சிறப்பான வாழ்வளிக்கும் சித்தி விநாயகர்



ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நிர்ணயிப்பவை ஒன்பது கிரகங்களே என்பது ஐதீகம்! அந்த கிரகங்களின் அனுக்கிரகமும் பெற எளிய வழி, ஏகதந்தனைத் துதிப்பது தான். அங்கிங்கெனாதபடி எங்கும் அவன் கோயில் கொண்டிருந்தாலும், கிரகதோஷம் விலகிட அவனை வழிபடவேண்டிய சிறப்புத் தலங்கள் சில உண்டு. அவற்றில் ஒன்று, சித்தி விநாயகர் திருக்கோயில். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ளது.

பழமை வாய்ந்த இவ்வாலய கோபுரத்தின் மேலேயே நின்ற திருக்கோலத்தில் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறார், பஞ்சமுக விநாயகர். சனி பகவானால் ஏற்படும் அனைத்து கஷ்டங்களையும் போக்கும் வல்லமை பஞ்சமுக விநாயகருக்கு உண்டு என்பார்கள். இவரருகே, ராகு-கேது சிலைகள் உள்ளன. எனவே, இவர் அரவுக் கிரகங்களின் தோஷங் களையும் அறவே போக்கக்கூடியவர். பிராகாரத்தில் துர்க்கை, பாலமுருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

நவக்கிரக சந்நதியும் உண்டு. கருவறையில் சித்தி விநாயகர் நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம் தாங்கி, அபய, வரதம் காட்டிப் பேரருள் புரிகிறார். பக்தர்களின் கிரக தோஷங்கள் யாவும் விலகி, தடைப்பட்ட சுபவிசேஷங்கள் விரைவில் ஈடேறுகின்றன என்று உள்ளம் பூரிக்கச் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த சித்தி விநாயகரை திங்கட்கிழமைகளில் பன்னிரண்டு முறை வலம் வந்து வணங்கினால், திருமணத்தடைகள் உடையும், பிள்ளைப் பேறு கிட்டும். கோபிசெட்டிபாளையம் டவுனுக்கு அருகில் வடக்கு வீதியில் இவ்வாலயம் உள்ளது.

திருமணஞ்சேரி போகாமலேயே...

சத்தியமங்கலம்-அந்தியூர் சாலையில் இருக்கிறது அத்தாணி. இங்குள்ள சந்தைக் கடைக்கு முன்புறமாக அமைந்திருக்கிறது ‘வளையபாளையம் மாரியம்மன்’ திருக்கோயில். இங்கே குடிகொண்டிருக்கும் பராசக்தியை ‘ஸ்ரீஅம்மன்’ என்றும் ‘கருணைத்தாய்’ என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

திருமணஞ்சேரிக்கு போக முடியாதவர்கள் இங்கே வந்து திருமணத்தடை நீங்கப் பிரார்த்திக்கிறார்கள். இந்த அம்மனிடம் பூ வாக்கும் கேட்கப்படுகிறது. இங்கு பூ வாக்கு கேட்டு நடத்தப்படும் திருமணங்கள் நிம்மதியான வாழ்வு அமையவும், சுமங்கலித்தன்மை நிலைக்கவும் செய்கிறது என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.

 மேவானி கோபாலன்