உடனே தரிசிக்கத் தயாராகிவிட்டோம்



வரலட்சுமி விரதத்தன்று ஜபிக்கக்கூடிய அபூர்வ ஸ்லோகமான மஹாலட்சுமி மந்திரங்கள் அனைத்தையும் படித்து முடித்தபோது இவை அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவதற்கு பேருதவியாக இருக்கும் என முற்றிலுமாக நம்பிக்கை வந்தது. ஆன்மிகம் பலனுக்கு கோடானு கோடி நன்றி. வரலட்சுமி விரதம் இருப்பவர்களுக்கு மகாலட்சுமியே திருமாலிடம் பரிந்துரை செய்து எல்லா வளங்களையும் அருள்வாள் என்பதை ஆன்மிக பலன் மூலம் அறிந்தோம். நன்றி. - முத்தூஸ், தொண்டி.  இராம.கண்ணன், திருநெல்வேலி.

அன்புக்கு உண்டான மகிமையை எளிமையாக ரத்தினச்சுருக்கமாக விவரித்திருப்பது வியக்க வைத்தது. அன்பின் நல்வழிக்கும், மகேசனான இறைவனின் அருளுக்கும் இணையில்லை என்பதை தலையங்கத்தால் அன்பை வயப்படுத்தும் அருள், ஆன்மிகம் பலன். என் போன்ற வாசக அன்பர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் படிப்பினையாகும்.
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.


முப்பெரும் கடவுள்களான விநாயகர், கிருஷ்ணர் மற்றும் வரலட்சுமி குறித்து பல்வேறு சிறப்புத் துணுக்குகள், கட்டுரைகள் யாவும் பக்திக்கு வித்திடும் வகையில் பயனுள்ளதாக இருந்தது. முன் அட்டையை அலங்கரித்திருந்த விநாயகர் மடியில் கிருஷ்ணன், கம்பீரமான வரலட்சுமி இணைந்த படம் கண்கொள்ளாக் காட்சி.
- ப.மூர்த்தி, பெங்களூரு.
- ஜி.சுப்பிரமணியன், திருச்சி.
- வா.மீனாவாசன், சென்னாவரம்.

பகவான் அரவிந்தரின் அவதார தினம் ஆகஸ்ட் 15 கொண்டாடுகின்ற இத்தருணத்தில் அரவிந்தர் ஓர் ஆன்மிக புரட்சியாளர் கட்டுரை அன்னார்க்கு செலுத்தும் அர்த்தமுள்ள அஞ்சலியாக இருந்தது.
- சோலைநகர் நா.கிருஷ்ணவேலு.

அமாசோமவார பிரதட்சிணம் எனும் கட்டுரை மூலம் அரச மரத்தின் பெருமைகள் முதற்கொண்டு பல அரிய தகவல்களை அறிந்தோம். மெய் ஞானம் தந்த ஆன்மிகம் பலன் பல்லாண்டு வாழட்டும்.
- ஏ.டி.சுந்தரம். ஈரோடு.

ஷோடஸ விநாயகர் பற்றிய விவரங்களும், படங்களும் மிக அழகு. அதிலும் குறிப்பாக ஏகதந்தர், லம்போதரர் படங்கள் மிக மிக அழகு. கிளி கொஞ்சுது என்பார்களே, அதே போல் இருந்தது. அற்புதம். விநாயகருக்கே பெருமை சேர்த்து விட்டீர்கள். 16 விநாயகர்கள் பற்றிய காஞ்சி சுவாமிகளின் விளக்கங்கள் அருமையோ அருமை. 16 நாமங்களுக்கும் அருமையான,
அர்த்தபூர்வமான விளக்கங்கள். படித்து புரிந்து நெஞ்சிலும் நினைவிலும் ஏற்றுக்கொண்டோம்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை.
- உமா மோஹன்தாஸ், திண்டுக்கல்.

பஞ்ச துவாரகைகளை தரிசிக்க வைத்த தொகுப்பு கிருஷ்ண ஜெயந்தி பட்சணமாக சுவைத்தது. கிருஷ்ணர்-விநாயகர்-மகாலட்சுமி சிறப்பிதழ், போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
- கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

சிறுவர்களோடு ராமன் போர்புரிந்ததால் ‘சிறுவாபுரி’ என்ர பெயர் பெற்ற ஊரில் அருள்பாலிக்கும் முருகனின் மகத்துவத்தை, கேட்ட வரமருளும் கருணை உள்ளம் படைத்தவன் என்பதைப் படித்து பரவசம் அடைந்தேன். உடனே சென்று தரிசிக்கத் தயாராகிவிட்டேன்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

விதவிதமாய் விநாயகர் தலைப்புகளில் வந்த பல வித விநாயகர்களைப் பற்றிப் படித்த பொழுது ‘‘அட! இத்தன விநாயகர்களா?’’ என வியக்க வைத்தது. குறிப்பாக, மூக்கறு விநாயகர் பற்றிய செய்தி முற்றிலும் புதுமையானது.
- மு.சுகாரா, ராமநாதபுரம்.