிறது. மது, கைடப வதத்திற்குப் பின் பிரம்ம தேவனுக்கு உலகை உருவாக்கும்படி பராசக்தி கட்டளையிட, பிரம்மா தன் பணியைத் திறம்பட புரிய துணையாக அவருக்கு அவளருளால் தரப்பட்ட சரஸ்வதி தேவியே ப்ராம்ஹி எனப் போற்றப்படுகிறாள்.

ஓர் சமயம் நான்முகன் தம் நாயகியரான காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி போன்ற தம் சக்திகளுடன் காசிக்கு வந்தார். அங்கு ‘பிதாமகேச்வரம்’ எனும் லிங்கத்தை நிறுவி வழிபட்டார். உலக நலனுக்காக பத்து அஸ்வமேதயாகங்களை அங்கே செய்து முடித்தார் படைப்புக் கடவுள்.யாகங்கள் முடிந்ததும் ‘அவப்ருத எனும் ஸ்நானம் செய்ய வேண்டி கங்கையை நோக்கி காயத்ரி, சாவித்ரி போன்ற இரு தேவியருடன் சென்றார் பிரம்மா.

யாக சாலையில் கந்தர்வர்களின் இனிய இசையில் சங்கீதத்திற்குதேவதையான சரஸ்வதியே ஆழ்ந்திருந்தாள். ஆகையால், பிரம்மன் நீராடச் சென்றதை அவள் அறியவில்லை. சரஸ்வதிக்காக கங்கையின் கரையில் காத்திருந்த நான்முகன் நேரம் கடந்துவிட்டதால் மற்ற இருவருடன் அவப்ருத ஸ்நானம் செய்து முடித்தார்.

காலம் கடந்து கங்கையை அடைந்த கலைவாணி ‘‘தாங்கள் என்னை விட்டு எப்படி நீராடலாம்?’’ என வெகுண்டாள். அதனால் கோபம் கொண்ட பிரம்மா, ‘‘தேவி! நீ சரியான நேரத்தில் வராதது மட்டுமன்றி என்னிடமும் கோபம் கொண்டாய். எனவே, நீ பூமியில் நாற்பத்தெட்டு முறை பிறவி எடுத்து பின் எம்மை அடைவாய்,’’ என சாபமிட்டார்.

அதற்கு சரஸ்வதி, ‘‘நான்முகனே! நாற்பத்தெட்டு முறை நான் பூமியில் பிறவாமல் என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்,’’ என வரம் கேட்டாள்.‘‘பூவுலகில் உனது உருவாய்த் திகழும் 48 அட்சரங்களும் 48 தமிழ்ப் புலவர்களாய்ப் பிறந்து ஒரே சமயத்தில் வாழ்வர். அவர்களுக்கு ‘ஹ’காரத்தின் உருவமாய் பரமனே அந்தத் தமிழ்ப் புலவர்களுக்குத் தலைவனாய் இருந்து அவர்களைப் போற்றுவார்,’’ எனக் கூறினார் பிரம்மன். அவர்களே கீரன், கபிலர், பரணர் முதலான முதற்சங்க தமிழ்ப்புலவர்களானர்.

சுந்தரேசப் பெருமானே அவர்களுக்குத் தலைவனாய், கவிநாயகனாய் அவர்கள் தலைவனாய் உதித்து தாமிரபரணிக் கரையோரம் வாழ்ந்த அவர்களை மதுரையம்பதிக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் பொறுப்பில் அவர்களை விட்டுச் சென்றார்.இந்த சரஸ்வதி தேவியின் அம்சமான 48 மாத்ருகா அட்சரங்களே 48 சங்கப் புலவர்களாகத் திகழ்ந்தனர். பொருட்சுவையும், சொற்சுவையும் நிறைந்த இனிமையான பற்பல பாடல்களை இயற்றி, சொல்லும் பொருளுமாய், மலரும் மணமுமாய் உள்ள மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை போன்றவற்றைச் செய்து பாரினில் தமிழ் மணம் பரப்பியதை திருவிளையாடற்புராணம் பேசுகிறது.

இத்தேவி சொல்லின் உருவமானவள். வாக்தேவதை, வர்ணமாத்ருகா, வாக்வாதினி, சரஸ்வதி என மந்திர சாஸ்திரங்களால் வர்ணிக்கப்படுபவள்.அ முதல் ஃ வரையிலுள்ள உயிர் எழுத்து களை முகமாகவும், கண், காது, மூக்கு போன்றனவாகவும் விளங்குகின்றன. வடமொழியின் கவர்கம், சவர்கம் போன்ற பத்து எழுத்துகள் தேவியின் கரங்களாகவும், ட-வர்கமும் த- வர்கமும் ஆகிய பத்து எழுத்துகள் ப-வர்க்கம் வயிறாகவும், ய-விலிருந்து ஹ வரை எட்டு எழுத்துகளும் தோல், ரத்தம், சதை, எலும்பு, மஞ்ஜை, சுக்லம் போன்ற தாதுகளாகவும் இவளின் திவ்ய தேகத்தில் அமைந்துள்ளன.

சங்கீதமும் ஸாகித்யமும் இரு ஸ்தானங்களாகத் திகழ்கின்றன.தன் ஆறு கரங்களிலும் வரதம், அக்கமாலை, தண்டம், கமண்டலம், சருவம், அபயம் போன்றவற்றைத் தரித்தவள். பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் அன்னத்தை வாகனமாய்க் கொண்டதை நம் வேண்டாத குணங்களையும் பிரித்துக் காப்பதை உணர்த்துவதுபோல் உள்ளது. மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் கலந்த நிறத்தை உடையவள். மான் தோலை ஆடையாகத் தரித்தவள். இவள் பாலை எனும் குழந்தை வடிவமும் கொண்டவள் என துர்க்கா பூஜா கல்பம் எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது.

