உள்ள(த்)தைச் சொல்கிறோம்



போதி மரத்  தத்துவம்

ஆன்மிகம் பலன் இதழ் மிகவும் மேன்மை பொருந்திய இதழாகவே மிளிரக் கண்டோம். கோடைச் சுற்றுலா பக்தி ஸ்பெஷலாக வலம் வந்து நலம் பயக்கும் கோயில் தரிசனம் கண்டு உளம் நெகிழ்ந்தோம். ‘ஆன்மிகம்’ மூலமாக குரு பரிகாரதலங்களை ஒருசேர தரிசித்ததில் பரம திருப்தி..

எத்தனை இதழ்கள் வந்தாலும் ‘ஆன்மிகம்’ இதழ் போல அசரவைக்கும் தகவல்களை அள்ளி வீசிடவும் இயலாது; இதழ் புகழை விஞ்சிடவும்
இயலாது என்பது நிதர்சனம்.
- துரை இராமகிருஷ்ணன், துறையூர்.

கோடை சுற்றுலாவையும் ஆன்ம ஆதாயம் கொண்டதாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கட்டுரைகள் அமைந்திருந்தது பாராட்டத்தக்கது; வரவேற்கத்தக்கது.
- ப.மூர்த்தி, பெங்களூர்.

சுற்றுலா என்று செலவு செய்து ஆடம்பரங்
களைப் பார்த்து அலுத்து போய் வருவதா! இல்லையென்றால் உள்ளம் நிறையும்படி பக்தி மணம் கமழும் மன அமைதியுடன் இன்ப சுற்றுலா போவதா? எது உண்மையான சுற்றுலா என்று மறைமுகமாகக் கேட்டு இரண்டாவதையே வலியுறுத்திய ‘ஆன்மிக’த்தால் விளைந்தது ஆனந்தம் கோடி. 
- கே.வி.கமலா, தஞ்சாவூர்-4.

கோடை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு அனைத்து தேவியரையும் துதிக்கும் கவசத்தை வெளியிட்டு ஆரோக்ய வாழ்விற்கு வழி
காட்டிவிட்டீர்கள், நன்றி!
- இரா.கல்யாண சுந்தரம், வேளச்சேரி.

நவகைலாயங்களுள் ஒன்றான பாபநாசம்
அருகில் இருக்கும் பாண தீர்த்தத்தில், ஸ்ரீராமபிரான் தன் தந்தையாகிய தசரத சக்கரவர்த்திக்கு ஆடி அமாவாசை அன்று நீத்தார் கடன் நிறைவேற்றியதை அறிய முடிந்தது. மேலும் மார்கழி மாதம் கங்கை நதியே தன் பாவங்களைப் போக்க பாபநாசத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் கலக்கும் செய்தியும் ‘ஆன்மிகம்‘ வாயிலாக அறியும் பாக்கியமும் கிடைத்தது.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

‘தூயவள் திருமுன் துக்கமெல்லாம் துச்சம்தான்’ பகுதியில் லவண துர்க்கா பற்றியும், அவள் மோகத்தை விலக்குபவள், ரோகத்தை அழிப்பவள், போகத்தை விலக்கி ஞானத்தை தருபவள் என்பது புதிய செய்தியாக இருந்தது.
- இரா.நாராயணன், பெங்களூர்.

கோடை சுற்றுலா பக்தி ஸ்பெஷல் பக்கத்துக்குப் பக்கம் பக்தியை போதித்திருந்தாலும் தலையங்கம் மட்டும் படிப்பினையைக் கொடுத்தது. சும்மா இருந்து அசம்பாவித உணர்வுகளுக்கு
இடமளிக்காமல், மனப்பக்குவம் பெறுவதற்கு நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது
வைர வரிகள்.
- எஸ்.எஸ்.வாசன், வந்தவாசி.

குரு பெயர்ச்சிப் பலன்கள் எனக்கும் சரி எனது குடும்பத்தினருக்கும் சரி மிகுந்த மன ஆறுதலைத் தருவதாக அமைந்திருந்தன.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

அருள்மிகு பாபநாச சுவாமி-உலகாம்பாள் கோயில் கட்டுரை எங்கள் முன்னோர்களை நினைக்க வைத்தது. ஆம். எங்கள் முன்னோர்களின் குலதெய்வங்கள்தான் அவர்கள். ‘உலகாம்பாள்,’ ‘உலகு,’ ‘உலகநாதன்’ என்றெல்லாம் எங்கள் குடும்பத்தில் பெரியவர்களுக்குப் பெயர் உண்டு.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

பக்திக்கு பக்தியுமாச்சு... சுற்றுலாவுக்கு
சுற்றுலாவுமாச்சு... கோடை விடுமுறையையும், ஆன்மிகத் தலங்களையும் இணைத்து நீங்கள் போட்ட இந்தத் திட்டம், இந்திர தனுசு போல அத்தனை அழகு!
- ஜெரினாகாந்த், சென்னை-16.

‘விடுமுறை உல்லாசம், ஆன்மிக உற்சாகம்‘ கட்டுரையைப் படித்தேன். ஏற்காடு, ஊட்டியைச் சுற்றி இத்தனை கோயில்களா என அறிந்து வியந்தேன்.
- முத்தூறு, தொண்டி.

மனதை மிகக் கவர்ந்த அட்டைப்படமும், அதையொட்டிய ‘கொடுக்கக் கொடுக்கத்தான் வளரும்’ என்ற அட்சய திருதியை பற்றிய உண்மையான, தெளிவான, அனைவரும் பின்பற்ற வேண்டிய
தகவல்களும் அருமை! பரந்த மனமே வேண்டும். நகைக்கடையில் கூட்டம் போட்டால் போதாது என்ற அறிவுரை, போதிமரத் தத்துவம்!
- சு.சிநேஹபிரியா, சென்னை-23.

‘‘சும்மா இருக்காதீர்கள்” தலையங்கம் சும்மா இருக்கணும்னு யாராவது மனதால் நினைத்தால் கூட அது முடியாத அளவுக்கு உத்வேகம் அளித்தது! மனப்பக்குவத்திற்கு மாமருந்து இந்த மாத
‘ஆன்மிகம்’.
- இ.டி.ஹேமமாலினி, சென்னை-23.

கோடி நன்மை அருள்வார் குருபகவான்
குரு பெயர்ச்சி மூலம் அருளினீர்!
கோடையிலே சுற்றுலாவுக்குக்
கோயில்கள் பட்டியல் தந்தீர்!
தேடிவைத்த பெரிய நிதியத்தைத்

தேர்ந்தேதான் கொடுத்து மகிழ்ந்தீரே!
நாடித்தான் நலமே தேவிதுதி
நயமாக அளித்தீர் வாழியவே!
- புலவர் இராம.வேதநாயகம்,
வடமாதிமங்கலம்.