திருமூலர் வாய்ப்பாட்டில் வாழ்க்கைக் கணக்கு!



காலச் சக்கரம்! எவ்வளவோ பெரிய பெரிய கொம்பாதி கொம்பர்களும், அவதார புருஷர்களும், சித்த புருஷர்களும் காலச் சக்கரத்தில் அரைக்கப்பட்டிருக்கிறார்கள்.மிகவும் நல்லவர்களும் உள்ளத் தூய்மையாளர்களுமான அவர்களே, காலச் சக்கரத்தில் சிக்கிக் காணாமல் போய் விட்டார்கள் என்றால், நாம் எந்த மூலை? கால வெள்ளத்தில் சிக்கிய ஒரு சின்னஞ்சிறிய துரும்பு நாம்!

வெள்ளத்தில் சிக்கியது எதுவாக இருந்தாலும் அதை வெள்ளம் விட்டு வைக்காது. அடித்துத் தள்ளிக் கொண்டு போய் விடும். அதுபோல, கால வெள்ளத்தில் சிக்கிய அனைத்தையும் அனைவரையும் காலம் அடித்துத் தள்ளிவிடும்.

சரி! சிக்கி விட்டோம். மேலும் சிக்கல்களில் அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்க என்ன வழி? ஆடிப்பெருக்கு முடிந்திருக்கிறதல்லவா? அதை வைத்து, முன்னோர்கள் சொன்ன ஒரு கதையைப் பார்க்கலாம். ஆடிப்பெருக்கன்று, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் ஆற்றில் விட்ட பலவிதமான பொருட்கள் மிதந்துவர, இளைஞர்கள் சிலர் நீந்தி அவற்றை எடுத்து வந்தார்கள்.

தூரத்தில் ஒரு பெரிய கம்பளி மூட்டை மிதந்து வருவதைப் பார்த்தான் ஒருவன். அதைக் கைப்பற்ற வெள்ளத்தில் பாய்ந்து விட்டான்.அவன், நதியின் நடுவில் நீந்திக் கொண்டிருந்த நேரம், ‘‘ஏய், வெள்ளம்! ரொம்ப தூரம் போகாதே!’’ என்று அவன் நண்பர்கள் கத்தினார்கள்.  அதற்குள் அவன், கம்பளி மூட்டையை நெருங்கி அதை கைப்பற்றி விட்டான். ஆனால், அவனால் திரும்ப முடியவில்லை.

‘‘டேய்! கம்பளி மூட்டை வேண்டாம். அதைவிட்டு விட்டு வந்து விடு!’’ என்றார்கள் நண்பர்கள்.கம்பளி மூட்டையைப் பிடித்து நீந்திக் கொண்டிருந்தவன், ‘‘நான் அப்போதே கம்பளி மூட்டையை விட்டு விட்டேன். இப்போது, அதுதான் என்னை விடமாட்டேன் என்கிறது. அது கம்பளி மூட்டை இல்லை, கரடி!’’ என கத்தினான்.அவன், ஆசை வசப்பட்டுக் கம்பளி மூட்டை என நினைத்துக் கரடியைப் பிடித்து விட்டான். வெள்ளத் தில் தத்தளித்த கரடி, தான் உயிர் தப்புவதற்காக அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு விட்டது. இனிமேல், அவன் உயிர் தப்ப முடியுமா என்ன?

முன்னோர்கள் சொன்ன இக்கதையில் வருவதைப் போல்,நாம் ஆசைவசப்பட்டு, சுகம் அளிக்கும் என நினைத்துக் கெட்டவற்றைப் பிடித்து விட்டோம். நாம் விட்டால் கூட, அவை நம்மை விட மாட்டேன் என்கிறது. விளைவு? துயரத்தில் வசப்பட்டுத் துடிக்கிறோம்.துயர வெள்ளத்தில் இருந்து தப்ப என்ன வழி? திருமூலர் சொல்கிறார்.

உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறு ஏழும்
கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றது அறியாது அழிகின்றவாறே!