இத்தேவி அதிகாலையில் துதிக்கப்படும் சந்தியா தேவதையாகவும், பிரம்ம சக்தி எனும் கிராம தேவதையாகவும் வேள்விகளைக் காக்கும் யாக தேவதையாகவும், அஷ்ட பைரவர்களில் முதல்வனான அஸிதாங்க பைரவரின் தேவியாகவும் பல நிலைகளில் இருந்து பக்தர்களுக்கு திருவருட்பாலிக்கிறாள். ‘ப்ராம்ஹணீ பஞ்ஜிகா ஸ்ப்ருகா த்விஜபரி நீஷுவிச் ருதா’ என்ற விச்வ கோச வசனப்படி ப்ராம்ஹணீ எனும் பதமானது ஞான விசேஷத்தைக் குறிக்கும். வெள்ளைத் தாமரையில் ஞான வடிவாக விளங்குவதை ஸமயாசார ஸ்ம்ருதி எனும் நூல் ‘ப்ராஹ்மணீ ச்வேத புஷ்பாட்யா ஸம்வித்ஸா தேவாத்மிகா’ என்று போற்றுகின்றது.

இவள் ப்ரம்மானந்தத்தை உடையவள் என்பதால் ப்ரஹ்மானந்தா என்றும் இவளைப் போற்றுவர். இவளே கலாதேவி. சகல கல்வி கேள்விகளில் சிறந்தவராக இவள் கடைக்கண் பார்வை கட்டாயம் தேவை. இந்த தேவியின் வாகனமான அன்னமும் சத்வ குணத்திற்குப் பெயர் பெற்ற பறவையாகும். இந்த அன்னையை தியானித்து வழிபட்டால் கற்ற கலைகள் மறந்து போகாமல் மனதினில் நிலைத்திருக்கும்.

போர்க்கோலம் கொள்ளும்போது ஆயுதங்களோடும், ஞானத்தை அளிக்கும்போது வாக்தேவியாக, வீணா புஸ்தக தாரிணியாக, சரஸ்வதியாக அருள்பவளும் இவளே. தோலிற்குத் தலைவியான இவள் கோபம் கொண்டால் சொறி நோய் ஏற்படும். வெட்டிவேர் விசிறியால் விசிறி, விபூதி அணிந்து, புட்டும், சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால் அன்னை சாந்தமடைந்து நம்மை ஆசீர்வதிப்பாள்.

தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித் தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும்.

ப்ராம்ஹி த்யான ஸ்லோகங்கள்
அக்ஷஸ்ரக் சுபகுண்டி கேச தததீம் ஹஸ்தைர் வரம் சாபயம்
தேவீ ஸௌம்ய முகோத்பவாம் ஸ்மித முகீம்
ஹம்ஸேஸ்திதாம் வாஹனே ப்ரம்ஹாணீம்ஜகதாம் சுபம்
விதததீம் ஆத்யாமஹம் மாதரம்வந்தேஸ்வர்ணஸமான
காந்திருதிராம் சக்திம் ப்ராம் ப்ராஹ் மணீ:

தண்டம் கமண்டலூம் கச்சாத் அக்ஷ ஸூத்ரமதாபயம்
பிப்ரதி ககச்யா ப்ராஹ்மீ க்ருஷ்ணாஜி னோஜ்வலா.
சதுர்புஜாம் சதுர்வக்த்ராம் பீதமால்யாம் பரோஜ்வலாம்
வரதாபய ஹஸ்தாம் ச ஸாக்ஷமாலாம் ஸகண்டிகாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம்ஹம்ஸவாகன  ஸுஸ்திதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ப்ராஹ்மீம்த்யாத்வார பூஜயேத்.

நான்கு முகங்களையும், நான்கு
கைகளையும் உடையவளும், மஞ்சள்
நிறமான ஆடை, மாலை இவைகளால்

மிகவும் பிரகாசிக்கின்றவளும், வரதம், அபயம் எனும் முத்திரைகளைக் கையில் பெற்றிருப்பவளும் (ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பவளும், அன்னவாகனத்தில் பவனிவருபவளும்) எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமான பிராஹ்மி தேவியை தியானிக்கிறேன்.

ப்ராஹ்மி காயத்ரி ஓம் ஹம்ஸத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ ப்ராஹ்மி ப்ரசோதயாத்:

அன்னத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை உடையவளும், தர்ப்பைப் புற்களால் ஆன கூர்ச்சத்தை ஏந்திய கரங்கள் கொண்டவளுமான ப்ராஹ்மி எனும் தேவியை த்யானம் செய்கிறேன். அவள் என் முன்வந்து என் அறிவை மேம்படுத்தி ப்ரகாசிக்கச் செய்வாளாக. 

மந்த்ரம்ஓம் ப்ராம் ப்ராஹ்ம்யை நமஹ.
தேவி மஹாமித்யத்தில் ப்ராஹ்மி
ஹம்ஸயுக்த விமானஸ்தே பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரிசாம்ப க்ஷூரிகே தேவி நாராயணி நமோஸ்துதே.
ப்ராஹ்மி வடிவம் எடுத்து ஹம்ஸங்கள் பூட்டிய விமானத்தில்
வீற்றிருந்து தர்பைப்புல்லால் நீரைத் தெளிக்கும் தேவி நாராயணியே! உனக்கு நமஸ்காரம்.

ப்ராஹ்மி ஓவியம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்