திருப்பங்கள் தருவார் திருப்பதி பெருமாள்



இந்தியத் திருநாட்டிலேயே மிகப் பிரபலமானதும் செல்வச் செழிப்பு கொண்டதுமான திருக்கோயில் திருமலைதான்.  ஆந்திர மாநில சித்தூர் மாவட்டத்தில் இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மாநில பக்தர்களையும் ஒருங்கே ஈர்க்கக்கூடிய ஒரு பெரிய  புகழ் பெற்ற திருத்தலமாக இது திகழ்கிறது. ஏன் மேனாட்டினரையும் பக்தர்களாகக் கொண்ட தலம் இது! புரட்டாசி மாதம் என்றாலேயே திருமலையில் அற்புதத் திருவிழாதான்.

17.9.2014 அன்று பிறக்கும் புரட்டாசி மாதத்திலிருந்து அந்த உற்சவ உற்சாகத்தை அனுபவிக்க இப்போதே சில முன்னோடித் தகவல்கள்:ஏழு மலைகள்: சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாச்சலம், விருஷபாசலம், நாராயணசலம், வெங்கடாசலம் என ஏழு மலைகளைக் கொண்டதால் சப்தகிரி என்பர். சங்கம் மருவிய இலக்கியம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இத்தலத்தை ‘நெடியோன் குன்றம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருவிழா: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வருடம் முழுதும் திருவிழா என்றாலும் சிறப்பு விழா புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழாதான். இவ்விழாவை பிரம்மனே நேரில் வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம்.  பவிஷ்யோத்ர புராணத்தில் உள்ள வெங்கடாஜல மகாத்மியத்தின் 14ம் அத்தியாயத்தில் திருவேங்கடமுடையான் பிரம்மனை நோக்கி தனக்கு உற்சவம் நடத்தி வைக்க ஆணையிட்டார்.

அதன்படி பிரம்மன் நடத்துவதுதான் இவ்விழா.  இறைவன் கட்டளையை ஏற்று அதை தொண்டைமான் அரசனிடம் கூற பின் இருவரும் தேவ சிற்பியான விஸ்வகர்மா உதவியுடன் உற்சவத்தை விமரிசையாகக் கொண்டாட வெண் கொற்றக்குடை, சாமரம், ஆலவட்டம், பற்பல வாகனங்கள், திருத்தேர் போன்றவற்றை ஏற்பாடு செய்தனர்.

புரட்டாசி திருவோணம்: இந்நாள்தான் ஏழுமலையானின் அவதாரத் திருநாள். திருவோணத்திற்கு 9 நாட்களுக்கு முன்பாக நடைபெறும் திருவிழாதான் திருப்பதி பிரம்மோற்சவம். இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் பூரண ஆபரண அலங்காரங்களுடன் வீதியுலா வருவார். கி.பி. 66ல் இங்கு ஒருமுறை  பிரம்மோற்சவம் நடந்தது என்றும், அதன்பின் புரட்டாசி மாதம் ஒருமுறையும், மார்கழி மாதம் ஒரு முறையும் இரு பிரம்மோற்சவங்கள் நடந்துள்ளதாகவும் இங்குள்ள கல்வெட்டில் காணலாம்.

பிரம்மோற்சவம்: பவித்ரோற்சவம் என்றால் புனிதப்படுத்துதல் என்று பெயர். அங்கு ரார்ப்பணம் செய்தபின் முதல் நாள் காலை கொடியேற்றம், மாலை பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வருவார். 2ம் நாள் சிறிய சேஷ வாகனம், ஹம்ஸ வாகனம். 3ம் நாள் சிம்ம வாகனம், முத்துப் பந்தல் வாகனம். 4ம் நாள் கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், 5ம் நாள் காலை மோகினி அவதாரம், மாலை கருட சேவை. இது மிகவும் சிறப்பான விழா. இதில் முக்கிய சிறப்புகள் உள்ளன.

6ம் நாள் அனுமன் வாகனம், யானை வாகனம், 7ம் நாள் சூரிய பிரபை, சந்திர பிரபை. 8ம் நாள் காலை தேரோட்டம். மாலை குதிரை வாகனம், 9ம் நாள் காலை சக்ரஸ்நானம், தீர்த்தவாரி, மாலை கொடியிறக்கத்துடன் விழா  இனிதே நிறைவடையும். விழாவின் 5ம் நாள் உற்சவம், கருட சேவையாகும் இது 3 சிறப்புகளைக் கொண்டது: மூலவர் ஆபரணங்கள், ஆண்டாள் மாலை, குடைகள்.

