கயிலையில் கலந்தார் கணபதி!



Anmega palan 
magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine

 
                   அவதார புருஷர்கள் அவதரிக்கும்போது தாங்கள் மட்டும் பூலோகப் பிரவேசம் செய்வதில்லை. கூடவே சில சத் புருஷர்களையும் அழைத்து வருவார்கள். அதுதான் பாரதத்தின் குரு-சிஷ்ய பரம்பரையின் தர்மமாக இன்றுவரை இருக்கிறது. அப்படித்தான் பகவான் ராமகிருஷ்ணருக்கு விவேகானந்தர் இருந்தார். இதற்கு இணையாக, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ரா.கணபதி விளங்கினார்கள். ஆதியில் வியாசருக்கு ஒரு கணபதி போல, காஞ்சி பெரியவருக்கு ரா.கணபதி.

 இவர் கடந்த பிப்ரவரி 20ந் தேதி தனது குருவின் திருவடி நிழலில் இளைப்பாற சென்று விட்டார். அன்று மகா சிவராத்திரி என்பது தெய்வ சங்கல்பம் போலும். ஆன்மிக எழுத்துலகம் இந்த வெற்றிடத்தை வழியேதும் இல்லாது ஏற்றுக் கொண்டு கைகூப்பியது. ‘அண்ணா... அண்ணா...’என்று சொல்லி நமஸ்கரித்தது.

ரா.கணபதி அவர்களின் திருமேனிக்கு அருகே நின்ற ஒருவர், ‘‘இவர் மாதிரி பெரியவரையெல்லாம் காரண ஜென்மான்னு சொல்லுவாங்க. ஒரு காரணத்துக்காக வந்தார். அது முடிஞ்சவுடனே கிளம்பறார். எல்லாமே அவர் சாய்ஸ்தான்’’ என்றார்.

அவர் செய்த ஆன்மிக எழுத்துப் பணிகள் ஒரு மகத்தான வேள்வியாகவே அனைவர் மனதிலும் தகித்துக் கொண்டிருக்கிறது.  காஞ்சி பரமாச்சார்யார்யாரின் அமிர்தமயமான வாக்குகளை ‘தெய்வத்தின் குரல்’ என்று ஏழு பாகங்களாக ரா.கணபதி தொகுத்தளித்தார். சந்திர சூரியர்கள் உள்ளவரை இந்தப் புத்தகம் பல மனிதர்களை கடைத்தேற்றும். சநாதன தர்மம் என்கிற இந்து மதத்தின் அத்தனை விஷயங்களும் இதில் விரவிக் கிடக்கின்றன. மகா பெரியவர் பல சமயங்களில் பலரிடமும், சத்சங்கங்களிலும் பேசிய  விஷயங்களை எல்லாம் அழகாய் தொகுத்தளித்தார், ரா. கணபதி. மந்திரங்களை தரிசித்த ரிஷிகள், அதை வேதங்களாக்கியதை தெய்வத்தின் குரலை படிக்கும் ஒவ்வொருவரும் உணர்வர்.

தெய்வத்தின் குரலைத் தவிர, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்-விவேகானந்தரைப் பற்றி அவர் எழுதிய ‘அறிவுக்கனலே அருட்புனலே,’ நம் அகக் கண்களை திறக்கும். நவராத்திரி நாயகி எனும் தேவி பாகவதம் படிக்கும்போது நமக்குள்ளே மகாகாளி எழுவாள். எத்தனை கடின புராண விஷயங்களும் இவரின் எழுத்தில் வரும்போது தெருவில் பவனி வருகிற உற்சவர் போல எளிமையாகி விடும். கதைப் பற்றும் தத்துவச் சாறும் நிரம்பிய கனியைப் புசித்த சுகம் கிடைக்கும். பகவான் ஸ்ரீரமண மகரிஷி, திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார், புட்டபர்த்தி சாய்பாபா ஆகியோரைப் மக்கள் மனதில் இவரது எழுத்து சிம்மாசனமிட்டு அமர்த்தி இருக்கிறது.

எந்த ஆன்மிக விஷயமாக இருந்தாலும் சரி, கேள்விகளை உருவாக்கிக் கொண்டும் அதற்கான பதில்களை சொல்லியபடியும் இவரது எழுத்து நடனமிடும்; பேச்சுத் தமிழ் கொஞ்சும்; இலக்கியத் தமிழ் இனிக்கும்; கம்பீரத் தமிழ் வேதாந்தம் பேசும். பக்தித் தமிழை பரம விநயமாக கூறுவார். ஆன்மிகப் புத்தகம் சமைப்பது இவருக்கு யோகமாகவே இருந்தது.

‘சமயக் கட்டுரை எழுதுவது எப்படி?’ என்று ஒரு கட்டுரை. எப்படியெல்லாம் ஒரு கட்டுரை இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, கடைசியில், ‘‘சமயத்துக்கு கட்டுரை எதற்கு? சமயம் என்பது ஒவ்வோர் ஆன்மாவிலும் அந்தரங்கமாக இருப்பது. அதை நாம் பல போர்வைகளால் மூடிக் கொண்டிருக்கிறோம். போர்வைகளைத் தள்ளிவிட்டுக் குழந்தையாக ஒரு சில ஜீவன்கள் நிற்குமாயின் அவை தம்மையுமறியாமலேயே நம்மையும் போர்வைப் புழுக்கத்திலிருந்து காப்பாற்றிவிடும். எழுத்தும் தேவையில்லை. கட்டுரையும் தேவையில்லை’’ என்று முடித்திருப்பார், ரா.கணபதி.

அவர் எழுத்து, போர்வையை விலக்கும் காரியத்தை பிரபஞ்சத்தின் கடைசி நிமிடம் வரை செய்யத்தான் போகிறது. ‘கிளம்பறேன்’ என்று சொல்லி, அவர் விட்டு விடுதலையானது, தெய்வத்தின் குரலை நமக்கு படிக்கத் தந்த தெய்வத்தோடு கலந்த மகா வைபவமே!
-கிருஷ்ணா