கடந்த கால சாதனைகளின் கற்சிலை சாட்சிகள்



மகா சிவபக்தனாகவும், சோழப் பேரரசனாகவும் விளங்கிய இராஜேந்திர சோழன் மணிமுடி சூடி 1000 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி தஞ்சை மாநகரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இன்றும் அவன் தான் நிர்மாணித்த கோயில்களால் நம்முடன் வாழ்கிறான்.

அவனைப் போற்றும் கட்டுரை இது.சைவ சமயத்தின் தலைநகராகத் திகழ்வது திருவாரூர். இதனை சிவராஜதானி என்று அன்பர்கள் கொண்டாடுகின்றனர். இத்தலத்தில் சிவ பெருமான் சிவலிங்க வடிவங்களில் புற்றிடங்கொண்ட நாதராகவும், சோமாஸ்கந்த வடிவில் தியாகேசப் பெருமானாகவும் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றார்.

தமிழகத்தைப் பெருஞ்சிறப்புடன் ஆண்ட சோழர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐம்பெரும் தலைநகரங்களுள் ஒன்றான திருவாரூர், மிகப் பழமையும் சிறப்பும் மிக்கதாகும். புராண கால சோழர்களான சிபி, மனுநீதிச் சோழன் போன்றோர் அரியணையில் வீற்றிருந்து  கோலோச்சிய தலம்.மாமன்னன் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழன் தன் குல முன்னோர்களைப் போலவே திருவாரூர் பெருமானிடம் ஈடுபாடு கொண்டிருந்தான். இக்கோயிலுக்கு அநேக நிவந்தங்களை அளித்தான்.

இராஜேந்திரனுக்கு உடனிருந்து அணுக்கத் தொண்டு செய்ய பணிப்பெண் ஒருத்தியிருந்தாள். அவளது பெயர் பரவை நங்கை. இவள் திருவாரூருக்கு அருகில் இருக்கும் தீபங்குடியில் வாழ்ந்தவள் என்கின்றனர். அவளது பணியின் பெயரால் அவள் அணுக்கியார் பரவை நங்கை என்று அழைக்கப்பட்டாள். இவள் இராஜேந்திர சோழனின் அபிமானத்தைப் பெற்ற காதலியாகவும் விளங்கினாள் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவள், சிறந்த சிவபக்தியுடன் திகழ்ந்தவள். ஆரூர் பெருமானிடம் ஆராத காதல் கொண்டவள்.

அந்நாளில் திருவாரூர் புற்றிடங்கொண்ட நாதர் ஆலயத்தின் தென்பால் விளங்கும் பூங்கோயில் என்று அழைக்கப்படும் தியாகராஜர் சந்நதி செங்கல் தளியாக இருந்தது. மண்ணாலும், மரத்தாலும் செங்கல்லாலும் கவின் பெறக் கட்டப்பட்டிருந்தது. அணுக்கி பரவை நங்கையார் இக்கோயிலைக் கற்றளியாக்கினாள்.

 பொன்னால் மெழுகினாள். இவள் தனது காதலன் இராஜேந்திரனின் ஆதரவுடன் இதைச் செய்து முடித்தாள். பொற்கோயிலான இந்தப் பூங்கோயில் நீராட்டு விழாவிற்கு இராஜேந்திரனும் எழுந்தருளினான். அவன் நேரில் தன்னுடன் தனது காதலியான அணுக்கி பரவை நங்கையாரையும் உடன் அமர்த்திக்கொண்டு ஊரை வலம் வந்து ஆலயத்தை அடைந்தான். அங்கே தியாகேசப் பெருமானை இருவரும் வணங்கி மகிழ்ந்தனர்.

அவர்கள் அங்கு வந்து வழிபட்டதை எந்நாளும் நினைவுகூறும் வகையில் அவர்கள் நின்று தியாகேசரை வழிபட்ட இடத்தில் இரண்டு குத்து விளக்குகள் ஏற்றப்பட்டன. இவற்றை கல்வெட்டுத் தொடர்கள், ‘நின்ற இடம் தெரியும் குத்து விளக்குகள்’ என்று குறிப்பிடுகின்றன.மேலும், பரவை நங்கையார் தியாகேசருக்கு இரண்டு பாவை விளக்குகளையும் அளித்தாள். அவற்றிற்கு பச்சைப் பாவை, சரியா முலை நங்கை என்று பெயரிட்டாள்.

