திருச்சி



திருச்சி மலைக்கோட்டை நந்திகோயில் தெருவில், இறைவி ஆனந்தவல்லி சமேத நாகநாத ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. சுவாமி கிழக்கு திசை நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் காட்சியருளு கின்றனர். திருச்சி மலைக்கோயில் ஆலய பெரிய நந்தி இந்த ஆலயத்துக்கு அருகில், தனிச் சந்நதியில் உள்ளது. நாகநாதர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் நந்தி கோயிலுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனர்.

நாகநாதர் ஆலயத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கில் இரு கோபுரங்கள் உள்ளன. ஆலயத்தின் அருகே சிவகங்கை தீர்த்தக்குளம் உள்ளது. இத்தலத்துக்கு வந்து அருள்மிகு நாகநாதரையும் இறைவியையும் வழிபட நாகதோஷம், திருமணத்தடை, மகப்பேறின்மை குறைகள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் ஆலயத்தை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கும் வந்து வழிபட்டு செல்வதால் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கொடிமரம், சிறிய நந்தி, பலிபீடத்துடனும் அர்த்த மண்டபத்துடன் கூடிய இதே நாகநாதர் ஆலய வாயிலில் கணபதி, சுப்ரமணியர் இருவரையும் தரிசிக்கலாம். கருவறையில் பெரிய ஆவுடையில் ஏழு அடி உயரத்தில் ஐந்து தலை வெள்ளி நாகம் குடை பிடிக்க, கிழக்கு திசை நோக்கி நாகநாதர் அருள்பாலிக்கிறார். இதே அர்த்த மண்டப வடபகுதியில் இறைவி ஆனந்தவல்லி நான்கு கரங்களுடன் மேலிரு கரங்களில் அட்ச மாலை, பத்மம், கீழிரு கரங்களில் அபயவரத முத்திரை காட்டி தென்திசை நோக்கி எழிலாகக் காட்சி தருகிறாள்.

இத்தலத்திலுள்ள ஞான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியில் அமர்ந்து தரிசனம் தர, அவரது பாதங்களைச் சுற்றியபடி சர்ப்ப வடிவில் ராகுவும் கேதுவும் அமைந்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். ராகு, கேது பாதிப்பு உள்ளவர்கள் நாக நாதருடன் இவர்களையும் வணங்கி வழிபடுகின்றனர். நாக அரசனான ராகு இங்கே ஈசனை வழிபட்டதோடு, அவர் அருளால் இத்தலத்திற்கு வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு பல நன்மைகளும் வரங்களும் அருளுகிறார்.

ஒரு ஆகம கோயிலுக்குரிய அனைத்து சந்நதிகளும் இந்த ஆலயத்தில் உள்ளன. மூலவரைப் போலவே உற்சவ மூர்த்திகளுக்கும் ஆனந்தவல்லி, நாகநாதர் என்றே பெயர். திருச்சி அருள்மிகு தாயுமானவர் சுவாமி கோயிலிலிருந்து மட்டுவார் குழல் அம்மை சித்திரைத் திருவிழா ஆறாம் நாள் அன்று  இக்கோயிலுக்கு வந்து தவம் செய்துவிட்டு திரும்புகிறாள்.

விஜயதசமி நாளில்  சிராமலை நாதர் (தாயுமானவர்) இந்த நாகநாதர் ஆலயத்துக்கு வந்து தங்கி அம்பு போட்டு மலைக்கோயிலுக்கு திரும்புவதும் ஒரு சிறப்பு ஆகும். மாசி மாதம் மக நாளன்று இங்கு தேர்த் திருவிழா நடைபெறுகிறது. திருச்சியில் உள்ள பிற ஆலயங்களுக்கு செல்வோர் இந்த நாகநாதர் ஆலயத்துக்கும் சென்று வழிபட்டு நிறைவை அடையலாம். 

விஜயலட்சுமி சுப்பிரமணியம்

காஞ்சிபுரம்

ஒருமுறை கயிலைக்கு திருமால் வந்திருந்தார். ஈசனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். பார்வதி அதில் வெற்றி பெற்றார். ஆனால், திருமாலோ ஈசனே வெற்றி பெற்றார் என்றார். இதனால் பார்வதி, ‘பொய்யுரைத்த நீர் பூமியில் தவம் செய்வீர்’ என்று திருமாலையே பூவுலகத்திற்கு அனுப்பினாள்.

பெருமாளும் காஞ்சியிலேயே பாம்பு உருவில் ஈசனை பூஜித்து சாப விமோசனம் பெற்றார். எனவே, இத்தலத்தில் மகாகாளேஸ்வரர் எனும் ஈசனின் சந்நதிக்குள்ளேயே அனந்த பத்மநாபராக பெருமாள் தாயாரோடு சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். பூமியில் புதையுண்டுக் கிடந்த பழமையான ஆலயத்தில் காஞ்சி பெரியவர் திருப்பணி செய்தார். காஞ்சிபுரத்திலுள்ள நவகிரகத் தலங்களில் கேதுவுக்குரியதாக இது திகழ்கிறது. இக்கோயில் காஞ்சிபுரம் சாலைத்தெருவிலுள்ள அன்னதானக் கூடத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது.

நாகர்கோவில்

நாக வழிபாட்டிற்காக கோயில்கள் பல இருந்தாலும் நாகத்தின் பெயரையே கொண்ட நாகர்கோவில் ஊரில் உள்ள நாகராஜா கோயிலை போன்று சிறப்புமிக்கது வேறில்லை என்றே கூறலாம். நாகர் கோவில் ஊர்ப் பெயர் காரணமும் நாகராஜா கோயிலை மையமாக வைத்தே உள்ளது. மூலவர் நாகராஜர். இங்கு சிவன், திருமால், பாலமுருகனுக்கு தனித்தனி சந்நதிகள் உண்டு. நாகராஜர், அனந்தகிருஷ்ணர் சந்நதிகளுக்கு இடையே அங்கியுடன் கூடிய சிவலிங்கம் உள்ளது. நாகராஜா கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டிருப்பது சிறப்பான அம்சமாகும்.

அக்கூரையில் எப்போதுமே ஒரு பாம்பு காவல் புரிகிறது என்றும் வருடந்தோறும் ஆடி மாதம் கூரை புதிதாக வேயப்படும்போது ஒரு பாம்பு வெளிவருவது வழக்கம் என்றும் சொல்கிறார்கள். மூலவர் அமைந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருக்கிறது. மூலவர் இங்கு தண்ணீரிலேதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றிலிருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோயிலின் முக்கிய பிரசாதமாகும். இம்மண் 6 மாதம் கருப்பாகவும், 6 மாதம் வெள்ளை நிறமாகவும் மாறி காணப்படும்.

எவ்வளவோ காலமாக பிரசாதம் எடுத்தும் அந்த மண் குறையாமல் இருப்பது அதிசயம். இக்கருவறையில் விமானமும் கிடையாது; பீடமும் கிடையாது பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தில் உட்கோயில் வாசலில் இருபக்கமும் ஐந்து தலையுடன் படமெடுத்த கோலத்தில் ஆறு அடி உயரத்தில் இரண்டு பெரிய பாம்பு சிலைகள் உள்ளன. நாகதோஷம் உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் தோஷம் நிவர்த்தியாகிறது. நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையம், நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. 

நாகூர்

நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். சிவராத்திரியன்று நான்காவது ஜாம பூஜையை ஆதிசேஷன் இத்தலத்தில் செய்வதாக ஐதீகம்.