கன மழை பொழிவதுபோல கனவு கண்டால் என்ன பொருள்?



தெளிவு பெறும் ஓம்

ஒரே நட்சத்திரம் கொண்ட கணவர், மகன் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கலாமா? இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டுமா? - ஒரு வாசகி.சாந்தி குசுமாகரம் என்கிற நூலில்தான் இதற்கான பரிகாரமெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. வேதமறிந்த பண்டிதரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனாலும் நீங்கள் கேட்பதற்காகச் சொல்கிறேன். ஏக நட்சத்திர பிறப்பு என்று இதைச் சொல்வார்கள். என்ன, ஏழரைச் சனி, அஷ்டம சனி போன்றவை வரும்போது இரண்டு பேருக்குமே சேர்ந்த மாதிரி சிரமங்கள் வரும். வருடத்திற்கு ஒருமுறையாவது இருவரையும் சங்கல்பம் செய்துகொள்ளச் சொல்லி வீட்டிலேயே கணபதி ஹோமம் செய்யுங்கள். மாதந்தோறும் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். இதுகுறித்து பெரிதாக எதுவும் பயப்படத் தேவையில்லை.

?ஒருவரின் ஜாதகத்தில் சூரியனின் பங்களிப்பு என்ன? சூரியனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன? - சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம். சூரியன் ஒரு பாப கிரகம். ஆகையால், ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்தவர்களுக்கு கண் நோய், தலைவலி, ரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு, மூளைக் கொதிப்பு என்று உபாதைகள் ஏற்படக்கூடும். அரசாங்க விஷயத்தில் கவனத்தோடு இருக்க வேண்டும். சூரியன் நீசமாகி இருந்தால்கூட மேற்கண்ட தொந்தரவுகள் வரக்கூடும். லக்னத்தில் சூரியன் இருந்தால்  உறுதி பெற்ற உடலுடன் நீடித்த ஆயுளோடு வாழ்வார். அதேபோல அரசு வேலை, உயர் பதவி, நிரந்தர உத்யோகம் என்று பல சாதகமான விஷயங்களும் நடைபெறும். 

?வாழ்க்கை முழுவதும் நல்லவனாக வாழ என்ன செய்ய வேண்டும்? - சுபா. மதுரை. சமீப காலத்தில் எல்லா பள்ளிகளிலும் குழந்தை களை ‘தமஸோமா ஜ்யோதிர் கமய’ என்று இறைவணக்கம் சொல்லிவிட்டு வகுப்புகளுக்கு அனுப்புவதை அறிவீர்கள். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வாருங்கள் என்று அந்த உபநிஷத மந்திரம் சொல்கிறது. வாழ்க்கை முழுவதும் நல்லவனாக இருக்க, எண்ணங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

 மனதை அழுக்கில்லாமல் தூய்மையாக்கயமம், நியமம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், ஆஸனம், ஸமாதி என்று பயிற்சி வழிகள் ஏழு கூறப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை மீறி ஒரு பெருஞ் சக்தி எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு அடங்கியிருத்தலே மாபெரும் தெளிவாகும். இப்படிப்பட்ட தெளிவு வந்தபிறகு நீங்கள் நல்லவனாக இருப்பதற்கு எந்த முயற்சியுமே தேவையில்லை. உங்களின் இயல்பே அப்படியாகிவிடும். 

?மகாமக ஆண்டில் மங்கள நிகழ்ச்சிகளை நாம் வீடுகளில் நடத்தலாமா?- நாராயணன், மயிலாடுதுறை.‘மகம்’ எனும் வார்த்தையே சிறப்பான வேள்வியை சொல்லும் வடமொழி சொல் ஆகும். மேலும் வடமொழியில் ‘மஹா‘ என்ற எழுத்து இணைந்த சொற்கள் அனைத்துமே மிகப் பெருமை வாய்ந்ததாகும். 
‘மஹாராஜன்’  - மிகப்பெரிய அரசன் - குபேரன்.
‘மஹாயுகம்’  - 43 லட்சத்து 20000 வருடம்.
‘மஹாபத்மம்’ - 100 கோடி.
‘மஹாசங்கம்’ -  100 கோடி,
- என்பதாக பொருள் கூறப்படுகிறது.