மூலவர் ஆபரணம்: கருட சேவையன்று உற்சவருக்கு மூலவர் அணியும் அனைத்து ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். இவரை தரிசித்தால் மூலவரையே தரிசித்தது போலாகும் என்பர். பிரபலமான ஆபரணமான சாளக்கிராம தங்க மாலையும், லட்சுமி உருவம் பதித்த 108 தங்கக் காசுகளால் ஆன காசு
மாலையை அணிவிப்பார்கள்.

ஆண்டாள் மாலை: ஆண்டாள் கண்ணனை திருமணம் செய்துகொள்ள மதுரை கள்ளழகரையும் வேண்டிக் கொண்டாள். அதனால்  சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகருக்கும், புரட்டாசி பிரம்மோற்சவ 5ம் நாள் கருட சேவையன்று திருப்பதி, ஏழுமலையானுக்கும் ஆண்டாள் மாலையை ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து அனுப்பி வைப்பார்கள். கருட சேவையில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் மாலையை அணிந்த பின்பே சுவாமி உலா வருவார். இத்துடன் ஆண்டாளின் பட்டுப் புடவையும் கிளியும் சேர்ந்துகொள்ளும்.

குடைகள்: சென்னையில் சேவார்தி குடும்பத்தினர் ஆண்டு தோறும் திருப்பதிக்கு 2 பெரிய குடைகளும், 4 சிறிய குடைகளும் அனுப்பி வைப்பார்கள். பட்டுடை, கைத்தடி, மான் தோல்,
மாங்கல்யம் யாவையும் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து அத்துடன் குடைகளையும் பாத யாத்திரையாக திருப்பதிக்கு எடுத்துச் செல்வர். வழியெங்கும் மண்டகப்படியும்
நடத்துவார்கள். கருட சேவை நாளுக்குள் இவை திருப்பதி வந்தடையும். இக்குடைகளுடனேயே கருட சேவை நடைபெறும்.

 பிரம்மோற்சவத்தில் மட்டும்தான் மூலவருக்கும் உற்சவருக்கும் விசேஷமான மாலைகளைச் சமர்ப்பிப்பார்கள்.விசேஷ பூஜை: ஆலயம், ஆலயம் சார்ந்தோர், பக்தர்கள் என எல்லோரையும் பரிசுத்தமாகவே பவித்ரோற்சவம் செய்கின்றனர்.

பூஜை முறை, மந்திர உச்சரிப்பில்  தவறு, தோஷம் இவற்றையும், கோயிலுக்கு வருவோர் குணநலன், தீட்டு, வழிபாட்டு முறை தவறு இவற்றையும் போக்கி இறையம்சத்தை பூர்ணமாக்கவே இந்த உற்சவம் செய்கின்றனர். இதுவே இந்த உற்சவத்தின் நோக்கம்.

ரக்ஷாபந்தன்: உற்சவ காலங்களில் உற்சவ மூர்த்திக்கு மட்டுமே இதைக் கட்டுவர். ஆனால், பவித்ரோத்சவத்தில் மூலவருக்கும் உற்சவருக்கும் கட்டுவர். இதனால் பகவானே நேரடியாக இந்த உற்சவத்தை அனுஷ்டிப்பதாகக் கருதுகின்றனர்.

 ரக்ஷாபந்தன் கட்டியபின் மூலவரின் ஸாந்நித்யத்தை உற்சவருக்கு ஆவாஹனம் செய்வார்கள். அதன்பின் யாக சாலைக்கு எழுந்தருளப் பண்ணுவார்கள். பின் பூஜைகள் நடக்கும். இப்பூஜைக்கு கணக்கும் உண்டு. ஆண்டுக்கு தினக்கணக்கில் 365 முறை செய்ய வேண்டும்.