(திருமந்திரம் - 725)

இப்பாடலில் 5,6,7,8,9,10 என சின்னக் குழந்தைகளுக்குச்  சொல்வதைப் போலத் திருமூலர்
சொல்லி இருப்பதைக் கவனிக்க வேண்டும். அந்த எண்கள் எதைக் குறிக்கின்றன? தானே உணர்ந்து, கண்-காது-மூக்கு-வாய்-உடம்பு எனும் ஐம்புலன்கள் வழியாகவும் பெறும் அறிவு ஐந்தும்;அந்த ஐம்புலனறிவின் நன்மை தீமைகளை ஆராய்ந்து அறியும் ஆறாவது அறிவாகிய

பகுத்தறிவும்;அனுபவசாலிகளான பெரியோர்கள் சொல்ல, அதன்மூலம் அறியும் உபதேச மொழியான ஏழாவது அறிவும்;தானே படித்து உணரும் நூலறிவால் வரும் எட்டாவது அறிவும்;
கல்வி கேள்விகளில் சிறந்தவர்களுடன் சேர்ந்து கலந்து உரையாடிப் பெறும் பட்டறிவாகிய ஒன்பதாம் அறிவும்;

இந்த ஒன்பது அறிவையும் பெறக் காரணமாக இருந்து உதவும் பரம்பொருளைப் பிரியாது பற்றி நிற்கும் பத்தாவது அறிவும்...

அந்தப் பத்தினாலும், இவ்வாறு பலவகைத் தொழிலால், உடலிற்கு அளந்த நாழிகை
தெரியாமல், அறியாமையில் அழுந்தி கழிந்துபோவது இரக்கத்தக்கது.
- இப்பாடல் சொல்லும் கருத்து இதுவே!

ஐந்தில் தொடங்கி, அதாவது ஐம்புலன்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கி, படிப்படியாகப் போய் பத்தில் முடியும் இறைவனைப் பற்றிச் சொல்லும் இப்பாடல், அபூர்வமான அமைப்பு கொண்டது.ஐம்புலன்களும் கொண்டு ஆறாவது அறிவுடன் மனிதர்களாக நாம் பிறப்பெடுத்தது இறைவனை அடையவே! ஆனால், நடப்பது என்ன?

ஐம்புலன்களும் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றால் ஏற்பட்ட சுகங்களால் நாமும் அவற்றின் பின்னாலேயே போய் மேலும் மேலும் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறோம். அப்போது, ஆறாவது அறிவான பகுத்தறிவு ஐம்புலன்களால் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நமக்குச் சொல்கிறது. நாம் கேட்போமா என்ன?நல்லதைத் தீயதாகவும் தீயதை நல்லதாகவும் தீர்மானித்துச் செயல்படுத்துவோம், செயல்படுவோம். துயரத்தில் சிக்கித் திண்டாடுவோம்.

அப்போது, அனுபவசாலிகளான பெரியவர்கள் தங்கள் அனுபவத்தைச் சொல்லி, ‘‘இப்படிச் செய்!’’ என உபதேசிப்பார்கள்.அந்த உபதேசங்களைக் கேட்டாவது, நாம் உய்வடையலாம். ஆனால் நாமோ, ‘‘அவர் அனுபவத்த அவர் சொல்றார். அது எல்லோருக்கும் பலிக்குமா என்ன?‘‘ என அந்த அருள் உபதேசங்களை ஒதுக்கி, அவர் சொன்னதற்கு மாறான தகவல்களை நூல்களில் தேடுவோம். (இக்காலத்தில் இன்டர்நெட்டில் தேடுவோம்)

எல்லா நூல்களையும் படிக்க முடியுமா என்ன? ஏதோ கைக்குக் கிடைத்ததைக் கொஞ்சம் படிப்போம். அப்படியும் தெளிவு பிறக்கவில்லை. அதன்பின் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களுடன் கலந்து உரையாடி ஏதோ ஓரளவிற்குத் தெளிவுபெற முயல்வோம். அந்த நேரத்தில் ஓர் ஒளிக்கீற்று தோன்றும். அதாவது, அனைத்தையும் நாம் பெறக் காரணமாக இருக்கும் தெய்வத்தைப் பற்றிய சிந்தனை பிறக்கும்.

இதுவரை பார்த்த 5 முதல் 10 வரை உள்ளவற்றில் ஒன்றைத் தாண்டி, அடுத்ததற்கு வருவதே கடினம். அப்படியிருக்க, ஐம்புலன் வேட்டையில் ஆழ்ந்திருக்கும் நாம் அங்கிருந்து ஒரே தாவாகத்தாவி, ஆண்டவனை அடைய முயற்சித்தால், அது நடக்கக்கூடிய காரியமா என்ன? வாழ்நாள் வீணாகப் போய் விடுகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், படிப்படியாக முன்னேற நினைக்காமல், மந்திர மாய ஜாலங்கள்போல, உடனே அப்படியே மேலே ஏறி உட்கார நினைக்கிறோம்.இதைச் சொல்லி எச்சரிக்கிறார் திருமூலர். இதே எச்சரிக்கையை இன்னும் கொஞ்சம் வலுவாக வயதைச் சொல்லி எச்சரிக்கிறார்.

ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய அடுத்த பாடல் அது.
அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்று என்பதாகும்
கழிகின்ற கால் அறுபத்திரண்டு எண்பது
எழுகின்ற ஈரைம்பது எண்ணல் திருந்தே

(திருமந்திரம் - 726)


கருத்து: உயிர் வாழும் மக்களுடைய வாழ்வில் அவர்களுடைய 25 வயது முதல் 28 வயது வரை ஒரு கண்டம். இந்தக் கண்டம் தாண்டினால் வாழும் வயது முப்பது முதல் முப்பத்து மூன்று என்று சொல்லலாம் என்பதாகும்.

இதையும் தாண்டி வாழ்பவர்களின் வயது வரம்பு (கழிகின்ற காலம்) அறுபது முதல் அறுபத்து இரண்டு வரையாகும். இந்த மூன்று கண்டத்திற்கும் தப்பி வாழ்பவர்கள் 80 ஆண்டுகளும் 100 ஆண்டுகளும் நிறைந்து முற்றிய எல்லையாகவும் கணக்கிடப் படுதல் காலச்சக்கரத்தின் முறையாகும்.
முடிவு என்பது எந்த வயதிலும் வரும்.

இருந் தாலும் திருமூலர் சொன்ன இந்த வயதுக் கணக்கில்  ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதைக் கொஞ்சமாவது அனுபவித்து உணரலாம் வாருங்கள்.பெரும் காற்று வீசும்போது, மரங்களில் உள்ள காய்ந்துபோன சருகுகளும் பழுத்த பழங்களும் விழும். பச்சை இலைகளும் காய்களும் கூட விழும். அதுபோல, கால வெள்ளத்தில் முதியவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு வகையான வயதினர்களும் சிக்குவார்கள்.

 இவ்வாறு தொடங்கிய திருமூலர், ஒருசில வயதுகளைக் குறிப்பிடுகிறார். 25 வயது முதல் 28 வயது வரை ஒரு கண்டம். இளமைத் துடிப்பு மிகுந்த காலம் இது. எதைப் பார்த்தாலும் ஆவேசமாகப் பாயச் சொல்லும் பருவம்.

யாராவது நல்லது சொன்னால், சொன்னதை மட்டுமல்ல, சொன்னவர்களையும் சேர்த்துத் தூக்கி எறியச் சொல்லும் பருவம். அறிவும் ஆற்றலும் அவசர அவசரமாகச் செயல்படும் வயது. ரத்தத் துடிப்பில் அவ்வாறு செயல்படும்போது, பலவிதமான பெரும்  சங்கடங்கள் எழுந்து, வாழ்க்கையே முடித்தாலும் முடித்துவிடும்.

முப்பது வயது முதல் முப்பத்து மூன்று வயதுவரை அடுத்த கண்டம். கல்யாணம் ஆகி, குழந்தைகள், அவற்றின் பராமரிப்பு எனக் குடும்பப் பொறுப்புகள் ஏராளமானவற்றைக் கொண்ட வயது இது. இளமை வேகம் சற்று அடங்கி இருந்தாலும், இளமைப் பருவத்தைவிட மோசமான பருவம் இது.

இளமைப் பருவமாவது தனக்காக மட்டுமே தன் ஒருவனின் நலனுக்காக மட்டுமே பாடுபடக்கூடியது. ஆனால், இந்தக் குடும்பப் பொறுப்பில் இருக்கும் பருவமோ, தனக்காக, தன் மனைவிக்காக, தன் குழந்தைகளுக்காக எனப் பலரின் நலன்களுக்காகவும் கடுமையாகப் பலவிதங்களிலும் பாடுபட்டாக வேண்டிய காலகட்டம்.

