பன்னீர்



தெய்வங்களுக்குரிய அபிஷேகப் பொருட்களில் பன்னீர் ஒன்றாக இருக்கிறது.சித்தர்கள் மலர்களிலும் புல் தரைகளிலும் பனி நீரைச் சேகரித்து மருத்துவத்திற்குப் பயன்படுத்தினர். நடைமுறையில் வானில் இருந்து விழும் பனித்துளிகளைச் சேகரிப்பதும், பாதுகாப்பதும் எளிதல்ல.

மேலும், அது வாசனையாக இருப்பதில்லை. எனவே செயற்கையாகப் பனி நீரைத் தயாரிக்கின்றோம். ரோஜாவின் இதழ்களைக் கொண்டு தூய பன்னீர் தயாரிக்கப்பட்டு, வாசனையூட்டப்படுகிறது. இது நறுமணத்தோடு இருப்பதுடன், மேலே தெளிக்கும்போது குளிர்ச்சியையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

பன்னீரைத் தெளிப்பதற்கென்றே தனியாக வடிவமைக்கப்பட்ட செம்புகள் வழக்கத்தில் உள்ளன. இதில், உருண்டையான கொள்கலன் அடியில் பாதத்துடன் உள்ளது. அதன் மேற்புறத்தில் ஊமத்தம்பூவைப் போன்ற அமைப்பு இணைக்கப்பட்டு, அதன்மூலம் பன்னீர் வெளிவந்து தெளிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேற்புறம் பன்னீர் வெளியேற சிறிய துளைகள் இடப்பட்டு உள்ளன. பெரும் கனதனவான்கள், வெள்ளியாலும், தங்கத்தாலும் பன்னீர் செம்பை கலையலங்காரத்துடன் செய்து வைத்துள்ளனர்.

விழாக்களின்போது வாசலில் பன்னீர் செம்பு, சந்தன பேலா, இனிப்புத் தட்டு ஆகியவற்றை வைக்கின்றனர். வருபவர்களைப் பன்னீர் தெளித்து வரவேற்கின்றனர். பன்னீர் தூயதாகவும், சிறப்பு மிக்க பொருளாகவும் இருப்பதால், இறைவழிபாட்டிலும் அதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். தெய்வங்களைக் குளிர்விக்க விக்ரகங்கள் மீது பன்னீரை ஊற்றி வணங்குகின்றனர். திருச்செங்காட்டங்குடியில் வைரவர் எழுந்தருளும் வேளையிலும், திருவெண்காட்டில் அகோர மூர்த்தி எழுந்தருளும் வேளையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில் பன்னீர் அபிஷேகம் செய்து பட்டு சாத்துகின்றனர். பழநி முருகனுக்கும், பைரவருக்கும் அக்னி நட்சத்திர நாளில் பன்னீர்க் காவடி எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

அன்பர்கள் தம்மை வணங்கும்போது சமய சான்றோர் பன்னீர் தெளித்து ஆசீர்வதிக்கும் நிலை முன்னாளில் இருந்தது.கால ஓட்டத்தில் பன்னீர் செம்புகள் முக்கியத்துவத்தை இழந்துள்ளன.என்றாலும், விழா வரவேற்பு நிகழ்ச்சிகளில் இன்றும் சிறப்புடன் உள்ளது, கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

- பூசை ச.அருணவசந்தன்