சிலர் 180 முறையும், 90 முறையும் அல்லது மாதம் ஒன்று என 12 முறையும் இந்த பூஜை ஆராதனைகளைச் செய்வர். பவித்ரோற்சவத்தில் குறைந்தபட்சம் 12 முறையாவது இப்
பூஜையை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

 இதுவே இந்த உற்சவத்தின் முக்கிய நோக்கமாகும். பவித்ரோற்சவ நிறைவு நாள்: பூஜையன்று துவார தேவதாவிஸர்ஜனமும், மண்டல விஸர்ஜனமும் செய்தபின் மண்டல கர்ணத்தை உற்சவ மூர்த்தி திருவடிகளில் சமர்ப்பிப்பார்கள். இந்த உற்சவத்தை காண்போர் நிகரில்லா பெரும்பயனடைவர்.

திருப்பதி தரிசன சம்பிரதாயம்: 203 பாசுரங்கள் பெற்றது திருப்பதி. இது 3 பிரிவுகள் கொண்டது. கீழ்க் காணும் வரிசையில் தரிசிப்பதுதான் சம்பிரதாயம். முதலில் கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப் பெரு மாளையும் அடுத்து திருச்சானூரில் அலர்மேல் மங்கைத் தாயாரையும் பின் மேல் திருப்பதியில் சுவாமி புஷ்கரணியருகேயுள்ள வராஹரையும் தரிசித்த பின்பே மூலவர் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய வேண்டும்.

கோயில் அமைப்பு: முதல் வாயிலை படிக்கரவலி என்பர். கோபுரத்தை அழகு செய்யும் வாசல் இது. முதற்பிராகாரத்தை கடந்தால் வெள்ளி வாயில், அதன்பின் தங்க விமானத்தில் விமான வெங்கடேசரை தரிசிக்கலாம். பின் துவாரபாலகர்களை தரிசித்து உத்தரவு பெற்றபின் கருவறைக்குச் செல்லலாம்.

முதலில் சாதாரணமாகக் கட்டப்பட்ட இந்த அனந்தபுரமான திருப்பதி, 13ம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. சயன மண்டபம், முக்கோடி பிரதட்சிணம் (வைகுண்ட ஏகாதசியன்றும், அதற்கு முன் நாள், பின் நாள் என 3 நாட்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்) அடுத்து ராமமேடை, ஸ்நபன மண்டபம், தங்கக் கதவுகள் கொண்ட பங்காரு வாகினி (இங்குதான் தினம் அதிகாலையில் சுப்ரபாதம் இசைக்கப்படுகிறது. மார்கழி மாதம் முழுதும் ஆண்டாளின் திருப்பாவை தமிழில் இசைக்கப்படுவதும் இங்குதான்.)

கோயில் கடல் மட்டத்தினின்று 3000 அடி உயரத்தில் உள்ளது. மலைப்பாதையில் பாத யாத்திரை வழி 6 கி.மீ. தூரம். பல ஆண்டுகளுக்கு முந்தையதான சிலா தோரணம் என்ற கல் வளைவு உலகப்புகழ் பெற்றது. ரோம் நகரில் திருப்பதி போலவே 7 மலைகளும், சிலா தோரணம் என்ற கல் வளைவும் உள்ளதாகக் கூறுகின்றனர்.ஸ்ரீபாத மண்டபம்: பாத யாத்திரையாகச் செல்லும் வழியில் இந்த மண்டபம் உள்ளது. இங்குள்ள பாதங்களை தரிசித்த பின்பே பாத யாத்திரை செய்யும் பக்தர்கள் மலை ஏறுவார்கள்.

சுப்ரபாத தரிசனம் என்ற விஸ்வரூப தரிசனத்தை அதிகாலை 3:00-3:30 மணிக்கு கட்டணம் செலுத்தியோர் காணலாம். ஏழுமலையானை துயில் எழுப்ப 6 பேர் அதிகாலை 3.00 மணிக்கு சந்நதி முன் உள்ள தங்க வாயிலுக்கு வருவார்கள்.

2 அர்ச்சகர்கள், தீவட்டி தூக்குபவர், வீணை இசைப்பவர் ஆகியோர் கொண்ட ஒரு குழு முதலில் தங்க துவார பாலகர்களை வணங்கிய பின் சந்நதி கதவு திறக்க சுவாமியை வணங்குவர். பின் உள்ளே சென்று கதவுகளை மூடிக்கொள்வர். வெளியில் ஒரு குழுவினர் சுப்ரபாதம் இசைப்பார்கள்.

