எனக்கு எல்லாம் நீரே, அனந்த பத்மநாபனும் நீர்தான்!



குருநாதர் ஸ்ரீமணக்கால் நம்பிகளுக்கு அனைத்து சேவைகளையும் முடித்த பின்பு, அவர் ஆணைப்படி, ஆளவந்தார், குருகைக்காவலப்பன் என்கிற மகானின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது குருகைக்காவலப்பன் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

 இவருடைய தியானத்தை எள்ளளவும் கலைக்கக் கூடாது என்று தீர்மானித்துக்கொண்டார் ஆளவந்தார். அதனாலேயே தும்முதல், இருமுதல் போன்ற இயற்கை உபாதைகளையும் கட்டுப்படுத்திக்கொண்டார். அதுமட்டுமல்ல, சற்றும் அதிராமல், ஓசை ஏற்படுத்தாமல், மெல்ல அடியெடுத்து வைத்து சுவருக்குப் பின்னே மறைந்தபடி, மிகுந்த விநயத்துடன் நின்று கொண்டார்.

ஆனால், இவர்களுடைய சந்திப்பு நிகழ வேண்டும் என்று உத்தேசித்திருந்த நம்பெருமான் சும்மா இருப்பாரா? குருகைக்காவலப்பனின் உள்ளத்தில் புகுந்து, ‘‘ஆளவந்தார் உம்முடைய இல்லம் தேடி வந்திருக்கிறார். இவர் உம்முடைய குருவாகிய நாதமுனிகளின் பேரனாவார்’’ என்று கூறினார். உடனே தியானம் கலைந்தது குருகைக்காவலப்பனுக்கு. தம் இல்லத்துக்கு வெளியே வந்தார். இவரை தரிசிக்க பலபேர் அங்கே கூடியிருந்தனர். அவர்களில் நம்பெருமான் குறிப்பிட்ட ஆளவந்தார் யார் என்று அறிய ஆவல் கொண்டு பார்வையைச் சுழற்றினார்.

வெறும் பார்வையால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, ‘‘இங்கே சொட்டைக் குலத்தவர் யாரேனும் வந்திருக்கிறீகளா’’? என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார். (சொட்டைக் குலம் என்பது ஸ்ரீநாதமுனிகளின் குலம்)ஆளவந்தாரும், சுவர் மறைவிலிருந்து வெளிப்பட்டு, ‘‘அடியேன், யமுனைத் துறைவன் இதோ வந்திருக்கிறேன்’’ என்று கூறி அவர் பாதத்தில் விழுந்தார். பிறகு எழுந்து, பவ்யமாக, ‘‘நான் சுவர் பின்னே தெரியாதபடி நிற்க, தாங்கள் இப்படி என்னை அழைத்தது ஆச்சரியமாக இருக்கிறதே!

நான் வந்ததைத் தங்களுக்கு அறிவித்தவர் யார்?’’ என்று கேட்டார். ‘‘அடியேனும், ரங்கநாதனும் என் இதயக் கமலத்தில் அனுபவித்துக் கிடக்கும்போதே, நம்பெருமாள் மூன்று, நான்கு முறை என் தோளை அழுத்தினார். மேலும் சுவரின் பின்னால் நின்றிருந்த உம்மையும் எட்டி எட்டிப் பார்த்தாரே? அப்போதே புரிந்து கொண்டேன். அடியேனின் குருவின் பேரனான நீர் வந்திருக்கிறீர் என்பதை. இருந்தாலும் இங்குள்ளோர் அனைவரும் தங்களை அறிய வேண்டுமென்பதற்காகத்தான் அப்படி பொதுவாகக் கேட்டேன்.’’ என்றார் குருகைக்காவலப்பன்.

இதைக் கேட்டதும் ஆளவந்தார் ஆனந்தத்தில் கண்கலங்கி நின்றார். அவர் இங்கு வந்ததன் காரணத்தை குருகைக்காவலப்பன் வினவ, உடனே, ‘‘அடியேனுடைய பாட்டனார், ஸ்ரீநாதமுனிகள் உமக்கு சொல்லித் தந்தருளிய யோக ரகசியத்தை அடியேனுக்கும் அருளிச் செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.  குருகைக்காவலப்பனும், ‘‘அப்படியே ஆகட்டும். எம்முடைய அந்திம காலத்திலே உமக்கு உபதேசிக்கிறோம். வருகிற புஷ்ய மாதத்தில், குரு புஷ்ய யோகத்தில், அபிஜித் என்கிற முகூர்த்தமே எமக்கு கடைசி காலமாகும். இதற்கு முன்னதாகவே வரவேண்டும்’’ என்று சொல்லி அவரை வழியனுப்பி வைத்தார். 

