அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்



தமிழ் ஆண்டாளை தெலுங்கில் பாடிய கன்னட மன்னர்!

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர், மாமன்னராகப் பதவியேற்ற 500வது ஆண்டினை, அண்மையில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தோம். கிருஷ்ணதேவராயர் துளுவ மரபினர். இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றிக்கும் ஐந்தாம் சார்லசுக்கும் சம காலத்தவர். அவரது மூத்த சகோதரர் வீரநரசிம்மர், 1509ம் ஆண்டு காலமானதும் இவர் விஜய நகர வேந்தரானார். அண்ணன் இறந்தவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேர்ந்ததால், துக்க நாட்களைக் கழித்து சில மாதங்கள் ஆனபிறகே 1510ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதியில் கிருஷ்ண தேவராயர் வெகு விமரிசையாக முடிசூட்டு விழா வைபவத்தை நடத்திக் கொண்டார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. (ஹம்பியிலுள்ள கல்வெட்டு ஆதாரமும் இதனை உறுதி செய்கிறது.)

இன்றைய ஆந்திரா மற்றும் கன்னட நாடுகளை மட்டும் ஆட்சி புரிந்தவரல்ல கிருஷ்ண தேவராயர். ஒட்டரம் அல்லது கலிங்கம் எனப்படும்  ஓரிய தேசத்தில் (இன்றைய ஒடிசா) பல பகுதிகளையும் அவர் வென்றிருந்தார். தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்கு வித்திட்டவரும் அவரே. நாகம நாயக்கர், விசுவநாத நாயக்கர் என இம்மரபு தோன்றியது மட்டுமல்ல, புகழ் பெற்ற தளவாய் அரியநாத முதலியார் பெற்ற பெருமைகளுக்கெல்லாம் காரணமானவர் கிருஷ்ண தேவராயரே.கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதையும் ஆட்சி புரிந்த மாமன்னர் கிருஷ்ண தேவராயர் எனில் அது மிகையில்லை. இணையற்ற மாவீரராகத் திகழ்ந்தவர் அவர். அவருடைய திக்விஜயங்களைக் கண்டு அசுவபதி, கஜபதி, நரபதி போன்ற அண்டை அயல் அரசர்கள் நடுங்கினர். பீஜப்பூர், கோல்கொண்டா போன்ற பகுதிகளை ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்கள் கோட்டைகளைப் பலப்படுத்திக்கொண்டு, அடங்கி ஒடுங்கி இருந்தனர்.

அகமது நகர், கோல்கொண்டா முகம்மதிய ஆட்சியாளர்கள், 120 ஒற்றர்களைப் பல்வேறு வேடங்களில் விஜயநகருக்குள் அனுப்பி, உளவு பார்க்கச் செய்தனர். அத்துடன் பிராமண ஜோதிடர்களையும், இஸ்லாமிய பக்கிரிகளையும் வரவழைத்து, கிருஷ்ண தேவராயரின் படையெடுப்பு நிகழுமானால், யாருக்கு வெற்றி கிட்டும் என ஆரூடம் கூறுமாறு கேட்டனர். அதற்கு அவர்கள், ‘நாங்கள் கணித்துப் பார்த்ததில், கர்நாடகத்தில் இறையம்சமாக ஓர் அரசர் தோன்று வார். அவர் சுற்றுப்புறங்களில் உள்ள அஸ்வபதி, கஜபதி போன்ற அரசர்களையும் பாமினி போன்ற மாற்று மத ஆட்சியாளர்களையும் வெல்வார். அப்படி வெற்றி பெற்றுத் திரும்பும்போது, கல்யாண வெங்க டேசுவரரை வழிபடுவதோடு, 108 திருப்பதிகளையும், 72 கோயில்களையும், 18 சக்திகளையும் வழிபட்டுச் செல்வார். சேதுவில் (ராமேஸ்வரம்) கடலாடி,

