திக்குத் தெரியாத காட்டில்துணை வந்த திருமால்!



அந்தக் காலத்தில் கிராமங்கள் அல்லது ஊர்கள் என்பது மிகமிக குறைந்த எண்ணிக்கை யிலேயே இருந்தன. எங்கு நோக்கினும் வண்டாடும் சோலைகளாகவும், கொடிய மிருகங்கள் சஞ்சரிக்கக்கூடிய அடர்ந்த காடுகளாகவும் இருந்தன. இன்றிலிருந்து சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் இருந்தன. ஒவ்வொரு 50 மைல் அல்லது 75 மைல்களுக்கு அப்பால்தான் சிறிய கிராமங்கள் தென்பட்டன. பொதுவாகவே அனைவரும் நடைப் பயணத்தைத்தான் மேற் கொண்டனர்.

நடக்க முடியாதவர்கள் மாட்டு வண்டிகளை அமர்த்திக்கொண்டு களைப்பு தீர பாடிக் கொண்டும், எம்பெருமானின் லீலைகளை பேசிக் கொண்டும் சென்றனர். வழியில் எங்காவது தடாகங்கள் தென்பட்டால் சிறிது நேரம் முகாமிட்டு அமுது செய்து அதை நிவேதித்து உண்டனர். மீண்டும் யாத்திரையை தொடர்வது வழக்கம். இரவு நேரங்களில் லாந்தர் விளக்கின் ஒளியில் கூட்டமாகத் தங்கி பகவானின் கல்யாண குணங்களை பாடியும், ஆடியும், பார்த்தும் கேட்டு மகிழ்வார்கள்.

இப்படித்தான் ராமானுஜருடைய கோஷ்டி காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டது. குருநாதர் யாதவப் பிரகாசர் மட்டும் சிவிகையில் (மூடு பல்லக்கு) பயணித்தார். மாறி மாறி சிஷ்யர்கள் சிவிகையைத் தாங்கியபடியே பயணித்தனர். மற்ற எல்லா சிஷ்யர்களும் நடைப் பயணமாகவே பின் தொடர்ந்தனர். யாதவப் பிரகாசர் சிவிகையில் இருந்தபடியே பாடங்களை போதித்தார்.

 யாதவப் பிரகாசர் சொல்வதை ஒப்புக்கொள்ள வேண்டிய இடங்களில் ஏற்றுக் கொண்டும், மறுக்க வேண்டிய இடங்களில் மறுத்துப் பேசியும் ராமானுஜர் பயணித்தார். இதன் காரணமாகவே யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரின் மீதிருந்த கோபம் அதிகரித்தது. உடனே கொன்றுவிட வேண்டுமென்ற எண்ணமும் மேலோங்கியிருந்தது. ராமானுஜரின் ஒன்றுவிட்ட சகோதரர் கோவிந்தன் கூடவே வந்திருந் தாலும், அவனை ராமானுஜரோடு சேர விடாமல் பார்த்துக் கொண்டார்.

ஒருமுறை விந்தியாரண்யம் மலையின் மீது காட்டுப் பாதையில் செல்ல நேரும்போது கோவிந்தன் தன் சகோதரரான ராமானுஜரை தனிமையில் சந்தித்து ஓவென தேம்பித்தேம்பி அழுதார்.ராமானுஜர் கோவிந்தனை நோக்கி, ‘‘ஏன் அழுகிறாய்? உடல் நலம், மன நலம் சரியில்லையா?’’ என்று பல்வேறு விதமாக வினவினார். கோவிந்தனும், மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினான்.

‘‘ஏன் குடும்பத்தை பிரிந்த வாட்டமோ?’’ என்று ராமானுஜர் கேட்க, கோவிந்தன் உண்மையை விண்டுரைத்தான். ‘‘ராமானுஜா! யாதவப் பிரகாசர் மற்றும் இதர சிஷ்யர்களின் எண்ணம் சரியில்லை. உம்மை கொல்லத் திட்டமிட்டுள்ளனர்,’’ என்று கோவிந்தன் கூற ராமானுஜர் அப்படியே உறைந்து போனார்.

என்னதான் அவதாரம் என்றாலும், இதுபோன்ற கட்டங்களில் ஒரு பிரம்மச்சாரி சிறுவன் என்ன செய்ய இயலும்? ஒரு மனிதனுக்கு வரக்கூடாத கஷ்டம் வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மகான்கள் நடுநிலையில் நின்று நமக்கு உதாரணமாகத் திகழ்கின்றனர்.