அதற்கிணங்க ஆளவந்தாரும், உடனே திருவரங்கம் வந்து பெரிய பெருமாளை சேவித்தார். குருகைக்காவலப்பன் சொன்னதையும் புஷ்ய மாதத்தையும் மறந்தே போனார். சிலகாலம் கழித்து, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் திருஅத்யயன உற்சவத்தில் ஈடுபட்டார் ஆளவந்தார். இருபத்தோரு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் பகல் பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா சாற்று என்று மிகமிக கோலாகலமாக நம்பெருமாள் உற்சவம் கண்டருளுவார்.

 அத்தகைய ராப்பத்து உற்சவத்தில் 10ம் நாளன்று இரவு, திருவரங்கப் பெருமாள் அரையர் என்பவர் பாசுரத்தைப் பாடியபடியே பக்தி பூர்வமாக அபிநயம் பிடித்து ஆடினார். அது, நம்பெருமாளே அபிநயம் பிடிப்பது போலிருந்தது. திருவனந்தபுரம் அனந்த பத்மநாதனைப் பாடும் 10ம் பத்து-இரண்டாம் திருவாய்மொழியில் ‘‘கெடும் இடராயவெல்லாம் கேசவாலென்ன’’ என்கிற பாசுரத்தை ஆரம்பித்து, ‘‘நடமிளோ நமர்களுள்ளீர், நாம் உமக்கறிச் சொன்னோம்’’ சென்று ஆளவந்தாரை நோக்கி மீண்டும் மீண்டும் அபிநயம் பிடித்து ஆடிப் பாடினார்.

இதைக் குறிப்பால் உணர்ந்த ஆளவந்தாருக்கு குருகைக்காவலப்பன் கூற்றும், புஷ்ய மாதமும் உடனே நினைவுக்கு வந்தன. உடனே திருவனந்தபுரத்துக்குப் புறப்பட்டார். நம்பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டார். மடத்தில் தன் பொறுப்புக்கு தெய்வவாரியாண்டானை உடனே நியமித்து விட்டுப் புறப்பட்டார். ஆனால், திருவனந்தபுரத்து எம்பெருமானைத்தான் மூன்று துவாரத்தின் வாயிலாக, (மூன்று கதவுகளின் வாயிலாக) அவரால் சேவிக்க முடிந்தது. குறுகைக்காவலப்பனை சேவிக்க இயலவில்லை.

காரணம், அதற்குள் குறுகைக்காவலப்பன் காலகதியடைந்து விட்டார். இதனால் அவரிடமிருந்து கற்க வேண்டிய யோக ரகசியம் கிடைக்காமலேயே போய்விட்டதை எண்ணி ஆளவந்தார் மிகவும் துக்கமடைந்தார். நாதமுனிகளுக்குப் பிறகு குறுகைக்காவலப்பனுக்கு மட்டுமே தெரிந்திருந்த யோக ரகசியம் இப்போது அவரோடு போய்விட்டது என்பதுதான் எவ்வளவு பெரிய நஷ்டம்!

இதற்கிடையில், ஆளவந்தார் நியமித்த தெய்வ வாரியாண்டான் என்பார் ஆளவந்தாரின் தற்காலிகமான பிரிவு தாங்க முடியாமல் தவித்தார். நோயால் பீடிக்கப்பட்டார். மருத்துவர்களிடமும் தன் உடல் நலிவுக்கு, ஆளவந்தாரைப் பிரிந்திருப்பதுதான் காரணம் என்றும் சொன்னார். உடனே, ஆளவந்தாரைப் பார்க்க, அவரை ஒரு சிவிகையில் உட்கார வைத்து அழைத்துச் சென்றனர்.
குருகைக்காவலப்பனை தரிசிக்காத துயரத்தில் இருந்த ஆளவந்தார்,

தெய்வவாரியாண்டானின் உடல்நிலையைக் கேள்விப்பட்டார். ஸ்ரீராமர், சீதையைப் பிரிந்த காலத்தில் தண்டகாரண்யத்தில் எப்படி சோகமடைந்து புலம்பினாரோ, அவ்வளவு சோகம் அடைந்த தெய்வவாரியாண்டானைக் காண தாமே திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டார். வழியில் ஆழ்வார் திருநகரிக்கு அருகில், இருவரும் சந்திக்க, தெய்வவாரியாண்டான், உடனே சிலிகையிலிருந்து குதித்து, ஆளவந்தாரின் காலைப் பிடித்து கதறியழுதார்.