உள்ளே சென்றதும் தீவட்டியால் விளக்கேற்றும்போது வீணை இசைக்கப்படும். பிறகு கதவுகளைத் திறப்பார்கள். அதன்பின் தொட்டிலில் உள்ளே போக ஸ்ரீனிவாசனை உற்சவர் காலடியில் வைப்பர்.

அவருக்கு இடுப்பில் ஒரு துண்டு கட்டுவார்கள். பின்பு வெண்ணெய் படைப்பார்கள். ஆகாய கங்கையில் இருந்து 3 குடம் அபிஷேக நீர் எடுத்து வருவார்கள். அது காலை, நண்பகல், இரவு என 3 அபிஷேகத்திற்கு பயன்படும். இந்த நீரை ஒரு உத்திரிணியில் எடுத்து  ஏழுமலையான் முகத்தருகே காட்டுவர். சுவாமி தன் முகம் கழுவிக் கொள்வதாக பாவனை. பின் திருவடிக்கு மட்டும் அபிஷேகம்.

அடுத்து போக ஸ்ரீனிவாசனுக்கு முழு அபிஷேகம் செய்வர். பசும்பால், சந்தனம், தேன், திருமஞ்சன நீர் அபிஷேகம் செய்து நவநீத ஆராதனை காட்டுவர். இத்துடன் காலை சுப்ரபாத தரிசனமான விஸ்வரூப தரிசனம் நிறைவடையும்.4 மண்டப ஸ்தலங்கள்: ஸ்ரீரங்கம், போக மண்டபம், கர்நாடகா திருநாராயணபுரம், ரங்க மண்டபம் இவைதான் வைணவ திவ்ய தேச மண்டப ஸ்தலங்கள்.

ரங்க மண்டபம் என்றால் என்ன தெரியுமா? டில்லி படையெடுப்பால் ஸ்ரீரங்கம் உற்சவத்திருமேனியான நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கோழிக்கோடு, கர்நாடகா என்று சுற்றிவிட்டு திருமலை வந்து சேர்ந்தார்.

இங்குள்ள மண்டபத்தில் 10 வருடம் தங்கினார். அந்த மண்டபத்தின் பெயர் ரங்க மண்டபம்,குபேர தரிசனம்: வியாழன் மாலை 6:00-6:30 மணி வரை உள்ள காலம் குபேர காலம். அப்போது மூலவரை பாதம் தொடங்கி  சிரசு வரை தரிசிப்பதுதான் குபேர தரிசனம். இதனால் செல்வம், புகழ், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

அதிசயங்கள்: திருமலை ஏட்டுக் குறிப்புகளில் இருந்து பல அதிசய  செய்திகளை அறியலாம். 3000 அடி உயரத்தில் குளிர் பிரதேசமாக இருக்கும் இங்கு. காலை 4:30க்கு குளிர்ந்த நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது பெருமாளுக்கு வியர்க்கும்! காரணம் அங்கு 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் இருப்பதுதான்!வியாழன்தோறும் அபிஷேகத்திற்கு முன் சுவாமியின் ஆபரணங்களை கழற்றும் அர்ச்சகர்கள் அவை சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர். திருமலை மடைப்பள்ளி பெரியது.

அங்குள்ள மடப்பள்ளி நாச்சியார் சிலை வகுளவல்லி தாயார் தான். இவர் தன் மகன் ஸ்ரீனிவாசனுக்காகத் தயாரிக்கப்படும் பிரசாதத்தை மேற்பார்வை இடுவதாக ஐதீகம். இங்கு 25 வகை பிரசாதங்கள் தயாரானாலும் புதிய மண்பானையில் தயாரிக்கப்படும் தயிர் சாதம் மட்டுமே குலசேகர ஆழ்வார்படி தாண்டி மூலவருக்கு படைக்கப்படும்! ‘உன் பாதமருகே படியாய் கிடந்தேனும் பவளவாய் காண்பேனோ’ என குலசேகர ஆழ்வார் பாடியதால் இப்படிக்கு அவர் பெயரே நிலைத்துவிட்டது.