இவர் இப்படி உறைந்துபோய் மேலும் அழுததன் காரணத்தால், அஞ்ஞானி என்று கொள்ளக் கூடாது. இவர் கலங்கியதன் காரணம், யாதவப் பிரகாசரும், அவருடைய துஷ்ட சிஷ்யர்களும் இப்படி அவசரப்படுகின்றனரே! இதிலிருந்து விடுப்படவே மாட்டார்களா? என்னுடைய சத்சங்கம் கிடைத்தும் அவர்களுக்கு இப்படியோர் எண்ணமா என்ற கலக்கமே ராமானுஜரை வாட்டியது. கோவிந்தனும் ராமானுஜரை எச்சரித்துவிட்டு, ‘‘நீ இங்கிருந்து போய்விடு’’ என்று கூறிவிட்டு ஒன்றுமறியாதவன்போல கூட்டத்தோடு சேர்ந்து கொண்டான்.

ராமானுஜர் தனிமையை விரும்பி அவர்களிட மிருந்து பிரிந்து வேறு பாதையை பிடித்து நடக்கலானார். இரவு நேரம். அந்தகார இருள், எங்கு செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் எனத் தெரியாமல் தவித்தார்.

ஒரு மரத்தடியில் நின்று கொண்டார். மிகமிக வருத்தமுற்றார். கண்கலங்கியவாறே அந்த பிரதேசத்தை நோக்கியபோது அது ஒன்றுக்கும் உதவாத காட்டுப் பிரதேசமாய், தண்ணீரில்லா காடாக, காய்ந்துபோன கட்டைகளால் சூழப்பட்டதாய், ‘பொருந்தார் கைவேல் சதிபோல் பரல்பாய, மெல்லடிக்கள் குருதிசோர’ பயத்தால் நடுநடுங்கி அப்படியே உட்கார்ந்து விட்டார். அப்போது துணைக்கு யாரேனும் கிடைப்பரோ என்று திகைத்துபோய் ஆகாயத்தை நோக்கி பித்து பிடித்தவராக வெறித்தார். 

இந்த சமயத்தில்தான் சர்வேஸ்வரன், ‘நாஹம் ஆத்மானம் ஆசாஸே மத்பக்தைஸ்ஸாது பிர்வினா’ என்று நினைத்தான் போலும். அதாவது, ‘நல்லோர்களான என் பக்தர்களை விட்டு, என்னை நான் ஒரு பொருளாக மதிக்கிறேனல்லேன்’ என்பதுபோல தன்னை ஒரு பொருட்டாக என்றுமே அவன் நினைத்ததில்லை. எங்கேனும், ஒரு பாகவதனுக் கோ, தன் பக்தனுக்கோ கஷ்டம் என்றால் முதலில் கஷ்டப்பட்டு வருத்தமுற்று பிறகு துயர் துடைப்பவன் பகவான்தானே!

ஆனால், ராமானுஜரின் துயர் துடைப்பதோடு யாதவப் பிரகாசரை திருத்திப் பணிகொள்ளவும் பகவான் எண்ணினான்போலும். ஒரு உத்தம அதிகாரியான பாகவதோத்தமரான, அவதார புருஷனான ராமானுஜனிடத்தில் அபசாரப்படும்படி நேர்ந்து விட்டதையே காரணமாக்கி, பிற்காலத்தில் யாதவப் பிரகாசரும் காலில் விழுந்து சரணாகதி பண்ணி, ராமானுஜரின் அடியவராக ஆக்குவதற்கு, அவரைப் பக்குவப்படுத்துவதற்கு இது ஒரு நல்ல தருணம் என்று சர்வேஸ்வரன் சிந்தித்தான் போலும்! தானே ஒரு வேடுவனாகவும், மஹாலக்ஷ்மி தாயாரே ஒரு வேடுவச்சியாகவும் ராமானுஜரின் முன்பு தோன்றினர்.

அனைவருக்கும் எளியோனாய், வாளும், வில்லும், அம்பும் தரித்தவனாய், பத்தினியான பெரிய பிராட்டியோடு அபயமளிக்கத் தோன்றினான். ஜன நடமாட்டமில்லாத காட்டில், ராமானுஜரின் தவிப்பைப் போக்க தோன்றினான். ஒரு வேடுவன் வருவதைக் கண்டு, வியந்து, கலக்கம் தீர்ந்து, உள்ளம் தேறி நின்று, ‘‘நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள், இப்படி இக்காட்டில் தனியாக அலைகிறீர்களே! எங்கு செல்கிறீர்கள்?’’ என்று அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை தொடுத்தார்.