ராமநாத சுவாமிக்குத் தம் காணிக்கைகளைச் செலுத்தி, தனுஷ்கோடி சமுத்திரத்தில் தமது போர்வாளின் குருதிக் கறைகளைக் கழுவுவார். மிகப்பெரிய பேரரசராக, யாதோர் எதிர்ப்புமின்றி 22 ஆண்டுகள் ஆட்சி புரிவார். அது வேறு யாருமல்ல, இந்தக் கிருஷ்ண தேவராயர்தான்‘ என்று கூறினராம். இந்த ஆரூடம் அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை உண்மை ஆயிற்று. கிருஷ்ண தேவராயரை எதிர்த்த அரசர்கள் அத்தனை பேரும் தோற்றனர். புயல்போல், சூறாவளி போன்று இருந்தன அவரது படையெடுப்புகள். பீஜப்பூர், கோல்கொண்டா போன்ற அரசுகளின் சுல்தான்களும் ராயரோடு போரிட்டுத் தோற்று, சமரசம் செய்துகொண்டனர். பணிந்தவர்களை மிகுந்த மதிப்புடனும் நட்புடனும் நடத்தினார் ராயர்.

இவர் பெரும் வீரராக இருந்ததுடன் மட்டுமல்லாது, மாபெரும் இலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்தார். புலவர்களைப் போற்றும் புரவலராக விளங்கிய கிருஷ்ண தேவராயரைத் தென்னகத்து போஜ மகாராஜா என்றே புகழ்ந்தனர். போஜ ராஜன் அவையில் தண்டிகவி, மகாகவி காளிதாசன் போன்றோர் இருந்ததைப் போன்றே கிருஷ்ண தேவராயர் அவையில் அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா, ராம பத்திரா, துர்ஜடி, மல்லண்ணா, ராமராஜ பூடிணா, சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா ஆகிய எண்மர் பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். எவராலும் வெல்ல முடியாத ‘அஷ்டதிக்கஜங்கள்’ என்று வரலாறு இவர்களைப் போற்றி மகிழ்கின்றது.

கிருஷ்ண தேவராயர், பரம வைணவராகத் திகழ்ந்தவர். எனினும் அனைத்து சமயங்களையும், இந்துமத உட்பிரிவுகளையும் சமநிலையில் வைத்துப் போற்றியவர். சமயத்துவேஷம் இவரிடம் சிறிதும் இருந்ததில்லை. அல்லசானிபெத்தண்ணா அத்வைதக் கொள்கையுடையவர். எனினும் அவரைப் பெரும்புலவராக மதித்தார் ராயர். ‘கவி பிதாமகர்’ என்னும் பட்டத்தையும் அவருக்கு வழங்கிப்
போற்றினார்.

நந்தி திம்மண்ணா, சைவப் புலவர். ‘காளத்தி மகாத்மியம்’ எழுதிய கவி துர்ஜடியும், ‘ராஜசேகர சரித்திரம்’ எழுதிய மல்லண்ணாவும் கூடச் சைவர்களே. புலவர்கள் மட்டுமல்லாது, சமய ஆச்சார்யார்களிலும் சைவ, வைணவ பேதம் பாராமல் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டவர் ராயர். ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யரான தாத்தாச்சாரியாரைத் தன் ராஜகுருவாக ஏற்றிருந்த போதிலும்,
பிற மகான்களையும் ராயர் மதித்துப் போற்றினார். மாத்துவ சமய ஆச்சார்யரான வியாச தீர்த்தர் என்னும் மகானிடமும் பெருமதிப்பு கொண்டிருந்தார்.

அக்காலத்தில் சைவ, வைணவ, ஜைன சமயப் பணியாற்றுவதுடன் கல்விக் கூடங்களாகவும் திகழ்ந்தன. இவை மக்களுக்குக் கல்வி, கலை, இலக்கியம், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தருவதில் சிறப்பாகப் பணிபுரிந்தன. எனவே இந்த மடங்களைச் சமய பேதமின்றி ராயர் போற்றினார், வேண்டிய பொருளுதவிகளைச் செய்தார்.

