திருப்தி தரும் திருப்பதி லட்டு!



ஏழுமலையானை தரிசித்தவுடன் லட்டுகளை வாங்கினால்தான் திருப்பதி பயணம் திருப்தியடைவதாக பக்தர்கள் கருதுவதுண்டு.திருப்பதி லட்டுகளுக்கு விசேஷ ருசியும் தனித்தன்மையும் உண்டு.

 நாள்தோறும் குறைந்தது ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்குள்ள நவீன சமையலறைக் கூடத்தில் லட்டு தயாரிப்பில் 150 பேர் பணியாற்றுகின்றனர். நாள்தோறும் 10 டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 150 கிலோ ஏலக்காய், 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ கற்கண்டு. 540 கிலோ உலர்ந்த திராட்சை பயன்படுத்தப்படுகின்றன.

“மனோஹரம்’’ என்ற பெயரில் லட்டு பிரசாதம் அறிமுகப்படுத்துவதற்கு முன் ஏழுமலையானுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்தான் நைவேத்தியமாக படைக்கப்பட்டது. வெல்லம் கலந்த இந்த பிரசாதத்தை பக்தர்கள் மிகவும் விரும்பினர். 1940ம் ஆண்டு வெங்கடேஸ்வரா நித்ய கல்யாணம் நிகழ்ச்சி யின்போது மிகப்பெரியதான ‘கொண்டந்தா’ லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

அந்த ஒரு லட்டை இரண்டாக உடைத்தால் முழித்துப் பார்க்கும் முழுமுந்திரிகளும், நெய்யில் வறுபட்ட பாதாம் பருப்புகளும், நாவில் கடிபடும் கற்கண்டுக் கட்டிகளும், உலர்ந்த திராட்சைப்பழங்களும், லவங்கமும், பச்சைக்கற்பூரமும், நெய்யில் பொரிந்த பூந்தி முத்துக்களும் பார்க்கும் போதே நாவூற வைக்கும்.

விறகு அடுப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப் பட்டு வந்த லட்டுகள், 1984ம் ஆண்டிலிருந்து எல்பிஜி அடுப்பு முறைக்கு மாறியது. பின்னர் பக்தர்களின் தேவை அதிகரிக்கவே மேலும் ஒரு சமையலறை கட்டப்பட்டு லட்டு தயாரிப்பு ஒரு லட்சத்திலிருந்து கூடுதலாக 70 ஆயிரம் அதிகரிக்கப்பட்டது. யுகாதி போன்ற சிறப்பு நாட்களில் கடவுளுக்கு படைப்பதற்காக விசேஷ லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றும் நாள்தோறும் ஏழுமலையானுக்கு படைக்க கோயிலுக்குள் உள்ள நவீன சுகாதார சமையலறையில் 32 கிலோ எடையில் ஒரு லட்டு தயாராகிறது.

இந்த லட்டை கோயிலுக்குள் உள்ள பொடு என அழைக்கப்படும் மடப்பள்ளியிலேயே பாரம்பரியமாக தயாரிக்கின்றனர். கடந்த 300 ஆண்டுகளாக இந்த திருப்பணி நடப்பதாகக் கூறப்படுகிறது. திருப்பதி லட்டை கல்யாண லட்டு என்றும் கூறுவர். இது அரை கிலோ எடை கொண்டது. லட்டு தயாரிக்க தேவைப் படும் பொருட்களும், தயாரித்த லட்டுகளும் கிரேன் மூலமாக வினியோக இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு 175 கிராம் எடையுள்ளதாகும். இந்த லட்டு விற்பனை மூலம் ஆண்டுதோறும் பல கோடிகள் வருவாய் கிடைக்கிறது.

- பரத்குமார்