‘‘நாங்கள் வடக்கு திசையிலிருந்து வருகிறோம். இப்படியாக தெற்கு திசை நோக்கிச் செல்ல விழைந்துள்ளோம்’’ என்று அவர்கள் கூறினர்.‘‘அப்படியாகில் நானும் உங்களுடன் வருகிறேன். எனக்கு, புண்ணியகோடி நிலையம் (காஞ்சிபுரம்) செல்ல வேண்டும்,’’ என்று ராமானுஜர் கூற, ‘‘அதனாலென்ன வரலாமே! நாங்கள் என்ன உம்மை மடியிலா சுமக்கப் போகிறோம்.
வாருங்கள்,’’ என்று அன்புடன் அழைத்தனர்.

இப்படி வேடுவனும், வேடுவச்சியும், வில்லும் கையுமாக முன்னடியிட்டு நடந்தனர். இவர்கள் பின்னே ராமானுஜர் நடக்கலானார். அவ்விருவரும் இரவு முழுவதும் பகவானின் கல்யாண குணங்களையே தங்கள் பிராந்திய மொழியில் கொச்சையாகப் பேசுவதுபோல் பேசி மகிழ்ந்து நடந்தனர். ராமானுஜர் வியந்தபடியே அவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்து கொண்டிருந்தார். களைப்பு மேலிட ஒரு மரத்தடியில் இருவரும் உட்கார்ந்தனர். ராமானுஜரோ அப்படியே தூங்கிப் போனார். களைப்பின் மிகுதியால் அந்த வேடுவச்சி ‘தாகம்... தாகம்...

தண்ணீர் கொடுங்கள்’ என்று சொல்லிப் பரிதவித்தாள். சட்டென்று விழித்தெழுந்த ராமானுஜர், ‘‘நீங்கள் இங்கேயே இருங்கள். அருகில் எங்கேனும் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்,’’ என்று சொல்லிவிட்டு விரைந்தார். தன் களைப்பை ஒரு பொருட்டாக நினைக்காது ஒரு மைல் தொலைவில் ஒரு கிணறு தென்பட விரைந்து அங்கு சென்று குடுவையில் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு வேடுவர் இருந்த இடம் நோக்கி வந்தார்.

ஆனால், எந்த மரத்தடியில் அவ்விருவரும் இருந்தனரோ அங்கு அவர்களைக் காணவில்லை. இங்கும் அங்கு மாகத் தேடினார். களைப்பின் மிகுதியால் சற்றே பயந்து மரத்தடியில் உட்கார்ந்தார். சிறிது நேரம் கழிந்தது. என்னென்னவோ எண்ணங்கள் அலையலையாக வந்து மோதின. அதன் பின் மீண்டும் ஒரு எண்ணம் உதிக்க உடனே எழுந்து அந்தக் கிணறு கண்ட திசை நோக்கி விரைந்து நடக்கலானார்.

விடியற்காலை சமயம். அந்தக் கிணற்றின் சமீபம் ராமானுஜர் வந்து பார்க்கும்போது ஜனநடமாட்டத்தைக் கண்டு வியந்தார். அவர்களை நோக்கி, ‘‘இது ஏதாவது கிராமமா அல்லது ஏதாவது ஒரு ஊரா?’’ என வினவினார். அவர்களும், ‘‘அடடே! இது ஏது அழகிது காணீர். ஐயா, இவ்வூரைத் தெரியாதார் உண்டோ!

 மோட்சபுரியில் எழும் ஏழு பெருமை வாய்ந்தவை. அவற்றில் நகரேஷு காஞ்சி என்பார்களே அந்தக் காஞ்சி மாநகரம்தான் இது! சற்றே கண்கொண்டு பாரும்! அதோ தெரிகிறதே, அதுதான் புண்ணியகோடி விமானம். தேவாதிராஜன் சந்நதிதான் அது,’’ என்றதும் ராமானுஜர் ஆனந்த அதிர்ச்சி யில் மூர்ச்சையாகி அங்கேயே விழுந்தார்.

 (வைபவம் தொடரும்)