பேரரசராகத் திகழ்ந்தது போன்றே கிருஷ்ண தேவராயர், கவி இயற்றும் ஆற்றல் கொண்ட பெரும்புலவராகத் திகழ்ந்தார். தெலுங்கு மொழியின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘ஆமுக்த மால்யதா‘ என்னும் அருமையான  காப்பியத்தை ராயர் எழுதியுள்ளார். தெலுங்குக் காப்பியம் என்றாலும், இதன் பாடுபொருள் தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடையது. திருப்பாவைப் பாடல்களைப் பாடிய கோதை நாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் திவ்ய சரித்திரத்தையே கிருஷ்ண தேவராயர், ‘ஆமுக்த மால்யதா’ காவியமாக வடித்தெடுத்திருக்கிறார்.

இதில் விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரின் வாழ்வும், அவர் துளசி வனத்தில் கண்டெடுத்து வளர்த்த கோதை ஆண்டாளின் வரலாறும், அவள் அரங்கன் மீது கொண்ட அளவற்ற தெய்வீகக் காதலும், வைணவத்தின் உயரிய தத்துவங்களும் விரிவாகப் பேசப்படுகின்றன. ராயரின் கவிதா மகத்துவத்தை நாம் உணர ஒன்றிரண்டு பாடல்களை இங்கு காணலாம்:
கோதா தேவி துளசி வனம் - குழந்தைலிங்கட மைன யொக்க வனவீதிகனுங்

கொன நீடசுன்னபுள்
ரங்குடாங்கு பக்கல யரங்கயிபோ வெலி
தம்மி பா விகின்
செங்கடனுல்ல சில்லு துலசீவன சீம ஸுபாங்கி ஒக்க பா
லங்குரு விந்த கந்தள தளப்ரதி மாங்க்ரி கரோத  ராதன்
தமிழில் -பூக்குடலையுடன் சோலை சூழ்ந்த
காட்டுப் பாதை - நிழலோ, மரகத நிறப் பச்சை!

இறுதியிலே நீர் நிறைந்த பொய்கை!
சுற்றிலும் வெண் பளிங்குத் திண்ணைகள்
அங்கு துளசிச் செடிகள் மலிந்த பூங்கா வனம்
அதில் அவர் (பெரியாழ்வார்) கண்டது
இலட்சணமுள்ள ஒரு பெண் குழந்தை
பதுமராகச் சேவடிகள் - சிவந்த
உள்ளங்கைகள்
பெண் குழந்தை

கனுகொனி விச்மயம் பொதவங்கா கதியன் சனி சௌகு மார்யமுன்
தனு ருசியுன் சுலக்ஷண விதானமு தேஜமு செல்வு கொந்த சே
பனி மிடி த்ருஷ்டி சூசி யஹஹா? யன
பத்யுன கம்முகுந்து டே
தனயக நாகு நீஸி ஸுவுதாக்ருப
சேசெனடஞ்சு
ஹ்ருஷ்டுடை
தமிழில் -
‘பூமியின் மடியில் தோன்றிய
பொன்மகளைக் கண்டார்
வியப்பால் உடல் பூரித்தது
குழந்தையின் எழில் கண்டார் - எடுத்து
உச்சி மோந்தார்! அணைத்தார்!

ஞானப் பெண்பாவை அழகை கண்ணாரக்
கண்டார் - கண்ணுற்று ஆகா!
குழந்தையற்ற எனக்கு
திருமாலே, மகளாக இக்குழந்தையைத்
தந்தருளினார். என்னே! அவன் கருணை
- என வியந்து மகிழ்ந்தார்.’

