நான்கே வரிகளில் ராமகாதை!



பக்தித் தமிழ் 32

ஒரு பிரபலமான கதை. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே சிறு சச்சரவு. ‘நம் இருவரில் யார் பெரியவர்?’ என்று விவாதித்தார்கள். ‘படைக்கிற நானே உயர்ந்தவன்’ என்றார் பிரம்மா. ‘காக்கிற நானே உயர்ந்தவன்’ என்றார் விஷ்ணு. தெய்வங்களுக்கு இடையில்கூட இப்படியெல்லாம் போட்டி வருமா என்று நினைக்கவேண்டாம். நமக்கு சில பேருண்மைகளை
விளக்குவதற்காக, அவர்கள் இதுமாதிரி நடந்துகொள்வது வழக்கம்தானே!

ஆக, அவர்கள் போட்டி போட்டார்கள். அல்லது, போட்டி போடுவதுபோல் நடந்துகொண்டார்கள். நேராக சிவபெருமானிடம் சென்று தங்களுடைய பிரச்னையைச் சொன்னார்கள்.
சிவபெருமான் இருவரையும் பார்த்தார். ‘உங்களில் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்ள நான் ஓர் எளிய வழி சொல்லட்டுமா?’ என்று கேட்டார்.‘சொல்லுங்கள்!’

‘உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி. அதில் யார் ஜெயிக்கிறீர்களோ, அவர்கள்தான் உயர்ந்தவர்!’பிரம்மா, விஷ்ணு இருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் இதற்குச் சம்மதித்தார்கள். ‘என்ன போட்டி? சொல்லுங்கள், எதுவானாலும் நாங்கள் தயார்!’சிவபெருமான் ஒரு பெரிய ஜோதி வடிவெடுத்து நின்றார்.

‘என்னுடைய அடி, முடியைக் கண்டுப்பிடிக்க வேண்டும். அதுதான் போட்டி’ என்றார். உடனே, பிரம்மா அன்னப்பறவை வடிவில் சிவனின் முடியை நோக்கிப் பயணமானார், விஷ்ணுவராக வடிவில் சிவனின் காலடியைத் தேடத் தொடங்கி னார். ஒருவர் மேலே, இன்னொருவர் கீழே என்று தொடர்ந்து சென்றார்கள்.

ஆனால், நெடுந்தூரம் ஆகியும் அவர்களால் சிவனின் அடி, முடி காண இயலவில்லை. உடலெல்லாம் வலி எடுத்ததுதான் மிச்சம். திணறிப்போனார்கள். சிவனின் பெருமையை உணர்ந்தார்கள்.

இந்தக் கதையைக் கவிதையாக எழுதவேண்டுமென்றால், எத்தனை சொற்கள் தேவைப்படும்?சிலர் நூறு சொற்களில் எழுதுவார்கள், எட்டே வரியில் எழுதுகிறவர்கள் உண்டு, கொஞ்சம் முயற்சி செய்தால், நான்கு அல்லது இரண்டு வரிகளில்கூடச் சொல்லலாம்.

திருஞானசம்பந்தருக்கு இந்தக் கதையைச் சொல்ல நான்கே நான்கு சொற்கள்தான் தேவைப்பட்டன. அதுவும் எதுகை அழகோடு மிக அற்புதமாக எழுதிவிட்டார், இப்படி:
பூவினானும், தாவினானும்,நாவினாலும் நோவினாரே! ‘பூவினான்’ என்றால், தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் பிரம்மன். ‘தாவினான்’ என்றால், தாவியவன், வாமனனாக அவதாரம் எடுத்துத் தாவி உலகை அளந்தவன், அதாவது, விஷ்ணு.