அவரை எழுப்பி, ஆசுவாசப்படுத்தி ஆளவந்தார் சொன்னார்: ‘‘பரதன் நந்தி கிராமத்திலேயே பதினான்கு வருடங்கள் தங்கியிருந்து சக்ரவர்த்தித் திருமகனை எதிர்நோக்கியிருந்தது போல, நீர் துக்கமடைந்தீரோ?’’  தெய்வவாரியாண்டானின் நிலைமையை புரிந்து கொண்ட வேறு சில சீடர்கள் ஆளவந்தாரிடம், ‘‘சித்ரகூடத்திற்குச் சென்ற அதே தருணத்தில் ஸ்ரீராமன் அழுதுகொண்டே, இளைய பெருமாளை நோக்கி, உடனே அயோத்திக்கு திரும்பிச் செல், என் தாயார் கௌசல்யா மாதாவை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்’’ என்று கூறினார்.

மறுகணமே, துடிதுடித்த இளைய பெருமாள், தழுதழுக்க, ‘‘என்னையோ, சீதா மாதாவையோ, தங்களை விட்டுப் பிரியச் சொன்னால், தண்ணீரிலிருந்து பிரித்த மீனைப்போல துடிதுடித்து செத்து மடிவோம். ஆகையால், திரும்பி அயோத்திக்கு புறப்பட்டுச் செல்லுமாறு என்னையோ, சீதா மாதாவையோ கூறவேண்டாம்’’ என்று மன்றாடினார். அதாவது, ஸ்ரீராமனின் பிரிவு தங்களுக்கு இறப்பைத்தான் தரும் என்று இளைய பெருமாள் கூறினார். இப்பொழுது அதே நிலைமை தெய்வவாரியாண்டானுக்கும் ஏற்பட்டிருக்கிறது,’’ என்று கூறவே, ஆளவந்தார் தெய்வ வாரியாண்டானை ஆரத்தமுவி, உச்சிமுகந்தார். ‘‘இனிமேல் என்னைப் பிரியாமல் இருக்கக் கடவீர்’’ என்று கூறிய மறுகணமே, அவருடைய உடல்நலிவும், சோகமும் ஒருசேரத் தீர்ந்தன. அனைவரும் திருவனந்தபுரம் சென்றனர்.

ஆளவந்தார் திருவனந்தபுரம் கோயில் கோபுரத்தைக் காட்டி, ‘‘நம் தெய்வம் அனந்த பத்மநாபனை தரிசித்து வாழும்,’’ என்று கூற, அதற்கு தெய்வவாரியாண்டான், ‘‘எனக்கு எல்லாமே நீர்தான். அனந்த பத்மநாபனும் நீரே’’ என்று அவரையே சேவித்து காலடியில் விழுந்தார். உடனே ஆளவந்தார், ‘‘யேனைவ குருணாயஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே! தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ’’ என்றார்.

அதாவது ‘‘எந்த குருவினாலே சீடனுக்கு சரணாகதி வித்யை உபதேசிக்கப்படுகிறதோ, அந்த சீடனுக்கு, வைகுண்டமும், திருப்பாற்கடலும், துவாரகையும் மற்றுமுள்ள எல்லா திவ்யதேசங்களும் அந்த ஆச்சார்யனே ஆவார்’’ என்று பொருள். பிறகு, அவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். பெரிய பெருமாளின் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்தார். தமக்கு யோக ரகசியம் கிடைக்கவில்லை என்றாலும், ‘யத்ர யோகேஸ்வரக் க்ருஷ்ண’ என்று நம்பெருமாளே நமக்கு எல்லா விதத்திலும் யோகேஸ்வரன்; அவனே கிடைத்த பின்பு துக்கம் அடைவானேன் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, தம் மடத்திற்கு எழுந்தருளினார்.

இதன் பின்பு ஆளவந்தார் மனதில், தமக்குப் பிறகு வைணவத்தைக் கட்டிக்காக்கும் சரியான சீடர் யார் என்ற ஒரு சோகம் லேசாக இழையோடியது. அது, நாளாக நாளாக அதிகமாகிடவே, சீடர்கள் அனைவரையும் அழைத்து தன்னுடைய மன ஆதங்கத்தை வெளியிட்டார். குறிப்பாக பெரிய திருமலை நம்பிகள், பெரிய நம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள், வானமாமலையாண்டான், சீயராண்டான், ஆட்கொண்டியம்மங்கி போன்ற சீடர்களிடம் இதுகுறித்துப் பேசினார்.

இச்சமயத்தில் ஆளவந்தாரின் இன்னொரு சீடரான திருமலைநம்பி, ‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்கள்’ என்றபடி, திருவேங்கடமுடையானின் திருமலையிலேயே தங்கியிருந்தார். இவருக்கு பூமிப் பிராட்டியார் என்கிற காந்திமதி அம்மையார், பெரிய பிராட்டியார் என இரண்டு சகோதரிகள் உண்டு. அவர்களில் பூமிப் பிராட்டியாரை ஸ்ரீபெரும்புதூரில் ஆஸுரி கேசவப் பெருமாள் என்கிற தீக்ஷிதருக்கு (கேசவ ஸோமயாஜி) விவாகம் செய்து கொடுத்திருந்தார்.