(சக்தி கே.கிருஷ்ணமூர்த்தியின் ‘கிருஷ்ண
தேவராயர் அருளிய ஆண்டாள் காவியம் - ஓர் எளிய அறிமுகம்’ நூலிலிருந்து)
இப்படி நூற்றுக்கணக்கான பாடலில் அழகுற விரிகின்றது ராயர் எழுதிய ஆண்டாள் காவியம். இதோடு, ஜாம்பவதி கல்யாணம், உஷா
பரிணயம் ஆகிய இரு வடமொழி நாடக நூல்களையும் எழுதியுள்ளார்.
எல்லாமே தெய்வீகத் திருமணக் காவியங்கள்.

கிருஷ்ண தேவராயர் எவ்வாறு சமய பேதங்களற்ற ஒரு நடுநிலையை வகித்தாரோ, அதுபோன்றே அவர் மொழி பேதமும் காட்டியதில்லை. கன்னடம்தான் அவரின் தாய்மொழி. ஆயினும் தெலுங்குப் புலவராகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டுப் பெண்ணான கோதையின் வரலாற்றை மெய்சிலிர்க்க எழுதினார். வடமொழியிலும் வல்லவராகத் திகழ்ந்தார். அவருடைய ராஜ சபையில் குமாரசரஸ்வதி, அரிதாசர் என்னும் இரு தமிழ்ப் புலவர்களும் இருந்தனர். ராயர் அவர்கள் மீதும் அளவற்ற மரியாதை கொண்டிருந்தார்.

ராயர் - அப்பாஜி கதைகள் புத்திசாதுர்யத்திற்குப் பெயர் பெற்றுத் திகழ்பவை. இந்த அப்பாஜியே கிருஷ்ண தேவராயரின் அரசியல் ஆசானாகத் திகழ்ந்தவர். ‘நூனிஸ்’ என்னும் அறிஞர் அளித்துள்ள ஒரு வரலாற்றுக் குறிப்பு சுவையான சம்பவம் ஒன்றை விவரிக்கிறது. விஜயநகரத்தை வீர நரசிம்மர் ஆட்சி புரிந்துகொண்டிருந்தார். அவருக்கு இரண்டொரு தம்பிகள் உண்டு. அவர்களில் சற்று வயதில் பெரியவன் கிருஷ்ணன். இந்தத் தம்பி எங்கே தன் ஆட்சியை அபகரித்துக்கொண்டு விடுவானோ என்கிற அச்சம் இருந்தது வீர நரசிம்மனுக்கு. மேலும் அவன், தனக்குப்பின் தன் புதல்வன் அரியணையில் அமர வேண்டுமென்று எண்ணினான். அப்புதல்வனோ மிகவும் சிறுபிராயத்தவன். வீரநரசிம்மனுக்கோ நாளொரு வியாதி, பொழுதொரு நலிவு என்கிற நிலை!

அவன் தனது அமைச்சர் சாளுவ திம்மய்யாவை அழைத்து, “எனக்குப்பின் என் மகன்தான் விஜய நகர மன்னனாக வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கிற என் தம்பி கிருஷ்ணனை நீங்கள் எப்படியாவது, எவருமறியா வண்ணம் கொன்று விடுங்கள். அவன் கண்களைத் தோண்டியெடுத்து வந்து என்னிடம் காண்பியுங்கள்’’ என ரகசிய ஆணை பிறப்பித்தான்.
அமைச்சர் சாளுவ திம்மய்யா யோசித்தார். நாடு, சுற்றிலும் எதிரிகளால் தாக்கப்படும் அபாய நிலையிலிருந்தது. மன்னனோ உடல்நலிவுற்ற நிலை. அரச குமாரனோ மிகச்சிறு குழந்தை. இந்த நிலையில் கிருஷ்ணனைக் கொல்வது உசிதமற்றது. அவர் இது குறித்து, வீரநரசிம்மனின் தம்பியை அழைத்து,