இவர்கள் இருவரும், ‘நோவினார்’, அதாவது, உடல் நொந்து வருந்தினார்கள். அத்தனை முயற்சி செய்தும் சிவனின் அடி, முடி காண இயலாமல் தவித்தார்கள். அதன் பிறகு, அவர்கள் ஓர் உத்தி கண்டுபிடித்தார்கள். ‘நாவினால்’, அதாவது, தங்கள் நாக்கினால் சிவபெருமானைப் புகழ்ந்து பாடினார்கள். உடனே, சிவபெருமான் அவர்களுக்குக் கிடைத்துவிட்டார். அதுபோல, நாமும் நமது நாவினால் அவன் பெயரைச் சொல்லிப் புகழ்ந்து பாடினால் போதும், கண் முன்னே வந்து நிற்பார்!

பிரம்மாவும் விஷ்ணுவும் உண்மையில் போட்டி போட்டார்களோ இல்லையோ, இந்த உலகில் இன்னொரு போட்டி என்றென்றும் உள்ளது: கல்வியா, செல்வமா, வீரமா?
கல்விக்குத் தெய்வம் கலைமகள், சரஸ்வதி. செல்வத்தின் தெய்வம் திருமகள், லட்சுமி. வீரத்தின் தெய்வம் மலைமகள், பார்வதி. இந்த மூவரில் யார் உயர்ந்தவர்?
சிலர் கல்வி இருந்தால் எல்லாம் வரும் என்பார்கள். சிலர் செல்வத்தால் அறிவை வாங்கலாம் என்பார்கள். சிலர் வீரம் இன்றி வாழ்வு ஏது என்பார்கள்.இந்தக் கேள்விக்கு கம்பர் ஒரு நல்ல பதில் சொல்கிறார். கவிச் சக்கரவர்த்தி அல்லவா?

கல்வித் தெய்வத்தை வணங்கி அவர் எழுதிய ‘சரஸ்வதி அந்தாதி’ நூலில் இடம்பெறும் அந்தப் பாடல்:வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும் மற்று எப் பொருளும்பொய்க்கும் பொருள், அன்றி நீடும் பொருள் அல்ல. பூதலத்தின்மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும் உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே!

இந்த உலகத்தில் சேமிக்கப்படும் பொருட்கள் நிறைய உண்டு, வாழ்க்கைக்காகச் சேர்க்கும் பொருட்கள் உண்டு, இன்னும் பலவிதமான பொருட்கள் உண்டு. அவை எல்லாமே பொய்க்கும் பொருட்கள், அதாவது, பொய்யாகிவிடக்கூடிய பொருள் என்கிறார் கம்பர். ‘அவை நிலைத்து
நிற்காது’ என்று வலியுறுத்துகிறார்.

அப்படியானால், ‘மெய்க்கும் பொருள்’, அதாவது, என்றும் நிலைத்து நிற்கும் பொருள் எது? அழியாத பொருள் எது? சிறந்த பொருள் எது? நம்மை வாழவைக்கும் பொருள் எது?
கலைமகளாகிய சரஸ்வதி தரும் கல்விதான் அந்தப் பொருள்!ராமாயணத்தை வால்மீகி முனிவர் பல ஆயிரம் சுலோகங்கள் கொண்ட வட மொழி நூலாக
எழுதினார். கம்பர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களாக்கினார். இன்னும் பல மொழிகளில் ராமாயணம் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இப்போதும் கோயில்களில், விழாக்களில் பல நாள் ராமாயணம் சொல்வார்கள்.
அந்தப் பெரிய கதையைச் சுருக்கமாகச் சொல்ல இயலுமா?
நாலாயிர திவ்யப் பிரபந்தம் பெரிய திரு
மொழியில் திருமங்கையாழ்வார் இந்தச் சவாலை
ஏற்றுக்கொள்கிறார். நான்கே வரிகளில்
ராமாயணத்தைச் சொல்கிறார், இப்படி:
கலையும் கரியும் பரி மாவும் திரியும் கானம்
 கடந்து போய்,

சிலையும் கணையும் துணையாகச் சென்றான்
 வென்றிச் செருக் களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி
மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்
தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம்
 அடை நெஞ்சே!