(இப்பெயர்கள் இவளது தோழியர் பெயர்களாகவோ அல்லது அந்நாளில் தியாகேசருக்கு திருவிளக்குப் பணி செய்து வந்த மதிப்புமிக்க பணிப் பெண்களின் பெயர்களாகவோ இருக்கலாம் என்பது பலரது கருத்தாகும். உறவினர், நண்பர்கள் பெயரால் இப்படி பாவை விளக்குகளை அளிப்பது அந்நாளைய வழக்கம்) பரவையார் மேலும், இரண்டு பொற்கவரிகளையும் தியா கேசருக்கு அளித்தாள். அந்தக் கவரிகளின் பிடிகள் பொன்னால் செய்யப்பட்டு, வைரக்கற்கள் இழைக்கப்பட்டிருந்தன. மேலும் பல அணிமணிகளையும் அவர்கள் ஆரூர் பெருமானுக்கு அளித்து மகிழ்ந்தனர்.

இராஜேந்திர சோழனுக்கும், பரவை நங்கை யாருக்கும் இடையே இருந்த அன்பை உணர்ந்த இராஜேந்திர சோழனின் வழிவந்தவர்களும், அன்பர்களும், இராஜேந்திரனுக்கும் பரவை நங்கையாருக்கும் அழகிய கற்திருவுருவங்களை அமைத்து அவற்றிற்கு நாள்தோறும் வழிபாடு செய்ய நிவந்தங்களையும் ஏற்படுத்தினர். இப்போதும் அத்திருவுருவங்கள் திருவாரூர் ஆலயத்தில் ஆனந்தேசுவரம் என்னும் சந்நதியில் உள்ளன. இராஜேந்திர சோழனும், அணுக்கி பரவை நங்கையாரும் கற்திருமேனிகளாக நின்று தியாகேசரை வணங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சாலை என்ற சொல் வேதங்களையும், அதன் அங்கங்களையும் கற்றுத்தரும் இடமான வேத பாடசாலையைக் குறிக்கின்றது. சோழர்கள் காலத்தில் இத்தகைய வேதவழி கல்விச் சாலைகள் அநேகம் இருந்தன. சோழர்கள் இந்தச் சாலைகள் செம்மையாக இயங்குவதற்கும், அங்கு பயிற்று விக்கும் ஆசிரியர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும் வேண்டிய உணவு முதலான வசதிகளைச் செய்து தந்தனர்.

இராஜராஜ சோழன் காந்தூளுர் சாலை என்னுமிடத்தில் இருந்த பெரிய சாலைக்கு வேண்டிய உதவிகளை அளித்ததை அவனது மெய்க் கீர்த்திக் கல்வெட்டுகள் ‘காந்தளூர் சாலையில் கலமருத்து அருளி என்று குறிக்கின்றன. அவன் மகன் இராஜேந்திரன் கங்கை வரை படை நடத்தி கங்கை கொண்ட சோழன் என்று பெயர் சூட்டினான். அதன்பிறகு கடாரம் மீது படையெடுத்து வென்றான். அந்த வெற்றியால் கடாரம் கொண்டான் என்றும் பெயர் பெற்றான்.

கிழக்குக் கடலோரச் சாலையில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் நடுவே மரக்காணம் என்னும் ஊர் உள்ளது. இவ்வூருக்குத் தென்மேற்கில் முன்னூர் என்ற கிராமம் உள்ளது. சோழர்கள் காலத்தில் சிறப்புடன் விளங்கிய இந்த ஊரில் ஆடவல்லீஸ்வரர் என்ற சிவாலயமும், அருளாளப் பெருமான் என்னும் பெருமாள் கோயிலும் உள்ளன.

சிவன் (ஆடவல்லீஸ்வரர்) கோயிலில் உள்ள கல்வெட்டின் மூலம் இராஜேந்திர சோழனின் கடாரம்கொண்டான் என்ற திருப்பெயரால் அமைந்த ‘கடாரம் கொண்டான் சாலை’ என்ற கல்விச் சாலை இருந்ததை அறிய முடிகிறது. ஆடவல்லீஸ்வரர் ஆலயத்தில் உச்சிக்காலப் பூஜையில் வேதமோதும் பிராமணர்கள் இச்சாலைக்கு வந்து உணவருந்தினர்.

அவர்களுக்கு உணவில் இடப்படும் உழக்கு நெய்க்காகவும், 25 நாழி மோருக்காகவும் நிவந்தம் அளிக்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெற முதலீடாக நெய்க்கென 90 ஆடுகளும் மோருக்காக 30 ஆடுகளும் ஆக 120 ஆடுகள் அளிக்கப்பட்டன. இவற்றைக் கைக்கொண்டு இந்த தர்மத்தை சந்திராதித்யர் வரை செலுத்த ஒப்புக்கொண்டனர். மேலும் ஒரு கல்வெட்டும் இந்தச் சாலைக்கு அளிக்கப்பட்ட நிவந்தத்தைக் கூறுகிறது.

- பூசை ச.ஆட்சிலிங்கம்