அண்ணனின் கட்டளையைத் தெரிவித்து ஆலோசித்தார். கிருஷ்ணன், ‘‘அமைச்சரே, தாங்கள் என் தந்தை போன்றவர். என்னை உயிருடன் விட்டு விடுங்கள். நான் ஒருபோதும் அரியணைக்கு போட்டியாக வரமாட்டேன். எங்காவது சென்று விடுகிறேன். எவர் கண்ணிலும் படமாட்டேன்...’’ என்று பணிவுடன் வேண்டினான். அமைச்சர் அப்பாஜி, “மகனே கிருஷ்ணா, நீ எங்கும் செல்ல வேண்டாம். என் கட்டளைப்படி சிருங்கேரி மடத்திற்குச் சென்று தங்கியிரு. வித்யாரண்யேஸ்வரர் ஆலயம்தான் உன் புகலிடம். அங்கே நீ ஒரு ஊழியன். அவ்வளவே. நீ அரச வம்சத்தவன் என்பது எவருக்கும் தெரியக்கூடாது. நான் அழைத்தாலன்றி நீ இங்கு வரக்கூடாது...’’ என்று கூறி, அனுப்பி வைத்தார்.

கிருஷ்ணன் சில வருடங்கள் சாதாரண ஆலய ஊழியனாகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். அப்பாஜி கொலைகாரர்கள் மூலம் ஓர் ஆட்டின் கண்களைக் கொண்டுவரச் செய்து, அரசனிடம் ‘உங்கள் தம்பி கொல்லப்பட்டான். இதோ அவனுடைய கண்கள்’ என்று கூறி, நம்ப வைத்துவிட்டார். ஆண்டுகள் சில ஓடின. நாட்டின் மீது கங்கர்கள் படையெடுத்தனர். பாமினி சுல்தான்களும் பாய்ச்சல் காட்டினர். கஜபதி கர்ஜித்து நின்றான். எல்லைகள் நெடுக தொல்லைகளாயிற்று.

யுத்தம் நிச்சயம் என்ற நிலையில் வீரநரசிம்மன், “ஐயோ... என் தம்பி கிருஷ்ணன் இருந்தால், இப்போது அவன் தலைமையில் படைகளை  அனுப்பலாம். அறியாமையால் தவறிழைத்து, அவனைக் கொன்று விட்டேனே... இப்போது விஜயநகரை யார் காப்பாற்று வர்?’’ என்று புலம்பினான். அப்போது சாளுவ திம்மய்யா, “அரசே! என்னை மன்னிப்பதானால், நான் ஓர் உண்மையைக் கூறுகிறேன். அப்படியே நாட்டைக் காக்கும் உபாயமும் கூறுவேன்...’’ என்றார். “கூறுங்கள் அப்பாஜி. நீங்கள் வெறும் அமைச்சரல்லர். என் தந்தையாகவே உங்களை மதிக்கிறேன். நீர் எது செய்தாலும் அது விஜயநகருக்கு நன்மை கருதியே இருக்கும் என நம்புகிறவன் நான்“ என்றான் அரசன்.

“அப்படியானால் சரி, சொல்கிறேன் கேள். உன் தம்பி கொல்லப்படவில்லை. துங்கபத்ரா நதிக்கரையில், விரூபாட்சர் ஆலயத்தில் பத்திரமாக இருக்கிறான். ஆணையிட்டால் அவனை இங்கு வரச்செய்கிறேன்’’ என்றார் அப்பாஜி. வீரநரசிம்மன் மகிழ்ந்து, “என் தம்பியைக் கூப்பிடுங்கள். இந்தப் போரில் அவன் வென்றால், அவனே விஜயநகரை ஆளட்டும்...’’ என்று கூறினான். அடுத்த சில நாட்களில் அவன் ஆவி பிரிந்தது.

