துளசி,வில்வ தளங்களை எந்த நாளில் பறிக்கலாம்?



தெளிவு பெரும் ஓம்

?பத்து உபநிஷதங்கள் என்னென்ன? அவற்றை அனைவரும் படிக்கலாமா? விளக்கம்
தாருங்கள். - முருகேசன், நல்லூர்.

ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டகோ, மாண்டூக்ய, தித்திரி, ஐதரேயம், சாந்தோக்யம், ப்ருஹதாரண்யம் ஆகியவையே பத்து உபநிஷதங்கள் ஆகும். வேதத்தின் அந்தமாக இவை விளங்குவதால் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. வேதங்கள் உலக சிருஷ்டி கிரமத்தைப் பற்றியும், இதில் தனி மனிதன் ஆற்ற வேண்டிய கர்மங்களைப் பற்றியும் கூறுகின்றது. வேதங்களை கர்ம காண்டம். ஞான காண்டம் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

இதில் உபநிஷதங்கள் ஞான காண்டத்தில் வரும். உபநிஷதம் என்றால் குருவோடு இருத்தல், குருவுக்கு அருகே என்றெல்லாம் பொருள்படும். உபநிஷதங்கள் எல்லாமே வேதாந்தங்களாக ஒளிர்கின்றன. வேதத்தின் இலக்கு வேதாந்தத்தை அறிந்து கொள்ளுதலே ஆகும். இல்லாத உலகத்தை மாயையால் இருப்பதாக நினைத்து மயங்குகிறது ஜீவன். தான் அளப்பரிய ஆத்ம வஸ்துவாக இருந்து கொண்டு தன்னை உடலாக நினைத்து மயங்குகிறது. சுகம் என்பதே உலகில் இருப்பதுபோல தோன்றுகிறது.

 ஆனால், வெளியில் நிச்சயம் சுகம் கிடைக்கவே கிடைக்காது. இதை அறியாது இந்த உலகத்தில் எதை அறிந்தாலும் மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க வேண்டி யிருக்கும் என்று முக்தியைத் தவிர இம்மியளவும் வேறெந்த விஷயங்களை உபநிஷதங்கள் பேசாது. ஜீவன், முக்தியை நோக்கி மட்டும்தான் கொண்டு செல்லும். ஜீவன்களின் பக்குவத்திற்கேற்ப வேதங்கள் ஆரம்பத்தில் உலகத்தை ஒப்புக் கொண்டும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்றெல்லாம் பேசும்.

ஆனால், மெல்ல வேதாந்தத்தில் கொண்டு விட்டபிறகு எல்லாவிதமான சிருஷ்டியையும் மாயை என்று ஒரேயடியாக தள்ளிவிட்டு, சொந்த சொரூபமான ஆத்மாவை மட்டுமே பேசும். இதுதான் உபநிஷதத்தின் உன்னதமான விஷயம். உபநிஷதத்தை படிக்கலாமா என்று கேட்கிறீர்கள். தாராளமாக. இன்னொரு விஷயம். உபநிஷதம் என்பதே ஞானம். உபநிஷதம் கூறும் மகாவாக்கியங்கள் நல்ல பக்குவமடைந்தவர்களை அனுபூதியில் கொண்டு விட்டுவிடும்.

இந்த பத்து உபநிஷதங்களுக்கும் சங்கரர், ராமானுஜர், மத்வாச்சார்யார் போன்றோர் விரிவுரை எழுதியுள்ளனர். உபநிஷதத்தை அறிவால் புரிந்து கொண்டு இருதயத்தில் அனுபவமாக உணர்ந்து விடவேண்டும். இதுதான் வேதம் மற்றும் அதன் ஆழமான வேதாந்தத்தின் லட்சியமாகும். உபநிஷதங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவை. உலகில் எந்த மூலையில் ஞானி இருந்தாலும் அவர் என்ன பேசினாலும் அதுவே உபநிஷதம். அப்படி அவர் எதைப் பேசினாலும் உபநிஷதத்திலும் அது இருக்கும். ஞானம் தவிர உபநிஷதத்தில் வேறெதற்கும் இடமில்லை.

? சந்தனத்தின் மகிமையைப் பற்றி கூறுங்களேன்? - கனகவல்லி, நியூடெல்லி.சந்தன மணம் ஆன்மிக உணர்வைத் தூண்டுகிறது. அதன் நறுமணமே நம்மை அமைதியாக்குகிறது. சந்தனம் அரைக்கும் கல்லையும், சந்தன கட்டையையும் டூப்ளிகேட் இல்லாமல் தேர்ந்தெடுக்க வேண்டும். அபூர்வ பாறைகளில் விளைந்துள்ள சந்தனக் கல்லில் அரைத்த சந்தனம் ஆயுர்வேத வைத்தியத்தில் சரும நோய்களை நீக்குகிறது.