சவாலான, சிக்கலான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய இப்பருவத்தில் பிரச்னைகளின் பாரம், அழுத்தம் தாங்காமல் முடிவு நேரலாம்.இதையும் தாண்டினால் 60 வயது முதல் 62 வயது வரை அடுத்த கண்டம். அறுபது வயது என்பது (தமிழ் வருடங்கள் அறுபதின்படி) ஒரு சுற்று. அந்தச் சுற்று முழுமையாக முடிந்து, அடுத்தச் சுற்று தொடங்கும்போது, கண்டிப்பாக சங்கடங்கள்  எழும். உடலும் மனமும் தளர்ந்து போன நிலையில், சங்கடங்களில் இருந்து மீள வழி தெரிந்தாலும் இயலாமையில் வாழ்நாள் முடிந்து போகும்.

அறுபதாம் கல்யாணம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இது கர்ப்பவாச காலமான ஓராண்டையும் சேர்த்துக் கணக்கிடப் படக்கூடியதாகச் செய்வார்கள். இன்னும் சிலர், அந்தக் கர்ப்பவாச காலத்தைக் கணக்கில் கொள்ளாமல், 61 வயதில் ‘சஷ்டியப்த பூர்த்தி’ எனக் கொண்டாடுவார்கள்.இது எப்படி இருந்தாலும், 60 வயது முதல் 62 வயது வரை, ஒரு கண்டம் தான். இதைத் தாண்டி இருந்தால், 80 வருடங்கள், 100 வருடங்கள் என வாழலாம்.

இப்பாடலில் வரும் ‘கழிகின்ற’ என்ற சொல்லை, கழிகின்ற அறுபத்து இரண்டு, கழிகின்ற எண்பது, கழிகின்ற ஈரைம்பது (நூறு) எனக் கொண்டு கூட்டு செய்து (சேர்த்துப்) பொருள் கொள்ள வேண்டும். காரணம்?அறுபது வயதைக் கடந்து விட்டாலே, ‘‘ப்ச்! அந்தக் காலத்துல, நாங்கள் எல்லாம் எப்படி இருந்தோம் தெரியுமா?

பதிமூன்று ரூபா குடுத்து, ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்னிக்கி இருபத்தஞ்சாயிரத்துல போய் நிக்கறது தங்கத்து விலை. என்னத்தச் சொல்ல? காலம் கழிஞ்சு போயிடுத்து...’’ என்று பழம் பெருமை பேசுவதிலேயே காலம் கழிந்து போய் விடும்.இதையே ‘கழிகின்ற’ என்ற சொல்லால், திருமூலர் குறிப்பிடுகிறார்.

ஆயுளின் எல்லையை, யாரால் அறிய முடியும்? - என்று இவ்வாறு சொன்ன திருமூலர் உயிரோடு இருக்கும் காலத்திலேயே தவத்தைச் செய்து சிவத்தைச் சேரச் சொல்கிறார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்போம் அல்லவா? அதுபோல!‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற்செயின்’ எனத்  திருவள்ளுவர் கூறியதைப் போல திருமூலரும் நற்செயல்களுக்கான நாட்கள் என சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அப்பாடலில் ஜோசியத் தகவல்களும் இடம் பெறுகின்றன.

திருந்து தினம் அத்தினத்தினொடு நின்று
இருந்து அறிநாள் ஒன்றிரண்டிரு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந்தோங்கி
வருந்துதல் இன்றி மனை புகலாமே!

(திருமந்திரம் - 727)

நல்லதைச் செய்வதற்கான காலத்தை இப்பாடலில் திருமூலர் குறிப்பிடுகிறார்.பிறந்த நட்சத்திரம், அதை முதலாவதாக வைத்து, அதனோடு 2, 4, 6 என்ற எண்களைக் கூட்டினால் 3, 5, 7 எனும் எண்கள் வரும். பிறந்த நட்சத்திரம், அதன்பின் வருகின்ற 3, 5, 7 எனும் வரிசையில் வரும் நட்சத்திரங்கள் ஆகியவை கொண்ட நாட்களை விலக்கி, மற்றைய நட்சத்திரங்களில் தவமோ, ஜபமோ ஆரம்பிக்கலாம். இல்வாழ்க்கைக்கு உரிய எந்தவொரு நற்காரியத்தையும் தொடங்கலாம்.இதைத் தொடர்ந்து, பல பாடல்களில் காலக் கணக்கைப் பற்றிப் பல்வேறு விதங்களில் விவரித்துள்ளார் திருமூலர்.

(மந்திரம் ஒலிக்கும்)

பி.என்.பரசுராமன்