அப்பாஜி, கிருஷ்ணனை வரவழைத்து, நாட்டின் மன்னனாக, கிருஷ்ண தேவராயனாக ஆக்கி, முடிசூட்டி வைத்தார். எதிரிகள் படையெடுப்பும் முறியடிக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீரங்கப்பட்டினத்து அரச குமாரியான திருமலா தேவியை அவனுக்கு மணமுடித்து வைத்து, பட்டத்தரசியாகவும் ஆக்கினார்.தலைமறைவு நாட்களில் கிருஷ்ணன் ஒரு நாட்டியக்காரியின் அழகில் மனத்தைப் பறிகொடுத்திருந்தான். அதை அப்பாஜியிடம் சொல்லி, ‘என் நிலை உயர்ந்தாலும் நான் அவளுக்கு அளித்த வாக்கு பொய்த்துப் போகலாகாது. அவளை என் சின்னராணியாக ஏற்க அனு மதியுங்கள்’ என வேண்டினான். அப்பாஜியும் கிருஷ்ணனுக்கு அந்த நாட்டியக்காரியை மணமுடித்து வைத்தார்.

இந்த இரு ராணிகளுடனும் வடவேங்கடம் சென்று, ஏழுமலையானை வணங்கிய கிருஷ்ண தேவராயர், அங்கே இருராணிகள் நடுவே தான் நிற்கும் கோலத்தில் சிலை வடிக்கச் செய்து, நிறுவியுள்ளார். இன்றைக்கும்  ஸ்ரீநிவாசப்பெருமாள் சந்நதி முன் இந்த மூவரும் சிலை வடிவில் நின்று வணங்கிக் கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம்.

கிருஷ்ண தேவராயர் தமிழக விஜயத்தின்போது, அழகர் கோயில், மதுரை, சங்கநாயனார் கோயில், தென்காசி, குற்றாலம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் என ஏராளமான ஆலயங்களை வந்து வழிபட்டதோடு,அத்தனைஆலயங் களையும் புதுப்பிக்கவும், புதுக் கோபுரங்கள் அமைக்கவும் ஆணையிட்டார். பெரும் பொருளும் நல்கினார். அவர் எழுப்பிய கோபுரங்கள் ராயகோபுரங்கள் என்றே அழைக்கப் பெறுகின்றன.

ஆண்டாள் சரிதம் பாடிய ராயர், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து தரிசித்ததுடன், அவ்வாலயத்தையும் பெரும் பொருட்செலவில் புதுப்பித்தார். (அக்கோயிலின் ராஜகோபுரம்தான் இன்று தமிழக அரசின் சின்னமாக உள்ளது.) மூவேந்தர் ஆட்சிகள் முடிந்து போயிருந்த அந்த நாட்களில் தமிழ்நில மக்கள் அந்நியப் படையெடுப்பு பற்றிய அச்சங்களற்று நிம்மதியாக வாழ ராயரின் ஆட்சி உறுதுணையாக அமைந்தது.

விஜயநகர ஆட்சியாளர்கள் முன்பே தமிழகத்தில் கால் பதித்திருந்ததால், கிருஷ்ண தேவராயரின் தமிழக விஜயம், படையெடுப்பு போன்று நிகழ்ந்த ஒன்றல்ல; பக்திச் சுற்றுலா போன்றே அமைந்தது. அவர் தரிசித்த, திருப்பணி செய்த ஒவ்வொரு ஆலயத்துக்கும் பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்கினார். கிருஷ்ண தேவராயர் காலத்தில், விசுவநாத நாயக்கர் தலைமையில் தமிழகத்தில் மதுரையில் தொடங்கிய நாயக்கர் ஆட்சி, கடைசி அரசியான மீனாட்சி ராணி வரை இரண்டு நூற்றாண்டுகள் குறைவின்றி நீடித்தது.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர், தமிழ்ப் பெண்ணான கோதை ஆண்டாள் நாச்சியாரின் அருட் சரிதத்தை ஏன் தெலுங்குக் காவியமாக இயற்றினார் தெரியுமா?அது ஒரு சுவையான வரலாறு.
(அடுத்த இதழில்)