சந்தனக் கல்லில் கட்டையை உரைத்து எடுத்து எலுமிச்சம் பழச்சாறில் கலந்து தோலில் தடவ படர் தாமரை, கருமேகம், முகப் பருக்கள், வெப்பக் கட்டிகள் போன்றவை நீங்கிவிடுமென வைத்திய சாஸ்திரம் கூறுகிறது. பசும்பாலில் புளியங்கொட்டை அளவு சந்தனத்தைக் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டை சூடு, மேக அனல், சிறுநீரக உபாதையும் நீங்கிவிடுமாம்.

? காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்று புலம்புகிறார்களே, இதன் உண்மை என்ன?- ஏ.கருணாகரன், வாழைப்பந்தல்.அவ்வளவுதூரம் இல்லறத்திலும், இந்த உலகத்தின் மீதும், உடல் மீதும் பற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். காசிக்குப் போனால் அங்கு எரியும் பிணங்களைப் பார்த்தவுடன் வைராக்கியம் வரவேண்டும். இந்த உடல் ஒன்றுமல்ல, நம் அகங்காரம் ஒன்றுமல்ல, என்கிற விவேகம் வரவேண்டும். இந்த உலகத்தில் அனுபவிக்கும் சுகங்களெல்லாம் வெறும் குப்பை.

இறுதியில் இப்படித்தான் இறக்கப்போகிறோம். அதற்குள் கர்மாவை அழித்துக் கொள்ள வேண்டும். அல்லது இறைவனின் மீதுள்ள பக்தியால் கர்மாவை அழிக்க வேண்டும் என்றெல்லாம் விவேகச் சிந்தனை வரவேண்டும். அப்படி கூட வராத சிலரைப் பார்த்தே காசிக்குச் சென்றாலும் கர்மம் தீராது என்கிறார்கள். மேலும், அவ்வளவு பாவக் குவியலை சேர்த்துக் கொண்டுள்ளாரே என்கிற ஆதங்கத்தால் எழுந்த வாக்கியம்தான் இது.

? துளசி, வில்வ தளங்கள் மூலிகை மருந்   தாகுமா? இவற்றின் குணம் என்ன? எந்த நாளில் பறிக்க வேண்டும்? எந்த நாளில் பறிக்கக்கூடாது? விளக்கம்அளியுங்கள்.- அ.ஆரிமுத்து, வாழைப்பந்தல்.துளசி, செந்துளசி, கருந்துளசி மூன்றும் நோய்களைப் போக்கும் முக்கிய மூலிகைகளாகும். துளசிச் சாறு பித்த வியாதிகளையும், நச்சுத் தன்மைகளையும் நீக்குகின்ற சக்தி வாய்ந்தது என்று தேரை மாமுனிவர் கூறியுள்ளார்.

காலை வேளையில் வெறும் வயிற்றில் துளசி இதழ்களை 10 கிராம் வரை மென்று சாப்பிடலாம். வில்வம் அனிமிக், மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்கு சிறந்தது. காலரா தடுப்பு மருந்து இது. வெள்ளி, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வில்வம், துளசி இரண்டையும் செடியிலிருந்து பறிக்க வேண்டாம். திங்கள், ஞாயிறு எடுத்து வைத்துக்கொண்டு பூஜை செய்யலாம். நிர்மால்யம் அதாவது, பழைய இலைகள் என்கிற தோஷம் துளசிக்கும் வில்வத்திற்கும் இல்லை.

துளசி பத்ராய வித்மஹே - மஹாலக்ஷ்ம்யை சதீமஹி தந்நோதுளசி ப்ரயோதயாத்
- என்கிற துளசி காயத்ரியை தினமும் சொல்ல லாம். இதைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். துளசி மாலையை கீழேயுள்ள மந்திரத்தை சொல்லி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சாற்றலாம். ‘‘தேவீம் கனக ஸம்பன்னாம் கனகாபரணைர்யுதாம் தாஸ்யாமி ஸ்ரீனிவாசாய மனோரத விவர்தயே.”

? இறைவனை அடைய என்ன செய்ய வேண்டும்? வழி கூறுங்கள். - சிவநேசன், திருவாடானை.‘‘எமன் வரும்போது அஞ்சேல் என்று நீ என் முன்னே காட்சி தந்து காக்க வேண்டும். அதற்காக திருப்புகழ் கூறுகிறேன்’’ என்று அருணகிரியார் சொல்கிறார். கந்தர் அலங்காரம் 51வது பாடலான ‘‘படிக்கும் திருப்புகழ் போற்றுவன்’’ என்கிற பாடலை பாடுங்கள். கூற்றுவன் பாசத்தினால் என்னை பிடிக்கும்போது என் முன்வந்து ‘அஞ்சேல் என்பாய், அபயகரம் நீட்ட வேண்டும்’ என்பார். காலதேவனின் மடியில் அமர்ந்தவனையும் இழுத்துவரும் ஆற்றல் பரமேஸ்வரனுக்கு மட்டும்தான் உண்டு என்று (‘‘யதிம்ருத்யோ:

அந்தீக மேவ”) ரிக்வேதம் கூறுகிறது. நீங்கள் முடிந்தபோதெல்லாம் சிவ தரிசனம் செய்து வாருங்கள். திருவெண்ணெய் நல்லூர் 7ம் திருமுறை பதிகத்தை தினமும் பாடுங்கள்.
பித்தா பிறைசூடி பெருமாளே அருளாளாஎத்தால் மறவாதே நினைக்கிறேன்மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத்

தென்பால் வெண்குணய் நல்லூர் அருட்குறையும்அத்தா உனக்காளாய் இனி அல்லேன் என ஆமே

? ராகு - கேது பெயர்ச்சி காலங்களில் இந்த இரு கிரகங்களும் பின்னோக்கி செல்வதால் இருவரையும் எதிர்திசையில் பிரதட்சணம் செய்யும்படி கூறுகிறார்கள். சரியா? இறந்தவர்களின் திதி தெரியாது போனால் ஆங்கில தேதியை வைத்து நடத்தலாமா?
- சுப்பிரமணியன், திருச்சி.

நவகிரகங்கள் ஒன்பது பேருடன் ராகு கேது இருந்தாலும், ராகு-கேதுவை தனியாக வைத்து பூஜித்தாலும், பிரதட்சணத்தை எதிர்திசையில் செய்வது கூடாது. அடுத்த கேள்விக்கான பதில்: இறந்தவர் திதி தெரியாது போனால் கிருஷ்ணபட்ச ஏகாதசியிலோ, அமாவாசையிலோ செய்யலாம். மகாளயம் என்று வருடத்திற்கு ஒருமுறை வருவதெல்லாம் இப்படித் தவறவிட்டவர்களுக்காகத்தான்.

?அஷ்டமி தினம் பைரவருக்கு முக்கிய நாளாக சொல்லப்படுகிறதே அதன் காரணம் என்ன?
- நாராயணன், பெங்களூரு.

மிகமிக கொடியவர்களாக பிறந்து தீயசக்திகளுடன் உலகை அழிக்க முற்பட்ட அரக்கர்களை அழிப்பதற்காகவே பராசக்தியான பிரம்ம சக்தி பல உருவம் எடுக்க வேண்டிய அவசியம் வந்தது.

அப்படித்தான் பைரவர், மாகாளி, தாரா, சூலினி, பைரவி, ஸ்ரீ சண்டீ, சின்ன மஸ்தா, தூமாவதீ, பகளாமுகீ முதலிய சக்திகளை பூஜிக்க அஷ்டமி, அமாவாசை மற்றும் சில நாட்கள் தேவி உபாசனையில் கூறப்பட்டுள்ளன. அஷ்டமி என்பது இரண்டு ஜீரோ இணைந்த 8 என்ற எண்ணின், சனி பகவானின், வடிவமாகும். கருத்த உருண்டை வடிவமான அமாவாசையும் சனி வடிவமாகும். சனிபகவான் நல்லவர்களை வாழவைத்து கொடுமை செய்பவர்களை அழிக்கும் சக்தி வாய்ந்த ஈஸ்வரனின் அவதாரம் என்பதை புராணங்கள் மூலம் அறியலாம்.

? துவாதசி, ஏகாதசி நாளில் வாழை இலையில் சாப்பிடக் கூடாது என்று முதியோர்கள் கூறுகிறார்களே? - நாராயண ஐயர், மயிலாடுதுறை.நம் முன்னோர்களான யோகிகள், ரிஷிகள், முனிவர்கள் தங்களின் அனுபவத்தைக் கொண்டும் சாஸ்திரத்தைப் பார்த்தும் மனிதர்களுக்கு தேவையான அனேக தர்மங்களை கூறியுள்ளனர். அவற்றைப் பின்பற்றுவதால் ஆரோக்யமும் நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. இவற்றில் வாழை மரம் முழுவதுமே மனிதர்களுக்கு பயன்படுகிறது.

ஆனால், சில மாதங்களில் வரும் திதி மாத சிவராத்திரி நாள் எனப்படும். அதில் ஒன்று ஐப்பசி சுக்ல துவாதசி. பகவானுக்கு விரதமிருக்கும் நாள் துவாதசி. ஆகையால், அன்று மட்டும் வாழை இலையை விலக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அப்படியே ஏகாதசியும் ஆகும். பொதுவாகவே விரதமிருக்கும் நாட்களில் உண்ணக் கூடாது என்பதற்காகவே வாழை இலை வேண்டாமே என்று சொல்லி வைத்தனர். மேலும், வாழை இலையில் உண்டால் அது பசியை அதிகரிக்கச் செய்யும் என்பதும் ஒரு அறிவியல் காரணமாகும். விரத நாட்களில் அதிகப் பசியுணர்வு ஆன்மிக உணர்வை குறைய வைக்கும்.