என்னுடைய நெஞ்சே, சாளக்கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பிரான் என்னவெல்லாம் செய்தான் தெரியுமா? கலைமானும் யானையும் குதிரைகளும் திரிகின்ற கானகத்துக்குச் சென்றான். பிறகு அங்கிருந்து போர்க்களத்துக்குச் சென்றான்.

அங்கே அவனுக்குத் துணை யார் தெரியுமா? வேறு யார்? அவனுடைய வில்லும் அம்பும்தான். போர்க்களத்துக்கு அவன் நேராகச் சென்றுவிடவில்லை. வழியில் ஒரு பெரிய கடல் இருந்தது. அலைகள் பாயும் அந்தக் கடலை அவன் எப்படிக் கடந்தான்? மலைகள், பாறைகளைக் கொண்டு, நீர் நடுவே அணை கட்டினான். அதில் நடந்து சென்று மதிள் சுவர்களாலும் கடலாலும் சூழப்பட்ட இலங்கைக்குச் சென்றான்.

இலங்கையில் அரக்கர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய தலைவன், பத்துத் தலை கொண்ட ராவணன். அவனது தலைகளை அறுத்து வென்றான் ராமன். அப்படிப்பட்ட ராமனின் திருத்தலமான சாளக்கிராமத்துக்கு நீ செல்வாய்!ராமர் இலங்கைக்குப் போரிடச் சென்றபோது, அவரிடம் வில்லும் அம்பும் இருந்தன. அவற்றின் துணையோடு அவர் ராவணனை வென்றார். ஆனால், திரிபுரங்களை வெல்லப் புறப்பட்ட சிவபெருமானிடம் வில் இல்லை. அவர் என்ன செய்வார்?

மேரு மலையை வில்லாக்கிக்கொண்டார் சிவன் என்று நாம் படித்திருக்கிறோம். குமரகுருபரர் அதனை ஓர் அழகிய கற்பனையாகக் காட்டுகிறார். சிவபெருமான் மேரு மலையின்முன் சென்று நிற்கிறார்.

அந்த மலை அவரைப் பார்க்கிறது. பொதுவாக மலை என்றாலே கம்பீரம், திடம், வலிமை என்றுதான் அர்த்தம். அதுவும் மேரு மலை என்றால் கேட்கவேண்டுமா? உலகிலேயே மிகச் சிறந்த மலை அது, பொன்மயமாகப் பொலிவது! ஆனால், அப்பேர்ப்பட்ட மேரு மலை, அன்றைக்குச் சிவபெருமானைப் பார்த்துத் திகைத்துப்போகிறது.

காரணம், அவருடைய தோள் அழகு! ‘இந்தத் தோள்களோடு ஒப்பிடும்போது நான் மிகவும் சிறியவன்’ என்று வெட்கம் கொண்டது மேரு மலை. வெட்கப்படுகிறவர்கள் நாணிக் கோணி வளைந்து நிற்பார்கள் அல்லவா? அப்படி வளைந்தது.சிவபெருமான் எதிர்பார்த்தது அதைதான். சட்டென்று அந்த மலையைப் பிடித்து எடுத்தார். வளைந்திருந்த மலையில் நாண் ஏற்றித்
திரிபுரங்களை அழிக்கப் பயன்படுத்திக்கொண்டார்!

பார் பெற்ற வல்லிக்கு, பாகீரதிக்கு மெய் பாதியும்
அத்தார் பெற்ற வேணியும் தந்தார் தியாகர்,
‘தடம் புயத்தின் சீர் பெற்றிலேம்’ என்று
நாணால் வசங்கிச்சிலை எனவும்
பேர் பெற்றதால் பொன் மலை குனித்தார்
 எம் பிரான் என்பரே!