உடைகள்: பெருமாளின் மேல் சாத்து உடுப்பும், கீழ் சாத்து உடுப்பும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. வெள்ளியன்று அணிவிப்பார்கள். இதுவின்றி அரசாங்கத்தால் தரப்படும் இரு உடைகளை வருடம் இருமுறை அணிவிப்பார்கள்.

தாயாரின் உடைகள் செஞ்சு இனத்தவரால் மட்டும் கத்வால் என்ற  ஊரில் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றன. அப்போது ஆசாரமாக தினம் 3 வேளை குளிப்பார்கள். மாமிசம் உண்ண மாட்டார்கள். இப்படி தயாரிக்கும் உடைகளையே அலர்மேல் மங்கை தாயாருக்கு அணிவிப்பர்.

ஆபரணங்கள்: இங்குள்ள ஆபரணங்களை 1000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளதாகத் திகழ்கின்றன. இவற்றை அணிவிப்பதற்கே இடம் போதாது. இதனை முழுமையாக அணிவிப்பதற்கு நேரமும் பற்றாது.

தங்க சாளக்ராம மாலை 12 கிலோ எடை கொண்டது. இதனை 2 அர்ச்சர்கர்களால்தான் தூக்கி அணிவிக்க முடியும். ஒருவரால் தூக்க முடியாது. சூரியசடாரி 5 கிலோ, ஒற்றைக்கல் நீலம் 100 கோடி ரூபாய். மராட்டிய ராசோஜி கொடுத்த பெரிய எமரால்ட் பச்சைக்கல் பிரபலமானது.

மன்றோ தளிகை: பெருமாளுக்கு அயல் நாட்டினரும் பக்தர்களாக உள்ளனர். இவர்களில் சர் தாமஸ் மன்றோ பல நேர்த்திக்கடன் செலுத்தியதால் இவர் பெயரால் மன்றோ தளிகை என்ற நிவேதனம் செய்கின்றனர். கர்னல் ஜியோஸ்டி  ராட்டன், வெல்லிங்டன் போன்றோரும் அயல் நாட்டு பக்தர்கள்தான்.

அபிஷேகப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படுகின்றன. ஸ்பெயினிலிருந்து குங்குமப்பூ, நேபாளம் - கஸ்தூரி, சீனா - புனுகு, கற்பூரம், அகில், சந்தனம், கஸ்தூரி,  தக்கோலம், குங்குமம் என்பனவும் பாரீஸ் வாசனை திரவியங்களும் வெங்கடேசப் பெருமாளுக்கு வரவழைக்கின்றனர்.

இவற்றை ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்துடன் குழைத்து அபிஷேகம் செய்வர். பின் புனுகு, கஸ்தூரி சாத்துவர். இவற்றை காலை 4:30-5:00 மணிக்குள் செய்துவிடுவார்கள். அத்துடன் ரோஜாப்பூ ஐரோப்பாவிலுள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானம் மூலம் வருகிறது. ஒரு ரோஜாவின் விலை சுமார் 80 ரூபாய்! 3வது கண்:

அபிஷேகத்தின்போது சுவாமி தன் 3வது கண்ணைத் திறப்பதாக ஐதீகம். பெருமாள் கருவறையில் தனித்து நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அதுவும் ஸ்ரீதேவி, பூதேவி இன்றி, ஆயுதங்களும் இன்றி தரிசனம் வழங்குகிறார். இதுபோல வேறு எந்த வைணவ திவ்ய தேசத்திலும் இல்லை.

சேஷபராவிகா: மகா சிவராத்திரியன்று நடக்கும் உற்சவத்திற்கு உற்சவர் வைர விபூதிப் பட்டை அணிந்து உலா வருவார். ஏழுமலையானின் அபிஷேக நீர் இங்குள்ள புஷ்கரணியில் மீண்டும் சேர்க்கப்படுகிறது. கோயிலில் மொத்தம் 1186 கல்வெட்டுகள் உள்ளன.

 அவற்றில் 1130 கல்வெட்டுகள் தமிழில்! 50 கல்வெட்டுகள், தெலுங்கு, கன்னட மொழியில் உள்ளன. வில்வ அர்ச்சனை: வெள்ளிக்கிழமையிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வார்கள். புரட்டாசியில் பெருமாள் புகழ் பாடி அவனருள் பெறுவோம்.

இரா.இராமதாஸ்