12 வருடத்திற்கு ஒருமுறை வரும் மகத்திற்கு ‘மகாமக ஆண்டு’ என்று சொல்லி கொண்டாடுகிறோம். நாட்டிலேயே மேல் பதவி வகிக்கும். பிரதமர் ஓர் இடத்திற்கு வருகிறார் என்றால் அவரைக் காண அனைவரும் கூடுவது போன்று, பல தெய்வங்கள் மகாமகக் குளத்தில் எழுந்தருளும்போது அதைக் காணப் போகத்தானே வேண்டும்? இதைத்தான் தலபுராணம் படித்த முதியவர்கள் நம் வீட்டு சுப நிகழ்ச்சிகளை மகாமக உற்சவம் முடிந்ததும் நடத்தலாம் என கூறியுள்ளனர்.

நாமும் அந்த வழியையே பின்பற்றி நடந்து இறையருளை பெறுவோம். மகாமகத்திற்கு செல்ல வேண்டுமென்றோ அல்லது அந்த வருடத்தில் ஏதேனும் ஒரு நாளில் கும்பகோணத்திற்கு செல்ல வேண்டுமென்றோ தீர்மானித்திருந்தால் அது தவறக்கூடுமே என்பதற்காக இப்படிச் சொன்னார்கள். ஆனால், இது சட்டம் இல்லை. இக்காலத்தில் தாராளமாக மங்கள
நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

?கோயிலுக்குச் செல்லும்போது எதிரில் சவ ஊர்வலம் வந்தால் திரும்பிவிட வேண்டுமா?
- தினேஷ், திருச்சி.

சகுன சாஸ்திரத்தில் சவ ஊர்வலமும், கனவில் இறந்தவர் உடலை காண்பதும் நல்லதல்ல.
செய்யாத தவறுக்கு குற்றவாளியாகவோ அல்லது குற்றங்கள் செய்தோ நீங்கள் தூண்டப்படலாம் என்று இதற்கு பொருள். சிவ கவசத்தை ஐந்து நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்யுங்கள். பசுவிற்கு அறுகம்புல் கொடுப்பதும் சிவாலயத்தில் நெய்தீபம் போடுவதுமே பரிகாரமாகும். சொப்பன சாஸ்திரம் விதம் விதமான பலனை மாறிமாறி கூறுகின்றது. இறந்து போனவர்களுடன் பேசுவதுபோல கனவு வந்தால் பதவி உயரும். வியாபார லாபம் தடைப்பட்ட காரியம் நிறைவேறுவது ஏற்படுமாம்.

கெட்ட சகுனம் எதிர் வரும்போது, வீட்டிற்குத் திரும்ப வந்து துளசி தீர்த்தம் சாப்பிட்டும், விபூதி தரித்தும் பின்பு பிரயாணத்தை தொடரலாம். கணவன் இறந்து போனதுபோல் மனைவிக்கு கனவு வந்தால் கணவனுக்கு தீர்க்காயுள் ஏற்படும். 
?கன மழை பொழிவது போலக் கனவு
கண்டால் என்ன பொருள்?
- த.கோவிந்தராஜ், குடியாத்தம்.