பார் பெற்ற வல்லி என்றால் உமாதேவி, பார்வதி. பாகீரதி என்றால், கங்கை. இந்த இருவருக்கும், சிவபெருமான் இரண்டு விஷயங்களைக் கொடுத்தார்: உமாதேவிக்குத் தன் உடலில் பாதியைக் கொடுத் தார், கங்கைக்கு மாலை அணிந்த தன் ஜடா முடியைக் கொடுத்தார்.

அப்படிப்பட்ட அந்தத் ஸ்ரீதியாகேசர், பொன்மலையாகிய மேரு மலையின்முன் வந்து நின்றார். அவருடைய வலுவான தோள்களைப் பார்த்து ‘நான் இத்தனை சிறப்பாக இல்லையே’ என்று வெட்கப்பட்டது அந்த மேரு மலை.

அதனால் வளைந்து நின்றது! சிவனுடைய மேனி அழகை, பிரகாசத்தைக் கண்ட அந்தத் தங்க மலை, அவர்முன்னே ஒரு சாதாரணக் கல் மலையாக மாறி நின்றது! உடனே, அந்த மலையை எடுத்துத் தனது வில்லாகப் பயன்படுத்திக் கொண்டார் எம்பிரானாகிய சிவன்.

மேரு மலைக்கு முன்னே இறைவன் வந்து நின்றதும், அது நாணிக் கோணியது. அதுபோல, இறைவன் உங்கள் முன்னால் வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைவிட முக்கியம், இறை வன் தரிசனம் கிடைத்தபிறகு, நீங்கள் என்ன செய்வீர்கள்? கடவுளைப் பார்க்கும்வரை நாம் ஆயிரம் கதை பேசலாம். ஆனால், அவரைக் கண்ட பிறகு, பேச்சு மறந்துவிடுமாம். இறைவனைப் பார்த்தவர்கள் மௌனத்தையே கொண்டிருப்பார்களாம்!

ஆகவே, இன்னும் இறைவன் திருவடிகளைக் காணாதவர்கள், மௌனம் காக்கவேண்டும். அல்லது, வாயைத் திறந்தாலே இனிய சொற்களைதான் பேச
வேண்டும், பேச்சில் கருணை பொங்கவேண்டும், எல்லாரிடமும் அன்போடு நடந்து கொள்ள
வேண்டும், ஏழைகளுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்!
இதையெல்லாம் செய்தால், இறைவன் நம் முன்னே தோன்றுவாரா?

அட, ஏன் குழப்பம்? இனிமையாகப் பேசுவதும், அன்பாக, கருணையாக நடந்துகொள்வதும்,
பிறருக்கு உதவுவதும்தான் இறைவன், அதுதான் கடவுளின் தரிசனம். இவற்றை முறைப்படி
செய்தாலே போதும், பின்னர் இந்த உலகத்தில் என்றும் இன்பமாக வாழலாம்!
பக்திக்கு இப்படி ஓர் அழகிய வரையறையைத் தருபவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
அவரது ‘போதனை’ என்ற பாடலில் வரும் வரிகள் இவை:

ஈசன் இரங்கி அடியவருக்(கு)
இனிய காட்சி அளித்திடு நாள்
ஈசன் அடியார் யாவும் மறந்து
ஈசன் அடியே கண்டிருப்பர்!
ஈசன் அடியைக் கண்டவர், பின்
என்றும் மௌனம் கொண்டிருப்பர்,
ஈசன் அடி காணாதவரே
எங்கும் முழங்கி அலைந்திடுவர்!

என்றும் ஈசன் திருவடிகள்
இதயக் கமலம் சேர்ப்பீரேல்,
என்றும் கருணை ததும்பி எழும்
இனிய உரைகள் உரைப்பீரேல்,
என்றும் ஏழை எளியவருக்கு
இயன்ற உதவி புரிவீரேல்,
என்றும் என்றும் இவ்வுலகில்,
இனிய வாழ்வு வாழ்வீரே!
ஓவியங்கள்: வேதகணபதி
(தொடரும்)

என்.சொக்கன்