குன்றின் மீது அனுமன்!



பெருமுகை சஞ்சீவராயப் பெருமாள் கோயிலில் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், வசந்த மண்டபம், பரமபத வாசல், விஷ்வக்சேனர், பக்த ஆஞ்சநேயஸ்வாமி சந்நதி ஆகிய அனைத்தும் சிற்ப சாஸ்திரப்படி வெகு நேர்த்தியாக அமைந்துள்ளன. பதினெட்டு கிராம மக்களின் குலதெய்வமாகப் போற்றி வணங்கப்பட்டு வரும் சஞ்சீவராயப் பெருமாள் கோயிலின் கருவறையை ஒட்டிய வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், லட்சுமிதேவி, நாராயணமூர்த்தி, நரசிம்மமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, பக்த ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.

புடைப்புச் சிற்பங்கள் சில, கோயிலின் அருகே உள்ள பாறைகளின் மீது காணப்படுகின்றன. 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்துதான் பக்தர்கள் இங்கு கோயிலை நிர்மாணித்து வழிபடத் தொடங்கியதாக கல்வெட்டு சாசனம் தெரிவிக்கிறது! இவ்வாலய முகப்பில் ஒரு குன்றின்மீது ஆஞ்சநேயரின் பிரமாண்ட சிற்பம், பக்தர்களின் மனதைக் கவருகிறது. ஊஞ்சல் மரம், ஸ்தல விருட்சம். இந்த சஞ்சீவராயப் பெருமாள் கோயிலில், சுபவிசேஷங்களுக்குப் பூ வைத்து வாக்கு கேட்கும் வழக்கமும் இருக்கிறது. ஏகாதசி, பௌர்ணமி தோறும் கிரிவலம், கார்த்திகையில் ‘விஷ்ணு தீபம்’ இங்கே மிகச் சிறப்பு!ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திலிருந்து (கள்ளிப்பட்டி அருகே) 16 கி.மீ. தூரத்தில், வனப்பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

வெற்றிக்கருளும் ஆஞ்சநேயர்! நாமக்கல் ஆஞ்சநேயரைப் போல நெடிய உருவத்தோடு, கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர் குளத்துக்கடையில் கருணையே வடிவாகக் காட்சி தருகிறார் ஸ்ரீசிவபக்த அதிசய ஆஞ்சநேயர்!ஒருசமயம் இரக்க பிந்து, இரக்க ராட்சசன் என்ற இரண்டு அரக்கர்கள் கடலுக்குள் ஒளிந்திருந்து தாங்கள் பெற்ற சாகாவரத்தால் பலவிதமான இடைஞ்சல்களை மக்களுக்குச் செய்து வந்தனர். நாரத முனிவர் ராமபிரானிடம் சென்று இந்த அரக்கர்கள் இருவரையும் வதம் செய்து, பூவுலக மக்களின் துயர்களைப் போக்குமாறு வேண்டினார்.

ராமரோ, ‘‘மும்மூர்த்திகளின் ஆசிபெற்ற சிரஞ்சீவியான அனுமனே அந்த ராட்சசர்களை அழிக்கத் தகுந்தவன்’’ என்று கூறினார். பலம் வாய்ந்த ராட்சசர்களை வதைக்க அனுமனுக்கு திருமால் தன் சங்கு, சக்கரத்தையும், பிரம்மா பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ஸ்ரீராமன் வில்-அம்புகளையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், கருடாழ்வார் சிறகுகளையும், சிவன் மூன்றாவது கண்ணின் சக்தியையும் கொடுத்தனர்!

பத்துக் கண்கள், சங்கு, வஜ்ராயுதம், கபாலம், மழுவோடு விஸ்வரூபம் எடுத்த அனுமன், பூலோக மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த அசுரர்கள் இருவரையும் எளிதில் வதம் செய்தார். அவரே இங்கு சாந்தமே உருவாய்க் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் கூப்பிய கரங்களோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மனநலம் பாதிக்கப்பட்டோர், தொழிலில் நஷ்டம் அடைந்தோர் இந்த சிவபக்த அதிசய ஆஞ்சநேயரை வந்து வணங்கிச் செல்கின்றனர். மூல நட்சத்திரத்தன்று இந்த அனுமனை வந்து வணங்கினால் நினைத்த காரியங்கள் யாவும் நிச்சயம் ஜெயமாகும் என்கிறார்கள்!

 மேவானி கோபாலன்