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்று உலகநாதர் பாடினபடி மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லும் கனவு இது.
சூரிய பகவானை அதிகாலை 5.30 - 6 மணிக்குள் சூரியன் உதய நேரத்தில் மூக்குக் கண்ணாடி அணியாமல் பார்த்து ‘ஓம் அருணாய நம ஓம்’ என
108 தடவை சொல்லுங்கள். இனிப்பு பட்சணத்தை குழந்தைகளுக்கு கொடுங்கள்.  
?தலைவிதி என்றால் என்ன?
- ராமசாமி, தூத்துக்குடி.
பிரம்மன் படைத்த ஒவ்வொரு மனிதனின்

வாழ்க்கையையும் முன்னரே தீர்மானித்து விடுகிறதாகத்தான் சகல சாஸ்திரங்களும் கூறுகின்றது. இதற்குத்தான் தலைவிதி என்று அர்த்தம். நாம் தவ நெறியோடு கூடிய வாழ்வை வாழ்ந்தால் அதற்குத் தகுந்த பிறவியையும் சேர்த்தே அளிக்கிறான் இறைவன். அம்பாளே தனக்குப் பெண்ணாக வர வேண்டும் என்று மலை அரசன் பர்வதராஜன் துதிக்கிறான். கீழேயுள்ள ஸ்லோகம் இதையேதான்
காட்டுகிறது. ஜந்தோரளிகே தாத்ராயானி அசிவானிது
அக்ஷராணிறு நியஸ்தானி யத்ப்ரஸா தே ந
விலீயந்தே த§தாந்நும:றுறு
(வியாஸர் எழுதிய கந்த புராணம்)
அதாவது, பிரம்மதேவன் தலையில் எழுதி
மனிதன் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை
அம்பிகையின் அருள் மறைத்து அழித்துவிடும் என்கிறார்.

 நீங்கள் கேட்கும் தலைவிதி முன்பே தீர்மானிக்கப்பட்டதுதான். ஆனால், அம்பிகையின் ஞானம் வந்து விட்டால் தலைவிதி எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.
?கங்கை நதியின் சிறப்பு என்ன?- மல்லிகா, கோவை.

கங்கை நதியானவள் பராசக்தியின் ஜலமயமான உருவம்தான். தெரிந்தோ தெரியாமலோ படைக்கப்பட்ட அனைத்து ஜீவன்களும் செய்துள்ள பாவங்களை தான் சுமந்து அழிப்பதற்காகவே ஜீவநதியாக உருக்கொண்டு வானுலகை விடுத்து பூமிக்கு இறங்கியிருக்கிறாள். தன்னில் நீராடியவர்களை மறு பிறப்பு இல்லாமல் செய்யும் பராசக்தி. தன் முன்னோர்களை நற்கதிக்கு அனுப்ப பகீதரதன் கங்கையை பூமிக்கு வரவழைத்த கதையை அறிந்திருப்பீர்கள்.

மயானத்துக்கு சென்ற தீட்டு, காசியில் கிடையாது. காசி கண்டம் எனும் புத்தகம் வாங்கி படியுங்கள். தீர்த்தம் என்ற வடமொழி பெயர் இவளுக்கே பொருத்தமாகும். இதற்கு, ‘பாவங்கள் கழுவப்படுகின்றன’ என்பதே பொருளாகும். போதும் என்னும் மனப்பான்மையை கொடுக்க கூடியவள் பாகீரதி. இவள் பகீரதனின் புத்திரியாதலால் பாகீரதி என்று பெயர். இறந்தவர்களின் எலும்பு எவ்வளவு காலம் நீரில் இருக்குமோ அவ்வளவு காலம் நல்லுலக வாசம் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாது இத்தலத்தில் உயிர் துறந்த ஜீவன்களுக்கு முக்தியே கிடைத்துவிடும். காசியின் பெருமையும் கங்கையின் பெருமையும் ஒன்றுதான். வீட்டு தலைவனான
விஸ்வேஸ்வரன் நினைப்பதை, நிறைவேற்றுபவளாக அம்பாளும் இங்கு திகழ்கிறாள். இருவரும் காசிவாசிகளுக்கு மோக்ஷ பிட்சையை கொடுக்கிறார்கள்.
க்ருஹமேதீ அத்ரவிச்வேச: பவானி தத்குடும்பினீறு ஸர்வேப்ய:
காசி ஸம்ஸ்தேப்ய: மோக்ஷபிக்ஷாம்
ப்ரயச்சதி!