உபதேச மொழிகளே வேதப் பொருளாகும்



புத்தகம் புதுசு


பின் கண்ணனே பேச்சை ஆரம்பித்தார். “கங்கை மைந்தரே, இரவு நேரம் நன்கு கழிந்ததா? சோர்வு போனதா? ஞானங்கள் அனைத்தும் தோன்றுகிறதா?’’ என்று  வினவினார்.உடனே பீஷ்மர், “கண்ணா... உம் அருளால் என் உடல் எரிச்சல் தொலைந்தது. மயக்கம் விலகியது. இப்போது தெளிந்த சிந்தனையுடன் உள்ளேன். கண்ணா நீ வரம் அளித்தபடி எல்லா தர்மங்களும் மனதில் ஒளிவிடுகின்றன.

ராஜ தர்மம், ஆபத்து தர்மம், மோட்ச தர்மம் ஆகிய அனைத்து தர்மங்களையும் அறிகின்றேன். எந்தத் தர்மத்தில் எப்பிரிவைக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்கிறேன். கண்ணா, உன் புண்ணியத்தால் நான் திரும்பவும் இளைஞன்போல உணருகிறேன். நற்கதிக்குச் செல்லவிருக்கும் நான், அக்கதியை அடையும் வழியை எடுத்துக் கூறும் வல்லமை பெற்றவனாக உள்ளேன். ஆயினும் உம்மிடம் மண்டியிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். இந்த தர்ம உபதேசங்களை நீரே தர்மருக்குக் கூறாதது ஏன்?” என்றார்.

கண்ணன் பீஷ்மரின் வினாவிற்கு பதிலளித்தார்... “வேதம் உள்ளளவும் உம் புகழ் மேன்மேலும் விரிவடைய வேண்டும். இந்தப் பூமி உள்ள காலம் வரை உம் புகழ் அழிவற்றதாக இருக்க வேண்டும். அதற்காகவே இவ்வுபதேசத்தை நீரே அருளுமாறு கூறினேன். நீர் தர்மருக்குச் சொல்லப்போகும் உபதேச மொழிகள் வேதப் பொருளாக உறுதி பெறப் போகின்றன. உமது தெய்வீக உரையைக் கேட்கும் மக்கள், உயிர் துறந்தபின் புண்ணியங்களின் பயனை அடையப் போகின்றன.

‘‘கங்கை மைந்தரே! இவ்வாறு உம் புகழ் மிகப் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே உமக்கு மேலான ஞானத்தை அருளினேன். போரில் கொல்லப்படாமல் இருக்கும் அரசர்கள் யாவரும் பல தர்மங்களையும் கேட்க விருப்பத்துடன் உம்மைச் சூழ்ந்து அமர்ந்திருக்கின்றனர். தர்மங்களை உம்மைவிட அறிந்தவர் எவருமில்லை.

‘‘உலகில் குறை இல்லாதவரைக் காண முடியாது. ஆனால், உமது பிறப்பு முதல் பாவம் என்பது உம்மிடம் சிறிதுகூடக் காணவில்லை. குறையொன்றும் இல்லாதவரே, ஒரு தந்தை மகனிற்கு உரைப்பதுபோல நீர் உபதேசம் புரிவீராக! தர்மம் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு உபதேசிக்காவிடின் பாவம் வந்து சேரும். ஆனால், ஞானக்கடலே உமது உபதேசம் ஆரம்பமாகட்டும்!” என்றார்.