கேசவ ஸோமயாஜிக்கு பலகாலம் பிள்ளைப்பேறு இல்லாமையால் சோகமே உருவாக இருந்தார். திருவல்லிக்கேணிக்கு வந்து பார்த்தசாரதி பெருமாள் முன்பு புத்ர காமேஷ்டி யாகமும் செய்தார். அன்று இரவு தூங்கும்போது அவர் கனவில் பார்த்த சாரதிப் பெருமாள் தோன்றினார். ‘நாமே உமக்கு புத்திரனாக அவதரிப்போம்’ என்று அருளினார். அதுகண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தம் மனைவியோடு ஸ்ரீபார்த்தசாரதியை சேவித்துவிட்டு பிரசாதம் பெற்றுக்கொண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார்.

‘அனந்த: ப்ரதமம் ரூபம், லக்ஷ்மணம்ச தத: பர: பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கச்சித் பவிஷ்யதி’ என்பார்கள். அதாவது, வைகுண்டத்தில் ஆதிசேஷனே, அனந்தனாக இருப்பது, முதல் ரூபம்; ராமவதார காலத்தில் லட்சுமணனாக அவதரித்தது இரண்டாவது ரூபம்; கிருஷ்ணாவதார காலத்தில் பலராமனாக அவதரித்தது மூன்றாவது ரூபம்; நான்காவதாக கலியில் ஒரு பெரிய மகானாக ஆதிசேஷனே அவதரிப்பார்’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருளாகும். ஆதிசேஷனாகிய திருவனந்தாழ்வானும், ராமாவதாரத்திலே பகவான், தசரதரை விரும்பி தந்தையாக ஏற்றுக்கொண்டதுபோல, இவர் ஸ்ரீபெரும்புதூரில் பூமிப் பிராட்டியார் என்கிற காந்திமதி அம்மையாருக்கு மகனாகப் பிறக்க எண்ணினார். காந்திமதி அம்மையார் கர்ப்பமுற்று கௌசல்யா மாதாவைபோல் பிரகாசத்தோடு விளங்கினார்.

இளையாழ்வார் என்கிற ஸ்ரீராமானுஜர் கலியுகத்தில் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் அவதாரமாவார். இவரை பகவானின் பஞ்சாயுதங்களில் சுதர்சனர் என்கிற சக்ராயுதமே என்று வர்ணிக்கின்றனர். இப்படிப்பட்ட மகான், தீர்வப்தா என்கிற கணக்கின்படி சக வர்ஷம் 939ம் வருடம், பிங்கள ஸம்வத்ஸரத்தில், சித்திரை மாதத்தில் சுக்ல பக்ஷ, பஞ்சமி திதியில், வியாழக் கிழமையன்று திருவாதிரை நன்னாளில் கேசவ ஸோமயாஜிக்கும், காந்திமதியம்மையாருக்கும் அவதரித்தருளினார். இவருடைய அவதாரத்தை, ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியிருக்கும், ஆதிகேசவப் பெருமாளே எதிர்ப்பார்த்து காத்திருந்தார்!

இவர் அவதாரத்திற்கு முன்னால் கலிகாலம், ‘‘ச்ருதிர்நஷ்டா, ஸ்ம்ருதிர் லுப்தா, ப்ராயேண பதிதா த்விஜா அங்கானிச லிசீர்ணானி ஹா வ்ருத்தோ: வர்த்ததே கலி’ என்று சொல்லும்படி இருந்தது. அதாவது, வேதம், ஸ்மிருதிகள், தர்ம சாஸ்திரங்கள், பிராமணர்கள் எல்லோரும் தங்களின் கடமையைக் கைவிட்டனர். வேதத்தை பிரித்து அருளிய வியாசரை கேலிப் பாத்திரமாகவே பார்த்தனர். எங்கு நோக்கினும் சமண, பௌத்த வாதமே தலைவிரித்து ஆடியது. அந்த சமயத்தில்தான் ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்கிறபடி இவர் அவதாரம், கலி இருள் நீங்கிப் பேரின்ப வெள்ளம் பெருகும்படி நிகழ்ந்தது. இவரை, ஸ்ரீமணவாள மாமுனிகள் தம்முடைய உபதேச ரத்ன மாலையில் குறிப்பிடுகிறார்.

இன்றுலகீர் சித்திரையிலேய்ந்த திருவாதிரை நாள்
என்றையிலும் இன்று இதனுக்கு ஏற்றமென்தான்
என்றவர்க்கும் சாற்றுகின்றேன் கேண்மின்
எதிராசர் தம் பிறப்பால் நாற் திசையும் கொண்டாடும்நாள்
- என்று ராமானுஜனின் அவதாரத்தை உலகமே
கொண்டாடும் அற்புதம் என்று குறிப்பிடுகிறார்.

(வைபவம் தொடரும்)